السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 12

 

திருக்குர்ஆன் விளக்கம் 12

*திருக்குர்ஆன் விளக்கம்* 
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••••
              தொடர் : 12
               ---------------

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

  2- 11 -. இன்னும், பூமியில் குழப்பம் செய்ய வேண்டாம்   என்று அவர்களிடம் சொல்லப்பட்டால்,  நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்கள் என்கின்றனர்;  
••••••••••••••••••••••••••••••••••

தொடர்பு: 

முதல் திரு வசனத்தில் முனாஃபிக்குகளின் மனநோய் உச்சம் தொட்டுவிட்டது என்று கூறப்பட்டது, இங்கு அதன் அடையாளம் கூறப்படுகிறது; அவர்கள் நல்லதையும், தீயதையும் பிரித்தறியாமல் ஒவ்வொன்றையும் தவறாகவே எடை போடுகின்றனர்; 

 நோயாளியோடு சேர்த்து அதன் அடையாளங்களையும் மருத்துவர்கள் கூறுவது போன்று  இங்கு இந்த நோயைத் தெரிந்து கொள்ளும் அடையாளத்தைக் கூறப்படுகின்றது, இது  இத்திருவசனத்தின் முடிவாகும். 

இதற்கு மாறாக வும் இருக்கலாம், அதாவது, அவர்களின் புலன்கள்  நல்லதைச் கெட்ட தாகவும், கெட்டதை நல்லதாகவும் புரிய வைக்கலாம், 

தொடர்பு இவ்வாறு இருக்கலாம்,

இதற்கு முன் முனாபிக்குகளின் கெட்ட அகீதாக்கள், உளறல்கள் ,கெட்ட செயல்கள் பற்றிக் கூறப்பட்டன,  இப்போது அவர்களின் கெட்ட பரிவர்த்தனைகள்  பற்றிக் கூறப்படுகின்றன,  அதாவது மனதில் நோய்,  நாவில் பொய் , தவறான வணக்கம் உள்ளிட்ட அவர்களின் நடைமுறைகள் யாவும் பாழ் என்று கூறப்படுகின்றது,

 வணக்கங்கள் நடைமுறைக்கு முன் நிகழ்பவை, ஆகவேதான் , வணக்கங்கள் முதலிலும், நடைமுறைகள் பின்பும் கூறப்பட்டன, 

அல்லாஹ்வோடு தொடர்பான செயல்களை *இபாதத்துக்கள்*  என்றும், உ+ம்,, தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத்,  அடியார்களோடு தொடர்பானவை களை  *முஆமலாத்* நடைமுறைகள்- என்றும் கூறப்படும், உ+ம் , வர்த்தகம்,  பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல்,  மற்றும் ஏனைய பரிவர்த்தனைகள்,

முனாபிக்குகளின் இவ்விரண்டு செயல்களும் பாழாகும், அவற்றில் இறுதி வகை பற்றி இப்போது கூறப்படுகின்றது.

"குழப்பம்" என்பது ,பயனற்றது, பொருத்தமற்றது ;சமநிலையற்றது; இதற்கு எதிர் சீர்திருத்தம்! இது பயனுள்ளது; சமநிலையானது; பொருத்தமானது; முனாஃபிக்குகள் தங்களுக்குள்ளேயே மனவியாதியால் குழம்பிப் போயிருக்க, ,அடுத்தவருக்கு சீர்திருத்தம் எப்படிச் செய்வது? இதிலிருந்து இவர்களின் குழப்பம் அடுத்தவர்களையும் பாதிக்கிறது என்பது தெளிவு!

 இவர்கள் செய்த குழப்பங்கள் வருமாறு,

1-காபிர்களைச் சந்தித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உதவி செய்தல்,

2-முஸ்லிம்களின் இரகசியங்களைக் காபிர்களுக்கு தெரியப்படுத்துவது. 

3-புதிதாக இஸ்லாத்தைத்  தழுவியவர்களை இரகசியமாகச் சந்தித்து அவர்களின் மனதில் இஸ்லாத்திற்கு மாற்றமான சந்தேகங்களையும், சலனங்களையும் ஏற்படுத்துவது.

