السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 9 November 2025

10 வருடம் ஆட்சி செய்தால் காணி உங்களுடையதா?" உண்மையான சட்ட விளக்கம் இதோ...!

 


"10 வருடம் ஆட்சி செய்தால் காணி உங்களுடையதா?" உண்மையான சட்ட விளக்கம் இதோ...!


பலருக்கும் ஒரு தவறான நம்பிக்கை 

“ஒரு காணியை நான் 10 வருடம் ஆட்சி (Possess) செய்தால், அது எனக்கு சட்டப்படி சொந்தமாகிவிடும்!” என்று! ஆனால் உண்மையில் சட்டம் அவ்வாறு சொல்லவில்லை...!


சட்ட அடிப்படை (Legal Basis)


இது Prescription Ordinance (No.22 of 1871) என்ற இலங்கைச் சட்டத்தின் கீழ் வருகிறது.


இதன் படி காணியில் ஆட்சி உரிமை (Prescriptive Title) பெறுவதற்கான விதிகள் மற்றும் வரையறைகள் மிகவும் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.


நீங்கள் ஆட்சி உரிமை பெற வெறுமனே 10 வருடம் ஆட்சி மட்டுமே போதுமானது என்றால்?


நிச்சயமாக இல்லை!


பொது மக்கள் இடையே வெகுவாய் பரவி இருக்கும் “10 வருட ஆட்சி-சொந்த உரிமை” என்ற நம்பிக்கை முழுமையாக தவறு!


சட்டப்படி ஆட்சி உரிமை (Prescriptive Title) பெற தேவையான நிபந்தனைகள்:


1. தொடர்ச்சியான ஆட்சி (Continuous Possession) – குறைந்தது 10 வருடங்கள் இடைவிடாமல் அந்த காணியை தொடர்ச்சியாக நீங்கள் ஆட்சி செய்திருத்தல் வேண்டும்.


2. சொந்த உரிமை போல் ஆட்சி (As of right) – குறித்த காணியில் நீங்கள் இருப்பதற்கான அனுமதி, வாடகை அல்லது விலைக்கு உங்களுக்கு வழங்கப்படாமல், உங்களுடைய சொந்த ஆதனம் போல ஆட்சி செய்திருத்தல் வேண்டும்.


3. வெளிப்படையான ஆட்சியில் இருத்தல் (Open & Notorious) – மற்றவர்களும் நீங்கள் அந்த நிலத்தை உங்களுடைய சொந்த ஆதனம் போன்று உரிமையுடன் பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருத்தல் வேண்டும்.


4. சட்டரீதியான உரிமையாளருக்கு எதிராக (Adverse to the owner) – உண்மையான உரிமையாளரின் அனுமதியில்லாமல் நீங்கள் அந்த ஆதனத்தை அவருடைய ஆட்சிக்கு எதிரான தன்மை கொண்டு உங்களுடைய சொந்த காணி போல் ஆட்சி செய்திருக்க வேண்டும்.


5. உண்மையான உரிமையாளர் (Actual Owner) 10 வருடம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்திராமை – குறித்த காணியின் உண்மையான உரிமையாளர் உங்களை காணியில் இருந்து வெளியேற்ற அல்லது அகற்ற எவ்வித நடவடிக்கையோ வழக்கோ தொடரவில்லையெனில் தான் உங்களுடைய ஆட்சியுரிமை வலுப்படும்.


6. எவ்வித இடையூறுகளும் தடைகளுமற்ற (Undisturbed and Uninterupped) ஆட்சி செய்திரு த்தல் - குறித்த பத்து வருட காலத்தினுள் எவராலும் இடையூறோ தடைகளோ அல்லது உங்களுடைய ஆட்சியில் குழப்பங்களோ ஏற்பட்டிருத்தல் கூடாது.


7. குறித்த காணியின் உரிமையாளரின் முன் அனுமதி வழங்கப்பட்டிருத்தல் கூடாது (No prior permission) - குறித்த காணியின் உண்மையான உரிமையாளர் அந்த காணியில் ஏதேனும் நிபந்தனைகளுடன் உங்களை குடியிருக்க அல்லது ஆட்சிசெய்ய அனுமதித்திருத்தல் கூடாது.


