*ஸஹீஹுல் புகாரீ...!!!*
இதன் ஆசிரியர் இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 194 இல் புகாரா என்ற பிரதேசத்தில் பிறந்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர்கள் தாயுடன் ஹஜ்ஜுக்கு சென்று கல்வி கற்பதற்காக அங்கே தங்கினார்கள்.
இவர்கள் அறிவுத்திறன், நினைவாற்றல் மிக்கவராக இருந்தார்கள்.
ஆரம்பத்தில் பிக்ஹ் - மார்க்க சட்டத்துறையைக் கற்ற இவர்கள் பின்னர் ஹதீஸ்துறையில் ஈடுபாடு கொண்டார்கள்.
1080 ஆசிரியர்களிடம் ஹதீஸ்களைக் கற்ற இவர்களது முக்கியமான ஆசிரியர்களாக இஸ்ஹாக் இப்னு ராஹூயஹ், அலி இப்னு மதீனி, குதைபா இப்னு ஸஈத், அஹ்மத்
இப்னு ஹன்பல் றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் விளங்குகின்றார்கள்.
இவர்கள் ஹிஜாஸ், கூபா, பஸரா, குராஸான் பிரதேசங்களுக்குச் சென்று ஹதீஸ்களைத் திரட்டினார்கள்.
அதிக நினைவாற்றல் உள்ள இவர்கள் பல இலட்சம் ஹதீஸ்களைத் திரட்டி அவற்றைத் தரம் பிரித்துப் 16 வருடகால முயற்சியின் பின்னர் ஸஹீஹுல் புகாரியைத் தொகுத்து வழங்கினார்கள்.
இவர்களிடம் சுமார் 90 000 மாணவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். அவர்களுள் இமாம் திர்மிதி. இமாம் நஸாஈ. இமாம் முஸ்லிம், இப்னு குஸைமா, முஹம்மத் இப்னு நஸ்ர் றஹிமஹுமுல்லாஹ் போன்றோர் முக்கியமானவர்களாவர்.
இவர்கள் உண்மை, பொறுமை, இரக்கம்,தயாளம், தர்மம், வணக்கம் முதலிய நற்குணங்களைக் கொண்டவராக இருந்தார்கள்.
இமாம் அவர்கள் ஹிஜ்ரி 256 இல் கர்தங் (khartamk) எனும் இடத்தில் வபாத்தானார்கள்.
ஸஹீஹுல் புகாரியை தொகுத்து எழுதுவதற்கு இமாமவர்கள் சுமார் 6 இலட்சம் ஹதீஸ்களை சேகரித்தார்கள். அவற்றுள் பத்தாயிரம் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவற்றில் 7275 ஹதீஸ்களை வடித்தெடுத்து ஸஹீஹுல் புகாரியைத் தொகுத்தார்கள்.
இவ்வாறான ஸஹீஹான ஹதீஸ் கிரந்தம் ஒன்றைத் தொகுப்பதற்கு அவர்களது ஆசிரியரான இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹூயஹ் என்பவரே காரணமாகின்றார்கள்.
மிகத்தூய்மையான முறையில் குளித்து, வுழு செய்து இரண்டு ரக்அத் தொழுததன் பின்னரே ஒவ்வொரு ஹதீஸையும் இவர்கள் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளார்.
இஸ்லாமிய மூலாதாரங்களில் ஸஹீஹுல் புகாரி அல்குர்ஆனுக்கு அடுத்த தரத்தில் வைத்துக் கணிக்கப்படுகின்றது.
ஸஹீஹுல் புகாரியில் 97 பெரிய தலைப்புகள் (கிதாப்) உள்ளன. அவை ஒவ்வொன்றும் பல சிறிய தலைப்புகளாகப் (பாப் ) பிரிக்கப்பட்டுள்ளன.
தன்னால் தொகுக்கப்பட்ட ஸஹீஹுல் புகாரீ நூலை தனது ஆசிரியர்களான அஹ்மத் இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு முஈன் றஹிமஹுமுல்லாஹ் போன்றோரிடம் காட்டி அனுமதியையும் பெற்றுக் கொண்டார்கள்.
ஸஹீஹுல் புகாரிக்கு பல்வேறு விளக்கவுரை நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இர்ஷாதுஷ்ஷாரி, பத்ஹுல் பாரி என்பன அவற்றுள் முக்கியமானவைகளாகும்.
இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல் புகாரி றஹிமஹுல்லாஹ் அவர்களது இதர நூல்களில் அத்தாரீகுல் கபீர் முக்கியமானதாகும்.