___________________________________________________________________
இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிய்யாக்கள் எனும் சொல்லாடல் பிற்காலத்தில் இஸ்லாத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டது என்ற வாதத்தை பின்வருமாறு அடியோடு மறுக்கிறார்கள் :
"ஸஹாபாப் பெருமக்களில் எவரும் ஸூபிகளாக அடையாளப்படுத்தப்படவில்லையே என சிலர் கூறுகின்றனர்.
அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!
ஸஹாபாக்கள் நபிகளாருடன் கொண்ட தோழமையினால் சிறப்புப் பெற்றவர்கள். அதனை விட வேறு எந்த அடையாளமும் தகுதியும் மிகைத்ததாக முடியாது. நபிகளாரின் தனிச்சிறப்பின் மூலமும் நேரடி வழிகாட்டல்களின் மூலம் ஸஹாபாக்கள் இந்த அந்தஸ்த்தைப் பெற்றார்கள். நீங்கள் அறியவில்லையா? அவர்கள் அனைவரும் இமாம்களாகவும், உலகப்பற்றற்ரவர்களாகவும், வணக்கசாலிகளாகவும், முதவக்கிலீன்களாகவும், பக்கீர்களாகவும், பொறுமைசாலிகளாகவும் உளத்தூய்மயுடையவர்களாகவுமே இருந்தார்கள். நபிகளாருடன் கொண்ட தோழமையின் காரணமாகவே இவை அனைத்தையும் அவர்கள் பெற்றுகொண்டார்கள்.
எல்லா படித்தரங்களையும் விட ஸுஹ்பத் எனும் நாயகத்தோழமையே உன்னதமானது. எனவே இவ்வாறான உன்னத நிலையில் உள்ளவர்களை அதனை விடக் குறைந்த தராதரத்தோடு அடையாளப்படுத்துவது சாத்தியமன்று.
ஸூபி எனும் பதமானது பிற்காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டது என கூறுகின்றனர்.இது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்திலேயே ஸூபிகள் பற்றி அறியப்பட்டிருக்கிறது.
ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நபித்தோழர்கள் சிலரை சந்தித்திருக்கிறார்கள்.மேலும் அவர்கள் கூறுகிறார்கள் "நான் தவாபின் போது ஒரு ஸூபியினைக் கண்டேன்.நான் அவருக்கு சிலவற்றை அன்பளிப்புச் செய்தேன். ஆனால் அவர்கள் அதனை மறுத்துவிட்டு என்னிடம் 4 தீனார்கள் இருக்கிறது, அதுவே எனக்குப் போதும் என்றார்கள்.
ஸுப்யானுத் தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
"ஸூபியான அபூ ஹாஸிம் ரஹிமஹுல்லாஹ் இல்லாவிட்டால் வணக்க வழிபாடுகளில் மறைந்துள்ள முகஸ்துதியில் இருந்து நான் விடுபட்டிருக்கமாட்டேன்."
முஹம்மத் இப்னு இஷாக் இப்னு யஸாரினாலும் மற்றவர்களினாலும் தொகுக்கப்பட்ட "அக்பர் மக்கா" எனும் கிரந்தத்தில் பின்வரும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'இஸ்லாம் வருவதற்கு முன்னர் மக்கா ஓரு பாலைவன பூமியாக காணப்பட்டது. அச்சமயத்தில் கஃபாவை தவாப் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் ஒரு கம்பளி ஆடையணிந்த ஒருவர் (ஸூபி) தொலை தூரத்தில் இருந்து தவாபுக்காக வருகை தந்துவிட்டுச் செல்லக் கூடியவராக இருந்தார்'
எனவே இஸ்லாத்துக்கு முன்னரும் நல்லோர்களை அடையாளம் காட்ட "ஸூபி" எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்துள்ளது என்பது இத்தகவலின் மூலம் நிரூபணமாகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்"