السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 23 April 2015

பெண்களின் ஆடை, அலங்கார விடயங்களில் இஸ்லாத்தின் கோட்பாடு

பெண்களின் ஆடை, அலங்கார விடயங்களில் இஸ்லாத்தின் கோட்பாடு

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் மனிதப் படைப்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறுகையில் இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று கூறுகிறான்.
வணக்கம் என்பதற்கு அறிஞர்கள் கூறும் விளக்கம் என்னவெனில் ‘இறை கட்டளைகள் அனைத்துமே வணக்கமாகும்’ என்பதாகும். அதாவது, இறைவனுடைய மற்றும் அவனுடைய தூதருடைய ஏவல் விலக்கல்களை வாழ்வில் பேணி வாழ்வதே வணக்கமாகும் என்பதாகும்.
இந்த வகையில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் போதித்த இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பதும் சிறந்த வணக்கமாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உணவில், உடையில், நடையில், தொழிலில், தொனியில், உழைப்பில், செலவில் மட்டுமல்லாது எண்ணங்களிலும் இஸ்லாமிய நாகரீகம் நிலை நாட்டப்பட வேண்டிய அவ சியத்தினை இஸ்லாமியர்கள் என்றுமே மறந்துவிடலாகாது. இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் மார்க்க பண்பாடுகள் பாது காப்புக்கு பங்களிப்பு செய்ய சகலரும் கடமைப்பட்டுள்ளனர்.
கவர்ச்சிக்காக, பேர் புகழ் பெருமைக்காக அல்லாஹ்வின் இறை இல்லங்கள் கூட இஸ்லாமியர்கள் அமைத்துக் கொள்வதை இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விரும்பவில்லை.
கவர்ச்சி ஒன்றுதான் இன்று நம்மத்தியில் அனைத்திலும் காலூன்றி நிற்பதைக் காண முடிகிறது. அடக்கம், ஒழுக்கம், எளிமை நம்மை விட்டும் ஒழிந்து கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்கால இளைஞர், யுவதிகளின் பழக்க வழக்கங்கள் சகல துறைகளிலும் முற்றிலும் சீரழிந்து செல்வதைக் காண முடிகிறது. இஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.
ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விசேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள். (முவத்தா). வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது என்பதும் ஒரு நபி மொழி. (திரிமிதி).
வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை தந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும் என்ற ஹதீஹும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
நமது சகோதரிகளும் தாய்மார்களும் அணிக்கின்ற ஆடைகள் அவர்களின் அங்கங்களின் நெளிவு சுழிவுகளை படம் பிடித்துக் காண்பிக்கும் விதத்தில் அமையாது இருப்பதுடன் அவர்களின் ஆடைகள் கவர்ச்சியை வெளிப்படுத்தும் அமைப்பிலும் இருக்கலாகாது. இது இஸ்லாமிய பெண்களுக்கான தனிப்பட்ட மார்க்க சட்டமாகும்.
இதற்கு உதாரணமாக இன்றைய இஸ்லாமிய ஆண், பெண்களின் பலர் பரவலாக அணியும், ‘டெனிங்’, ‘டீசேர்ட் என்பவற்றைக் குறிப்பிடலாம். இறுக்கமான ஆடைகள் உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்ற எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் இஸ்லாமியர்கள் விருப்பத்துடன் தெரிவு செய்வதைக் காணலாம். இதில் நமது சகோதரிகள் இவ்வாறான ஆடைகளை அணிந்து கொண்டு சும்மா சென்றாலும் பரவாயில்லை.
எவ்வளவு தைரியமாக சிறிய “ஹிஜாப்” ஒன்றை கழுத்துக்குக் கட்டிக்கொண்டு பிரதானமாக மறைக்க வேண்டிய பகுதிகளைக் காட்டிக்கொண்டு எமது மார்க்கத்தையே சீரழிக்கின்றனர்.
சாரி, அபாயா, சல்வார் என எந்த ஆடை வேண்டுமானாலும் அணியலாம். இதில் எந்தக் கட்டத்திலும் அவர்களின் அங்கங்களின் அமைப்பு அப்படியே தெரியும் வண்ணம் அவ்வாடைகள் அமைந்து விடக்கூடாது. உண்மையில் பெண்கள் ஆடை அணிக்கின்றனரா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு அவர்களின் ஆடையின் விதம் இன்று அமைந்துள்ளது. பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திக்க வந்தார்கள்.
அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த உம்முல் மூமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள், “உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர் களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்”.
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும்.
இதற்கு பின்வரும் நபி மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும் பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்), நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.
( அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்). அவ்வாறே அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான் ஆகியவற்றில் பதிவான தகவலின்படி ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண்ணை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று நமது நாயகம் முஸ்தபா சல்லலாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பதைக் காணலாம்.
அத்துடன் காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், இவை காபீர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்! என்றார்கள். (முஸ்லிம்)
இஸ்லாம் பெணிகளின் ஆடை விஷயத்தில் தனது வரையறையை பின்வருமாறு முன்வைக்கின்றது. “அவ்ரத்தை மறைக்கக்கூடிய உடைகளையே ஆண், பெண் இரு பாலாரும் அணிய வேண்டும். குறிப்பாக பெண்கள் தமது முகத்தையும், இரு மணிக்கரங்களையும் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளையும் மறைப்பது பர்ழாகும்,”
பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ ‘பித்னா’ ஏற்படாது என்று காண்கின்ற போது தனது முகத்தையும் இரு மணிக்கட்டுகளையும் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும்.
பெண்களின் முழு உடலும் அவ்ரத்தாகும். எனவே, பெண்கள் தமது அவ்ரத்தினை மறைப்பது வாஜிபாகும். அவ்ரத்தினை வெளிக் காண்பிப்பது ஹராமாகும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் முகத்தையும் பெண்கள் மறைத்திருக்கவே வேண்டும். முகத்தினைத் திறந்து வைத்திருப்பது அப்பட்டமாக ஹராத்தைச் செய்வதாக கருதப்படும் என்று கூற முடியாது. காரணம் தெளிவாக ஹராமாகும் என்று அல்லாஹ் சொன்னதொரு விட யத்தினை ஹலாலாக்கிக் கொண்ட குற்றத்திற்கு இஸ்லாமிய உம்மத் தள்ளப்படும். அல்லாஹ் நம்மைப் பாது காப்பானாக!