"ஸூபி" என்ற பெயர் வரக் காரணம் என்ன?
---------------------------------------------------------------
இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிஸம் தொடர்பாக பத்தாம் நூற்றாண்டில் எழுதிய மிகப் பிரபலமான கிரந்தமாகிய كتاب اللمع في التصوف எனும் கிரந்தம் தஸவ்வுப் எனும் கலையினை மிக நுட்பமாக விளக்கும் ஒன்றாக அறியப்படுகிறது.
ஸூபிஸ கோட்பாடுகளை ஆழமாக அலசும் படைப்புக்கள் பல விற்பன்னர்களால் இச்சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகுந்த சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்டவைகளாக காணப்படுகின்றன. முறையாக ஓதிப் பயின்ற ஆலிம்களால் கூட முழுமையாக விளங்கிப் பொருள் சொல்ல முடியாத வகையிலும் அல்லது எக்குத்தப்பாக விளங்கி தவறான வியாக்கியானங்கள் கொடுக்கப்படக் காரணமாக அமையும் வகையிலும் அதன் பொருட் செறிவு காணப்படுகிறது.
ஆனால் இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இக்கிரந்தமானது ஸூபிஸம் எனும் கலை இஸ்லாத்தில் உண்டு என்ற அடிப்படையினை பற்றி பேசுகிறது. அவர்கள் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் துறைகளிலும் விற்பன்னராக இருந்ததன் காரணமாக அவற்றோடு ஒப்பிட்டு ஸூபிஸம் எனும் கலையினை ஆய்ந்து விளக்குகிறார்கள். மற்றைய கலைகளுக்கு தஸவ்வுப் எவ்வாறு பக்க துணையாக இருக்கிறது என்பதையும் ஸூபிஸத்துக்கு மற்றைய கலைகள் எவ்வாறு துணை செய்கின்றன என்பதையும் தர்க்க ரீதியாக விளக்குகிறார்கள். அத்தோடு தஸவ்வுப் எனும் கலையினை மறுப்போருக்கு எதிராக ஆணித்தரமான ஆதாரங்களையும் வாதங்களையும் முன்வைக்கிறார்கள்.
ஸூபிகள் என ஏன் ஒரு சாரார் அழைக்கப்படுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன என தலைப்பிட்டு ஒரு பாடத்தை கொண்டு வருகிறார்கள்.
இமாம் அவர்கள் அதில் கூறுகிறார்கள் :
"ஹதீஸ் துறையில் பாண்டித்தியம் பெற்றதன் காரணமாக ஹதீஸ் கலை அறிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பிக்ஹ் துறை அறிஞர்கள் சட்டத்துறை நிபுணத்துவத்தின் காரணமாக அறியப்படுகிறார்கள். ஏன் நீங்கள் ஸூபிகளை ஒரு குறித்த விஷேடத்துவமான துறையின் பால் அடையாளப்படுத்துவதில்லை" என ஒருவர் கேட்டால்,
அதற்கான பதிலாகிறது:
"ஸூபிகள் ஒரு குறித்த துறைக்குள்ளோ ஆன்மீக நிலைக்குள்ளோ சுருக்கப்படக்
கூடியவர்கள் அல்ல. ஏனெனில் ஸூபிகள் அனைத்து கலைகளுக்கும் மேன்மைமிக்க நிலைகளுக்கும் உன்னத நெறிகளுக்கும் அடிப்படையானவர்கள்.
இவர்கள் இயல்பாகவும் தனது முயற்சியினாலும் இக்குணாதிசியங்களைக் கொண்டிருப்பர். அவர்கள் சதாவும் அல்லாஹ்வுடனேயே இருப்பர். அல்லாஹ்வை நெருங்கும் முயற்சியில் ஆன்மீக படித்தரங்களில் முன்னேறிக் கொன்டிருப்பார்கள். எனவே இவர்களை ஒரு துறைக்குள் மட்டுப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு துறையினை மையப்படுத்தி அவர்களை நான் அடையாளப்படுத்தினால் காலம் செல்லச் செல்ல பல துறைகளுக்கு அவர்களது அடையாளத்தை மாற்றும் நிலை ஏற்படும். காரணம் அவர்கள் தனது ஆன்மீக நிலையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களது உள்ளக அறிவு மற்றும் ஆன்மீக நிலையினைக் கொண்டு நான் அவர்களை அடையாளப்படுத்த முடியாது. அதனால் தான் அவர்களது புறத்தோற்றத்தைக் கொண்டு (ஆடை) அடையாளப்படுத்தப்படுகிறது. الصوف என்பது கம்பளியிலான அவர்கள் அணியும் ஆடைக்கு வழங்கப்படும் பெயராகும். இதுவே நபிமார்களின் ஆடையாகவும் இறைநேசர்கள் அடையாளமாகவும் இருக்கிறது.இந்த ஆடை குறித்து ஏராளமான ஹதீஸ்களில் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஸூபிய்யாக்களை அவர்களின் வெளித்தோற்றமான ஆடையினைக் கொன்டு அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்களை ஒரு துறைக்குள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படாது. علوم - மார்க்க ஞானம், أعمال- வணக்க வழிபாடுகள், أخلاق - நற்பண்புகள், أحوال شريفة محمودة - ஆன்மீக நிலை என்ற அனைத்து அம்சங்களும் உள்ளடங்கும் வகையில் அடையாளப்படுத்த இது சிறந்த முறையாகும்.
அல்லாஹ் அல் குர் ஆனில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சிறந்த உம்மத்தினர்கள் பற்றி கூறுவதை பார்க்கவில்லையா?
"நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" (61:14)
அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் அது போல அவர்களை ஆக்கினான்.
அல்லாஹ் அவர்களை அவர்களது அறிவு, செயல், அந்தஸ்த்தைக் கொண்டு அடையாளப்படுத்தவில்லை.
எனவே எனது பார்வையில் ஸூபிகள் அவர்களது வெளித்தோற்றத்தைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வே அறிந்தவன்.
அவர்கள் குறித்த எந்த துறைக்குள்ளும் வரையறுக்கப்படக் கூடியவர்கள் அல்ல."