السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 04

 

கெளதுல் அஃழம் #முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ


தொடர் -04

தொகுப்பு: Maadhihur Rasool


#ஆன்மீகப்பிரச்சாரம் 

பக்தாதில் “பாபுல் அஸஜ்” என்ற இடத்தில் கல்லூரி நிறுவி கல்வி போதித்து வந்த ஷெய்ஹ் அபூ ஸயீத் முபாரக் அல் முஹர்ரமி அல் மக்ஸூமி அவர்களிடம் ஹிஜ்ரி 521 அதாவது கி.பி. 1127இல் கிர்கா அணிவிக்கப்பட்டு அவர்களின் ஸில்ஸிலா- ஞானவழித்தொடருக்கான கலீபாவாக்கப்பட்டனர். 

அதன்பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் சொன்னதற்கேற்ப, தங்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தை துவக்கினார்கள். இவர்களின் பேருரைகளை கேட்பதற்கு ஒருமுறை 70000 பேர்களுக்கு மேல் வந்து இருந்தனர். இரவில் நடக்கும் கூட்டங்களுக்கு மக்கள் பகலிலேயே முண்டியடித்து இடம் பிடித்தனர். வாரம் மும்முறை இவர்கள் பேருரை நிகழ்த்தினார்கள். இவர்கள் பேருரையைக் கேட்டு உணர்ச்சி மேலிட்டு சிலர் இறந்திருக்கிறார்கள். 

ஹிஜ்ரி 521 முதல் 561 வரை 40 ஆண்டுகள் பேருரை வழங்கினர். இதனால் லட்சோப லட்சம் மக்கள் தங்கள் தவறான வழியைவிட்டு திருந்தினர். தாம் காடுகளில் சென்று துறவறம் மேற்கொள்ளவே விரும்பியதாகவும் ஆனால் இறைவனோ தம்மால் மனித இனத்திற்கு நற்பயன் ஏற்பட விரும்பியதாகவும் கூறினார்கள். இவர்களின் பேருரைகள், 'ஃபுத்தூஹுல் கைப், பத்ஹுர் ரப்பானி என்ற பெயர்களில் வெளிவந்துள்ளன.


  ஆத்மீக ஞானத்தில் சிறந்து விளங்கிய இவர்கள் மார்க்க சட்டதிட்டங்கள் பற்றிய அறிவிலும் சிறப்புற்று விளங்கினார்கள். ஆன்மீகத்தை பகிரங்கமாக மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கியவர்கள் இவர்களே! ஆரம்பத்தில் ஷாஃபி மத்ஹபை பின்பற்றி வந்த இவர்கள் ஹம்பலி மத்ஹபின் நலிவுற்ற நிலை கண்டு அதற்கு புத்துயிர் ஊட்ட அம் மத்ஹபிற்கு மாறினார்கள்.


……


#காதிரிய்யா_தரீக்காவின்_தோற்றம்


இறை தூதர் (ﷺ) அவர்களால் போதிக்கப்பட்ட இஸ்லாத்தின் அகம், புறம் சார்ந்த மார்க்க விழுமியங்களின் அடிப்படையிலான தமது ஞானவழித்தொடரை காதிரிய்யா தரீக்கா என்று அழைத்தனர். மக்களிடம் பைஅத் (ஒப்பந்தம்) பெறுவதோடு நிறுவன ரீதியான கட்டுக்கோப்பு முறையை ஏற்படுத்தி தமது பிரசங்கங்கள் மூலமும் நெறிப்படுத்தல்கள் மூலமும் மக்களை தஸவ்வுப் கலையின் வழியே சீராக பயணிக்கக்கூடிய மெய்ஞ்ஞான இயக்கத்தை நடைமுறைப்படுத்தினார்கள். 

குத்பு நாயகம் அவர்களால் தாபிக்கப்பட்ட “காதிரிய்யா தரீகா”வை அடிப்படையாகக் கொண்டு அதற்குப் பிறகு தோன்றிய தரீகாக்கள் பல உள்ளன. அவை:


01. அல் அதவிய்யா. இதன் தாபகர் عدويّ بن مسافر

02. அல் மத்யனிய்யா. இதன் தாபகர் أبو مدين التّلمساني 

03. அஸ்ஸஹ்றவர்திய்யா. இதன் தாபகர்ابوالنجیب عبدالقادر سهروردی

04. அல் அக்பரிய்யா. இதன் தாபகர் ابن عربي 

05. அல் மவ்லவிய்யா. இதன் தாபகர்جلال الدين الرومي 

06. அர் ரிபாஇய்யா. இதன் தாபகர் أحمد الرفاعيّ

……

#காதிரிய்யா_தரீக்காவின்_நடைமுறைகள்.

காதிரிய்யா தரீக்கினர் திக்ரு கபீf, திக்ரு ஜலீ என்றும் தாழ்ந்த/ உரத்த குரலில் திக்ரு செய்வார்கள். 

முராக்கபா செய்யும் முறைகள் உண்டு. 