சீர்திருத்தம் செய்பவர் நடுநிலையில் இருப்பார், அவரின் மனம் தெளிவாக இருக்கும்; குழப்பத்தைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்களை தவிப்பார்; பேச்சு வார்த்தையில் இருதரப்பிலும் நம்பிக்கையூட்டும் நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பார் ; 
ஆனால், முனாஃபிக்குகள் முஸ்லிம்களைப் பற்றி புறம் ,கோள் சொல்லித் திரிந்தார்கள்; முஸ்லிம்களை நையாண்டி பண்ணினார்கள்; இவர்களின் செயல் மன வியாதியால் அல்லல் படுபவனைப் போன்று இருந்தது;

முனாபிக்குகள்  தங்களை சீர்திருத்த வாதிகள் என்று கூறுவதன் கருத்து யாதெனில், 

,காபிர்களோடு சமரசம் பேசி உங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வர வேண்டும், 

 புனித மதீனாவின் புனித  மண்ணில்  குருதியால் நனையாமலிருக்க வேண்டும், 

 முஸ்லிம்களே! நீங்கள்
குருதியை ஓட்ட விளைகின்றீர்கள், நாங்கள் சமரசம் செய்து அமைதியையும் , நல்லெண்ணத்தையும் கொண்டுவர விளைகின்றோம், 

ஆதலால் நாங்கள்தான் சீர்திருத்த சமாதான வாதிகள், நீங்கள் அல்ல!என்பது முனாபிக்குகளின் வாதமாகும்.

திருக்குர்ஆனில் முனாபிக்குகளின் மற்றுமொரு கூற்றை இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.

قَالُوا إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا

அன்பரே!  அவர்கள் உம்முடைய திருச்சமுகம் வந்து  " நாங்கள்  நன்மையையும்,  நட்பையும் தவிர்த்து  வேறு எதனையும்  நாடவில்லை என்று  அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து  கூறுகின்றனர்.  4:  62

 ஆகவே, இவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்வதாகக் கூறினாலும் ,இவர்களின் கூற்றுக்கெதிரான குழப்பத்தையே செய்கின்றார்கள்;  தாங்கள் செய்யும் குழப்பத்தை அவர்களால் உணர முடியாத சர்வ முட்டாள்களாக இருக்கின்றனர் என்பதைஇத் திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

 இக்காலத்தில் ஒற்றுமை, இன ஐக்கியம்; மத நல்லிணக்கம் என்ற பெயரில் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் நயவஞ்சகத்தின் வெளிப்பாடுதான்! வழிகெட்ட வஹாபி, தேவ்பந்தி, ஷீஆ காதியானி உள்ளிட்டோருடன் சகஜமாக உறவாடுவது அவர்களை சமனாக உள்வாங்கி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நயவஞ்சகம் தான். இவையாவும் தங்களின் நலன்கருதிச்செய்யப்படுகின்றவே தவிர மார்க்கத்தின் நலன் கருதிப் செய்யப்படுவதில்லை, 

இப்போது "  மத நல்லிணக்கம் "என்ற  கருப்பொருளுக்குப் பின்னாலிருப்பவர்கள்  காபிர்களாகும், குறிப்பாக கிறிஸ்த்தவ ர்கள், இவர்களின் உள் நோக்கம் முஸ்லிம்களின் மனதில் குப்றின் வெறுப்பை அழிக்க வேண்டும், கண்மணி றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மீதான நேசத்தைக்குறைக்கவேண்டும், ஷரீஅத்தின் கட்டுப்பாட்டை உடைக்கவேண்டும், அன்னிய காஃபிர்களின் கலாச்சாரத்தை முஸ்லிம்களுக்குள் புகுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சமயங்களையும், கலாச்சார விடயங்களையும் முஸ்லிம்களை ஏற்கச்  செய்யவேண்டும்.

