السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 5 November 2025

பெற்றோருக்கு பணிவிடை

 


பெற்றோருக்கு நீங்கள் பணிவுள்ள மகனாக/மகளாக இருக்கிறீர்களா? உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்.


நீங்கள் பெற்றோருக்குப் பணிவுள்ள மகனாக/மகளாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்களில் ஒருவர் மதிப்பிடுவதற்கு சில அறிகுறிகள் உள்ளன.


நல்ல மகன்/மகள் (பர்) என்பதன் அறிகுறிகள்:


1- பெற்றோருடன் பேசும்போது அல்லது  பழகும்போது மரியாதையாக நடத்தல்.


2- அவர்கள் நன்மையான காரியங்களை ஏவினால் அவர்களுக்குக் கீழ்ப்படிதல். அவர்கள் பாவம் செய்ய ஏவினால், இந்தக் கட்டத்தில் கீழ்ப்படியாமை குற்றமாகாது.


3- அவர்களின் தேவைகளைக் கவனித்து, அவர்களைப் பராமரித்து, சேவை செய்தல். ஏனெனில் அவர்களுக்குச் சேவை செய்வது உங்களைச் சுவர்க்கத்திற்கு நெருக்கமாக்கும். ஹமீத் கூறினார்: "(இயாஸ் இப்னு முஆவியாவின்) தாய் இறந்தபோது, அவர் அழுதார். அவரிடம், 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அவர் கூறினார்: 'எனக்குச் சுவர்க்கத்திற்கு இரண்டு திறந்த வாசல்கள் இருந்தன, அவற்றில் ஒன்று அடைக்கப்பட்டுவிட்டது.'"


4- பெற்றோர் உயிருடன் இருக்கும்போது, அவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நலம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பது. அல்லது, அவர்கள் இறந்து விட்டால், அவர்களுக்குப் பாவமன்னிப்பும் ரஹ்மத்தும் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பது. ஒரு நபித்தோழர் கூறுகிறார்: "பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்வதை விட்டுவிடுவது பிள்ளையின் வாழ்வாதாரத்தைக் குறைத்துவிடும்."


5- அவர்களுக்குத் தேவைப்படும்போது நிதி உதவி செய்தல் மற்றும் பண்டிகைகள் போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல்.


6- அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளையவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் விரைவாக இருப்பது, மருந்துகளை வழங்குவது மற்றும் சிகிச்சைத் திட்டத்தின்படி அவர்களை கண்காணிப்பது ஆகியவை இதில் அடங்கும். ஸயீத் பின் ஆமிர் கூறினார்: "என் சகோதரன் உமர் இரவு முழுவதும்  தொழுதார், நான் என் தாயின் கால்களைத் தடவினேன், என் இரவு அவருடைய இரவுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை" அதாவது கூலியில்.


7- அவர்களைத் தொடர்பு கொள்ளுதல், அவர்களைக் காணச் செல்லுதல் மற்றும் அவர்களுடன் தவறாமல் தொடர்பில் இருப்பது.


8- தேவைப்படும்போது, அவர்களுக்குக் கல்வி ரீதியாக உதவுதல். எனது நண்பர் ஒருவர், தனது பெற்றோருக்கு தொழில்நுட்பத்தில் உள்ள ஒவ்வொரு புதிய விஷயத்தையும் விளக்கிக்கொண்டே இருப்பார். இதுவும் அவர்களுக்கு செய்யும் ஒரு நல்லுதவியாகும்.


9- உங்களை மகிழ்விக்க அவர்கள் செய்யும் முயற்சிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தல் அல்லது உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அவர்களை ஈடுபடுத்துதல்.


10- அவர்கள் இறந்த பிறகும், தர்மம் செய்தல், பிரார்த்தனை செய்தல், நல்ல செயல்கள் செய்தல், அவர்கள் மீது களங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுதல், அவர்களது விருப்பப்படி நடத்தல் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் நட்புக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு நல்லுதவி செய்தல். சுஃபியான் பின் உயைனா (ரஹ்) கூறுகிறார்: "எனக்கும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து" என்ற அல்லாஹ்வின் வசனத்தைப் பற்றிக் கூறுகையில், ஐந்து நேரத் தொழுகைகளை தொழுபவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். பெற்றோர் இறந்த பிறகு, அவர்களுக்காக பிரார்த்திப்பவன், அவர்களுக்கு நன்றி செலுத்துகிறான்.


11- அவர்களின் கடன்களை அடைப்பது அல்லது அவர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது.


கீழ்ப்படியாமையின் அறிகுறிகளும் உள்ளன. அவை:


1- அவர்களை விட்டு விலகிச் செல்வது, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மற்றும் அவர்களைத் தவிர்ப்பது.:


2. வார்த்தைகளால் அவர்களைத் துன்புறுத்துவது, வார்த்தைகளால் அல்லது செயலால் அவர்களை இழிவுபடுத்துவது மற்றும் அவர்களைத் துக்கப்படுத்துவது. அலீ (ரலி) கூறுகிறார்: "யார் தனது பெற்றோரைத் துயரப்படுத்துகிறாரோ, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் நடந்துகொள்கிறார்."


