மௌலவி. ஹாஜா முஹ்யித்தீன் (மஹ்ழரி)
நரைமுடி அல்லாஹ்வின் பிரகாசத்தின் வெளிப்பாடு என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் நவின்றுள்ளார்கள். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நரை முடியைக் கண்டதும் யாஅல்லாஹ் என்ன இது? வித்தியாசமாக இருக்கின்றதே! என்று கேட்டதற்கு, இது எனது பிரகாசம் என்று இறைவன் இயம்பினான். அல்லாஹ்வில் அதிகமான அன்பு வைத்திருந்த நபியவர்கள். அப்படியாயின் என் முடியனைத்தையும் வெண்மை யானதாக ஆக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான்
முடியில் வெண்முடிகளை பிடுங்குவது, கத்தரிப்பது உள்ளிட்டவைகளை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் தடுத்தார்கள். ஒருவர் தன் நரை முடியைப் பிடுங்குவது கத்தரிப்பது மக்றூஃ என்று ஷரீஅத் தடை செய்கின்றது.
நரைமுடி வயோதிபத்தை பறைசாற்றும் ஓர் அடையாளம், அதனால் வயோதிபத்தை ஒத்துக் கொள்ள வயோதிபவனும் கூட முன் வருவதில்லை. அனைவரும் இளவல்களாக இனம் காட்டவே விரும்புகின்றனர். அதற்காக நரை முடியை மறைப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தனர். சிலர் சாயம் பூசி வாலிபத்தை உறுதி செய்தனர். வேறு சிலர் மருதோண்டி போன்றவைகளைப் பூசி நிறத்தை மாற்றுவர். இதுபோன்று வேறு வேறு வழிகளில் முடியின் வெண்மையை மறைப்பதற்கு வழி தேடுவர்.
குறிப்பாக யூதர்கள் கறுப்பு சாயத்தை விரும்பினர். அது அவர்கள் வழக்கமாகவும், அடையாளமாகவும் ஆகி விட்டது. நஸாறாக்கள் ஈஸா அலைஹிஸலாத்தை பின்பற்றியவர்கள். இவர்கள் துறவறத்தை தேர்ந்தனர். அதில் அதிக ஈடுபாடு காட்டியவர்கள் தங்களை வயோதிபவனாக காட்டிக் கொள்வதற்காக “கெந்தகம்” போன்றவைகளைப் பூசி முடியை வெண்மையாகக் காட்டுவர்.
நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் இவ்விருவரின் செயல்பாட்டையும் வெறுத்தார்கள். எச்சந்தர்ப்பத்திலும் யஹூதி, நஸாறாக்களைப் பின்பற்றாமல் தனித்துவமாக செயல்படுவதையே விரும்பினார்கள்.
அதனால் முடிக்கு கறுப்பு சாயம் பூசுவதையும், கெந்தகம் போன்றவைகளைப் பூசி முடியை வெண்மையாக்குவதையும் வெறுத்தார்கள். மீறி செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்கள். இதனை பின்வரும் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.
01. ஹளரத்அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை குஹாபா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாடி முடி பூரணமாக வெண்மையாக இருந்ததை கண்ணுற்ற காத்தமுன் நபியவர்கள் ஏதாதொன்றினால் நிறமாற்றம் செய்யுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹுமா)
நூல் : அஹ்மத் - முஸ்லிம், நஸாஈ, இப்னுமாஜா
02. நரை முடியின் நிறத்தை மாற்றுங்கள். கறுப்பு நிறத்தின் பக்கம் நெருங்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அகஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்னத் அஹ்மத்
03. கடைசி காலத்தில் சில மனிதர்கள் புறாவின் இறக்கையைப் போல் கருஞ்சாயம் பூசுவார்கள்.
இவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் இப்னு, அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம்
காட்டுப் புறாக்களின் வால்பகுதி கருமையாக இருக்கும். அதனால், தாடிக்கு புறாவின் வாலை ஒப்புவமை கூறினார்கள். நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்.
04. கறுப்பு சாயம் பூசுபவர்களை மறுமையில் அல்லாஹுத்தஆலா பார்க்கவே மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னுஸஃது ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு (முர்ஸல்)
05. மஞ்சள் முஃமீனின் சாயம், சிவப்பு முஸ்லினின் சாயம், கறுப்பு காபிரின் சாயமாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : தப்றானி, முஃஸமுல்கபீர், ஹாகீம், முஸ்தத்றக்
06. நரைமுடி (அல்லாஹ்வின்) பிரகாசமாகும். (நூர்) யார் நரை முடியை பிடுங்குகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பிரகாசத்தை பிடுங்கியவராவார். முதன் முதலில் நரை முடிக்கு மருதோண்டியால் சாயமிட்டவர் நபி இப்றாஹீம் அலைஹிவசல்லமாகும். முதன் முதலில் தாடிக்கு கறுப்பு சாயம் பூசியவன் பிர்அவ்ன் ஆகும்.
அறிவிப்பவர் : ஹளரத் அனஸ்பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தைலமி, இப்னு நஜ்ஜார்
நன்றி : புஷ்றா இதழ் 02 மார்ச் 2006