மேலும் சில உட்கிடையான நிபந்தனைகளும் உண்டு.


முக்கிய வழக்குகள் (Case Law Highlights)


01. Gunawardena v. Punchi Banda


“மட்டும் 10 வருடங்கள் ஆட்சி செய்தால் போதாது. அது உண்மையான உரிமையாளரின் அனுமதியில்லாமல், சட்டத்துக்கு எதிராகவும், தொடர்ந்து இருந்தால்தான் உரிமை உருவாகும்.”


02. Abeywardena v. Jayasekara


“Prescription is not a sword but a shield.”

அதாவது – நீயே ஆட்சியுரிமை கோரி வழக்கு தொடங்க முடியாது; ஆனால் யாராவது உன்னைக் காணியில் இருந்து வெளியேற்ற முயன்றால், நீ பாதுகாப்பாக இந்த உரிமையை முன்வைக்கலாம்.


ஆட்சி உறுதி (Deed) என்றால் என்ன?


“ஆட்சி உறுதி” என்பது, நீங்கள் நீண்டகாலமாக ஒரு காணியை உங்களுடையது எனக்கருதி ஆட்சி செய்து வந்ததை குறிப்பிடும் ஒரு சட்ட ஆவணம். ஆனால் இது சட்டத்தால் தானாக உருவாகாது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அல்லது உரிமையாளர் வெளிப்படுத்தல் மூலம் மட்டுமே சொந்த உரிமையாக மாறும்.


உதாரணம் :


"ஒருவர் 12 வருடமாக ஒரு காணியை தன் சொந்த ஆதனமாக கருதி வசித்து வருகின்றார். உண்மையான உரிமையாளர் 12 வருடம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்த நபருக்கு “Prescriptive Right” உருவாகலாம். ஆனால் அவர் அந்த காணியை சட்டபூர்வமாக விற்க வேண்டுமானால், நீதிமன்றம் மூலம் அல்லது ஆட்சி உறுதி (Deed) மூலம் உரிமையைப் பெற்றிருத்தல் அல்லது உறுதிப்படுத்தல் வேண்டும்.


விசேட குறிப்பு : 


இந்த சட்டத்தில் ஒரு சில காலவரையறை விலக்களிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வகையில் சட்ட ஏற்பாடு ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பில் விரிவான பதிவு ஒன்றினை மிக விரைவில் தருகின்றேன்.


நீங்கள் கவனிக்க வேண்டியவை :


01. அரச காணி (State Land) மீது Prescription ஆட்சி உரிமை சட்டவலு பெற முடியாது.


02. LDO அல்லது Grant காணிகளும் இதே விதிக்கு உட்படாது.


03. அனுமதியுடன் ஆட்சி செய்தால் (உதாரணம் – வாடகை, lease) ஆட்சி உரிமை கிடையாது.


முடிவாக சொன்னால் : 


“10 வருடம் ஆட்சி செய்தால் காணி என்னுடையது!” என்பது ஒரு சட்ட மூடநம்பிக்கை (Legal Myth)!

உண்மையில் நீண்டகால, அனுமதியில்லாத, வெளிப்படையான, தொடர்ச்சியான ஆட்சி மட்டுமே நீதிமன்றத்தில் Prescriptive Title பெற வழிவகுக்கும்.


சட்டம் அறிந்தால் வாழ்க்கை மாறும்!

கீழே கருத்து பகிருங்கள் – “நீங்கள் இதை முன்பு உண்மை என்று நம்பினீர்களா?”


பகிருங்கள் – மற்றவரும் சட்டத்தின் உண்மை முகத்தை அறியட்டும்!


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#SriLankaLaw #PrescriptionOrdinance #LandDisputes #TamilLawEducation #LegalAwareness #LawPost #KaniUrumai #சட்டவியல் #LegalViralPost