السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 03

 

கெளதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ


தொடர் -03

தொகுப்பு: Maadhihur Rasool


குத்புல் அக்தாப் அவர்களுடைய #பிறப்பைச்_சுற்றி_நிகழ்ந்த_அற்புதங்கள்


• அவர்கள் பிறக்கும் போது அவர்களுடைய தாயாருக்கு கிட்டத்தட்ட 60 வயது. பெண்கள் பொதுவாக குழந்தைகளைப் பெற முடியாத வயதிலேயே பாலகர் அப்துல் காதிரை கருவுற்றார்கள்.

...

• மிஃராஜ் இரவில், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது முபாரக்கான கால் பாதத்தை அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் தோளில் வைத்தே புராக் வாகனத்தின் மீது ஏறினார்கள். அவர்கள் பிறந்த போது, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பாதத் தடம் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் மீது இருந்தது. இதுவே அவர்களுடைய அந்தஸ்துக்கு சான்றாகும்.

….

• அவர்கள் பிறந்த அதே நாள், ஜீலானில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்குழந்தைகள் ஒன்றுகூட இல்லை. இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே திகழ்ந்தார்கள்.

• அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் தந்தை அஸ்ஸெய்யித் அபு சாலிஹ் மூஸா (ரலி) அவர்கள் ஒரு கனவில் தம் பாட்டனார் நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள், பாட்டனார் கூறினார்கள்: “என் மகன் அபு சாலிஹே! உன்னதமான அல்லாஹ், உமக்கு ஆண் குழந்தையை கொடுக்கப்போகிறான். அவர் என்னுடைய நேசத்துக்குரியவர். அல்லாஹ்வுடைய நேசத்துக்குரியவர். அவ்லியாக்கள் மத்தியில் அவருடைய அந்தஸ்து; நபிமார்கள் மத்தியில் என்னுடைய அந்தஸ்துக்கு ஒப்பானதாகும்” என்று சுபச்செய்தி கூறினார்கள்.

....

• இவர்கள் கருவிலிருக்கும் போது அன்னையின் கனவில் ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி 'உமது கர்ப்ப அறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார் என்று நன்மாராயம் கூறிச் சென்றனர். 

….

• சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் பெற்றோர்களின் கனவில் பிறக்கவிருக்கும் அவர்களுடைய மகன் சுல்தான் அல்-அவ்லியாவாக இருப்பார் என்றும் அவரை எதிர்ப்பவர்கள் கும்ராஹ் (வழி தவறியவர்கள்) என்றும் நற்செய்தி கூறினான்.

.....

• ரமழானின் போது, சிசு விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை பால் குடிக்க மறுத்தது. இவ்வாறு பிறந்த குழந்தை நோன்பு நோற்கும் செய்தி ஊர்முழுக்க பரவியது. அடுத்த ஆண்டு றமழான் நோன்பு நோறக தலைப்பிறையை காண தேடும்போது கடும் மேக மூட்டத்தால் பிறையைக் காண முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, பாலகர் அப்துல் காதிர் பகலில் பால் குடித்தாரா என்பதைப்பார்த்து மக்கள் ரமழான் நோன்பைக் கடைப்பிடித்தனர்.

….

 #கல்வி

இளம் பிராயத்திலேயே தந்தையை இழந்த இவர்கள், பாட்டனார் அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் ஸவ்மயீ அவர்களால் வளர்க்கப்பட்டார்கள். குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள்.

ஐந்தாம் வயதில் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்கள். ஏழாம் வயதில் குர்ஆனை மனனம் செய்தார்கள். பத்தாம் வயதில் “வலித்தனம்” வழங்கப்பட்டதை வானவர் மூலம் அறிந்து சிறுவர் அப்துல் காதிரின் கல்வித் தாகம் மேலும் அதிகரித்தது. இதனால் தமது உயர்கல்விக்காக 18ம் வயதில் பக்தாத் நோக்கி பயணிக்கிறார்கள்.


செல்லும் வழியில் திருடர் கூட்டத்தை தமது நேர்மையால் திருத்தி அவர்களை நேர்வழிபெறச்செய்தார்கள்.


தம் 18ம் வயதில் அன்னை ஆசியுடன் உயர்கல்வி கற்க பக்தாது சென்றனர். அப்போது, 40 பொற்காசுகளை இவர்கள் சட்டைப் பையில் மறைத்து தைத்து வைத்து, 'எக்காலமும் பொய்யுரைக்க கூடாது' என்று கூறி ஒரு வணிகக் கூட்டத்தாருடன் பக்தாது செல்ல தாயார் வழி அனுப்பி வைத்தனர். வழியில் ஹமதான் அருகே செல்லும்போது இவர்களது கரவானை ஒரு கள்வர் கூட்டத்தினர் தாக்கினர். அதில் ஒருவன் இவர்களைப் பார்த்து, 'உம்மிடம் என்ன உள்ளது?' என்று கேட்க, 'நாற்பது பொற்காசுகள் என் சட்டையின் விலாப்பறத்தில் வைத்து தைக்கப்பட்டுள்ளன' என்று சொன்னார்கள். பின்னர் அதை சோதித்தபின் தெரிந்து கொண்ட கள்வர்கள் இவர்களின் நேர்மையைக் கண்டு நேர்வழி பெற்று களவுத் தொழிலை விட்டொழித்து நேர்வழிக்கு வந்தது பிரசித்திபெற்ற வரலாறாகும்.