முனாபிக்குகள்  தங்களைப் பற்றி கூறும் போது انما  என்ற இடைச் சொல்லைப் பாவித்தனர், இதன் பொருள் "நாங்கள் தான் சீர்திருத்தவாதிகள்! முஸ்லிம்களாகிய நீங்கள் குழப்பவாதிகள்" என்ற பொருள் அதற்குள் தொக்கி நிற்கிறது;இதற்கு மறுப்பாகவே انهم    குழப்பவாதிகள் அவர்களே தான் என்று அறுதியிட்டு அல்லாஹ் கூறுகிறான்; ஆயினும், அவர்கள் உணர்வதில்லை என்பது   அவர்களின் புலக்காட்சியைக் குறிக்கும்;

 இதன்படி, முனாஃபிக்குகள் குழப்பவாதிகளாக இருப்பது கண்ணால் காணக் கூடியதான வெளிப்படையானதாகும்;இதை புரிய முடியாதளவுக்கு அவர்களின் கண்களும் மந்தமாகி விட்டதால் வெளிப்படையானதைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை;

 குழப்பத்தையும், சீர்திருத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத ளவுக்கு அவர்களின் கல்பு குருடாகி விட்டதால், உறுப்புக்களும் உணர்வை இழந்து போய்விட்டது!

இத்திரு வசனத்தில் பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன,

1- எவர் அல்லாஹ்வின் நல்லாடியார்களுடன் மோதுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வோடு மோதுகின்றனர், இவர்களை ஆட்சேபிப்பது அல்லாஹ்வை ஆட்சேபிப்பதாக அமையும்; காரணம்,  முனாபிக்குகள் முஸ்லிம்களோடு தான் முரண்பட்டனர்; அல்லாஹ்வோடு முரண்படவில்லை.;ஆனாலும், அல்லாஹ்.முஸ்லிம்கள் சார்பாகப் பதில் கூறுகின்றான்; இதிலிருந்து இக்குற்றச் சாட்டை தன்னுடைய குற்றச்சாட்டாக ஏற்றுக் கொண்டான். 

2-ரப்புக்கு வழிபடுவதை எவர் தனது சிந்தனையில் கொள்கின்றாரோ, ரப்புத்தாலா உலகியல் சிந்தனையிலிருந்து அவரை பாதுகாக்கின்றான்.

3- சஹாபாக்களை குழப்பவாதிகள் என்று கூறுவது முனாபிக்களின் வேலை, ஸஹாபாக்கள் தங்களுக்குள் சண்டையிட்டதெல்லாம் சுயநலத்திற்கானது அல்ல! முனாபிக்குகள் சுயநலத்திற்காக தொழுதார்கள்; ஆகவே, முனாபிக்குகள் முகஸ்துதியாளர்கள்;

ஸூபிஸ விளக்கம்:
-------------------------
 எப்படியான வளமான பூமியாக இருந்தாலும்  அதில் தூவும் விதைதான் மரமாக வளரும், பூமியில் ,  முட்செடிகளை விதைத்தால் விறகுக்கான மரம் தான் வளரும், அதில் அவருக்கு எவ்வித பயனுமில்லை,  இவ்வாறு  மனித மனம் எல்லாவற்றிற்கும் தகுதியான தாக இருக்கின்றது,  அதில் ஈமானின் விதையை நட்டால்  அதிலிருந்து பெறுமதியான கனிகளைப் பெறலாம்,  குப்றினால் கையைக் கடிக்கும் முட்புதர்கள்தான் வளரும்,  ஆகவேதான்  முனாபிக்குகளே!  மனம்  என்ற விதை நிலத்தில் குப்றையும்,  நயவஞ்சகத்தையும் விதைத்து மனதைப் பழுதாக்காதே ! என்று இங்கு கூறப்படுகின்றது,

ஈமானின் விதையை விதைத்து ,  இபாதத் என்ற நீரை பாய்ச்சியபின்,  நல்ல உறவுகள் என்ற  காற்றை வீச வைத்து  பழம் தரும் மரமாக வளர்த்துக்கொள்ளுங்கள்,

 ஆனால் , அவர்கள்  தனது முட்டாள்தனத்தால் முட்புதர் செடிகளை விதைத்து விட்டு கனிகளை எதிர்பார்க்கின்றனர்.