السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 8 November 2018

உம்மி நபி உதித்த தினம்

மீலாதுன் நபி (உம்மி நபி உதித்த தினம்) விழாவை இயற்கையே கொண்டாடியது.

நமது நாயகம் ﷺ அவர்களின் அருமைத் தாயாரான செய்யிதத்துனா ஆமினா றலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பிரசவ நேரம் ஏற்பட்டது. என்றாலும், இதை யாரும் அறிந்திருக்கவில்லை. காரணம் என்னவெனில் பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகின்றது போல மசக்கையோ உடல் ரீதியான மாற்றங்களோஅவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

எனவே தனது இந்த நிலையை அல்லாஹ்வின் சமூகத்தில் முறையிட்டார்கள். திடீரென அவர்களின் வீட்டின் மேற்கூரை பிளந்தது. அப்போது நமது ஆதித் தாயான அன்னை ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்து கண்ணழகிகள் என்ற ஹூருள்ஈன்களுடன் விஜயம் தந்து விட்டார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துணைவியாராகிய  ஸாரா நாயகி றலியல்லாஹு அன்ஹா அவர்களும் அது போன்றே பிர்ஒளனின் மனைவியாகிய ஆஸியா பின்த் மஸாஹிம் றலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சமூகமளித்த விட்டார்கள். மேலும் விண்ணில் பறக்கும் பறவைகள் யாவும் ஒன்று சேர்ந்து அன்னை ஆமினா றலியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்த அறையை சூழ்ந்து கொண்டன.  காட்டில் வாழும் விலங்குகளும் அணிவகுத்து நின்றன. வானவர் கோன் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் மலக்குகள் யாவரும் தக்பீர் முழக்கத்துடன் விண்ணிலிருந்து வருகை தந்து ஈருலக சர்தார் இவ்வுலகுக்கு வருகை தருவதை எதிர்பார்த்தவர்களாய் அறையைச் சுற்றியுள்ள முற்றவெளியில் சூழ்ந்திருந்தனர். பாரஸீக நாட்டின் சாவா என்ற கிராமத்தில் பல்லாண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த மிகப்பெரிய வற்றாத ஜீவநதி அன்றைய தினம் திடீரென ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத அளவுக்கு  முற்றிலுமாக வற்றி விட்டது. கூபாவுக்கும் சிரியாவுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் வரண்டு கிடந்த ஸமாவா என்ற மிகப்பெரிய ஓடை நீர் பெருக்கெடுத்து ஒலித்தோட ஆரம்பித்து விட்டது.

மேலும் சிரியா பஸரா ஆகிய நாடுகளின் கோட்டைகள் பிரகாசிக்க துவங்கி விட்டன. ரோமாபுரி மன்னனின் மாளிகையில் உள்ள 14 மணி மண்டபங்களும் அன்றைய தினம் திடீரென இடிந்து வீழ்ந்து விட்டன. பாரஸீக நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் அணையாமல் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த மிகப் பெரிய நெருப்புக் குண்டம் திடீரென அணைந்து விட்டது. பாரஸீக நாட்டு பட்டாளச் சிப்பாய்கள் திடீரென ஊமையாகி விட்டனர். சிலுவைகள் உடைத்தெறியப்பட்டன. சிலைகளும் உடைக்கப்பட்டன. அல்ஸாத் அல்உஸ்ஸா என்ற சிலைகள் தலை குப்புற வீழ்ந்தன. மிக்க கெளரவிக்கப்பட்டு வந்த (அவைகளுக்கு பூஜை நடத்துகிற)  பூசாரிகளும் அன்றைய தினம் கேவலப்படுத்தப்பட்டார்கள். சூனியக் காரர்கள் மற்றும் குறிகாரர்களின் காதுகளில் தாங்களுக்குச் சவாலாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறக்கப் போகிறார்கள்... என்ற செய்தியை அசரீரியான முறையில் கூறப்பட்டது. விண்ணிலிருந்து வரும் தீப்பந்தங்களால் ஷைத்தான்கள் எறியப்பட்டார்கள். இன்னும் இது போன்ற 400 அற்புதங்கள் அன்றைய தினம் நிகழ்ந்தது. இந்திலையில் தான் கண்மணி முகம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாகவும் தாங்களின் தஸ்பீஹ் விரலை உயர்த்தி ஏகத்துவத்தை எடுத்துக் காட்டியவர்களாகவும் சுர்மா இடப்பட்டவர்களாகவும் எண்ணை தேய்க்கப்பட்டவர்களாகவும் தொப்புள் கொடி வெட்டப்பட்டவர்களாகவும் கத்னா என்ற விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களாகவும் மணம் பூசப்பட்டவர்களாகவும் கண் இமைகளுக்கு மை இடப்பட்டவர்களாகவும் இந்த அவனியில் அவதரித்தார்கள். உடனே விண்ணிலிருந்து வருகை தந்திருந்த மலக்குமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கையிலேந்தி வானலோகம் பூமிலோகம் எல்லாம் வலம் சுற்றி வந்து திரும்பவும் பிறந்த இடத்திலேயே கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.
( மின்ஹத்துஸ் ஸரன்தீப் பக்கம் 113 - 114 )

நான் கண்மணி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் “நாயகமே தாங்களின் பிறந்த நேர நிகழ்ச்சியைப்பற்றி கூறுங்கள், என்றேன். நான் எனது தகப்பனார் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் துஆவாகவும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் சுபச் செய்தியாகவும் இருக்கிறேன். மேலும் எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களில் இருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தது என்று கூறினார்கள் என்பதாக அபூ உமாமா றலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்.
( முஸ்னத் அஹ்மத் 5/262, ஹதீஸ் அபீ உமாமா, ஹாக்கிம் 2/600 கிதாபுத் தாரீக் திக்ரு அக்பாரி ஸய்யிதில் முர்ஸலீன்,
மிஷ்காத் ஹதீஸ் எண் 5759 பாபு பழாயிலி ஸய்யிதில் முர்ஸலீன், ஷரஹுஸ்ஸுன்னா ஹதீஸ் எண் 3626.

மா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த அன்று வானவர்கள் முதற்கொண்டு பறவையினங்கள் செடிகொடிகள் கற்கரடுகள் உட்பட அனைத்துமே அண்ணல் நபி ஸல்ஙல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பை எண்ணி அகமகிழ்ந்தன என்று தெளிவாக விளங்க முடிகிறது. எனவே ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எழிலார்ந்த மீலாதை இயற்கையே கொண்டாடி மகிழ்ந்திருக்கையில் நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா!?