السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 09

 


*திருக்குர்ஆன் விளக்கம்* 

•••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* 

ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

              தொடர்: 9


وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ


2- 8 இன்னும்,மனிதர்களில் சிலர் அல்லாஹ்வையும் , இன்னும், இறுதி நாளையும் ஈமான் கொடண்டதாகக் கூறுகின்றனர், இன்னும், அவர்கள் ஈமான் கொண்டவர்கள் அல்ல!

••••••••••••••••••••••••••••••••


தொடர்பு: 

 

1- இதற்கு முன்னுள்ள திருவசனங்களில் சுத்தமான முஃமின்களையும், சுத்தமான காபிர்களையும் பற்றிக் கூறப்பட்டன; இப்போது நாவில் முஃமினாகவும், மனதால் காபிராகவுமிருக்கும் முனாபிக்குகளைப் பற்றிக் கூறப்படுகின்றது, இவர்கள் இருபக்கமும் வாலாட்டுபவர்கள், ஆகவேதான் இவ்விருவருக்கும் பின் இவர்களைப் பற்றிக் கூறப்படுகின்றது, இருபக்கத்திலு

முள்ளவற்றைப் புரிந்து கொள்ளு - ம் போதுதான் நடுவிலிருப்பதை அறியமுடியும்.  


2-. இதற்கு முன் வெளிப்படையான காபிர்களைப் பற்றிக் கூறப்பட்டது, இப்போது ஒளிந்திருக்கும் காபிர்களைப்பற்றிக் கூறப்படுகின்றது, ஒளிந்திருக்கும் காபிர் வெளிப்படையான காபிரை விட அதிகம் ஆபத்தானவர்கள், ஆகவேதான் அவர்களைக் கடைசியாகக் கூறப்பட்டது.


இறங்கிய காரணம்:

••••••••••••••••••••••••••••••••••••


"உபை இப்னு கலப்" என்பவர் அப்போதைய யத்ரிப் மக்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்கவராகக் கருதப்பட்டிருந்தார், இவரை அவர்களுக்குத் தலைவராக முடிசூட இருக்கும் தருணத்தில் தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினத்துல் முனவ்வரா போய்ச் சேர்ந்தார்கள்; நபியவர்களின் வருகைக்குப் பின், அங்குள்ள மக்கள் இஸ்லாத்தில் கவரப்பட்டனர்; ஆகவே, உபையின் மதிப்பு சரிந்தது; அவர் தலைவராக வேண்டும் என்ற கனவும் கலைந்து போனது; இதனால்அவர் ஆத்திரமடைந்தார்;  


தனது வெஞ்சத்தை மனதில் மறைத்துக் கொண்டு இரு தரப்பாருடனும் சகஜமாக நடந்து தனக்கென ஒரு கூட்டத்தைத் திரட்டி கொண்டார்; இக்கூட்டத்தை "முனாஃபிக்குகள்" என்று கூறப்படுகின்றது; இத் திருவசனம் இவர்கள் விடயத்தில் இறங்கியது; இவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அன்று படுமோசமான சண்டாளர்களாகத் திகழ்ந்தார்கள்; இதைத் தொடர்ந்து வரும் திருவசனங்கள் மூலமாக இவர்களின் பண்புகள், மாய்மாலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.


விளக்கம் - தப்ஸீர் -


றப்புத்த ஆலா முஸ்லிம்களின் பண்புகளில் நான்கு திருவசனங்களையும், காஃபிர்கள் தொடர்பாக இரு திருவசனஙகளையும் இங்கு இறக்கினான், ஆனால், முனாபிக்குகளின் குறைகளை பதின்மூன்று திருவசனங்களில் குறிப்பிடுகின்றான், ஏனெனில், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அல்லது இவர்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதனாலாகும்,  


முஸ்லிம்கள் இவர்களை இலகுவில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகளவான இவர்களின் அடையாளங்களைக் குறிப்பிடுகின்றான், அல்லது, இவர்கள் முஸ்லிம்களோடு தொடர்பாக இருந்தார்கள், முஸ்லிம்களோடு சேர்ந்து இருந்து கொள்வார்கள், தொழுகையில் பங்கெடுப்பார்கள், ஆகவே, இவர்களின் அடையாளங்களைக் கூறுவதால் வெட்கப்பட்டு திருந்தி முஸ்லிம்களோடு முழுமையாக சேர்ந்து கொள்வார்கள் என்று ஆதரவு வைப்பதற்காக இருக்கலாம்.


இத்திருவசனத்தில் ஈமானின் இரு விடயங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. 


1- அல்லாஹுத்த ஆலாவைப் பற்றி


2- கியாமத்நாளைப்பற்றி


இவை இரண்டும் ஈமானிய விடயங்களின் இரு ஓரங்களாகும், 

முனாபிக்குகள் ஈமானின் அனைத்து அம்சங்களையும் ஈமான் கொள்வதாகக் கூறுவார்கள், இதற்குள் வேதம்,, நபி உள்ளிட்ட அனைத்தும் அடங்கும், 


முனாபிக்குகளான இவர்கள் யஹூதிகள், ஏலவே இவற்றை அவர்கள் ஈமான் கொண்டுள்ளார்கள், முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக ஈமான் கொண்டதாகக் கூறிக்கொண்டு அவர்களின் இனத்தைச் சேர்ந்த காஃபிர்களிடம் சென்று நாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கூறுவார்கள், இந்த பாசாங்குக்காறர்கள் உண்மையில் "இவர்கள்முஃமின்கள் இல்லை" என்று இத்திருவசனத்தில் அல்லாஹுத்த ஆலா கூறி அவர்களின் வெளி வேஷத்தைத் தோலுரித்து காட்டிவிட்டான்..


