السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 15 December 2024

தெளபா செய்தார்களா?

 

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டால் தவ்பா செய்தார்களா??

---------------------------------------------------------------------

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் தவறிழைத்த நிலையில்  "யா அல்லாஹ்! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு எனது பாவங்களை மன்னிப்பாயாக"என பிரார்த்தித்தனை செய்தார்கள். அதற்கு இறைவன் "ஆதமே, இன்னும் நான் படைத்திராத முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் குறித்து நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?" என வினவினான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் "இறைவா நீ என்னை உனது கரங்களால் படைத்து உனது ரூஹில் இருந்து எனக்கு உயிர் தந்த போது எனது தலையினை உயர்த்திப் பார்த்தேன்.உனது அர்ஷில் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று எழுதியிருப்பதைக் கண்டேன். உனது பெயரோடு இன்னொருவரின் பெயர் இணைக்கப்பட்டிருக்கின்றது என்றால் அவர் உனது மேலான நேசத்துக்கு உரியவர் என்பதை விளங்கிக் கொண்டேன்" என கூறினார்கள்.அதற்கு அல்லாஹ் " ஆதமே நான் உன்னை மன்னித்துவிட்டேன். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இல்லையென்றால் நான் உன்னை படைத்திருக்கவே மாட்டேன்" என கூறினான்.


அறிவிப்பவர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு


இந்த ஹதீதினை இஸ்லாமிய அறிஞர்கள் வஸீலாவுக்கு ஆதாரமாக கூறிவரும் நிலையில் மாற்றுக் கொள்கை வாதிகள் இது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பு என கூறி இதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.


இந்த ஹதீதின் நிலை குறித்து விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.


இந்த ஹதீத் இமாம் பைஹக்கியின் தலாயில் அந் நுபுவ்வாஹ், இமாம் ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக், இமாம் தபரானியின் ஸகீர் போன்ற பல்வேறு கிரந்தங்களில் அறிவிப்பாளர் தொடரோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஹதீத் குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் பார்வை என்ன என்பதை விரிவாக நோக்குவோம்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவராக வரக் கூடிய அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் என்பவர் பலவீனமானவர் என குறிப்பிடும் இமாம் ஹாக்கிம் அவர்கள் இந்த ஹதீனை பற்றி குறிப்பிடும் போது இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசை ஆதாரபூர்வமானது என குறிப்பிடுகிறார்கள். (2:651)


மேலும் அப்துர்  ரஹ்மான்  இடம்பெறும் ஹதீதாக இந்த ஹதீதையே தான் முதலாவதாக தனது கிரந்தத்தில் பதிவு செய்வதாகவும் குறிப்பிடுகிறார்கள்.


இமாம் ஜலாலுத்தீன் சுயூதி அவர்களின் ஆசிரியரான இமாம் ஷெய்குல் இஸ்லாம் ஹாபிழ் சிறாஜுத்தீன் புல்கினி அவர்கள் இந்த ஹதீதை "ஸஹீஹ்" என தனது பதாவாவில் குறிப்பிடுகிறார்கள். 


இமாம் தகியுத்தீன் சுபுக்கி அவர்கள் தனது ஷிfஆ அஸ் ஸிகாம் எனும் கிரந்தத்தில் இமாம் ஹாக்கிம் அவர்கள் இந்த ஹதீதை ஏற்றுக் கொள்ளத்தக்கது என குறிப்பிட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறார்கள். 


மேலும் இப்னு தைமிய்யாஹ் இந்த ஹதீஸ் குறித்தும் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் குறித்தும் விமர்சித்திருப்பதை அறிந்திருந்த இமாம் ஸுபுக்கி அவர்கள் இப்னு தைமிய்யாவின் இந்த விமர்சனம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிடுகிறார்கள் (ஸிfஆ அல் ஸிகாம் பீ சியாரத் கைரல் அனாம்


இமாம் காழி இயாழ் அவர்கள் இந்த ஹதீஸ் பிரபல்யமானதும் ஆதாரபூர்வமானதுமாகும் என தனது ஷிfஆ இல் குறிப்பிடுகிறார்கள்.மேலும் இந்த ஹதீஸ் பின்வரும் குர் ஆன் வசனத்தை விளக்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.


"பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்" (2:37)


அல்லாமா அல் ஹாபிழ் இப்னு ஜவ்ஸி அவர்களும் இந்த ஹதீதை ஏற்றுக்கொள்ளத்தக்கது என தனது அல் வபா பி அஹ்வல் அல் முஸ்தபாவில் குறிப்பிடுகிறார்கள். இந்த நூலின் அறிமுக உரையில் இமாம் அவர்கள் தான் சரியான ஹதீதுகளோடு பிழையான அறிவிப்புக்களை கலக்க மாட்டேன் என உத்தரவாதம் தருகிறார்கள். 


இமாம் சுயூதி அவர்கள் தனது துர் அல் மந் தூர் மற்றும் இன்னும் பல கிரந்தங்களில் இமாம் பைஹக்கி அவர்கள் இந்த ஹதீதை ஸஹீஹானதாகவே கருதியிருக்கிறார்கள் என குறிப்பிடுகிறார்கள். இமாம் பைஹக்கி அவர்கள் இந்த ஹதிதை குறிப்பிடும் அவர்களது கிரந்தமான தலாயிலுந் நுபுவ்வாவின் அறிமுக உரையில் தான் இந்த கிரந்தத்தில் ஆதாரபூர்வமான ஹதீதுகளை மட்டுமே பதிவு செய்துள்ளதாக குறிப்பிடுவதன் மூலம் இந்த ஹதீத் குறித்த இமாம் பைஹக்கி அவர்களின் பார்வையை நாம் புரிந்துகொள்ள முடியும். 


இமாம் இப்னு கதிர் அவர்கள் இந்த ஹதீதில் இடம்பெறும் அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் அவர்கள் குறித்த பலவீனத்தை குறிப்பிட்டதன் பின்னர் "இருந்த போதிலும் இந்த ஹதீஸ் குறித்து பின்வரும் குர் ஆன் வசனத்தை மனதில் கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறார். " பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.(20:122) 


ஆதாரம் : அல் பிதாயா வந் நிஹாயா (1:75 1:180)


இமாம் நூருத்தீன் இப்னு அபூபக்கர் அல் ஹைதமி அவர்கள் தனது மஜ்ம உ ஸவாயிதில் குறிப்பிடும் போது "இந்த ஹதீதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் குறித்தான விமர்சனங்களை இமாம் இப்னு ஜவ்ஸி, இமாம் ஸுபுகி, இமாம் பைஹக்கி, இமாம் ஹாகிம், இமாம் அபு நுஐம் போன்றோர் அறிந்த நிலையிலும் இந்த ஹதீத் கவனத்தில் கொள்ளத்தக்கது என குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்பதாக கூறுகிறார்கள்.


இந்த ஹதீதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் என்ற அறிவிப்பாளர் குறித்து பரவலான விமர்சனங்கள் ஹதீது கலை அறிஞர்கள் மத்தியில் இருந்த போதிலும் இந்த குறித்த ஹதீஸ் குறித்து பல்வேறு அறிஞர்கள் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் என்பதை மேற்படி ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.


இன்ஷா அல்லாஹ்..மற்றுமொரு பதிவில் இதே கருத்தை தரக்கூடிய மற்றுமொரு ஹதீத் குறித்து விரிவாக அலசுவோம்!


நன்றி: Mohamed Manas 


#nowshushares | #nowshuposts