السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

தண்டனைகள் - தண்டம் (Punishments - Fines)

தண்டனைகள் - தண்டம் (Punishments - Fines)

சில குற்றங்களுக்குத் தண்டனையாகத் தண்டப்பணம் விதிக்கப்படும்.
பொதுவாகச் சிறு சிறு குற்றங்களுக்குத் தண்டம் விதிக்கப்படுகிறது.
பெரிய குற்றங்களுக்கும் சிறைத்தண்டனையோடு தண்டமும் விதிக்கப்படும். போக்குவரத்து, வாகனங்கள் தொடர்பான குற்றங்கள், மதுபானங்கள், நுகர்வுப் பொருட்கள், பொது ஒழுங்கு விதிகள்.. போன்ற குற்றங்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது.
தண்டம் ஒன்று விதிக்கப்படுகையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தண்டம் ஒன்று செலுத்துவதால் பாரிய சட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
ஓர் அரச அதிகாரி, அரச ஊழியர் தண்டம் செலுத்தும் போது அவரது அரச தொழிலை இழக்க நேரும். ஓர் அரச ஊழியர் தண்டம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் அவரது அரச தொழில் இடைநிறுத்தப்பட்டு விசாரணை ஒன்றன்பின் அத்தொழில் வறிதாக்கப்பட்டு விடும். அதேபோன்று, அரச தொழிலொன்றைப் பெறும் நோக்கில் இருப்பவர்களும் தண்டம் கட்டும்படியான குற்றங்களுக்கு உட்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா அரச தொழில்களுக்கும் விண்ணப்பம் செய்யும் போது குறித்த விண்ணப்பப் படிவங்களின் இறுதித் தகவல் சரத்தில் 'நீர் எப்போதாவது நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளியாகத் தண்டிக்கப் பட்டுள்ளீரா ?' என்று நிச்சயமாகக் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு'ஆம்/இல்லை' என்று தெளிவாகப் பதில் எழுத வேண்டும். ஒரு பதிலும் எழுதாவிட்டாலோ, 'ஆம்' என்று எழுதினாலோ முகத்தோற்ற அளவிலேயே - prima facia - குறித்த தொழிலுக்கு அவர் தகுதியற்றவராக ஆகி விடுவார். தண்டம் செலுத்திய ஒருவர் அல்லது தண்டிக்கப்பட்ட ஒருவர் அதை மறைத்து, விண்ணப்பப் படிவத்தில் 'இல்லை' என்று பதிலளித்து அத் தொழிலைப் பெற்றிருப்பது எப்போதாவது பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் (பெட்டிஷன் எழுதுவதில் முஸ்லிம்கள் பேர்போனவர்கள் என்பதையும் நினைவில் கொள்க !) அவரது தொழில் இல்லாதொழிக்கப்படுவதுடன் தகவலை மறைத்த குற்றத்திற்காகவும் பொது நிதியை மோசடி செய்த குற்றத்திற்காகவும் பொய்யான சத்தியப்பிரகடனம் (ஒவ்வொரு அரச ஊழியரும் சத்தியப்பிரகடனம் ஒன்று கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்) செய்த குற்றத்திற்காகவும் அவருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும். அதற்கான தண்டனைகளாகச் சிறைத்தண்டனை மற்றும் தண்டம் விதிக்கப்படுவதோடு அதுகாலவரை அரசாங்கத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்களையும் வட்டியோடு அரசுக்கு மீளச் செலுத்தும்படி கட்டளை இடப்படுவதோடு, அவ்வாறு செலுத்தத் தவறும் போது அவருக்குச் சொந்தமான ஏதேனும் ஆதனங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை ஏலத்தில் விற்கப்பட்டு அந்த நஷ்டங்கள் அறவிடப்படும். அதுவும் போதாதவிடத்து/ அல்லது அவ்வாறான ஆதனங்கள் ஏதும் இல்லாதவிட்டத்து அத்தொகைக்காக மிக நீண்ட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் ஏற்கனவே அரச தொழில்களில் இருப்போர் ஏதாவது குற்றமிழைத்து, தண்டம் விதிக்கப்படும் ஒரு நிலைமை ஏற்படுமிடத்து குற்றத்தீர்ப்புக் கூறப்பட்டவர் தானாகவோ அல்லது தனது சட்டத்தரணி மூலமாகவோ தான் ஒரு மாணவர் / அரச பணியாளர் என்பதை நீதிவானிடம் கட்டாயமாக எடுத்துச் சொல்லி நீதிமன்றத்தின் சலுகைகளைக் கோர வேண்டும். அப்படிக் கோரச் சட்டத்தில் இடமுண்டு.
பெரும்பாலான நீதிபதிகள் தண்டனை வழங்க முன்னர் 'நீர் என்ன செய்கிறீர் ?' என்று வினவுவது வழக்கத்தில் உள்ளது. அப்போது உண்மையை மறைக்காமல் மாணவரா அரச ஊழியரா என்பதைக் கட்டாயம் சொல்லிவிட வேண்டும். அதனால் நீதிமன்றம் அவருக்கு முடியுமான சலுகைகளை அளிக்க முடியும்.
ஆனால் அவ்வாறு எதுவும் கேட்காமலேயே - கைதியின் முகத்தைக்கூடப் பார்க்காமலேயே தீர்ப்புச் சொல்லும் (அ)நீதிபதிகள் தான் அதிகம் உள்ளனர் என்பதையும் கவனத்திற் கொள்க !
