கெளதுல் அஃழம் #முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
தொடர் -06
தொகுப்பு: Maadhihur Rasool
#ஆட்சியாளர்களுடன்..
ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் ஒருபோதும் ஆட்சியாளர்களுக்கு சார்பானவர்களாக நிற்கவில்லை. கலீபாக்கள் தம் அரண்மனைகளுக்கு வருமாறு விடுத்த அழைப்புகளையும் அவர்கள் ஏற்கவில்லை. கலீஃபாக்கள் ஹழ்ரத் அப்துல் காதிர் ஜிலானி அவர்களை மிகவும் மதிப்பவர்களாக இருந்தார்கள். ஹழ்ரத் அவர்களிடமிருந்து தவறுகளை நிவர்த்தி செய்யுமாறு சுட்டிக்காட்டி விடுக்கப்படும் கடிதங்கள் கிடைக்கும் போது, கலீபாக்கள் உடனடியாக செயலாற்றினார்கள்.
...
நடுத்தர உயரமும், நிதானமான பருமனும் வாய்க்கப்பெற்றிருந்த இவர்களின் உடல் நிறம் சிவப்பு. பெரும்பாலான நாட்களில் நோன்பு நோற்றிருப்பார்கள். இவர்களின் உடையோ மிகவும் எளிமையானது. இவர்களின் முகத்தில் ஒருவித கம்பீரம் இலங்கிக் கொண்டிருக்கும். அவர்களை ஏறிட்டுப் பார்ப்பவர்கள் திடுக்கிடுவர். ஆட்சியாளர்கள் பணிவர்.
தலைமுறை தலைமுறையாக, வரலாற்றாசிரியர்கள், ஸூபி கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் ஹழ்ரத் அப்துல் காதிர் ஜிலானி அவர்களைப் புகழ்ந்து தங்கள் புத்தகங்களில் அவர்கள் பற்றிய உயர்ந்த கருத்த்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
#ஆன்மீக_உச்சம்.
ஹிஜ்ரி 559ம் ஆண்டில் ஆண்டகை அவர்கள், தங்களின் தவச்சாலையில் அமர்ந்து அறபோதம் செய்துகொண்டிருக்கும்போது.....
قدمي هذه على رقبة كل ولي لله
“கதமீ ஹாதிஹீ அலா ரக்கபாத்தின் குல்லி வலிய்யின் லில்லாஹ்” (என்னுடைய பாதங்கள் வலிமார்களின் தோள்மீது இருக்கும்) என் தோளின்மீது நபி (ﷺ) அவர்களின் பாதங்கள் தரிபட்டுள்ளன” என்று கூறினர்.
இவ்வாறு ஆண்டகை அவர்கள் கூறியதும் அவர்களின் முன்னால் குத்புக்கான கொடி ஏற்றப்படுவதையும் அவர்களின் தலைமீது கெளதுக்கான மகுடம் சூட்டப்படுவதையும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமிருந்த இறை நேசச்செல்வர்களும் தங்களின் ஞானக்கண்ணால் கண்டு தலைதாழ்த்தினர்.
அல் கெளத் ஸுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ (ரழி) (ஹிஜ்ரீ520-594) (b: 1126 Cantillana, Spain / d: 1198, Tlemcen, Algeria) கெளதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை சந்தித்து அவர்களிடம் ஆன்மீகக் கல்வியை பெற்று காதிரிய்யா தரீக்காவில் இணைந்து கொண்டார்கள். (இவர்கள் குத்புல் வுஜூத் ஷாதுலி நாயகத்தின் ஞானகுரு குத்புஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
அதேபோல் அலீ என்ற பெரியார் ஸ்பெய்ன் – முரிசியாவிலிருந்து பக்தாத் வந்து ஜீலானீ அவர்களிடம் குழந்தை பாக்கியம் வேண்டினார். ஜீலானி அவர்களுடைய முதுகந்தண்டில் உள்ள குழந்தையை அலீ அவர்களுக்கு தமது கறாமத் அற்புதம் மூலம் மாற்றிக்கொடுத்தார்கள். அவ்வாறு பிறந்த ஞானக் குழந்தையே இப்னு அறபீ (ஹிஜ்ரி 560-638) என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெய்ஹுல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களுடைய அக்பரிய்யா சில்சிலா ஞானவழித்தொடரில், முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களிலிருந்து ஷெய்ஹு ஜலாலுத்தீன் இப்னு யூனுஸ் இப்னு யஹ்யா இப்னு அபில் பரகாத்தில் ஹாஷிமில் அப்பாஸி அவர்களிடருந்து இப்னு அறபீ நாயகத்தை வந்தடைகிறது.
