கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்றைய (06/12/24) ஃகுத்பாவிலிருந்து:
ஃகதீப்: அல் உஸ்தாத் அல் ஆலிம் அஹ்மத் (மஹ்ழரி) [அதிபர்- அஜ்வாத் அல் ஃபாஸி அரபுக்கல்லூரி, கொழும்பு 12/ பிரதம இமாம்- உம்மு ஸவாயா, கொழும்பு 12/ பிரதம ஃகதீப்- கொழும்பு பெரிய பள்ளிவாசல்]
தொகுப்பு: அஸீம் ழாஹிர், கொழும்பு.
****************************************************
"ஃகலீலுழ்ழாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் நிறைய படிப்பினைகளும், முன்மாதிகளும் உள்ளன" என்று குர்ஆனும், ஹதீஸ்களும் பல இடங்களில் பிரஸ்தாபிக்கின்றன.
"இந்த தீனுல் இஸ்லாம் கூட உங்கள் தந்தையாகிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்" என்று அழ்ழாஹ் குர்ஆனில் கூறுகிறான். ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், "எனது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்" என்று பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்துள்ளார்கள். மிஃராஜில் ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வானத்தையும் கடந்து செல்லும்போது சந்தித்த அன்பியாக்கள், ரஸுல்மார்கள், "நல்ல நபியே, நல்ல மனிதரே வருக!" என்று அழைக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான், "நல்ல நபியே, நல்ல மகனே வருக!" என்று வரவேற்றார்கள்.
ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினராகிய நாம் செய்யக்கூடிய மீசையைக் கத்தரித்தல், தாடியை வளர்த்தல், மறைவிட முடிகளை அகற்றுதல், நகங்களை வெட்டுதல், ஃகத்னா செய்தல் யாவும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காட்டித்தந்த சுத்தங்களில் உள்ளதாகும்.
மௌத்தானவர்களை/வைகளை மீளுயிர்ப்பிக்கும் அழ்ழாஹ்வின் அதி சக்திவாய்ந்த ஆற்றலை நேரடியாகக் கண்டு உள்ளம் நிம்மதி, அமைதி பெற விரும்பினார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அழ்ழாஹ், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சில விடயங்களை செய்யுமாறுக் கட்டைளையிட்டான்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
முதலில் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை அறுத்துப் பல துண்டுகளாக்கினார்கள். அவற்றின் இறக்கைகளைப் பிய்த்துப் பல பாகங்களாகக் கிழித்தார்கள். பின்னர் நான்கு பறவைகளின் கூறுகளையும் ஒன்றாகக் கலந்தார்கள். அதன்பின் அவற்றைப் பல கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு கூறையும் ஒவ்வொரு மலையில் வைத்தார்கள்.
பின்னர் அழ்ழாஹ்வின் கட்டளைப்படி அவற்றை அழைத்துவிட்டு அவை எப்படி உயிர் பெற்று வருகின்றன என்பதை பார்க்கலானார்கள். உடனே அப்பறவைகளின் இறக்கை, இரத்தம், சதை உள்ளிட்ட பாகங்கள் வேறு மலையிலிருந்த அவற்றின் மற்றப் பாகங்களை நோக்கிப் பறந்துச் சென்று, அவற்றுடன் இணைந்துக் கொண்டன. இறுதியில் ஒவ்வொரு பறவையும் உயிர் பெற்றுத் தனித்தனியாக அவர்களிடம் நடந்து வந்தன.
அந்த நான்கு பறவைகள் எவை என்பது தொடர்பாக முஃபஸ்ஸிரீன்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. சில முஃபஸ்ஸிரீன்கள் "மயில், கழுகு, சேவல், காகம் ஆகிய நான்கும்தான் அந்த பறவைகள் என்று எழுதி விட்டு அந்த நான்கு பறவைகளிடம் உள்ள நல்ல குணங்களை மனிதர்களாகிய நாம் எடுத்து நடப்பதுடன் அவைகளிடம் உள்ள கெட்ட குணங்களை நாம் தவிர்ந்த நடக்க வேண்டும் என்பதையே அழ்ழாஹ் சூட்சுமமாக தெளிவுபடுத்துகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நல்ல குணங்கள்:
மயில்- பத்தினித்தனம், நல்லதை உண்ணுதல்
கழுகு- கவலை, நேசித்தல்
சேவல்- அதிகாலையில் எழுப்(ம்)புதல்
காகம்- கூட்டாக உண்ணுதல், மரணத்தில் கலந்துக் கொள்ளுதல்.
கெட்ட குணங்கள்:
மயில்- பெருமை, மேலெண்ணம்
கழுகு- கர்வம், அநியாயத்தை விரும்புதல்
சேவல்- இச்சை, சண்டையை விரும்புதல்
காகம்- அசுத்தமானவைகளை உண்ணல், அசுத்தம் செய்தல்
மேற் சொல்லப்பட்ட இரு வகையான குணங்களையும் சம காலத்து முஸ்லிம் உம்மத்தின் வாழ்வுடன் தொடர்புப்படுத்தி ஃகுத்பாவை அழகாகக் கொண்டுச் சென்ற ஃகதீபின் திறமை பாராட்டுக்குரியது! சிறப்பாகத் தொகுக்கப்பட்ட ஃகுத்பாவை, கம்பீரமான பேச்சு, நல்ல குரல்வளம், அழகான தமிழ் உச்சரிப்புகளுடன், நேர முகாமைத்துவத்தையும் பேணி நிகழ்த்திய அல் உஸ்தாத் அல் ஆலிம் அஹ்மத் (மஹ்ழரி) ஹஸ்ரத் அவர்களின் அறிவிலும் ஆயுளிலும் அழ்ழாஹ் பரக்கத் செய்யட்டும்!