السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 8 January 2019

Remand Custody/Detention/Imprisonment

Remand Custody/Detention/Imprisonment
விளக்க மறியல்/தடுப்புக் காவல்/சிறைத் தண்டனை - 
**********************************************
கைது செய்யப்படும் ஒருவர் போதிய முகாந்திரங்கள் காணப்படுமிடத்து நீதிமன்றத்தால் விளக்க மறியலில் (remand custody) - வைக்கப்படுவார்.
விளக்க மறியல் என்பது நீதிவானின் மேற்பார்வையில் ஒரு மறியல் சாலையில் (பெரும்பாலும் ஒரு சிறைச்சாலையில்) தடுத்து வைக்கப்படுதலாகும். 
ஒரு தடவையில் 14 நாட்களுக்கு மேற்படாத வரையில் - ஆனால் தேவைப்படும் போது ஒரு வருடம் வரைக்கும் மீண்டும் மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட முடியும்.
பிணைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விளக்க மறியல் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கப்பட முடியாது. ஆனாலும், மேல் நீதிமன்றத்தில் தொடரப்படக்கூடிய வழக்குகளில் - நீதிமன்றம் தீர்மானிக்குமிடத்து குறித்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை ஒருவர் தொடர்ந்தும் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட முடியும்.
விளக்க மறியல் எதற்காக ?
1. ஒரு சந்தேக நபர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் உயிருக்கு வெளியில் இருப்போரால் ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அதைத் தடுப்பது. அதாவது நீதிமன்றமே அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது.
2. சந்தேக நபர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான வழக்குத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சாட்சிகளைக் குழப்பிவிடாமல் தடுப்பது.
ஒவ்வொரு 14 ஆவது தினமும் அல்லது அதற்கிடையில் ஒவ்வொரு மறியல்காரரும் ஒரு நீதிவானின் (Magistrate) முன்னிலையில கட்டாயமாக ஆஜர்படுத்தப்பட வேண்டும். மறியலில் இருக்கும் கைதியின் பாதுகாப்பு, உடலாரோக்கியம், மறியற்சாலையில் பிற கைதிகளால் அல்லது சிறைச்சாலை அதிகாரிகளால் விளையக்கூடிய தொல்லைகள் போன்றவற்றை நீதிவான் பார்த்து, கேட்டு, விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காகவே ஒவ்வொரு 14 நாளிலும் மறியல் கைதி நீதிவானின் முன்னிலையில கொண்டுவரப்படுகிறார். ஆனால், சாதாரண ஏழைக் கைதிகளுக்கு இந்த ஏற்பாட்டால் எந்தப் பயனும் இல்லை. அத்தகைய ஏழைக் கைதிகளின் முகத்தைக்கூட ஏறெடுத்தும் பார்க்காமலேயே சர்வசாதாரணமாக "14 நாட்கள் மறியல் நீடிப்பு" என்று முதலியார் கத்திவிடுவார்.. அத்தோடு வந்தவழியே அக்கைதி மீண்டும் சிறைக்கூண்டுக்குள் தள்ளப்படுவார்.
ஆனால், வசதியுள்ள, வாயுள்ள கைதிகள் தமது கோரிக்கைகளை நீதிவானிடம் முன்வைத்து, முடியுமான நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மறியல் கைதிகள் எக்காரணம் கொண்டும் சிறைச்சாலையில் காவலர்களால் உடல் ரீதியாகத் தாக்கப்படவோ துன்புறுத்தப்படவோ முடியாது. அவர்கள் சாதாரண - தாம் விரும்பும் உடைகளில் இருக்கலாம். மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ள, உறவினர்களைத் தினமும் பார்வையிட முடியும். மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் சுதந்திரமும் வசதிகளும் மறியல்சாலைகளில் உண்டு.
(... இன்னும் வரும்..)
Ajaaz Mohamed