குத்புல் ஹிந்த் ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ ஹஸனீ ஹுஸைனீ அவர்கள் ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகன் (மருமகன்) முறையும் ஆவார்கள். கெளதுல் அஃழம் அப்துல்காதிர் ஜீலானீ அவர்களின் அந்திம காலத்தில் அவர்களைச்சென்று சந்தித்து ஹாஜா நாயகம் ஆசிபெற்றார்கள். அவர்களுடைய உத்தரவின்பேரிலேயே குருநாதர் ஹழ்ரத் உத்மான் ஹாரூனீ அவர்களைக் கண்டடைந்தார்கள். பெருமானாரின் உத்தரவின்பேரில் இந்தியா-அஜ்மீர் வந்து 90லட்சம்பேரை இஸ்லாத்தில் இணைத்தார்கள்.
ஷாதுலிய்யா தரீக்காவின் மூலகுருநாதர் அஸ்ஸெய்யித் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அல் ஹஸனீ அவர்கள் (b: Hijri 559/563) மொரோக்கோ-மக்ரிப் தேசத்தில் பிறந்துள்ளதை உணர்ந்து எனது காலை மஹ்ரிப் தேசத்திலிருந்து எடுத்துவிட்டேன் என்றார்கள். அங்கு சென்று பாலகரை தரிசித்து ஆசிவழங்கினார்கள்.
சுஹ்ரவர்திய்யா தரிக்காவின் மூலவர் ஹழ்ரத் அஷ்ஷெய்ஹ் தியா அல் தீன் அபுன் நாஜிப் (ஹிஜ்ரீ 490–563/ கி.பி.1097-1168) அவர்கள் முஹ்யித்தீன் ஆண்டகையின் மாணவர் ஆவார்கள்.
ரிபாஇய்யா தரீக்காவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் அஸ்செய்யித் அஹ்மத் கபீர் அர் ரிபாஈ (ஹிஜ்ரி 512- 577/ கி.பி.1118-1183) அவர்கள் குலவழியில் உறவினர் ஆவார்கள். சமகாலத்தில் பக்தாதிலிருந்து சுமார் 550km தொலைவிலுள்ள பஸ்ரா நகரின் வாஸித் என்ற ஊரில் வாழ்ந்தார்கள். கெளதுல் அஃழம் அவர்களுடைய ஆன்மீக தொடர்பும் ஆசீர்வாதமும் சுல்தானுல் ஆரிபீன் ரிபாஈ நாயகத்துக்கு இருந்துகொண்டேயிருந்தது.
Sheikh Ahmad Al Kabeer ar- Rifâi (AD1107-1183) was born on Monday in 27th day of the lunar month of Rajab 500. His birthplace was in the town of Ummu ubaydah (Hasen) in the township of Bathaeh at the Wasit province of Basra, Iraq. He passed away on Thursday, Jumada al-Awwal 12, 578 A.H. (1183 A.D.), in the town of Wasit, in Basra, Iraq.
இவ்வாறாக அத்தனை குத்புகளுக்கும் குத்பாக, கெளதுகளுக்கும் கெளதாக அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் திகழ்கிறார்கள். அத்தனை தரீக்காக்களிற்கும் முன்னோடியாக இத்தரீக்கா திகழ்கிறது.
அவர்களை இறைவன் கௌதுல் அஃழம் என்றழைத்தான். இவர்களுக்கு 99 திருப்பெயர்கள் உள்ளன. தங்கள் வாழ்நாளிலும், மறைவிற்குப்பின்னரும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
“யாராவது கஷ்டமான வேலையில் என்னை அழைத்தால் அவனது கஷ்டங்கள் தீர்க்கப்படும். நெருக்கடியான வேளையில் என் பெயர் விழித்து என்னை அழைப்பவரது துயரங்கள் நீங்கும். என்னை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் கேட்கப்படும் தேவைகள் நிறைவேறும்.”
“யாராவது இரண்டு றகாஅத் நபிfல் தொழுது ஒவ்வொரு றகஅத்திலும் சூறா பாத்திஹாவுக்குப் பின் சூறா இக்லாஸை பதினொரு தடைவ ஓதி ஸலாம் கொடுத்தபின் ரஹுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் கூற வேண்டும். அதன் பின் மனதில் ஹாஜத்தை நினைத்துக்கொண்டு இராக் திசை நோக்கி பதினெட்டு எட்டுக்கள் எடுத்துவைத்து ஒவ்வொரு எட்டிலும் எனது பெயர் கூறி என்னை விளிக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் அவரது காரியம் நிறைவேறும்”
இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஹத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் – 102)
“எவர் கஷ்ட நேரத்தில் என்னை கொண்டு இரட்ஷிப்புத் தேடினாரோ அவரை விட்டும் அக் கஷ்டம் நீக்கப்படும்”
“எவர் எனது பெயரைக் கொண்டு கஷ்ட நேரத்தில் அழைத்தாரோ அவரிலிருந்து அக் கஷ்டம் நீக்கப்படும்”
“ஷரீஆவின் கடிவாளம் எனது நாவில் இல்லாதிருந்தால் நீங்கள் சாப்பிடுபவை பற்றியும், உங்களின் வீடுகளில் நீங்கள் செய்வது பற்றியும் நான் அறிவிப்பேன்.”
