السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 23 December 2025

இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்

 

இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்

#இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்


தொடர் : 29


#ஷெய்கு சுலைமான் றழியல்லாஹு அன்ஹு.


தமிழகத்தில் ஆன்மீக தீன் சுடர் ஏற்றிய ஞானப் பேரொளி எஜமான் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம், ஒருநாள் தம் சீடர் ஸதக்கத் நெய்னாரை நோக்கி, "உமக்கு உம் பெயர் தாங்கிய ஒருவர் பிறப்பார். அவர் மார்க்க கல்வியையும், ஆன்மீகக் கல்வியையும் ஒருங்கே பெற்று, சீரும் சிறப்புமாய் வாழ்வார்" என்று நன்மாராயம் கூறினார்கள். 

எஜமான் பாதுஷா நாயகம் கூறி, சரியாக 23 வருடங்கள் கழித்து, ஹிஜ்ரீ 1000ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண்மகன் பிறந்தார். அவருக்கு 'ஷெய்கு சுலைமான்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். 


யார் இந்த ஷெய்கு சுலைமான்? 

இவர்கள் இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஸெய்யித் அபூபக்ர் ஸித்தீக் நாயகத்தின் வம்சத்தை சேர்ந்தவர்களும், 'வித்ரிய்யஹ்' எனும் நபி புகழ் காப்பியத்தை இவ்வுலகிற்கு தந்த ஞானமகான் மாதிஹுர் ரஸூல் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் தந்தையுமாவார்கள்.


ஷெய்கு சுலைமான் வலீ, வயது வந்த போது அக்காலத்தில் சீரும் சிறப்பு பெற்று விளங்கிய மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் ஞானக் கல்வியை போதித்து வந்த பெரிய ஷம்சுத்தீன் வலீ அவர்களிடம் கல்வி கற்றார்கள்.

அச்சமயத்தில் தான் அதிராம்பட்டிணத்தில் இருந்து வந்து மஹ்தூம் ஷெய்கு அப்துல் காதிர் சின்னீனா லெப்பை என்ற இளவலும் ஷம்சுத்தீன் வலீ அவர்களிடம் வந்து கல்வி கற்றார்கள்.


ஷெய்கு சுலைமான் நாயகம் பஃதாதிலிருந்து காயல்பட்டணம் வந்து ஷெய்கு அஹ்மத் ஜலாலுத்தீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள். பைஅத் பெற்ற நாளிலிருந்து வணக்க வழிபாடுகளிலேயே தங்களது நேரத்தை கழித்து வந்தார்கள். ஒருநாள் எஜமான் ஷெய்கு சுலைமான் நாயகம் ஒரு அலுவலாக, ராமேஸ்வரம் சென்றபோது அங்கு ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்மணியை கண்டார்கள். அவர்களின் பெயர் பாத்திமா. அப்பெண்மணியின் தந்தையிடம் சென்று, "நான் உங்களின் மகளின் கருவறையில் ஐந்து முத்துக்கள் இருப்பதை காண்கின்றேன். அவை என் மூலம் வெளிவர உதவி செய்வீர்களா?" என்று கேட்டார்கள். அதைக் கேட்ட அப்பெண்ணின் தந்தை, "நீங்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஷெய்கு சுலைமான் நாயகம், நான் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சத்தில் வந்த ஸதக்கத் நெய்னாரின் மகன், எனது பெயர் ஷெய்கு சுலைமான். எனது ஊர் காயல்பட்டணம்" என்று கூறினார்கள். 


இதனை செவிமடுத்த அவர், எந்த மறுமொழியையும் கூறாமல் தனது மகள் பாத்திமாவை இவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். அவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள் பிறந்தனர். 5 பேர்களும், இஸ்லாத்தின் 5 தூண்கள் போன்று விளங்கினார்கள்.. இறைநேசர்களாக திகழ்ந்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..!


ஹழ்ரத் ஷெய்கு சுலைமான் நாயகத்தின் 5 மணி முத்துக்கள்..


• அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ.

• அஷ்ஷெய்கு ஷியாபுத்தீன் வலீ.

• அஷ்ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் வலீ நாயகம்.

• அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ.

• அஷ்ஷெய்கு ஸலாஹுத்தீன் வலீ.


இவ் ஐவரும் சிறு வயதிலேயே கராமத்தை நிகழ்த்தினார்கள். இதனை கண்ணுற்ற தந்தை சுலைமான், "இப்போது நீங்கள் ஏனைய சிறுவர்கள் போல் இருக்க வேண்டும்" என்று கூற, அதிலிருந்து அவர்கள் கராமத்தை வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொண்டார்கள்.


(இன்ஷா அல்லாஹ், இவர்களின் வரலாற்றுக் குறிப்புகள் அடுத்தடுத்து தொடர்களில் வரும்..)

 

ஷெய்கு சுலைமான் நாயகம் நலமாக இருக்கும் போது, "நான் நாயகம் வபாத்தாகிய மாதத்தில் தான் வபாத்தாவேன்" என்று பல தடவைகள் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப, ஷெய்கு சுலைமான் நாயகம், ஹிஜ்ரி 1079ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 19 செவ்வாய்க்கிழமை காலையில் வபாத்தானார்கள். அவர்களின் பொன்னுடல் காயல்பட்டிணம் மரைக்கார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


தொகுப்பு : மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ


23.12.2025