السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 3 January 2019

சந்தேகநபர்கள் தொடர்ச்சி 3

சந்தேகநபர்கள்   தொடர்ச்சி 3
"குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொருவரும் நிரபராதியே" என்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
முறைப்பாடொன்று இல்லாத போது, வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம் எவரும் கைதுசெய்யப்பட முடியாது. Reasonable Suspicion - நியாயமான சந்தேகம் இல்லாமல் எவரும் கைதுசெய்யப்பட முடியாது. கைதுசெய்ய முன்பாகவே குறித்த சந்தேகம் எழுந்திருக்க வேண்டும். கைதுசெய்துவிட்டு, பின்னர் அதற்கான சந்தேகத்தைக் கற்பிதம் செய்யக்கூடாது. தனது சந்தேகத்தைக் குறித்த நபரிடம் வெளிப்படுத்தி, அது குறித்து குறித்த நபரின் விளக்கத்தைக் கோரி நிற்கவும், அதற்கான சரியான காரணத்தை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் மாத்திரமே நபரைச் சந்தேகத்தின் கீழ் கைதுசெய்யவும் முடியும்.
எந்தவொரு பொலீஸ் அதிகாரியும் சாதாரண ஒரு பொதுமகனின் அடையாளத்தை நிரூபிக்கும்படி கோர முடியும். ஆனால் சீருடையில் இல்லாத எவருக்கும் எவரும் தமது தே.அ.அட்டையைக் காண்பிக்கும் கடமை இல்லை. அதாவது ஒரு நபரின் தேசிய அடையாள அட்டையைக் காட்டும்படி கோர முடியும். காட்டத் தவறும் பட்சத்தில் அவரைச் சந்தேகத்தின் கீழ் கைதுசெய்ய முடியும். அதேவேளை தன்னிடம் அடையாள அட்டையைக் காட்டும்படி கோரும் எந்த மனிதனிடமும் காட்டும்படி கோரும் நபரது அடையாள அட்டையை முதலில் கோரி நிற்க முடியும்.
பொலிஸார் மற்றும் அதிகாரம் பெற்ற நபர்கள் தவிர்ந்த வேறு பொது நபர்களிடம் நமது அடையாள அட்டைகளைக் காட்டாதிருக்க நமக்கு உரிமையுண்டு. யாரேனும் ஒரு பொது மகனுக்கு இன்னொருவர் குறித்து ஏதும் சந்தேகங்கள் எழுந்தால் அது குறித்து 119 க்கோ அல்லது பொலிஸுக்கோ அறிவிக்க முடியுமே தவிர இன்னொரு தனிப்பட்ட நபரின் தே.அ.அட்டையை வற்புறுத்திக் கேட்டு நிற்க முடியாது. கொடுக்கல் வாங்கல் தவறுகளுக்காக அடையாள அட்டைகளைப் பிடித்துவைக்க முடியாது. ஆனால், விடுதிகளில, ஏஜென்ஸிகளில் இவ்வாறு நடக்கின்றன. தன்வசம் தே.அ.அட்டையை வைத்திருக்காத எந்தவொரு நபரையும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்ய முடியும்.
இன்னொருவரது பெயரில் உள்ள சிம் கார்ட்டுகளையோ, பாஸ்போர்ட்களையோ, வேறு சான்றிதழ்களையோ எவரும் தம்வசம் வைத்திருக்க முடியாது. ஒருவர் தான் வைத்திருக்கும் மொபைல் போன் தன்னுடையதுதான், சிம் கார்டும் எனைய ஆவணங்களும் தன்னுடையவைதான் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆவணங்களை எப்பொழுதும் தன்வசம் வைத்திருக்க வேண்டும். எந்தப் பொலிஸ் அதிகாரியும் எவரது மொபைல் போனையும் மெமரி கார்ட்டையும் எவரிடமிருந்தும் கேட்டு வாங்கிப் பரிசோதிக்கும் அதிகாரம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. அதைச் செய்ய மறுக்கும் உரிமை பிரஜைகளுக்கு இல்லை. மொபைல் போனில், மெமரியில் ஆபாசப் படங்கள், ஆபாச வீடியோக்கள் காணப்பட்டால் அம் மொபைல் போன் மற்றும் மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டு, உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடியும். குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து, போனும் மெமரி கார்ட்டும் அரசுடைமையாக்கப்படுவதுடன் 50,000/= வரை தண்டமும் அல்லது தண்டத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். 18 வயதுக்கு மேற்பட்டோராயினும் தம்வசம் ஆபாசப் படங்கள், ஆபாச வீடியோக்களை வைத்திருக்க முடியாது.
கைதுசெய்யும் எந்த அதிகாரியும் அதற்கான முகாந்திரத்தைக் குறித்தவருக்குச் சொல்ல வேண்டும் என்பதுடன் தனது கடமைக் குறிப்புப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்து வைத்திருக்கவும் வேண்டும். தேசிய பாதுகாப்பு, மிகவும் முக்கியமான அவசர நிலைகளில் இதற்கு விதிவிலக்குகள் உண்டு. அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு கைதுசெய்பவரையே சாரும். கைதுசெய்யும் போது அதற்கு ஏதும் இடையூறு, எதிர்ப்பு வரும்போது Minimum Force - ஆகக் குறைந்த பலத்தைப் பிரயோகிக்க முடியும். தேவைக்கு அதிகமாக கைதுசெய்யப்படும் நபர் மீது பலத்தைப் பிரயோகிக்க முடியாது. கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பித்து ஓடும் ஒரு சந்தேக நபர் மீது - மரணம் நிகழாத வண்ணம், முழங்காலுக்குக் கீழே - துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முடியும். கைதுசெய்ய எத்தனிக்கப்படும் ஒரு சந்தேக நபரை மறைத்து வைப்பதோ, அவர் தப்பிக்க உதவுவதோ, அவர் கைதுசெய்யப்பட உதவி கோரும்போது உதவ மறுப்பதோ குற்றங்களாகும்.
தான் கைதுசெய்யப்படலாம் எனச் சந்தேகிக்கும் எவரும் அதற்கு எதிராக தன் தரப்பு நியாயங்களை முன்வைத்து, குறித்த பகுதி மேல் நீதிமன்றத்திடம் முன்பிணை (Anticipatory Bail) கோரி நிற்கலாம். அப்போது தான் எதேச்சையாகக் கைதுசெய்யப்படுவதை முன்கூட்டியே தடுத்துக்கொள்ள முடியும்.
தொடரும்...
Ajaaz Mohamed