முனாபிக் என்ற சொல் "நிபாக்" என்ற சொல்லிலிருந்து வந்தது, இதற்கான பொருள் தனியாகுவது, அவர்களின் மனமும், நாவும் தனித்தனியாக இருக்கின்றன, ஆகவேதான் இவர்களை "முனாபிக்" எனக் கூறப்படுகின்றது, 


நயவஞ்சகத்தின் வகைகள்.

--------------------------


நயவஞ்சகம் சில வகையில் உள்ளன.


1- நாவால் ஈமானை வெளிப்படுத்துதல், மனதில் முழுமையாக மறுப்பது.


2- நாவால் ஈமானை வெளிப்படுத்துவது ,ஆனால், தெளிவாக மறுக்காமலிருப்பது, இவர்களை முதப்தப் مذبذب முடிவெடுக்காமல் தடுமாற்றத்தில் இருப்பவர்ஆவார்கள்.


3- இவர்கள் வாயால் இஸ்லாத்தை உறுதிப்படுத்துவார்கள், மனதால் உண்மைப் படுத்தவும் செய்வார்கள், ஆனால், இவர்களின் மனதில் உலகத்தின் மோகம் மிகைத்திருக்கும், அதனால், உலகத்தின் பயனை ஈமானை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவார்கள், உலக ஆதாயத்துக்காக இஸ்லாமிய படைக்கு எதிராக போராடுவார்கள், இஸ்லாத்தை துவம்சம் செய்வது , இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது,  


இந்த மூன்று கூட்டத்தாரும் கடுமையான காபிர்களாகும், இவர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள்.


4- சொல்லும், செயலும் ஒன்றுபோல் இல்லாதவர்கள், வாயால் ஒன்றைச் சொல்வார்கள், மனதில் வேறு ஒன்றை வைத்துக்கொள்வார்கள், இதை " தகிய்யா" என்று சொல்வார்கள், இது ஷீஆ பிரிவினரின் முக்கியமான ஓர் அடிப்படைக் கோட்பாடாக இருக்கின்றது, இதுவும் முனாபிக்குகளின் ஒரு வழியாகவே இருக்கின்றது, இது உண்மையான ஈமானியக்கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறானதாகும், சாதாரண புரிதல் உள்ள எந்த நபரும் இதை ஒரு நல்ல செயலாகக் கருத மாட்டார்கள்.


ஹதீஸ் ஷரீஃபில் சில செயல்களையும் "நிஃபாக்" என்று கூறப்பட்டுள்ளது. ஓர் அறிவிப்பில் முனாஃபிக்களின் சில அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன:


1-பேசினால் பொய் பேசுவான், 


 2- எவருடனாவது தர்க்கம் செய்தால், தூஷணிப்பான் ,  

3- வாக்களித்தால் பூரணமாக நிறைவேற்ற மாட்டான், 


4- நம்பிக்கைக்கு மோசடி செய்வான், 


 இது செயல் சார்ந்த நயவஞ்சகம்,தவிர அகீதா சார்ந்த நயவஞ்சகமல்ல, 

2- தங்களை முஃமின் என்று வாயால் கூறிக்கொண்டு மனதில் குப்றியத்தான அகீதா வை வைத்திருக்கும் அனைத்து இயக்கங்களும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்பதை இத்திருவசனம் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது, வெறுமனே தன்னை முஃமின் என்பதால் ஒருபோதும் ஈமான் உண்டாகப் போவதில்லை.


3- முனாபிக்குகளை. من الناس "மனிதர்கள் நின்றும்" என்று இத்திருவசனத்தில் கூறப்பட்டுள்ளது, இவர்கள் கோலத்தில் முஸ்லிம்கள்; மனித பண்புகள், பூரணங்களை விட்டும் ஒழிந்தவர்கள்; எவரையாவது (பஷர்) மனுஷன் என்று மொட்டையாக கூறுவது அவரின் சிறப்புக்கள், பூரணங்களை மறுப்பதாக அமையும்; ஆகவே தான் நபிமார்களை 'பஷர்' சாதாரண மனிதன் என்று கூறுவதை 'குப்று' என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது;  

நபிமார்கள் விடயத்தில் சாதாரணமாக அவர்களை " மனிதர்"என்று கூறுவது அவர்களின் தகுதியைக் குறைத்துக் கூறுவதாக இருக்கும், இவ்வாறு கூறுவது காஃபிர்களின் வழக்கமாகும்.


தப்ஸீர் : கஸாயினுல் இர்ஃபான்.


4- வெளிப்படையான காபிர்களை விட, முனாபிக் மிகக் கெட்டவன் என்பதை இத்திருவசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது, இதற்கு சில காரணங்கள் உள்ளன.


1- காபிர் என்பவர் காபிர் மட்டும்தான்.ஆனால் , முனாபிக், காபிரும், துரோகியுமாவான்.


2- காபிர் மனிதனைப் போன்றவன், முனாபிக் ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியைப் போன்றவன்.


3- காபிர் என்பவர் காபிர் மட்டும்தான், முனாபிக் காபிரும், பொய்யனுமாவான்.


4- காபிர் கலப்பில்லாத காபிர் மட்டும்தான், முனாபிக், காபிரும், இஸ்லாத்தைக் கேவலப்படுத்துபவனுமாவான்


.ஆகவே, 

முனாபிக் காபிரை விட தரம் கெட்டவனாவான்.