السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 6 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும், கருத்து முரண்களின் போதும் ஸஹாபாக்கள் நபி {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வந்தே நின்றனர். நபி {ஸல்} அவர்களும் அந்தப் பிரச்சனைகளை முன் நின்று தீர்த்து வைத்தார்கள்.
ஸஹாபாக்கள் அத்தீர்வையே முடிவாக ஏற்றுக் கொண்டார்கள்.
தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.
அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள் கடும் குளிர் காலத்தில் பயணமேற்கொண்டனர்.
ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.
பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பார்கள். அது தான் அண்ணலாரின் வழக்கமாகவும் இருந்தது.
ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.
இதை அறிந்து கொண்ட உமர் {ரலி} அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும் ஆட்சேபித்தனர். ஆனாலும், தளபதியின் முடிவுக்கு கட்டுப் பட வேண்டுமென்ற மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.
அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது. குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள் நெருப்பு மூட்டினர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதியார் “தீயை அணைத்து விடுங்கள்; இனி யாரும் நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின் உத்தரவாகும்” என்று அனைவரிடத்திலும் கூறினார்கள்.
மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது.
முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க புறமுதுகு காட்டி ஓடினர்.
இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளை “எதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள். யாரும் இப்படியொரு உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் போடுவார்கள்” என சற்றும் எதிர் பார்க்கவில்லை.
எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம். இனிமேல், இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ”நாம் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்குவோம்” என்றனர்.
இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது. உடனடியாக, நாம் மதீனா திரும்பிச் செல்கின்றோம்” என்றார் தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.
உடனடியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள் மற்றும் இன்னும் சில வீரர்கள் சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், உமர் கூறிவிட்டார். அபூபக்ர் கூறிவிட்டார். இன்னும் கண்ணியத்திற்குரிய பெரும் ஸஹாபாக்களெல்லாம் கூறிவிட்டனர். உடனே அம்ர் {ரலி} அவர்களை அழைத்து அதற்காக தண்டிக்கவில்லை.
அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர் {ரலி} அவர்கள் வந்ததும் “அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “ ஆம்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து விடுவேனோ என நான் அஞ்சினேன்.
அப்போது எனக்கு “உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29) எனும் இறை வசனம் நினைவுக்கு வந்தது.
எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?” என்று கேட்டார்.
அது கேட்ட அண்ணலார் புன்முறுவல் பூத்தவராக “இல்லை, தப்பொன்றும் இல்லை” என்று கூறிவிட்டு, ”ஏன் நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறு கூறினேன். காரணம் நம் நடமாட்டத்தை அறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன்.
அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன்” என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள். பின்னர், ”ஏன் விரட்டிச் சென்று தாக்கிட வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள்” என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு “எதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள் களத்தை விட்டும் வெளியேறி பரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து சென்று தாக்கினால் அவர்கள் சுற்றி வளைத்து நம்மை தாக்கி, வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவை எடுத்தேன்” என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்} சிரித்தார்கள்.
பின்பு, “என்ன தான் இருந்தாலும் களத்தில் நிற்கிற போது படைவீரர்களிடம் நீங்கள் ஆலோசித்து முடிவெடுத்து இருக்க வேண்டும். என அறிவுரை கூறி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
(நூல்:தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 முதல் 67 வரை.)

Moulavi IM Sajith Musthafi Eravur

eravur