السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 3 January 2019

சட்டம் தெளிவோம் 01

சட்டம்  தெளிவோம் 01
குற்றம்சாட்டப்பட்டவர் / குற்றவாளி - Accused / Convicted
முறையாகக் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர் என அழைக்கப் படுவார்.
ஆனால், "குற்றம்சாட்டப்பட்டவர்" எல்லோரும் "குற்றவாளிகள்" அல்லர்.
ஒருவர் குற்றவாளியெனத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
ஆனால், இலங்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோரையும் ஊடகங்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் என்றே சித்தரிக்கின்றன.
இலங்கையில் மட்டுமல்ல, பொதுவாக எல்லா நாடுகளிலும் சட்டமானது பிரதானமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
ஒன்று குற்றவியல் சட்டம் - Criminal Law, மற்றையது குடியியல் சட்டம் - Civil Law.
குற்றவியல் சட்டம் அடங்கிய பிரதான சட்டத்தொகுப்பாக தண்டனைச் சட்டக்கோவை - Penal Code - பீனல் கோட்d உள்ளது. திருட்டு, கொலை, கொள்ளை, மோசடி, ஏமாற்று, லஞ்சம், ஊழல், கற்பழிப்பு, துஷ்பிரயோகம், அச்சுறுத்தல், அபகரித்தல், அத்துமீறல், ஆட்கடத்தல், சொத்தழிப்பு, சதி, அரசுக்கெதிரான குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள்... போன்ற சகல குற்றங்களும் வரையறை செய்யப்பட்டு அதற்கான தண்டனைகளும் பீனல் கோட் கோவையில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தேர்ச்சியும் ஈடுபாடும் கொண்ட சட்டத்தரணிகள் கிரிமினல் லோயர்ஸ் எனப்படுகின்றனர்.
பெரும்பாலான சட்டத்தரணிகள் இந்த வகையினரே. அடியேனும் இத்துறையில் பணிபுரிந்தவனே. இத்தகைய வழக்குகளில் தோன்றுவது இலகுவானதும் வருமானம் கூடியதுமாகும்.
சிவில் சட்டம் என்பதில் திருமணம், விவாகரத்து, குழந்தைகள் - மனைவியர் பராமரிப்பு, ஒப்பந்தம், காணி, சொத்துப் பங்கீடு, இறுதி விருப்பாவணங்கள், கம்பனிகள், காப்புறுதி, ஏற்றுமதி - இறக்குமதி, நம்பிக்கை பொறுப்புகள், வாடகை, குத்தகை, நஷ்டஈடு...போன்ற பரந்த அளவிலான சட்டங்கள் இதில் அடங்கும். இதற்கான மூலச் சட்டங்களாக நமது நாட்டில் பெரும்பாலும் ரோம, டச்சு சட்டங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தொழில் புரிவது சற்றுக் கடினமானதும் மிகவும் மதிப்புக்குரியதுமாகும். வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் நீண்ட கால அடிப்படையிலும் இருக்கும். முஸ்லிம்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு துறையாக இத்துறை கருதப்படுகிறது.
இத்தகைய சிவில் வழக்குகளில் - கிரிமினல் வழக்குகள் போல - அதிகமாக பொய், மோசடி செய்ய வேண்டியதில்லை. இத்தகைய வழக்குகளை எடுத்து நடாத்தும் வக்கீல்கள் சிவில் லோயர்கள் என அழைக்கப்படுவர்.
கிரிமினல் வழக்குகள் அடிப்படையில் Magistrate's Courts - நீதிவான் நீதிமன்றங்களில் பெரும்பாலும் தொடரப்படும். அனேகமான குற்றவியல் வழக்குகள் இந்த நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும். கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், அரசுக்கெதிரான குற்றங்கள், பொதுச் சொத்துக்கள் போன்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்பத்தில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்ப கட்டக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவை தொடர்பான ஆரம்பகட்ட சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு - அச்சாட்சிகள் போதுமானவை என நீதிவான் திருப்தியுறும் பட்சத்தில் அவ்வழக்குகள் தொடர்பான மொத்தக் கோவையின் பிரதியும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அத் திணைக்களத்தில் ஏராளமான அரச சட்டவாதிகள் இருப்பர். அவர்களே இக்கோவைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உயர் மேல்நீதிமன்ற High Courts) ங்களில் வழக்குத் தொடுப்பர்.
இத் திணைக்களத்தில் பணிபுரியும் அரச சட்டவாதிகளுக்குக் கொழுத்த சம்பளமும் வாகன அனுமதிப் பத்திரங்களும் உண்டு. இவர்கள் அரச சட்டவாதிகள் - State's Counsels - என அழைக்கப்படுவர். இவர்கள் தனிப்பட்ட ரீதியில் வெளி நபர்களின் வழக்குகளை எடுத்து நடாத்த முடியாது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானதாகும். பெரும்பாலும் இவர்களிலிருந்தே நீதிவான்கள், நீதிபதிகள், நீதியரசர்கள் நியமிக்கப்படுவர். விதிவிலக்குகளும் உண்டு. கிரிமினல் லோயர்களின் வருமானத்தோடு ஒப்பிடுகையில் ஸ்டேட்ஸ் கவுன்சல்களின் வருமானம் மிகவும் குறைவானதெனினும் புகழிலும் செல்வாக்கிலும் பெறுமதி கூடியவர்கள். கிரிமினல் லோயர்கள் அளவுக்கு ஸ்டேட்ஸ் கவுன்சல்கள் திறமையானவர்களாக அல்லது செயற்றிறன் உடையோராக இருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு மாதச் சம்பளத்திற்கு வேலை செய்வதும் இதற்கான ஒரு காரணமாகும். திறமையான சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பொதுவாக இணைந்து கொள்வதில்லை. இத்தகைய நடைமுறைச் சிக்கல்களால் தான் அதிகமான குற்றவாளிகள் இலகுவாகத் தப்பித்து விடுகிறார்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர் சட்டமா அதிபர் எனப்படுவார். இவரது வேலை அரசாங்கத்துக்கு ஜால்ரா அடிப்பதுதான் என்று சொல்லப்பட்டாலும் அவ்வாறல்லாத சுயாதீனமான கெளரவமான சட்டமா அதிபர்களும் நிறையவே இருந்துள்ளனர்.
(இன்னும் வரும்...)

Ajas Mohamed