3- அவர்களின் தேவைகளைப் புறக்கணித்தல் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காதது.


4- அவர்களின் தேவைகளைப் புறக்கணிப்பது மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காமல் இருப்பது.


5- அவர்களுக்கு முன்னால் சத்தத்தை உயர்த்துவது, 'சீ' என்று சொல்வது அல்லது கண் சிமிட்டுவது மற்றும் கிண்டல் செய்வது.


6-அவர்களின் கருத்துக்களை மரியாதையற்ற முறையில் எதிர்ப்பது மற்றும் இழிவான அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது.


7- அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது.


8- அவர்களுக்காகத் தியாகம் செய்யாமல் இருப்பது மற்றும் அவர்களின் தேவைகளை விடத் தனது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது.


9- அவர்களைப் புறக்கணிப்பது மற்றும் அவர்களைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது.


10- அவர்களிடம் பொய் சொல்வது, அவர்களை கேலி செய்வது மற்றும் அவர்களைத் திட்டுவது.


11- நண்பர்கள் அல்லது மக்கள் முன் பெற்றோரை நிந்திப்பது மற்றும் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவது.


12- அவர்கள் முன்னால், குறிப்பாகச் சகோதரர்களுக்கு இடையில், சிக்கல்களை உருவாக்குவது.


13- பெற்றோரை விட, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கீழ்ப்படிதல்.


14- அவர்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புவது.


15- அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது மற்றும் அவர்களைப் பராமரிக்காமல் இருப்பது.


16- பேசும்போது உட்காரும் விதம் அல்லது கண்களின் பார்வை மூலம் அவர்களை மதிக்காமல் இருப்பது.


கீழ்ப்படியாமை என்பது ஒரு பெரும் பாவமாகும். இதிலிருந்து தவ்பா  செய்வது கட்டாயமாகும். அலீ பின் அபீ தாலிப் (ரலி) கூறுகிறார்: "லுக்மான் அத்தியாயத்தைப் படித்த பிறகும்,  பகுத்தறிவு உள்ள ஒருவன் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், அல்லாஹ் பெற்றோரைத் தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான்." அல்லாஹ் கூறுகிறான்: "மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி நாம் அவனுக்கு உபதேசித்தோம். அச்சமயம் அவனது தாய், பலவீனம் மீது பலவீனத்துடன் (கருவில்) சுமந்தாள். மேலும், அவனை (பாலூட்டி) விலக்குவதும் இரண்டு ஆண்டுகளில்தான். (அப்போது நாம் சொன்னோம்:) 'எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! (இறுதியில்) என்னிடமே நீங்கள் திரும்பி வர வேண்டியுள்ளது.'" (லுக்மான்:14)


பெற்றோரின் நிலை அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்ததாகும். அதனால்தான், அல்லாஹ் அவர்களைத் தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான். ஒரு கவிஞன் கூறியது போல், "என் தந்தையின் கண்கள் வழியாகவே, இவ்வுலகத்தைப் பார்க்கிறேன்; என் தாயின் தொடுகை வழியே, வாழ்க்கையின் வெப்பத்தை உணர்கிறேன்."


இவைதான், நல்ல மகன்/மகள் (பர்) மற்றும் கீழ்ப்படியாமை (உக்கூக்) ஆகியவற்றின் அறிகுறிகள். இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் தங்களை மதிப்பீடு செய்து, தாங்கள் பெற்றோருக்கு செய்யும் நல்லுதவியில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிய முடியும்.


(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ. தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ்)


Tuesday, 4 November 2025

பாஸ் பட்டணத்தில் தோன்றிய குத்பு அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ்

 


பாஸ் பட்டணத்தில் தோன்றிய குத்பு அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ் எனும் வியத்தகு மனிதம்! 


தொகுப்பு: மெளலவீ எச்.எம் அப்துர்றஷீத் றப்பானீ 


பெரியார்களின் பார்வையில் ஒரு குத்பாக போற்றப்படுபவர்கள் அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஸுப்ஹானல்லாஹ்!  அவர்கள் பற்றிய அறிமுகம் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் என் பார்வைக்கு தந்த “அல்இப்ரீஸ்” எனும் ஞானக்கிரந்தம் மூலமாக கிடைக்கப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்! அன்றிலிருந்து அவர்கள் பற்றிய ஆய்வும்,தேடலும் அதிகரித்தது “அல்இப்ரீஸ்” எனும் நூல் ஆழமான தத்துவங்கள் பற்றி விபரிக்கும் ஆய்வு நூலும்,இன்பமான நூலுமாகும் வாசித்துக் கொண்டு செல்லும் போது பல இடங்களில் சொல்லப்படும் தத்துவத்தை புரிந்து கொள்வது மிகக்கடினமானதாக இருக்கும் ஆனாலும் சில இடங்களில் தேன் சுவையாக இருக்கும் என்பது நான் பெற்ற அனுபவமாகும். 


