பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை - #Pyramid Sceme
அறிமுகம்
இன்று இலகுவான வழிகளில் அதிகதிகம் சம்பாதித்துக் கொள்வதற்கான புதிய வர்த்தக, வியாபார, பொருளீட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டே உழைத்துச் சொத்து சேர்க்க முடியும் என்று கவர்ச்சிப் பிரசாரம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றிலுள்ள முறைகேடுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் முஸ்லிம்களும் இதில் ஈடுபடுகின்றனர்.
எனினும், முஸ்லிமை பொறுத்தவரை அது பற்றி விசாரித்து, இஸ்லாமிய வரையறைகளை அவதானித்து, ஆலிம்களின், அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றே நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அவசரப்பட்டு காரியத்தில் இறங்கி கைசேதப்படுவதை விடுத்து நிதானமாக செயற்படுவதுதான் ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும்.
இவ்வடிப்படையில், சந்தையில் பல வருடங்களாக உலா வந்து கொண்டிருக்கும் பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமை பற்றிய ஷரீஆவின் சட்டத்தை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.
#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை
பிரமிட் கட்டமைப்பு வியாபார முறைமை குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006' இல.4 எனும் சிற்றேட்டுத் தொடரில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது :
இத்திட்டத்தில் புதிதாக பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு முற்பணமாக ஓர் கட்டணத்தை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிகமாக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டுவரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில் காணப்படுகின்றன.
#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறையின் #இயல்புகள்
✅ 01. இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிதாக பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது வேலைகளை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்யுமாறு வேண்டுகிறார்கள் என்பதுடன் பின்னர் அப்பொருட்களை அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களை கொண்டுவருமாறும் வேண்டப்படுகின்றனர்.
✅ 02. சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளரூடாக மட்டுமே இவை கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
✅ 03. இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக்கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே காணப்படும். இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடாக கட்டணமாக விதிக்கப்படலாம்.
✅ 04. இப்பொருட்களுக்கு இரண்டாந் தரச்சந்தை இல்லாதிருப்பதுடன் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.
✅ 05.பங்குபற்றுபவர்களினால் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு வழமையாக வழங்கப்படுவதில்லை ஆனால் அதிகூடிய வருமானங்ளைப் பெற்றுக்கொள்வதானால் புதிதாக பங்குபற்றுபவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின் நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய ஆட்சேரப்புக்களின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கின்றது.
✅ 06. இறுதி நுகர்வோருக்கு பொருட்கள் அல்லது சேவைகளை சில்லறையாக விற்பனை செய்யும் நோக்கம் இத்திட்டத்தில் சிறிதளவாகவே காணப்படுகின்றது.
✅ 07.0பொதுவாக ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர்கள் திட்டத்தின் கம்பனி பற்றிய வதிவிடம், வீதி, விலாசம், அல்லது தொலைபேசி இலக்கம் என்பவற்றை வெளிப்படுத்துவதில்லை.
✅ 08.ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர் நம்பமுடியாத வருமானங்கள் (உ-ம் : சட்டரீதியாக மாதாந்தம் ரூ 100,000 இனைப் பெறுதல்) அல்லது 'வளமானதும் சந்தோச மானதுமான வாழ்க்கை' , 'இலகுவாக ஆட்களை சேர்துக்கொள்ள முடியும்' போன்ற நன்மைகளைப்பெற முடியும் என உறுதிகளை அளிக்கின்றனர்.
✅ 09. திட்டத்தின் அடிமட்டத்தில் இருக்கும் புதிதாக பங்கு பற்றியவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்ய முடியாத நிலை எழும் போது அவர்கள் தமது முதலீட்டை இழக்க வேண்டி நேரிடும் என்பதுடன் அத்திட்டம் முறிவடையும் நிலையையும் அடையும்.
✅ 10. செயற்பாட்டுப் பிரதேசங்கள் பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஓர் திட்டத்தை கொண்டில்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்கள் பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவான வறையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.