இத்தரீக்கில் இசைக்கு இடம் கிடையாது. பச்சைத்தலைப்பாகை அணிவர். பெருமாரின் மீது சலவாத்தை உரக்க ஓதுவதும் நாளாந்தம் அல்லது ஐவேளை தொழுகைகளின் பின்னர் குறித்த அவ்றாதுகள் ஓதிவருவதும் காதிரிய்யா பயிற்சிகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வுக்கு அடிபணிவதில் தன்னை தொலைத்தல், அல்லாஹ்வுக்காக தன்னை முற்றாக அர்பணித்தல், இறை தூதர் (ﷺ) அவர்களை நேசித்தல், தீமைகளையும் உலகாதாய சுகபோகங்களையும் தவிர்த்தல், இறைதூதர் அவர்களின் முன்மாதிரியின் படி மாந்தர்களுக்கு சேவை செய்தல் போன்ற சீரிய பண்புகள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களால் போதிக்கப்பட்டது.

இறையச்சத்துடன் வாழ்க்கை நடத்துவதும் மார்க்கத்தின் உயரிய விழுமியங்களை சமுதாயத்தில் நிறுவுதலும் காதிரிய்யா தரீக்காவின் இலக்காகும்.

…..

#காதிரிய்யா_தரீக்காவின்_இறையியல்_கொள்கை


காதிரிய்யா தரீக்கா இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு தனித்துவமான கோட்பாடுகளையும் போதனைகளையும் உருவாக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டே வலியுறுத்துகிறது. ஆயினும் ஆன்மீக அனுபவங்கள் வாயிலாக அக்கோட்பாடுகளை விளக்கியது. ஷரீஆ சட்டங்களை பேணுகிறது.


ஏகத்துவக்கலையைப்பொறுத்தவரையில் காதிரிய்யா தரீக்கா வஹ்ததுல் வுஜூத் சித்தாந்தத்தின் அடிப்படையில் தெளஹீதை போதிக்கும் தரீக்காவாகும்.

لا موجود الا الوجود

"லா மவ்ஜூத இல்லல் வுஜூத்" – வுஜூதேயன்றி எந்த மவ்ஜூதும் யதார்தத்தில் இல்லை எனும் “ஐனிய்யத்” (அதாவது அல்லாஹ்வுடைய வுஜூதும் படைப்பினுடைய வுஜூதும் வெவ்வேறல்ல. ஏகம்) எனற தத்துவத்தின் அடிப்படையில்,

لا اله الا الله

லா இலாஹ இல்லல்லாஹு - அல்லாஹ்வேயன்றி வேறு எந்த இலாஹும் இல்லை (எல்லாம் அவனே) என்ற கலிமாவுக்கான தவ்ஹீதை வலியுறுத்துகின்றது.


لاإله فى الوجود ولا موجود فى الشهود إلّا هو 


“அல்லாஹ் அல்லாத எந்தவொரு இலாஹோ, காட்சியில் தெரியக்கூடிய எந்த படைப்புக்களோ உள்ளமையில் இல்லை.” (அதாவது அல்லாஹ்வுக்கு வேறாக உள்ளமையில் எதுவும் இல்லை). என்கிறார்கள் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள்.

நூல் : தப்ஸீருல் ஜீலானீ, பாகம்-03, பக்கம்-473 


اللهم لك الكل وبك الكل ومنك الكل وإليك الكل وأنت الكل وكل الكل .

“யா அல்லாஹ் உனக்கே எல்லாம் உரியது. 

உன்னைக் கொண்டே எல்லாம் (நடைபெறுகிறது).  

உன்னில் நின்றுமே எல்லாம் (நடைபெறுகிறது). 

உன்னளவிலேயே எல்லாம்(மீளுகின்றது). 

நீயே எல்லாமாக இருக்கின்றாய். 

எல்லாவற்றின் எல்லாமுமாக நீயே இருக்கின்றாய்.” 

என்று வஹ்ததுல் வுஜூதை பட்டவர்தனமாக குறிப்பிடுகிறார்கள். 

(அல்புயூழாதுர் றப்பானிய்யா, பக்கம்-43)


Qadris believed in Wahdat-al-Wajood, which means "Unity of Existence" or "Unity of Being," implying that God and his creation are one. There is no Duality. 


வஹ்ததுல் வுஜூத் அதாவது “உள்ளமை ஒன்றே” "வுஜூத்-மெய்யிருப்பின் அடிப்படையில் ஏகம்-ஒருமை" என்று பொருள்படும். 

இது “லா இலாஹ இல்லால்லாஹு” அல்லாஹ்வுக்கு வேறான எந்த இலாஹும் இல்லை” “எல்லாம் அவன் தானானது” “வுஜூத் எனும் உள்ளமையின் அடிப்படையில் அல்லாஹ்வுடைய வுஜூதை விட்டும் படைப்பினுடைய வுஜூத் பிரிந்ததல்ல- வேறானது அல்ல - அநேகம் அல்ல. ஏகம்! அல்லாஹ் ஏகம்! என்பதை உணர்த்துகிறது. 


தொடரும்….