அப்துல் அஸீஸ் தப்பாஹ் எனும் தங்கம் ஹிஜ்ரீ 1095 துல்கஃதா மாதம் பிறை 20 இல் மொரோக்கோவிலுள்ள “பாஸ்” எனும் இடத்தில் பிறந்தார்கள் ஹிஜ்ரீ 1131 ஸபர் மாதம் பிறை 11 இல் பிறந்த இடத்திலேயே வபாத் மறைந்தார்கள். “அபூ பாரிஸ்” (பாரிஸ் நாட்டின் தந்தை) எனும் புனைப்பெயருடையவர்கள் 


சிறு குறிப்பு: 

பாரிஸ் என்பது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும் ஆகும்.  


தப்பாஹ் நாயகம் அவர்கள் மாலிக் மத்ஹபை பின்பற்றியவர்களும், அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையை கொண்டவர்களுமாகும் இப்ரீஸ் எனும் கிரந்தம் அஹ்மத் இப்னுல் முபாறக் எனும் அவர்களது மாணவர் மூலமாக எழுதப்பட்ட ஒன்றாகும் அதற்கு அவர்களிட்ட பெயர் “அல்இப்ரீஸ் பீ மனாகிபி அப்தில் அஸீஸ்”  இப்ரீஸ் எனும் நூல் அப்துல் அஸீஸ் அவர்களின் அகமியம் பற்றியதாகும் என்பது அதன் பொருளாகும் இது அறபு மொழி நூலாகும் அதன் பிரதியை இணையத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் பார்த்து பயனடையுங்கள். 


அப்துல் அஸீஸ் நாயகத்தின் சிறு வாழ்க்கை குறிப்பு அவர்கள் பற்றிய தகவல்களை படிக்கும் ஒவ்வொருவருக்கும் அதிசயமானதாகவே இருக்கும் 


அவர்கள் பாஸ் நகரத்திலுள்ள மிக உயர்ந்த,பரிசுத்தமான குலத்தை சேர்ந்தவர்கள் சிறு வயது முதலே கல்விகள் அவர்களை வந்தடைய ஆரம்பித்தது எவரிடமும் அவர்கள் கால் மடித்து கல்வி கற்கவில்லை 


كان أميًّا، لا يقرأ ولا يكتب، ولكن كان يخوض في العلوم التي تعجز عنها العقول، وذكرت له كرامات ومكاشفات كثيرة.


அவர்கள் ஓதவோ,எழுதவோமாட்டார்கள் ஆனால் மனித புத்திகளால் இயலாத அறிவுஞானங்களில் மூழ்கியவர்களாக இருந்தார்கள் அவர்களுக்கு அற்புதங்களும்,அதிக திரைநீக்க ஆற்றல்களும் இருந்தன.


அவர்கள் குத்பு எனும் கிரீடத்திற்குச் சொந்தக்கார ராகவும் ஒரு ஞானியின் ஆசீர்வாதத்தினால் உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். 


இறைஞான ரகசியங்களை அள்ளி வீசக்கூடியவர்களாகவும்,புரியாத விடயங்களுக்கு ஞானத்தின் ஆழம் சென்று

பதிலளிப்பவர்களாகவும், இருந்தார்கள் இன்னும் அவர்களது மாணவர்களில் மிக முக்கியமானவரும் அல்இப்ரீஸ் எனும் வார்த்தைகளை நூல்

வடிவாக்கியவருமான அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களது ஒவ்வொரு இஸ்லாமிய மதம் சார்ந்த கேள்விகளுக்கும் மிக ஆழமான அற்புதமான விளக்கம் அளிப்பவர்களாகவும் இன்னும் அவர்களது உள்ளத்தில் ஊசலாடுபைவகளுக்கும்,

சிந்தனைகளில் நகர்ந்து செல்லும் வினாக்களுக்கும் பதில் கூறுபவர்களாகவும், பல நாட்களுக்கு, பல வருடங்களுக்கு முன் நடந்தவைகளை பற்றி அறிவிப்பவர்களாகவும் இருந்தார்கள். 


🔹அப்துல் அஸீஸ் நாயகத்தின் தனித்துவமான தன்மை!  


அவர்கள் இஸ்லாமில் உள்ள எவ்வினாக்கள் தொடுக்கப்பட்டாலும் அதற்கு விடையளிப்பதுடன் அவ்விடைகள் எந்நூலில்? எத்தனையாம் பக்கத்தில் ? வரக்கூடியது என்பதையும் தனது குத்பிய்யத் மூலம் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள். 


🔹அவர்களது “மகாம்” உயர் நிலை! 