#பார்க்க: இலங்கை மத்திய வங்கியின்
பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4
• தினகரன் வாரமஞ்சரி, 2011.08.07 – பக்கம் :12
#பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமையின் #வகைகள்:
பிரமிட் வியாபார கட்டமைப்பில் இரண்டு முறைகள் உள்ளன.
🛑 01. வெற்று பிரமிட் கட்டமைப்பு(Naked Pyramid Scheme) என்பது முதலாவது முறைமையாகும். இதன் பின்னணியில் பொருட்கள் இருக்காது. இது வெறும் பணத்தை அடிப்படையாகக் கொண்டது. பணம் செலுத்தி உறுப்பினராகிய பின் பலரை உறுப்பினர்களாக்குவதன் மூலம் பணம் சம்பாதிப்பதாகும்.
🛑 02. பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பிரமிட் கட்டமைப்பாகும். இதற்குMulti-Level அல்லதுNetwork Marketing Scheme என்று செல்லப்படும். இதில் உறுப்பினராகுவதற்கு குறிப்பிட்ட பொருளை வாங்குதல் வேண்டும்.
பார்க்க: (இலங்கை மத்திய வங்கியின் 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4)
#பிரமிட் வியாபார கட்டமைப்பு இலங்கையில் #தடை செய்யப்பட்ட ஒன்றாகும்
மத்திய வங்கியின் அறிக்கைப்படி, இவ்வியாபார முறைமை இந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்பதுடன் இத்திட்டத்தில் பங்குபற்றி குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
#பிரமிட் மற்றும் வலையமைப்பு வியாபார முறை (Network Marketing) தொடர்பான #ஷரீஆவின் கண்ணோட்டம்
பிரமிட் மற்றும் வலையமைப்பு 'Naked Pyramid Scheme' மற்றும் 'Network Marketing / Multi Level' வியாபார முறைமை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலானோர் இதனை ஹராம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய பொருளியல் துறை அறிஞர்களும் இவ்வியாபார முறைமை ஆகுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.
#ஹராம் எனக் கூறும் அறிஞர்கள் பின்வரும் நியாயங்களை முன்வைக்கின்றனர்
📛 01. வட்டியின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றமை.ஏனெனில், அதிகளவு பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறைந்தளவு பணம் செலுத்தப்படுகின்றது. விற்கப்படும் பொருட்கள் பணம் கைமாற்றப்படுவதை மறைப்பதற்கான ஒரு யுக்தியாகும். உண்மையில் இப்பொருட்களை வாங்கும் நோக்கம் இருப்பதில்லை. மாறாக, அதில் உறுப்பினராகி அதிக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு பொருளை கொள்வனவு செய்யும் பொழுது அதன் நோக்கத்தையும் அவதானித்தல் வேண்டும் என்று இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி ரஹிமஹுல்லாஹ் துஹ்ஃபாவில் குறிப்பிடுகின்றார்கள்.
وزعم أن الصحيح مراعاة اللفظ في المبيع لا المعنى غير صحيح بل تارة يراعون هذا وتارة يراعون هذا بحسب المدرك (تحفة المتاج. كتاب البيع )
📛 02. ஒருவகை ஏமாற்றமும் குளறுபடியும் காணப்படுகின்றது.ஏனெனில், இதில் இணைபவர்கள் அதிக இலாபமீட்டலாம் அல்லது ஈட்ட முடியாமலுமாகலாம் என்ற நிச்சயமற்ற தன்மை உள்ளது. என்றாலும், அதிகமானோர் இதில் வெற்றியடைவதில்லை.
