السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 16 December 2024

சில முற்றுகைகளும் படையெடுப்புகளும்

 


சில முற்றுகைகளும் படையெடுப்புகளும் 

=================================

அகழ்ப்போரின் பக்க விளைவுகளில் ஒன்றுதான் கைபர் வெற்றி. மதினாவிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் இருந்தது அது. பெருமானாரைக் கொல்ல யூதர்கள் மதினாவில் முயற்சி செய்ததன் விளைவாக அவர்கள் கைபருக்கு விரட்டப்பட்டிருந்தனர். 


கைபரில் யூதர்கள் ஒரே குடும்பம்போல வசித்து வந்தனர். மதினாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதத்தலைவர்களும், அகழ்ப்போரில் முஸ்லிம்களின் எதிரிகளான மக்கத்துக் குறைஷியருக்குப் பொருளாதார உதவிகள் செய்தவர்களும் அதில் அடக்கம். 


முஸ்லிம் படை கைபருக்குள் நுழைந்தபோது எதிர்ப்பு ஒன்றும் இல்லாமலே இருந்தது. ஏனெனில் மக்களெல்லாம் பாதுகாப்பாக கோட்டைகளுக்குள் இருந்தனர். கைபர் பகுதியே கோட்டைகளுக்கும் பேரீச்ச மரப்பண்ணைகளுக்கும் பெயர்பெற்றது. 


கைபர் முழுவதும் ஆங்காங்கே கோட்டைகள் இருந்ததால் சில கோட்டைகளை முற்றுகையிட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. ஒரு கோட்டையைக் கைப்பற்றியவுடன் அடுத்த கோட்டைக்குப் போகவேண்டும். 


முதல் முதற்சியாக சில கோட்டைகளைக் கைப்பற்ற அபூபக்கர் தலைமையில் பெருமானார் சிலரை அனுப்பினார்கள். ஆனால் நாள் முழுவதும் முயற்சி செய்தும் வெற்றிபெறாமல் அபூபக்கரின் படை திரும்பி வந்தது. 


மறுநாள் உமரின் தலைமையில் அனுப்பப்பட்ட வீரர்களாலும் வெற்றி கிடைக்கவில்லை. 

”நாளை நான் கொடியை ஒருவரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்” என்று பெருமானார் கூறினார்கள். அது வேறு யாருமல்ல, ஹஸ்ரத் அலீதான். அவர் வெற்றியுடன் திரும்பினார். 


அந்த முற்றுகையின் ஒரு கட்டத்தில் அங்கிருந்த பேரீச்ச மரங்களையெல்லாம் வெட்டிவிடலாம், அப்படிச் செய்தால் தம் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதால் யூதர்கள் மனமுடைந்த வீரத்துடன் செயல்பட முடியாமல் போகும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அக்கருத்து சரியென்றே பெருமானாருக்கும் பட்டது. 


சிலர் உடனே காரியத்தில் இறங்கவும் தொடங்கினர். 

ஆனால் அபூபக்கருக்கு அக்கருத்து சரியென்று படவில்லை. உடனே பெருமானாரிடம் சென்று அப்படிச் செய்யவேண்டாம், அது முஸ்லிம்களுக்கும் எதிர்காலத்தில் தீமை விளைவிக்கும் என்று விளக்கினார்.  


அவர் சொன்ன கருத்தைப் பெருமானார் உடனே ஏற்றுக்கொண்டார்கள். மரங்கள் வெட்டுவதை உடனே நிறுத்திவிடும்படி உத்தரவிட்டார்கள். தோழர்களும் உடனே அக்காரியத்தை நிறுத்தினார்கள். 


பெண்ணுக்கு பதிலாக முஸ்லிம் கைதிகள் 

பனூ ஃபுஸாரா என்ற யூத கோத்திரத்தைத் தாக்கி வெற்றி கொள்ளும் உத்தரவுடன் அபூபக்கர் தலைமையில் ஒரு படை சென்றது. 


அபூபக்கரின் உத்தரவின்படி ஒரு நீர்நிலை அருகே முஸ்லிம்கள் முகாமிட்டார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் தாக்குதல் நடத்த அபூபக்கர் உத்தரவிட்டார். அதன்படியே செய்யப்பட்டது.  


அபூபக்கரின் குழுவிலிருந்த சலாமா என்பவர் ஒரு யூதக்குடும்பத்தைக் கைது செய்து அபூபக்கரிடம் ஒப்படைத்தார். அதிலிருந்த ஒரு அழகான பெண்ணை சலாமா விரும்பினார். ஆனால் பெருமானார் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தப்பெண்ணை அவர் பெருமானாரிடம் ஒப்படைத்தார். 


பெருமானார் அவளை மக்கத்துக் குறைஷிகளிடம் கொடுத்து அவளுக்கு பதிலாக சில முஸ்லிம் கைதிகளின் விடுதலையைப் பெற்றுக்கொண்டார்கள்.  


பெருமானாரோடு உம்ரா

---------------------------------

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின் அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் பெருமானாரோடு உம்ரா செய்தனர். அப்போது மூன்று நாட்களுக்கு மக்கத்துக் குறைஷியர் மக்காவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பெருமானாரோடு அந்த ஆண்டு உம்ரா செய்தவர்களில் அபூபக்கரும் ஒருவர். 


உமருக்கு அபூபக்கர் கொடுத்த விளக்கம் 

மதினாவிலிருந்து பத்து நாள் பயண தூரத்தில் இருந்த இடம் தாத்துஸ்ஸலாசில். நபித்தோழர் அம்ரிப்னுல் ஆஸ் அவர்களை படைத்தலைவராக பெருமானார் நியமித்திருந்தார்கள். 


அபூபக்கரும் உமரும் அப்படையெடுப்பில் கலந்துகொண்டார்கள். ஆஸைவிடத் தாங்கள் முக்கியமானவர்களாயிற்றே, தங்களில் ஒருவரைத் தலைவராக நியமிக்கவில்லையே என்று அவர்கள் வருந்தவோ, அப்படி நினைக்கவோ இல்லை. 


அங்கே போய்ச்சேர்ந்தபோது இரவாகிவிட்டிருந்தது. ஆனால் யாரும் தீயைப் பற்றவைக்கக் கூடாது என்று அம்ர் ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அந்த உத்தரவைக் கேட்டதும் ஹஸ்ரத் உமர் கோபமுற்றார். 


அம்ரின் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல் படைத்தலைவரான அம்ரை நன்றாகத்திட்ட வேண்டும் என்றும் நினைத்தார். ஏனெனில் குளிர் நடுக்கிய அந்த இரவில் தீ ஒன்றுதான் இதம் தரும் நண்பனாக இருந்திருக்கும். ஆனால் அம்ரின் ஆணை அதைத்தடுத்துவிட்டது. 


உமர் அப்படிச் செய்துவிடாமல் அபூபக்கர் தடுத்தார். தீயை வைத்து எதிரிகள் நம் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளக்கூடாதென்பதுதான் அம்ரின் யோசனை. 


அதற்காகவே அவர் அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார், அதோடு போர்த்தந்திரங்களை நன்கு அறிந்தவர் என்பதாலும்தான் பெருமானார் அம்ரை தலைவராக நியமித்திருந்தார்கள் என்று எடுத்துச் சொல்லி உமரை அபூபக்கர் அமைதிப்படுத்தினார். 

=====


நன்றி இனிய திசைகள் டிசம்பர், 2024