தன்னைப் பற்றி நாயகம் அவர்கள் கூறும் போது, 


وكان قدس الله سره يقول لتلميذه سيدي ابن المبارك: يا ابن المبارك، لو عاش إبراهيم الدسوقي من زمانه إلى الآن ما أدرك صاحبك عبد العزيز من الصباح إلى الآن.


இப்னுல் முபாரகே! 

இப்றாஹீம் தஸூகீ நாயகம் அவர்கள் (நான்கு குத்புமார்களில் ஒருவர்) அவர்களது காலத்திலிருந்து இப்போது நானிருக்கும் காலத்தின் வரை உயிர் வாழ்ந்திருந்தாலும் உங்களுடைய தோழர் அப்துல் அஸீஸ் அவர்களை எத்திக் கொண்டிருக்கமாட்டார்கள். என்றார்கள் அப்துல் அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்கள். 


🔹நாயகம் அவர்களது பிறப்பிட்கு முன்னால் விலாயத்திற்கான அடித்தளமும்,பெரிய மனிதர் ஒருவரால் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட அமானித அன்பளிப்பும்.


அப்துல் அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்களை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ அவர்களை தெரிந்து கொள்ள வேண்டும். 


‎سيدي العربي الفشتالي

ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ 


பெரிய அறிஞரும் இறைஞானியுமாகும் எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணிப்பவர்கள் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகளை எடுத்து வளர்த்து அவர்களுக்கு செலவுகள் பல செய்து அவர்களை மிக அன்பு வைப்பவர்களாகவும்

இருந்தார்கள். பஸ்தாலீ நாகயம் அவர்கள் வலீயாகவும்,சட்டமேதையாகவும்,அறிவை தேடி வருபவர்களுக்கு அறிவுகளை வழங்குபவர்களாகவும் இருந்தார்கள் அவர்களிடம் அறிவு பெற்றவர்களில் ஒருவராக அபூ மஸ்ஊத் தப்பாஹ் இருந்தார்கள் ஒரு நாள் அறிவின் சபை முடிந்ததும் ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ நாயகம் அபூ மஸ்ஊத் தப்பாஹ் அவர்களை அழைத்து அபூ மஸ்ஊதே! நான் உங்களுக்கு எனது சகோதரியின் மகள் பாரிஹாவை திருமணம் செய்து தர விரும்புகின்றேன் அவர்கள் அதை ஒப்புக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது அவர்கள் இருவருக்கும் பிறந்தவர்களே பாஸ் நகரத்து ஜோதி அஷ்ஷெய்க் அல்குத்பு அப்துல்அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்கள். 


 🔹ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ அவர்கள் கொடுத்த அமானித அன்பளிப்பு 


ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ நாயகம் அவர்கள் சில நேரங்களில் அபூ மஸ்ஊத் தப்பாஹ் நாயகம் அவர்களுக்கும் பாரிஹா நாயகி அவர்களுக்கும் 


وكان يقول لنا أنه يتزايد عندكم ولدا اسمه عبد العزيز له شأن عظيم في الولاية . 


உங்கள் இருவருக்கும் அப்துல் அஸீஸ் எனும் பெயருடைய ஒருவர் மகனாகப் பிறப்பார் அவருக்கு விலாயத்தில் பெரிய அந்தஸ்த்து உண்டு என்றார்கள். 


 🔹அமானித அன்பளிப்பு 


وكان قبل ولادته أوصى لأبويه سيدي ومولاي العربي الفشتالي بأمانة، وقال لهما: سيزيد عندكما عبد العزيز، فأعطوه هذه الأمانة، وكانت هذه الأمانة هي شاشيةٌ وسباطٌ، فحفظوهما حتى حملتْ به أمه الشريفة، فلما حملت به، ووضعته، تربى في حجريهما، حتى بلغ سن الرشد، وصام من ذلك العام، وألهم الله سبحانه وتعالى أمه، فأعطته الأمانة التي أوصى بها مولاي العربي، وقال قدس الله سره: فأخذتها، وجعلت الشاشية على رأسي، والسباط في رجلي، فحصلت لي سخانةٌ عظيمة حتى دمعت عيناي، وعرفتُ ما أشار به سيدي العربي، وفهمتُ إشارته والحمد لله رب العالمين،


வபாஃ எனும் நோயில் மரணத்தை எத்திக் கொள்ள முன்னால் பஸ்தாலீ நாயகம் அவர்கள் மகான் அப்துல் அஸீஸ் அவர்களின் பெற்றோரை அழைத்து இந்த அமானித அன்பளிப்பை தங்களது மகன் பிறந்து வளர்ந்து வரும் காலப்பகுதியில் அவர்களிடத்தில் ஒப்படைக்கும் படி தொப்பி ஒன்றும் காலணி ஒன்றையும் ஒப்படைத்தார்கள் அந்த அமானிதத்தை தாய் அவர்கள் பாதுகாத்து அப்துல் அஸீஸ் நாயகத்திடம் ஒப்படைத்தார்கள் அவர்கள் அதைப் பெற்று தலையில் தொப்பியையும்,காலில் காலணியையும் அணிந்து கொண்டார்கள் அதை அணிந்த போது உடல் கடுமையான சூட்டை உணர்ந்தது கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது என்றார்கள். பஸ்தாலீ நாயகம் அவர்கள் கூறிய ரகசியத்தை புரிந்து கொண்டேன் என்றும் சொன்னார்கள் அல்ஹம்துலில்லாஹ். 