عن أبي هريرة رضي الله عنه قال : نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وعن بيع الغرر -كتاب البيوع. باب بطلان بيع الحصاة والبيع الذي فيه غرر- صحيح مسلم
நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஏமாற்று வியாபாரத்தைவிட்டும் தடை செய்துள்ளார்கள். நூல் : ஸஹீஹு முஸ்லிம்
قال الرملي في نهاية المحتاج (كتاب البيع) : الغرر هو ما احتمل أمرين أغلبهما أخوفهما
ஏமாற்றம் என்பது இரண்டு விடயங்களைக் சாத்தியமானதாக் இருக்கும் அவற்றில் பொரும்பாலும் அச்சுறுத்தலே மேலோங்கியிருக்கும். (நிஹாயதுல் முஹ்தாஜ்)
📛 03. பொது மக்களின் சொத்து, செல்வங்களை அநியாயமாக சுரண்டும் வகையில் இவ்வியாபார முறைமை அமைந்திருக்கின்றமை.இவ்வியாபார ஒழுங்கில் ஆரம்பத்தில் இணைந்து கொள்கின்றவர்கள் அவர்களுக்குக் கீழால் இத்திட்டத்தில் இணைந்து கொள்பவர்களின் உழைப்பின் மூலம் கூலியையும் பெற்றுக் கொண்டு அதிகளவில் இலாபமும் அடைவர். கம்பனி கொள்ளை இலாபம் பெறும். இத்திட்டத்தில் கடைசியாக இணைந்து கொள்கின்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர்.
قال الله تعالى : ولا تأكلوا أموالكم بينكم بالباطل (سورة البقرة,188)
அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் 'உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்.' (அல்-பகரா:188) என்று கூறுகின்றான்.
📛 04. இதில் ஈடுபடுவர்கள் மற்றவர்களைக் கவர்வதற்காக பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகின்றனர்.
📛 05. சிலர் இதனை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஷதரகு| வியாபார முறையுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் தரகு வியாபார முறையுடன் இது முரண்படுகிறது. ஏனெனில், தரகு வியாபார முறையில் தரகர் பொருளை கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதில்லை. ஆனால், வலையமைப்பு மற்றும் பிரமிட் முறைகளில் தரகர் கட்டாயமாக பொருளைக் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
எனவே, இவ்வியாபார முறைமையில் சந்தேகத்துக்கிடமான, மயக்கமான பல விடயங்கள் இருக்கின்ற அதேவேளை, இது ஒரு வகையான வட்டி, சூதாட்டம், மோசடி, ஏமாற்றம் போலத் தோன்றுவதனாலும், வியாபார ஒழுங்குகள் பேணப்படாதிருப்பதனாலும் இவ்விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை அஞ்சி தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இலலையெனில் ஹராத்தில் வீழ்ந்து எம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.
#வலையமைப்பு ( #networkmarketing Marketing) மற்றும் பிரமிட் வியாபார முறைமைகள் ஹராமென தீர்ப்பு வழங்கிய ஃபத்வா நிலையங்கள் சில பின்வருமாறு:
❤️ 01. ஸஊதி அரேபியாவின் கல்வி, ஆய்வு, ஃபத்வாவுக்குமான ஒன்றியம்(ஃபத்வா இல:22935)
❤️ 02. சூடானிலுள்ள இஸ்லாமிய ஃபிக்ஹ் மையம்
❤️ 03. ஜோர்தான் இஸ்லாமிய ஃபத்வா நிலையம், (ஃபத்வா இல:1995)
❤️ 4. இஸ்லாமிய சட்ட மையம், இந்தியா (ஃபத்வா 16ஃ4)70
❤️ 05. கட்டார் இஸ்லாமிய ஃபத்வா நிலையம்(islamweb.net, ஃபத்வா 35492)
எகிப்தின் ஃபத்வா நிலையம் (ஆரம்பத்தில் பல நிபந்தனைகளுடன் இவ்வியாபாரத்தை அனுமதித்த இந்நிலையம் தற்பொழுது கூடாது என்று பத்வா வழங்கியுள்ளது) (ஃபத்வா இல:3861)
❤️ 06. ஃபத்வா நிலையம், தாருல் உலூம் கராச்சி - பாகிஸ்தான்
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் கபூரி
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். ஐ. எம். ரிழ்வி முஃப்தி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
31 August 2024
#PyramidScheme #pyramidscam #sgoscam #sgo #ziyadaia