السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 24 April 2015

இந்தியாவின் அருள் ரோஜா அஜ்மீர் ஹாஜா


எம்.ஐ.எம்.அன்ஸார் 

இந்தியாவில் வாழுகின்ற சகல மதத்தினரும் பிரஜைகளும் ஒன்றாகப் போற்றிப் புகழுகின்ற, ஸியாறத் செய்கின்ற ஓர் அடக்கஸ்தலம் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. இங்கு சமாதி கொண்டு தினமும் பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களாகும். 

இவர்கள் ஹிஜ்ரி 537 இல் புனித றஜப் மாதம் பிறை 14 இல் கியாதுத்தீன் என்ற தந்தைக்கும், பீபீ மாஹ்நூர் என்ற தாய்க்கும் அருமை மைந்தராக சஞ்சர் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் இவ்வையகத்தில் தோன்றி 895 வருடங்களாகின்றன. 
தனது 9வது வயதில் புனித திருக்குர்ஆனை ஓதி மனனமிட்ட ஹாஜா நாயகம், அவர்களின் 15 வது வயதில் அன்னாரது அருமைத் தந்தை ஹழ்றத் கியாதுத்தீன் றழி அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள். 

தந்தைக்குத் தோட்டம் ஒன்றும், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பினனர் அவ்விரெண்டும் ஹாஜா நாயகத்திற்குக் கிடைத்தன. 

ஒரு நாள் ஹாஜா நாயகம் அவர்கள் தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம், கந்தையான கிழிந்த ஆடைகளுடன் அடர்ந்த தலைமுடி, தாடியுடன் ஒரு வயதான மனிதர் வந்தார். 

அவரைக் கண்ட இளம் வயதாக இருந்த ஹாஜா நாயகம் அவர்கள், அவரை அணைத்து, திராட்சைப் பழங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். 

அவர்கள்தான் ஹழ்றத் செய்யித் இப்றாஹீம் கந்தூசி ஆகும். திராட்சைப் பழங்களை சாப்பிட்டு முடித்த கந்தூசி அவர்கள், தனது சட்டைப் பைக்குள் இருந்த எள்ளினால் செய்யப்பட்ட ரொட்டித் துண்டொன்றை எடுத்து, உமிழ் நீரில் நனைத்து, ஹாஜா நாயகம் அவர்களிடம் சாப்பிடுமாறு கொடுத்தார்கள். 

அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்ட ஹாஜா நாயகத்தின் உள்ளத்தில் உயர் மெய்ஞ்ஞானம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பமாயிற்று. இறைஞான ஒளியினால் அவர்களது உள்ளம் நிரம்பலாயிற்று. உலக ஆசைகள் யாவும் அவர்களின் உள்ளத்தில் இருந்து ஓடிப்போயிற்று. 

இதனால் ஹாஜா நாயகம் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு, ரசியாவிலுள்ள புஹாறா நகர் நோக்கி வந்தார்கள். 

அங்கு சில மார்க்க விடயங்களைக் கற்றுக் கொண்டு, அங்கிருந்து ஈராக் நாட்டிற்குப் பயணமானார்கள். 

ஈராக் வந்தடைந்த ஹாஜா நாயகம் அவர்கள், மகான் உத்மான் ஹாரூனீ (றழி) அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள். 

அதன் பின்னர் திரு மதீனா நகர் சென்று, அங்கு சிறிது காலம் நிஷ்டையில் அமர்ந்தார்கள். கண் விழித்த ஹாஜா நாயகம் அவர்கள் மதீனா நகரை விட்டு இந்தியா நோக்கிப் பயணமானார்கள். 

பல தடைகளைத் தாண்டி பல்லாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவை வந்தடைந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரில் பாதம் பதித்தார்கள். 

இந்த வேளையில் ராஜஸ்தான் மாநிலம் மன்னன் பத்ஹூறாவின் ஆட்சியில் இருந்தது. இதனால் அம்மன்னனால் ஹாஜா நாயகத்திற்கு பெரும் தொல்லைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டன. 

பல இடர்பாடுகளுக்கு மத்தியில் ஹாஜா நாயகமும், அவர்களது சீடர்களும் அனாஸ்கார் எனும் நீரோடைக்கு அருகில் தங்கினார்கள். ஒரு சமயம் ஹாஜா நாயகம் அவர்கள் வுழூ செய்வதற்காக அனாஸ்கார் நீரோடையில் நீர் எடுக்கச் சென்ற போது, அவர்களுக்கு நீர் ஏடுக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இதனால் ஹாஜா நாயகம் அவர்கள் தன்னிடமிருந்த சிறிய கூஜாவை குளத்தில் வைத்தார்கள். குளத்து நீர் முழுவதும், கூஜாவினுல் ஏறிவிட்டது. இதனால் குளம் வற்றி நிலங்களெல்லாம் வறண்டு போயின. ஆடு, மாடுகள் செத்த மடிந்து போயின. வயல்கள் எல்லாம் நாசமாயின. இதனைக் கண்ட மன்னன் பத்ஹூறா தடுமாற்றம் அடைந்தான். 

உடனே தனது மந்திரவாதியான “அஜேபால்” என்பவரை அழைத்து, ஹாஜா நாயகத்துடன் மந்திரத்தால் மோதிப் பார்த்தான். ஆனால் “விலாயத்” என்னும் வலித்தனத்தின் முன் “மந்திரம்” தோல்வி அடைந்து விட்டது. 

இதனால் மந்திரவாதி அஜேபாலும் ராஜஸ்தான் மாநில மக்களும் புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர் இவ்வாறு சுமார் 90 இலட்சம் காபிர்கள் புனித இஸ்லாத்தில் படிப்படியாக இணைந்து கொண்டதாக வரலாறு கூறுகின்றது. 

தனது 90வது வயதின் பின்னர் இரண்டு திருமணங்களை செய்து, 3 ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் மக்களையும் பெற்று, தந்தையாகி ஹிஜ்ரி 633 இல் தமது 96 வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.) 

அவர்கள் மரணித்த போது அவர்களது நெற்றியில் “ஹாதா ஹபீபுல்லாஹ் மாத பீ ஹூப்பில்லாஹ்” இவர் இறை அன்பர். இறையன்பிலேயே மரணித்தார் என ஒளியால் எழுதப்பட்டிருந்தது. 

அஜ்மீர் நகரில் அமைந்துள்ள ஹாஜா நாயகத்தின் அடக்கஸ்தலத்திற்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1902 ஆம் ஆண்டு விஜயம் செய்த பிரிட்டிஸ் ஆட்சியில் இந்தியாவினுடைய வைஸ்ராயராக இருந்த கஷ்ஷன் பிரபு அங்குள்ள குறிப்பேட்டில் பின்வருமாறு எழுதியுள்ளார். 

அதாவது “சாதி, மத வேறுபாடின்றி எல்லோரையும் ஆன்மீக ஆட்சி நடாத்தக் கூடிய ஓர் அடக்கவிடம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


http://coastaldigest.com/index.php/news/74690-with-love-from-obama-a-chadar-for-ajmer-sharif

இந்தியாவின் அருள் ரோஜா அஜ்மீர் ஹாஜா