( அல்இப்ரீஸ் பக்கம் 4 )


மகானவர்கள் மறையும் போது அவர்களுக்கு வயது 35 ஆகும் . ஸுப்ஹானல்லாஹ்.

மேலும்

Monday, 3 November 2025

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

 

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

உறுதி காணியில் ‘சீவிய உரித்து’ (Life Interest) என்றால் என்ன?

(சட்ட விளக்கத்துடன் – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பதிவு)


சீவிய உரித்து (Life Interest) என்பது,

ஒரு நபருக்கு அவரின் உயிர்வாழும் காலம் வரை குறித்த காணியை பயன்படுத்துவதற்கு, வாழ்வதற்கு, பயனடைய சட்ட உரிமை வழங்கப்படும் உரிமையாகும்.


சீவிய உரித்தை உடைய நபர் இறந்தவுடன், அந்த காணியின் முழு உரிமையும் (Absolute Ownership) குறித்த காணி ஏற்கனவே உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்ட நபருக்கோ அல்லது அவரது உரித்தாளர்களுக்கோ தானாகவே செல்கிறது.


"காணியை நன்கொடை (Gift) கொடுப்பவர் காணியின் உரிமையை (Ownership) மாற்றம் செய்து கொடுக்கிறார். ஆனால் அதில் தனக்கான ஒரு உரித்தை தன் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்படி வைத்துக் கொள்கின்றார், இது தான் சீவிய உரித்து" 


சட்ட அடிப்படை:


இத்தகைய உரிமைகள் Civil Law Principles மற்றும் Transfer of Property அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டவை.


ஒரு “Life Interest” சீவிய உரித்து உடையவர் குறித்த காணியின் பதிவு பெற்ற உரிமையாளரின் அனுமதி இன்றி காணியை விற்கவோ, அடைவு வைக்கவோ முடியாது — அவர் அதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் உரிமை மட்டும் பெற்றிருப்பார்.


உதாரணம்:

அம்மா தனது காணியை மகனுக்காக நன்கொடையாக உறுதி மூலம் கொடுக்கிறார், அந்த உறுதி மூலம் அவர் தன் வாழ்நாளில் காணியை பயன்படுத்துவதற்கான சீவிய உரித்து (Life Interest) வைத்துக்கொள்கிறார் என்றால்,


குறித்த அம்மா உயிரோடு இருக்கும் வரை மகன் அந்த காணியை அம்மாவின் எழுத்துமூல அனுமதி இன்றி எந்தவித உரிமை மாற்றமும் செய்ய முடியாது. 


அம்மா இறந்த பின்பு தான் மகன் முழு உரிமை பெறுவார்.


"சீவிய உரித்து" வைத்துக் கொண்டு காணியை உரிமை மாற்றம் செய்யக்கூடிய முறை "நன்கொடை" வழங்கல் மூலம் நன்கொடை உறுதிகளில் (Deed of Gift) மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.


சட்டபூர்வ விளக்கம்:


✅ Life Interest – ஒரு temporary beneficial right (தற்காலிக பயன்பாட்டு உரிமை).

✅ Ownership – ஒரு absolute right (முழு உரிமை).

✅ Life Interest கொண்டவர் காணியை விற்க முடியாது.

✅ அவர் இறந்த பின், உரிமை தானாகவே நிரந்தர பதிவு பெற்ற (Registered Owner) உரிமையாளருக்குச் செல்கிறது.


சீவிய உரித்து வைக்கப்படும் காரணங்கள்:

- முதியோர் தங்கள் வாழ்நாள் பாதுகாப்பிற்காக

- குழந்தைகளுக்கான எதிர்கால ஒழுங்குக்காக

- சொத்து வழக்குகளைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுவதற்காக

- பரம்பரை சொத்துக்க் வேறு நபருக்கு மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு.


"சீவிய உரித்து" இன் கட்டுப்பாடுகள்


01. உரிமை மாற்றம் பெற்ற காணி உரிமையாளர் Deed Registered Owner) குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபருக்கு மாற்றம் செய்ய முடியாது. 


02. உரிமை மாற்றம் பெற்ற காணி உரிமையாளர் குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபரிடம் ஈடு அல்லது அடைவு வைக்க முடியாது. 


