
வஹ்ததுல் வுஜுத் என்றால் என்ன?
.
மார்க்கம் என்பது இஸ்லாம் (ஷரீஅத்), ஈமான் (அகீதா), இஹ்ஸான் (தரீக்கத்) இவை மூன்றும் சேர்ந்ததுதான் மார்க்கம்.
.
இஹ்ஸான் என்று சொல்லக்ககூடிய தரீக்கத்தை இறைவன் எமக்கு வழங்கிய காரணம் தன்னை அறிந்து தன் ரப்பை (இறைவனை) அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.
.
தரீக்கத்துடைய ஞானவான்களான ஸுபியாக்கள் இந்த தரீக்காக்களின் (ஆன்மீக கல்லூரிகள்) மூலம் ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளங்களை திக்ர் பயிற்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தி மனிதன் தன்னை அறிந்து தன் ரப்பை அறிந்து, இறைவன் ஒருவன் என்ற தௌஹீதை உள்ளத்தின் மூலம் உணர வைப்பதற்காகவே தரீக்காக்களை (ஆன்மீக கல்லூரிகளை) உருவாக்கினார்கள்.
.
ஏனெனில் இஹ்ஸான் என்பது கற்கும் அறிவல்ல உணரும் அறிவு. இதனால்தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், தான் இறைவனை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வில் வணங்குவது அல்லது இறைவன் தன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவது. (ஸஹிஹுல் புகாரி)
.
இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் இஹ்ஸான் என்பது உணரும் அறிவு என்று.
.
இப்போது விடயத்திற்கு வருவோம், வஹ்ததுல் வுஜுத் என்றால் உள்ளமை ஒன்று அதாவது இறைவன் ஒருவன் என்பதை அறிந்து உணரும் கல்விக்கே வஹ்ததுல் வுஜுத் என்று கூறப்படும்.
.
வஹ்ததுல் வுஜுத் பற்றி அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏராளமாக இருக்கிறது. அதன் விளக்கங்களை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள முடியாது. அவைகளை ஆன்மீக ஆசிரியர் (Spiritual Master) ஒருவர் மூலமாகவே அறிந்துக்கொள்ளலாம்.
.
அதாவது (Heart to Heart) ஒரு உள்ளத்தில் இருந்து இன்னொரு உள்ளத்திற்கு என்ற முறையில் பெற்று உணரும் அறிவாகும் (கல்வியாகும்).
.
இன்று இதை அறியாத சில அறிவிலிகள் வஹ்ததுல் வுஜுத் வழிகேடு, ஷிர்க் என்று கூறியும் அந்த கல்வியை போதித்த, போதிக்கின்ற ஞானவான்களை காபிர், முர்த்தத் என்று பத்வா கொடுத்து கடைசியில் இவர்களே காபிர்களாக மாறுகிறார்கள்.
.
இந்த கல்வியை இவர்கள் எதிர்ப்பதற்கு காரணம் என்னவென்றால் ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிறது. இஸ்லாத்தை அழிக்க வந்த ஸியோனிச கூலிப்படைகளின் நோக்கமே இஸ்லாத்தில் இருந்து ஆன்மீகத்தை துடைத்தெறிய வேண்டும்.
.
அவர்களுக்கு தெரியும் ஆன்மீகம் இல்லாத சமுதாயத்திற்கு வெற்றி கிடைக்காது என்று.
.
ஷிர்க்கில் வாழும் வஹாபிகள் வஹ்தத்துல் வுஜூதை எதிர்ப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால் சில முஸ்லிம்கள் குறிப்பாக தரீக்கவை சேர்ந்த ஒரு சிலரும் அதை எதிர்க்கிறார்களே ஏன்? என்று நீங்கள் கேட்கலாம்.
.
அதற்கு காரணம் நாம் மேலே கூறியதுதான். அதாவது ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிறது.
.
இன்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்டதற்கு காரணம் வருடம் ஒரு முறை கந்தூரி கொடுக்கவும், மௌலித் ஓதவும், கொடி ஏற்றவும், உரூஸ் கொண்டாடவும் இதற்காக தான் தரீக்காக்கள் இருக்கிறது என்று நினைத்து அறியாமையில் வாழ்கிறார்கள்.
.
தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்ட நோக்கமே உள்ளமை ஒன்று மற்றவையன்று என்ற உணர்வை பெற்றுக்கொள்வதற்காக வேண்டிதான்.
.
அதேநேரம் இந்த கந்தூரிகள், மௌலித்கள், உரூஸ் போன்ற நற்காரியங்கள் மூலம் நல்லடியார்களின் நெருக்கத்தை பெற்று அவர்களின் துஆ பாரக்கத்தை பெற்று இந்த ஆன்மீக அறிவை அதிகரித்து இறை நெருக்கத்தை அடைந்துகொள்ளதான் இந்த நற்காரியங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
.
நோக்கமில்லாத அமல்கள் எதுவும் இல்லை. அனைத்தும் ஒரு நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கம் தான் படைத்தவனை அறிவதற்காக.
.
ஆனால் இன்று நமது சமுதாயத்தில் நோக்கம் இல்லாமல் சடங்கிற்காக அமல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
.
இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. அதுதான் இன்று நமது சமுதாயத்தில் காமிலான ஷெய்குமார்கள் மிகவும் குறைந்து வருகிறார்கள். அதனால் இந்த ஆன்மீக கல்வியை போதிக்க சிலருக்கு தெரியாதனாலும், தகுதி இல்லாதனாலும் இவைகளை போதிப்பதில்லை. தன்னுடைய மாணவர்களுக்கு ஷரீஅத்தை மட்டும் பின்பற்றினால் போதும் என்று இவர்கள் உபதேசிப்பதனால் அந்த மாணவர்களும் அப்படி ஒன்று இல்லை என்று நினைத்து ஆன்மீக கல்வியை நிராகரிக்கிறார்கள்.
.
இன்னும் சில இடங்களில் வஹாபிகள் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் தரீக்காக்களில் உட்புகுந்து கலீபாக்களாகவும், முகத்தம்களாகவும், உஸ்தாதுகளாகவும் இருக்கிறார்கள். இவர்களின் மூலமும் இந்த கல்வி சமுதாயத்தில் இருந்து துடைத்து எறியப்படுகிறது.
.
இன்று நம் சமுதாயத்தில் தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) எதற்காக உருவாக்கப்பட்டது என்று கூட தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. ஆன்மீக அறிவு உயர்த்தப்படும்.
.
மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை அறியாமல் வாழ்வது வீண். நோக்கத்தை அறியாமல் வாழ்ந்தால் தோல்வி ஏற்படும்.
.
மார்க்கத்தை சரியாக பின்பற்றாமல் இருப்பது வேறு விடயம். ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவிய ஒன்றை அது மார்க்கத்தில் இல்லை, அது வழிகேடு என்றும், அந்த கல்வியை போதிக்கும் ஞானவான்களை காபிர்கள், வழிகேடர்கள் என்று தூற்றுவது உங்களை காபிராக்கி விடும் கவனம்.
.
உங்களுக்கு ஒன்றை பற்றிய அறிவு இல்லை என்றால் மௌனமாக இருங்கள். மார்கத்தில் உள்ளதை இல்லை என்று வஹாபிகளை போல் சொல்லி முர்த்தத் ஆகி விடாதீர்கள்.
.
அதற்கு பதிலாக அதிகமாக இஸ்திக்பார் செய்து இறைவனிடம் இறைஞான அறிவை தரும்படியும், ஒரு காமிலான ஷெய்கை வேண்டியும் துஆ கேளுங்கள். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியை காண்பிப்பான்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பெயரில் அதிகமாக பாத்திஹாக்கள், ஸலவாத்துகள் ஓதி வாருங்கள். ஒரு காமிலான ஷெய்கை தேடி அடைந்து இந்த கல்வியை கற்று அல்லாஹ்வை அறியும், அடையும் இந்த ஞானத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
.
இறுதியாக எமது ஆன்மீக ஞான ஆசிரியரின் வார்த்தையுடன் நிறைவு செய்கிறோம்.
ஒரு மனிதன் தன்னையும் தன் நாயனையும் அறிவதற்கு துணை செய்யும் அறிவே உண்மையான அறிவு. இந்த அறிவு பெருமையை உண்டாக்காது. பணிவையும், அடக்கத்தையும் உருவாக்கும்.
.
“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
.
அல்லாஹ் இந்த அறிவு ஞானத்தை நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன்.
mail of islam