ஹிஜ்ரி 488ல் இமாம் அபூஹாமித் முஹம்மத் அல் கஸ்ஸாலீ (ஹிஜ்ரி 450- 505/ கி.பி.1058-1111) அவர்கள் நிழாமிய்யா பல்கலைகழகத்தின் ஆசிரியர் பதவியை துறந்து ஸூபிஸ வழியில் பயணிக்க பக்தாதைவிட்டு வெளியேறுகிறார்கள். இதே ஆண்டு ஹிஜ்ரி 488ல் அஸ்செய்யித் அப்துல் காதிர் ஜீலானீ கல்வி கற்பதற்காக பக்தாத் நுழைகிறார்கள்.


பக்தாதில் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். விசேஷமாக ஷெய்ஹு ஹம்மாத் அவர்களிடம் ஆன்மீக கலைகளையும் பயின்றார்கள். தம் கையிலுள்ள தாய் கொடுத்திருந்த பணம் செலவழிந்து முடிந்ததும், மிக வறுமையோடு மிகவும் கஷ்டப்பட்டு ஏழாண்டு காலம் கல்வி கற்றனர். 


இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள்; 

ஹழ்ரத் அபுல் வபா இப்னு அகீல் (றஹ்)

ஹழ்ரத் அபூ காலிப் முஹம்மத் இப்னு ஹஸன் பாக்லானீ (றஹ்)

ஹழ்ரத் அபூ ஸகரிய்யா யெஹ்யா (றஹ்)

ஹழ்ரத் அபூ ஸஈத் (றஹ்)

ஹழ்ரத் அபுல் ஙனாஇம் முஹம்மத் (றஹ்)

ஹழ்ரத் அபுல் ஹைர் ஹம்மாத் (றஹ்)

ரலியல்லாஹு அன்ஹுமா போன்றவர்கள். 


மேற்படி ஆசான்களிடம் எல்லா விதமான மார்க்க கல்விகளையும் கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 


எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள்


எனவே தனக்கு ஆத்மீக வழியைக்காட்ட ஒரு ஞான குருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷெய்ஹ் ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷெய்ஹ் அவர்கள் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திடநம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் 'தஸவ்வுஃப்' என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். 

அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், "இந்த அஜமி அப்துல் காதிர் எதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்" என்று கூறினர்.

பின்னர் மக்கா சென்று ஹஜ் செய்தனர். மதீனா சென்று தம் பாட்டனாரின் அடக்கவிடத்தை தரிசித்தனர். 

....


#தவ_வாழ்கை 

இளம் வயதிலேயே விலாயத்தின் நறுமணம் இவர்களிடம் வீசத்தொடங்கிவிட்டது. ஈராக் காடுகளில் உள்ள ‘கர்க்’ என்ற இடத்தில் அமர்ந்து கடும் தவம் செய்தனர். சிலசமயம் அங்குமிங்கும் தம்மை மறந்த நிலையில் ஓடுவார்கள். சில சமயம் களைப்புற்று பிணம் போல் கிடப்பார்கள். மக்கள் இவர்கள் இறந்துவிட்டார்கள் என்றெண்ணி அடக்குவதற்கு குளிப்பாட்டத் துவங்கும்போது இவர்கள் உணர்வு பெற்று எழுவார்கள். பிறகு ஒரு பாழடைந்த கோட்டையில் பதினோர் ஆண்டுகள் கடுந்தவம் செய்தனர். எனவே அக் கோட்டைக்கு 'ஃபுரூஜுல் அஜமி' (அரபியல்லாதார் கோட்டை) என்ற பெயர் வந்தது.


இங்கு இவர்கள் இரவு செய்த உளுவுடன் சுபுஹுத் தொழும் வழக்கமுடையவர்களாகவும், ஒற்றைக் காலில் நின்று திருக் குர்ஆன் முழுவதையும் ஓதி கிழக்கு வெளுக்கும்வரை தொழும் வழக்கமுடையவர்களாகவும் இருந்தனர்.


  இச்சமயத்தில் இவர்கள் பக்தாத் வரும்போது நோய்வாய்பட்ட வயோதிகர் ஒருவர் கானகத்தின் நடுவே கிடந்து, 'என்னை தூக்கி நிறுத்தும்' என்று கூறினர். அவ்விதமே இவர்கள் செய்ய, அவர் இளமை எழிலுடன் காட்சி வழங்கி, 'நான் இஸ்லாம் எனும் மார்க்கமாகும். நீர் அதனை உயிர்ப்பித்தவராவீர்' என்று கூறி மறைந்தார்.


    இதன்பின் பக்தாத் நகர் வருகை தந்த இவர்களை மக்கள் 'முஹ்யித்தீன்' என்று அழைத்து மார்க்கத்தை புத்துயிர் செய்யும் பணியை செய்ய வேண்டினர். 


தொடரும்…