السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

Convicted/Innocent/Discharged - Acquitted

குற்றவாளி/நிரபராதி/விடுவிக்கப்படடவர்/ விடுதலை செய்யப்பட்டவர்

குற்றவாளி/நிரபராதி/விடுவிக்கப்படடவர்/ விடுதலை செய்யப்பட்டவர்

இச்சொற்களும் பொதுவாக ஊடகங்களில் தவறாகவே கையாளப்பட்டு வருகின்றன.
இச்சொற்கள் குறித்து சுருக்கமாக சற்றுப் பின்னர் அவதானிப்போம். இப்போது கிரிமினல் லோயர்களின் செயற்களம் / பணி குறித்து இங்கே சற்று விரிவாக நோக்குவோம்.
குற்றவியல் வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகள் கிரிமினல் லோயர்கள் எனப்படுவர். இவர்களுக்கு அரசாங்க ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் தாமாகவே தமது வாதத்திறமையால் மட்டுமே உழைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் திறமையான கிரிமினல் லோயர்கள் நீதிபதிகளை, அரச சட்டவாதிகளை விடவும் மிக மிக அதிக அளவில் உழைக்கின்றனர். நீதிபதி ஒருவர் பெறும் மாதாந்த ஊதியத்தை விடவும் ஒரேயொரு வழக்கில் ஒரே தினத்தில் கூட கிரிமினல் லோயர்கள் உழைக்க முடியும். அதுதான் இத்தகைய வக்கீல்களின் சிறப்பு. ஆனால் இவர்களது வேலை மிகவும் இலகுவானது. ஒரே சிக்கல் - கொஞ்சம் நீதி நேர்மை உண்மை சத்தியத்தைத் தூக்கி எறிந்து விட்டு, பொய் - மோசடி, ஊழல், திரிபுபடுத்தல், புரட்டுதல், மாற்றுதல், தந்திரம், வார்த்தை ஜாலங்களில் சூடு சொரணை இல்லாமல் ஈடுபடத் தயாராக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.! இங்குதான் பிரச்சினையே உள்ளது.
குற்றம் ஒன்றைச் செய்திருப்பவரையும் - அதைத் தெரிந்துகொண்டே - அந்த உண்மையை மறைத்து - அவர், நிரபராதி என்று வாதிட வேண்டியதே கிரிமினல் லோயரின் வேலை. இதற்காகத்தான் அவர் கேட்கும் பெரிய பெரிய தொகைகளைக் குற்றவாளிகள் கண்களை மூடிக்கொண்டு கொடுத்துத் தீர்க்கின்றனர். இதனால் தான் அதிகமான கிரிமினல் லோயர்கள் பொதுவாக நிம்மதியிழந்தவர்களாக, மது அருந்துபவர்களாக உள்ளனர். அவர்களது மனசாட்சி அவர்களை வதைக்கிறது போலும் !
குற்றவியல் வழக்குகளைத் தொடுப்பது - அடிப்படையில் பொலிஸார்தான். பெரிய வழக்குகளில் மட்டும் அரச சட்டவாதியும் பொலிஸாரோடு கூடத் தோன்றுவார். குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வாதிகள் மீது அதாவது பொலிஸ் - அரச சட்டவாதியின் மீதே உள்ளது. அது "எண்பிக்கும் பொறுப்பு - Burden of Proof" எனப்படும். சாட்சிகளை திரட்டி, தொகுத்து, நியாயமான, துளியளவு சந்தேகமும் எழாதபடிக்கு நீதிமன்றத்தின் முன்னால் இவர்களே முன்வைத்து நிரூபித்தாக வேண்டும். அதாவது குற்றவாளிதான் என வாதிகளே நிரூபித்தாக வேண்டும். எதிரியின் சார்பில் அதாவது குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் தோன்றும் க்ரிமினல் லோயர் - Defence Counsel - தனது தரப்பு நபர் நிரபராதி - Innocent - not guilty என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை நிரபராதியாக ஆக்குவது மிகவும் இலகுவானது. அதற்கு இந்த நாட்டின் குற்றவியல் மற்றும் சான்றியல் சட்டம் - Law of Evidence மிகவும் துணையாக, வசதியாக உள்ளது.
வாதிகள் 100% குற்றத்தை நிரூபித்தாலும் அதில் ஓரே ஒரு சதவீத (0.01% ஆயினும்) சந்தேகத்தைக் கிளப்பி விட்டால், அதாவது நீதிபதியின் மனதைக் குழப்பி விட்டால் அச் சிறு சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியை நிரபராதியாக ஆக்கிவிட முடியும். இக்கோட்பாடு Benefit of Doubt - சந்தேகத்தின் லாபம் எனப்படுகிறது. "
"நீதியின் முன்னால் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது"
எனும் மிக உயர்ந்த இயற்கை நீதிச் சட்டக்கோட்பாடே இதற்கான அடிப்படையாகும்.
குற்றவாளிகளை நிரபராதிகளாக்க கிரிமினல் லோயர்கள் கையாளும் சட்ட ரீதியான ஆயுதங்கள் சாட்சிகளைக் குறுக்குவிசாரணை செய்வதனூடாக சாட்சிகளைக் குழப்புவதும் சந்தேகங்களைக் கிளப்புவதும், முதற்கட்ட ஆட்சேபங்களை - Preliminary Objections - எழுப்புவதுமாகும்.
இது தவிர, பொலிஸை - அரச சட்டவாதியை - சிலபோது நீதிபதியை - சாட்சிகளைச் "சரிக்கட்டுவதன்" மூலமும் கிரிமினல் லோயர்கள் இச்"சாதனைகளை"ச் செய்யும் நிலைமையும் உள்ளது...
துளியளவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் - Beyond reasonable doubt - குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து அவர் "குற்றவாளி" எனப்படுவார்.
துளியளவேனும் சந்தேகம் எழும் பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுமிடத்து அவர் "விடுதலை செய்யப்பட்டவர்" எனப்படுவார். ஆனால், இதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் சிலவேளை அவர் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம்.
தொடரப்பட்ட ஒரு வழக்கில் போதியளவு சாட்சிகள் இல்லையென பொலிஸார் / அரச சட்டவாதி நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கும் போது அவ்வழக்கைத் தொடர்ந்து விசாரிக்காமல் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுமிடத்து அவர் "விடுவிக்கப்பட்டவர்" எனப்படுவார். இவரும் சிலவேளை இதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வாய்ப்புள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் மீதான வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றத்தை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் விடுவிக்கப்படுபவர் "நிரபராதி" எனப்படுவார். இவர் மீது இதே குற்றச்சாட்டுக்காக இதே வழக்குக்காக மீண்டும் கைதுசெய்யப்பட முடியாது.
(.. இன்னும் வரும்...)
Ajaaz Mohamed