السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 9 December 2024

ஹலால் ஹராம்

 



#ஹலால்_என்றால்_திறக்கும்_உதடுகள் 

#ஹராம்_என்றால்_மூடிக்_கொள்ளும்!


நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து,

உதடுகள் ஒட்டாமல் ஹலால் என்று சொல் பார்ப்போம் என்றார்கள். நான் ஹலால் என்று சொன்ன போது என் உதடுகள் ஒட்டவில்லை.


மிகவும் மகிழ்ச்சியுடன் அம்மா என் உதடுகள் ஒட்டவில்லை" என்று நான் சொன்ன போது, என்னை கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.


"மகனே! இப்பொழுது உதடுகள் ஒட்டாமல் ஹராம் என்று சொல் பார்ப்போம்" என்றார்கள்!


நான் எவ்வளவோ முயன்றும் ஹராம் என்று, 

ம் ஐ சொல்லும் போது என் உதடுகள் ஒட்டிக் கொண்டன!


"அம்மா! எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை" என்று சொன்னேன்!


கலகல என சிரித்த என் தாய், இதுதான் மகனே ஹராமிற்கும் ஹலாலிற்கும் உள்ள வித்தியாசம் என்றார்கள்!


எப்பொழுதும் ஹலாலாக்கப்பட்டவை உனக்கு நன்மையின் வாசல்களைத் திறக்கும்!

இம்மை மறுமைக்கான எல்லா நன்மைகளையும் அது உருவாக்கும்!


மாறாக, 

ஹராமாக்கப்பட்டவைகள் உனக்கு நன்மை தரும் எல்லா வாசல்களையும் அடைத்து விடும்!

 உன் உதடுகள் எப்பொழுதும் ஹலாலானவற்றிற்காகவே திறந்திருக்கட்டும்!


ஹராமானவற்றை கண்டால் உன் உதடுகளை இருக மூடிக் கொள் என்றார்கள் என் அன்னை!


அதன் பிறகு, நான் ஏதாவது நல்லது செய்தால் உதடுகள் விரிய என்னை பார்த்து புன்னகைப்பார்கள்!


ஏதேனும் தவறு செய்தால் உதட்டை இருக்க மூடிக் கொண்டு கவலையுடன் என் அன்னை என்னைப் பார்ப்பார்கள்! இத்தகைய நிலையில் தான் நான் வளர்ந்தேன்.


நான் பெரியவனான பின்,

என் தாயார் மறைந்தார்கள்

அவர்களுக்கு கஃபனிட்ட பின் இறுதி முறையாக அவரின் முகத்தை பார்த்து நெற்றியில் முத்தமிட குனிந்தேன்.


அழகிய என் தாயின் முகம் உதடுகள் விரிய புன்னகைத்த நிலையில் கண்டேன்!


பொங்கி வரும் அழுகையை கட்டுபடுத்தியவனாக என் அன்னையின் நெற்றியில் முத்தமிட்டு,சொன்னேன!


“அம்மா! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்!

மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம், ஹலால்களை பேணி நடப்பேன்.”


ஆம்!. ஒரு தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழந்தைக்கு புகட்டும் போதே அவனுக்கு #ஹலால் எது? #ஹராம் எது? என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவன் தலை சிறந்த மூஃமினாக திகழ்வான்.


ஒரு குழந்தைக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் முதல் ஆசான் தாய்தானே.


அரபியில்:-அஷ்ஷைக் முஹம்மது ராத்திப் அன்னாபிலிஸி