السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 January 2019

தடுப்புக் காவல் - Detention

தடுப்புக் காவல் - Detention
சில பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விரிவான, சுயாதீனமான, நீண்ட கால விசாரணைகளை மேற்கொள்வதற்காக விளக்க மறியலுக்குப் பதிலாக, தடுப்புக் காவல் கட்டளை (Detention Order) பிறப்பிக்கப்பட்டுக் கைதிகள் தடுத்து வைக்கப்படுவர்.
போதைப்பொருள், பாரிய அளவிலான நிதி மோசடிகள், அரசுக்கு எதிரான குற்றங்கள், ஆட்கடத்தல், பயங்கரவாதம் போன்றவற்றுக்கு இவ்வாறு D.O. அடிக்கப்படும்.
1. இதன் மூலம் கைதிகள் - மறியலில் போல அல்லாமல் - 1, 3, 6 மாதங்கள் என்று நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவர்.
ஆனால், 6 மாதத்திற்கு ஒரு தடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
2. இப்படியான தடுப்புக் காவல் பெரும்பாலும் சிறைச்சாலையில் வைக்கப்படுவதில்லை.
சீ ஐ டி, நாலாம் மாடி, தடுப்பு முகாம்கள் போன்ற இடங்களில் தான் வைக்கப்படுவர். பாதுகாப்பு மிகவும் கடுமையாக
இருக்கும். விசாரணைகள், அதற்கான அணுகுமுறைகள் வித்தியாசமாக இருக்கும். சட்டத்தில் தடுக்கப்பட்டிருந்த போதிலும் இங்கெல்லாம் சித்திரவதை, கடுமையான தாக்குதல் என்பன உண்டு. மதுபானம், சிகரட் போன்றனவும் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு, தந்திரமாகத் தகவல்கள் பெறப்படும் நடைமுறைகளும் உண்டு.
இத்தகைய விசாரணைகளில் கைதி ஒருவர் கொடுக்கும் வாக்குமூலங்களை அக் கைதி
பின்னர் நீதிமன்றத்தில் நிராகரிக்க முடியும்.
யாராவது ஒருவர் தடுப்புக் காவல் கட்டளை பெற்றவுடன், உடனடியாக ஒரு வக்கீல் மூலமாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்:
(இவை என் தனிப்பட்ட முன்யோசனைகள்)
1. தடுப்புக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட முன்னர், தன்னை ஒரு சட்ட வைத்திய அதிகாரி (JMO - Judicial Medical Officer) முன்னிலையில் ஆஜர் படுத்துமாறு கோரிக்கை விடுத்து, அவர் மூலமாக முழுமையான ஒரு மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. அம்மருத்துவ அறிக்கையில் - தனது தலைமுடி, கை கால் நகங்கள், பற்களின் எண்ணிக்கை, உடலில் உள்ள தழும்புகள், விஷேட அடையாளங்கள், உடலிலுள்ள நோய்கள், உடல் பாரம்..போன்ற சகல விடயங்களையும் தெளிவாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், தடுப்புக் காவல் முடிந்து வெளியே வரும்போது உடல் என்ன பாடுகள் பட்டிருக்கும், எத்தனை நகங்கள் பிடுங்கப் பட்டிருக்கும், எத்தனை பற்கள், எலும்புகள் உடைக்கப்பட்டிருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. தடுப்புக் காவலுக்குக் கொண்டுசெல்லப்பட முன்னர் இவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டால் பெரும்பாலும் போதிய உடல் நலத்தோடு வெளியே வர முடியும். தடுப்புக் காவல் முடிவடைந்து விடுவிக்கப்படும்போதும் முன்னர் போலவே ஒரு கோரிக்கையை முன்வைத்து மீண்டும் ஒரு ஜே எம் ஓவிடம் ஆஜராகி, தன் உடல் நிலை குறித்த முழு அறிக்கையைப் பெற்றுக் கொண்டு தன் முன்னைய மருத்துவ அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து அதில் ஏதும் மாற்றங்கள் இருந்தால் அதற்கெதிராக பலமான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக அமைய முடியும்.
3. தடுப்புக் காவலில் இருக்கும்போது தனது சட்டத்தரணியை - தேவைப்படும் போது உள்ளே வரவழைத்துப் பேசுவதற்கான முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக தேவையற்ற தாக்குதல்கள், நிர்ப்பந்தங்களைத் தடுத்துக் கொள்ள முடியும்.
(... இன்னும் வரும்...)