“நீங்களுமோ எனக்கு முன்னால் இருக்கும் போத்தல்கள் போன்றாகும். உங்கள் மறைவிலுள்ள அனைத்தையும் நான் காண்கின்றேன்.”
و مريدي ادا دعاني بشرق
او بغرب او نازلا بحر طامي فأغثه او طار فوق هواء
انا سيف القضا لكل خصامي
“எனது முரீது என்னை கிழக்கிலிருந்து அழைத்தாலும் சரி! அல்லது மேற்கிலிருந்து அழைத்தாலும் சரி! அல்லது ஆழ்கடலில் இருந்து அழைத்தாலும் சரி! அல்லது ஆகாயத்தில் பறந்த நிலையில் என்னை அழைத்தாலும் சரி! அவரை நான் இரட்ஷிப்பேன். நான் தர்க்கத்திற்குரிய அனைத்துக் கருமங்களையும் தீர்ப்புச் செய்யும் வாள் ஆவேன்.”
இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஹத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
#காதிரிய்யாவின்_ஆன்மீக_பயிற்சி.
ஒவ்வொரு தரீக்காக்களின் ஸில்ஸிலாக்களிலும் வெவ்வேறு விதத்திலான ஆன்மீக பயிற்சி நெறிகளும் திக்ர்-அவ்றாதுகளும் காணப்படுகின்றன. சில தரீக்காக்களில் உடலை வருத்திச்செய்யக்கூடிய கடினமான பயிற்சிமுறைகளும் உண்டு. நமது காதிரிய்யதுல் அலிய்யா ஸில்ஸிலாவைப்பொறுத்தவரையில் வஹ்ததுல் வுஜூத் ஏக தத்துவத்தை அமுல்படுத்தக்கூடிய விதத்திலான ஆன்மீக பயிற்சிகள் காணப்படுகின்றன. அவற்றை சாராம்சமாக குறிப்பிடின்;
நீ எதை எதையெல்லாம் பார்க்கின்றாயோ அதையெல்லாம் அல்லாஹ் தானானதாக பார்!
நீ எதையெல்லாம் கேட்கின்றாயோ அதையெல்லாம் அல்லாஹ்வுடைய சத்தமாக கேள்!
நீ யாருக்கு கொடுத்தாலும் அதையெல்லாம் அல்லாஹ்வுக்கு கொடுப்பதாக நினை!
யார் உனக்கு எதை தந்தாலும் அதை அல்லாஹ் தந்ததாக நினைத்துக்கொள்!
இதுவே வஹ்ததுல் வுஜூதுடைய பாட்டையில் எங்களுடைய தரீக்கா ஸில்ஸிலா இட்டுச்செல்லக்கூடிய முறையாகும்.
மேலதிக விபரம் தேவையானோர் ஷெய்ஹுனா முஹம்மத் அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் எழுதிய அஸ்ஸுலூக் நூலினை பார்வையிடவும்.
“காதிரிய்யா தரீகா” வழி நடக்கும் ஒரு முரீது சிஷ்யன் ஏழு படிகளைத் தாண்டுவான். அவை
1- அம்மாறா,
2- லவ்வாமா,
3- முல்ஹிமா,
4- முத்மயின்னா,
5- றாழியா,
6- மர்ழியா,
7- காமிலா
என்பனவாகும்.
ஏழாம் “நப்ஸ்” ஆன “காமிலா” எனும் இடத்தைக் கடந்தவன் “ஒன்றில் பலது, பலதில் ஒன்று” என்ற இடத்தில் இருப்பான் என்று கூறியுள்ளார்கள்.
இவ்வாறு சொன்ன மகான் “இஸ்மாயீல் காதிரீ” என்பவர் ஹிஜ்ரீ 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த “இறாக்” நாட்டு ஸூபீகளில் ஒருவராவார்கள். இவர்கள் ஹிஜ்ரீ 1283ல் “வபாத்” ஆனார்கள். இவர்கள் எழுதிய நூல் الفيوضات الربانيّة فى المآثر القادريّة என்பதாகும்.
தொடரும்…