03. உரிமை மாற்றம் பெற்ற (Deed Registered Owner) காணி உரிமையாளர் குறித்த காணியை சீவிய உரித்து உடையவரின் அனுமதி இன்றி வேறு நபருக்கு விற்கவோ நன்கொடை வழங்கவோ முடியாது. 


04. சீவிய உரித்து உடையவர் (Life Interest Holder) காணியை விற்க அல்லது நன்கொடை வழங்க முடியாது.

05. சீவிய உரித்து உடையவர் (Life Interest Holder) காணியை ஈடு அல்லது அடைவு வைக்க முடியாது.


முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்:

“Life Interest” என்பது உங்கள் வாழ்நாளுக்கான பாதுகாப்பு குடை

ஆனால் அது நிரந்தர உரிமை அல்ல!


பலர் இதைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள்!


இந்த பதிவை உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் — அவர்கள் தங்கள் சொத்து உரிமைகளை சரியாக புரிந்துகொள்ளட்டும்!


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#LifeInterest #சீவியஉரித்து #LegalAwareness #PropertyLaw #SriLankaLaw #LawAndThirukkural #LegalEducation #வாழ்நாள்_உரிமை #சட்டவிழிப்பு #DeedExplained #KamsanLegalPosts

Sunday, 2 November 2025

மஹான் ஷெய்கனா ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸுபி காதிரி சியாரம்

 காயல் பட்டணத்தில் நல்லடக்கமாகியிருக்கும் மஹான் ஷெய்கனா ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸுபி காதிரி வாப்பா நாயகம் அவர்களின் புனித கப்ரு ஷரீஃபை மலேசியா வாப்பா நாயகத்தின் கலீபா மௌலானா மௌலவி செய்யிது அபூதாஹிர் ஆலிம் சிராஜி ஸுபி காதிரி ஹழ்ரத் அவர்கள் மற்றும் ஆத்மிக சகோதரர்கள் ஜியாரத் செய்தனர்















Saturday, 1 November 2025

விஷேட துஆஃ பிரார்த்தனை

 



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு


ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிதியத்தின் ஏற்பாட்டில் 02/11/2025 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையை தொடர்ந்து மர்ஹூம்களான 


1.சித்திக் சுமையா, 

2.சீனிமுகம்மது ஆமினாஉம்மா, 

3.பாரிஸ் அஃரிப்f 


ஆகியோருக்காகும் மற்றும் எமது குடும்பங்களிலிருந்து மரணித்து மண்ணறையிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கண்ணியமான எமது உறவுகளுக்காகவும்...

 கதமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது


எனவே அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


குறிப்பு - பெண்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


வஸ்ஸலாம்

ஏற்பாட்டுக் குழு

ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிதியம்

உங்கள் காணிக்கு போக்குவரத்துக்கான பாதை இல்லையெனில்

 

உங்கள் காணிக்கு போக்குவரத்துக்கான பாதை இல்லையெனில்


அயற்காணிக்காரர் பாதை விட்டுத்தர வேண்டுமா?


“சட்டம் சொல்லும் உண்மை: காணிக்கு பாதை இல்லையென்றால் என்ன செய்வது?”


உங்களுடைய காணி (Land) செல்வதற்கு ஒரு வழியில்லா காணியாக இருந்தால் அதாவது, பொது பாதைக்கு செல்ல வழி இல்லாத காணி என்றால், சட்டம் அதற்கான தீர்வை நியாயமாக வகுத்து கூறுகிறது!


நிலத்திற்கான நியாயச் சட்டம் மற்றும் பாவிப்பு உரித்துச் சட்டம் (Prescriptive Easements & Right of Way Law) மற்றும் Land Development Ordinance ஆகியவற்றின் அடிப்படையில் —


ஒரு காணிக்கான பொது பாதைக்கு செல்லும் வழி இல்லையெனில், அயற்காணிக்காரர் (Neighbouring Land Owner) தனது காணியிலிருந்து போக்குவரத்திற்கான ஒரு நியாயமான பாதையை விடுவித்துக் கொடுக்க வேண்டிய சட்டபூர்வ கடமை உடையவர்.


Case Reference: நீதிமன்றம் தெளிவாக கூறியது. “A landlocked property owner has a legal right to demand reasonable access through adjoining land, provided compensation is paid if necessary.”


அதாவது — போக்குவரத்துக்கு வழியில்லாத காணியாளர், அயற்காணிக்காரரின் காணியில் வழி கோரலாம், ஆனால் நியாயமான நஷ்ட ஈட்டுச்செலவு குறித்த காணி உரிமையாளருக்கு வழங்க வேண்டும்.


உங்கள் காணிக்கு பொது பாதை இல்லையெனில், நீங்கள்: 


1️⃣ முதலில் அயற்காணிக்காரருடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துங்கள்.


2️⃣ மறுத்தால், District Court-இல் “Right of Way” பாவிப்பு உரித்து கோரி வழக்கு தொடுக்கலாம்.