இந்த இடத்தில் சட்டத்தரணிகளும் கூடிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தன் கட்சிக்காரரின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தி இத்தகைய விடயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு முஸ்லிம் சட்டத்தரணி இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறும் போது அது அந்த மனிதனுக்கு இழைக்கப்படும் பாரிய குற்றமாக அமைந்துவிடும். சக மனிதருக்கு இழைக்கப்படும் குற்றத்தை அம் மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்பதை முஸ்லிம் சட்டத்தரணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையான போது தமது உத்தியோகபூர்வ மாணவர்/தொழில் அடையாள அட்டையை நீதிமன்றத்தில் காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களுக்குக் கூட நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல் தண்டம் விதித்தும், கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றங்களுக்குக்கூட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும் குற்றவாளிக்கு நீதிமன்றம் கருணை - Mercy - காட்ட வாய்ப்புகள் உண்டு.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையால் உடனடிப் பாதிப்பில்லை, ஆனால் அது பிற்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும் சந்தர்ப்பம் உண்டு. அது குறித்து இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இவ்வாறு, குற்றவாளி தொடர்பில் நீதிமன்றத்தின் கருணையை / சலுகையைக் கோரி நிற்பது ( Pleading for mercy ) ஒவ்வொரு சட்டத்தரணியினதும் தலையாய கடப்பாடாகும். அதைச் செய்யத் தவறும் சட்டத்தரணிக்கு எதிராக பிரஜையொருவர் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு (Bar Association) / உயர் நீதிமன்றத்துக்கு (Supreme Court) முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறு சட்டத்தரணி ஒருவர் செய்யத் தவறி, அதனால் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பின்னர் கூடிய விரைவில் குறித்த நீதிமன்றத்தில் ஒரு நகர்த்தல் பிரேரணையை (Motion) முன்வைத்து நிவாரணம் கோரி நிற்க முடியும்.
விதிக்கப்படும் தண்டப் பணத்தை, தண்டமாக இல்லாமல் 'அரச செலவாக' - (State Cost) நியமிக்கும்படி கோரி நிற்க வேண்டும். அரச செலவாக தண்டம் கட்டுவது அரச தொழிலையோ, எதிர்காலத்தையோ பாதிக்க மாட்டாது.
இவ்வாறு செய்துகொள்ளாமல், உண்மைகளை மறைத்து அப்போதைக்கு தொழிலை - எதிர்காலத்தைப் பாதுக்காத்துக் கொண்டாலும் நிச்சயமாக ஏதோ ஒரு கட்டத்தில் அது நம்மைப் பாதிக்கலாம்.
எந்தவொரு தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பதிவாக ரெக்கோர்ட் ஆகி விடும். அதாவது, தண்டனை பெறும் ஒவ்வொரு பிரஜையினதும் இரண்டு உள்ளங்கைகளினதும் ரேகைப் பதிவுகள் (Finger Prints) நீதிமன்றப் பதிவாளரால் எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். பின்னர் அது மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல் காப்பகத்தில் நிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு விடும். பின்னொரு காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் போலிஸ் விசாரணை ஒன்றுக்கு முகம்கொடுக்கும் போது உங்கள் அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்தவுடன் (கொடுத்துத்தான் ஆக வேண்டும்) உங்கள் பழைய வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வந்து விடும். வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு, வெளிநாட்டு உயர்கல்வி விஸா விண்ணப்பம் மற்றும் ஏதாவது அரச தொழில்களுக்காக போலிஸ் சான்றிதழ் - (Police Clearance Certificate) பெறச் செல்லும்போது இந்த Finger Prints Records உங்களுக்கு வில்லங்கமாக வந்து நிற்கும்.
இப்போது இலெக்ட்ரோனிக் அடையாள அட்டை நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதற்கான நோக்கங்களுள் ஒருவரது குற்றப்பின்னணி (Criminal Background) யை இலகுவாக அறிந்துகொள்ள வசதிசெய்வதும் ஒன்றாகும். ஒருவரது தே.அ.அட்டை இலக்கத்தை எந்தப் பொலிஸில், அரச திணைக்களத்தில், வங்கிகளில், விமான நிலையத்தில், கடவுச்சீட்டு, சாரதிப் பத்திரம், நற்சான்றிதழ்கள் எடுக்கப்போகும் போது உங்கள் அ.அ.இலக்கத்தின் மூலமாக மிகவும் இலகுவாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு விடும். குற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த Electronic Identity Cards உதவும்.
ஒவ்வொரு தண்டனை விதிக்கப்பட முன்னரும் ஒவ்வொரு குற்றவாளியினதும் கைரேகைப் பதிவுகள் எடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அவருக்கு எதிரான ஏதாவது முன்குற்றத் தீர்ப்புகள் (Previous Convictions) உள்ளனவா என்று கட்டாயம் பார்க்கப்பட்ட பின்பே தண்டனை விதிக்கப்படும்.
முன்குற்றத் தீர்ப்புப் பதிவொன்று இருக்கும்போது புதிய இந்த வழக்குக்கான தண்டனை விதிப்பில் தாக்கம் செலுத்தும். முன்குற்றம் குறித்தும் பின்னர் விரிவாக நோக்குவோம்.
போஸ்ட் ஒஃபிஸில், வேறு இடங்களில் தண்டம் செலுத்திய பின்னர் கட்டாயமாக அதன் பிரதியை பொலிஸில், நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பித்துவிடவும் வேண்டும்.
(சட்டம் குறித்த இத்தகைய எனது பதிவுகளைத் தயவு செய்து நீங்களும் என் பெயருடன் இணைத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள், யாருக்காவது பயனளிக்கும் அல்லவா !)
நன்றிகள்.
Ajaaz Mohamed
Colombo.
06.01.2018
08.40 pm