3️⃣ நீதிமன்றம் ஒரு சமநிலைத் தீர்வு வழங்கும் — அதாவது, தேவையான அளவு பாதை மட்டும் விடப்படும்.


சட்ட அடிப்படை (Legal Basis):


இத்தகைய சூழ்நிலைகள் தொடர்பாக “Easement of Necessity” (அவசியமான வழிச்செலுத்தல் உரிமை) என்ற கொள்கை Roman-Dutch Law மற்றும் Sri Lankan Civil Law அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் (Relevant Legal Provisions) :


1. Roman-Dutch Law Sri Lanka வில் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்கிறது.


2. Land Development Ordinance :

“Where any allotment of land is without access to a public road, the owner may be granted a right of way over adjoining lands, provided such access is necessary for the reasonable enjoyment of the land.”


3. Easements Ordinance (No. 3 of 1900) – Section 4 & Section 13:

“An easement of necessity shall arise only when a land is entirely shut off from public access, and shall continue only so long as such necessity exists."


அதாவது — ஒரு காணி முழுமையாக பிற காணிகளால் சூழப்பட்டு, பொதுப் பாதைக்கு அணுகல் இல்லையெனில், அத்தகைய காணியின் உரிமையாளருக்கு அவசிய வழிச்செலுத்தல் உரிமை (Right of Way) கிடைக்கும்.


இந்தச் சட்டத்தின் நோக்கம், நில உரிமை இருக்க, பயன்பாட்டு உரிமை இல்லாத சூழல் ஏற்படாதபடி தடுப்பதே.


அதனால், வழியில்லாத காணி (landlocked property) அமைந்தால், அதற்குச் செல்லும் ஒரு “reasonable access path” நியாயமான பாதையாக பாவிக்க வழங்கப்படல் வேண்டும்.


இது “மனித வாழ்வின் நியாயம்” (Doctrine of Necessity) என்ற அடிப்படையில் உருவானது.


நீதிமன்ற தீர்ப்புகள் (Case Law):


1. நீதிமன்றம் தீர்மானித்தது: “When a land is completely surrounded by other lands and has no access to a public road, the owner of that land is entitled to a right of way over adjoining lands.”

இதன் பொருள்: வழியில்லாத காணிக்காரருக்கு அயற்காணியின் வழியாக செல்லும் உரிமை உண்டு.


2. நீதிமன்றம் கூறியது: “The right of way of necessity must be the least burdensome route to the servient land."

அதாவது பாதை குறைந்தபட்ச இழப்பை மட்டும் அயற்காணிக்காரருக்கு ஏற்படுத்த வேண்டும்.


3. தீர்ப்பு: “The easement of necessity continues only so long as the necessity exists.”

அதாவது, புதிய சாலை அல்லது வழி அமைக்கப்பட்டால், பழைய வழிச்செலுத்தல் உரிமை தானாகவே நிறைவடையும்.


உதாரணம் (Example):


சண்முகம் என்பவர் 1 ஏக்கர் காணி வாங்கியுள்ளார்.

அந்தக் காணி நான்கு பக்கங்களிலும் மற்றவர்களின் காணிகளால் சூழப்பட்டுள்ளது; பொதுப் பாதைக்கு அணுகல் இல்லை.

அவர் அருகிலுள்ள குமரன் என்பவரின் காணியின் வழியாக ஒரு சிறிய பாதை சென்றால் மட்டுமே தன் காணியை அடைய முடியும்.


இந்நிலையில் :


#சண்முகம், நீதிமன்றத்தில் “Right of Way (Easement of Necessity)” கோரி வழக்கு தொடரலாம்.


#நீதிமன்றம், குமரனின் காணியின் வழியாக குறைந்தபட்சம் தேவையான பாதையை வழங்க உத்தரவிடும்.


நடைமுறை நடவடிக்கைகள் (Procedure):


1. பொதுப்பாதைக்கா வழிப்பாதை இல்லையென நிரூபிக்க வேண்டும்.


2. பாதையின் அவசியத்தை விளக்க வேண்டும்.


3. அந்தப் பாதை அயற் காணிக்காரருக்கை குறைந்த இழப்பை ஏற்படுத்தும் என நீதிமன்றத்தை நம்ப வைக்க வேண்டும். நீதிமன்றம் நியாயமென கருதினால் இழப்பீடு வழங்குமாறு கோரலாம்.


4. தேவையான பட்சத்தில் District Court வழியாக “Declaration of Easement of Necessity” கோரலாம்.


சுருக்கமாகச் சொன்னால்:


“ஒரு காணி முற்றிலும் வழியில்லாமல் இருந்தால், அயற்காணிக்காரர் சட்டப்படி அவசியமான அளவு பாதையை விட்டுத்தர வேண்டிய கடமை உடையவர்.”


“வழி மறைத்தால், சட்டமே உன்னைத் தள்ளி திறக்கும்!”


இதுபோன்ற சட்ட உண்மைகள் பலருக்கும் தெரியாது!


இந்த பதிவை பகிர்ந்து, உங்கள் நண்பர்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! 


சட்டம் நியாயத்திற்காக — உனக்காக!

நீதி அறிந்தால் தான், நீதி காப்போம்


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#LawAwareness #SriLankaLaw #LegalRights #PathaiIllaKaani #RightOfWay #LegalKnowledge #TamilLawPost #JusticeForAll #KaniSattam #LegalViralPost #SriLankaAttorney #Easement #RightOfWay #TamilLaw #LegalAwareness #LandLaw #KaniUruimai #CivilLaw #RomanDutchLaw #LegalRights #நிலச்சட்டம்

சூஃபித்துவம் இஸ்லாமிய உலகின் நாகரிகம்

 

சூஃபித்துவம் இஸ்லாமிய உலகின் நாகரிகம்

சூஃபித்துவம் இஸ்லாமிய உலகின் நாகரிகம்.....


இஸ்லாம் மனித நேயத்தையும், பண்பாட்டையும் அதிகம் போதிக்கின்றதோடு , நாகரிகத்தத்துவத்தை  அதன்  சூஃபித்துவத்தின் வழியே வெளிப்பாடாக்கியது ..


சூஃபித்துவம் என்பது வெரும் ஒரு குழுவினரின் பெயரோ, தனிப்பட்ட கட்சியோ அன்றி அது மில்லத் எனும் பதத்தில் வெளிப்பட்ட தீனுல் இஸ்லாம்  என்பதே பிசகற்ற உண்மை .


ஆடைகளை கிழித்து,  பரட்டை முடிகளோடு முக்காடுபோடும் அசுத்த நிலையிலிருந்து,  தஹாரத்து எனும் முழு நிலை சுத்தத்தின் பக்கம் தன்னை அமர்த்தி, சாதாரண மனிதனின் நிலையை விட அதிக இறை வணக்கத்தில் தன்னை அழித்து, தூய இஸ்லாத்தை அதன் முழு ஆடை ஒழுங்குடன் தந்து , தன் ரப்பிடம் தன்னை முழுவதும் ஒப்படைத்து  தன்னிலை மறந்த நிலையில் காணப்படுவதே சூஃபிகள் எனப்படுகின்றனர். 


நாகரிகத்தின் உச்சம் இமாம் ஷாதுலி  ரழியல்லாஹு அவர்கள் தனது மாணவர்களுக்கு இஸ்லாத்தை தனது நாகரிக பண்பாட்டிலும்,  மொழி விழுமியங்களின் அமைதிப்பேச்சிலும், அசத்தலான முகப்பாவனையிலும் காட்டிக்கொடுத்தார்கள்.


இன்று உலக வரலாற்றிலே சபை ஒழுக்கத்தையும்  , நாகரிக பண்பாட்டையும்,  சமூகவியலில் புரட்சியாக செய்துகாட்டிய பெருமை இத்தரீக்காவிற்கு (ஷாதுலிய்யா தரீக்காவிற்கு)  உண்டு. 


இமாம் ஷாதுலியின் பேச்சு நாகரிகத்திலே ஈர்க்கப்பட்ட  பல மொரோக்கோ குடி மக்கள்,  இத்தரீக்காவிலே உள்வாங்கப்பட்டு, சூஃபி தைக்காக்களில் அவர்களுக்கான இஸ்லாமிய உயர் நிலை பாடசாலைகள் நடாத்தப்பட்டு , முறையான மனித  நாகரிக சமூகத்தை கட்டியெழுப்பினார்கள்.  


 ஏழைகளின் புரவலர் சூஃபி காஜா கரீப் முகையதீன் சிஷ்தி, இவர் இந்திய தெற்காசியவில் சூபித்துவத்தை அறிமுகப்படுத்திய இஸ்லாமிய ஜானி ஆவார், இவர்களின் நாகரீக நடத்தை மற்றும் பேச்சிலே காணப்பட்ட நட்பண்பு  நாகரிகத்தின் விளைவு, சுமார்  பதினைந்து இலட்சம் ஹிந்து மக்கள் இஸ்லாத்திற்குள்ளே நுழைந்தமை இந்திய  சூபித்துவ வரலாறு.


வட இந்திய அஜ்மீரிலே தனது நாகரிக ஈர்ப்பின் காரணம் , தன்னை காண வருகின்ற ஹிந்து மக்களுக்காக , அங்கே சமைக்கின்ற உணவுகளில் இறைச்சி, மீன் போன்ற  உணவுகளை சமைக்காது , மரக்கறி உணவுகள் சமைத்து அவர்களை  மத நாகரிக நடத்ததையால் நயம் செய்த   சூஃபி  நாகரிக பண்பு முறை இதுவாகும் .                                       


 இன்று வரை அங்கே இறைச்சி மீன் சமைக்கப்படுவதில்லை என்பது வரலாறு.


Ash Shaike Nibras Saqafi

Sri Lanka