அல்லாஹ்வின் கருணை:
குப்பைகளைச் சேகரிப்பவரின் தியாகமும், ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதியும்!
-ஜும்ஆவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.
பொருள் தேடும் பேராசையில் உழலும் இந்த உலகில், உள்ளதை ஈந்து, இறைவனின் கருணைக்கு சாட்சியாக மாறிய ஒரு நெகிழ்ச்சிமிகு நிகழ்வு இது.
ஒரு ஏழை மனிதர் தன் ஐந்து ஆண்டு உழைப்பை பள்ளிவாசலுக்காகத் தியாகம் செய்ய முன்வர, அது அவருக்குப் பன்மடங்கு அருளாகத் திரும்பிய அற்புதமான கதை!
அன்று ஒரு வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்கான நேரம்...
ஒரு பள்ளிவாசலின் இமாம் அவர்கள், தொழுகைக்குப் பின் ஓர் அறிவிப்பைச் செய்தார். "உள்ளே வந்த நீங்கள் அனைவரும் நிழலில் அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆனால், வெளியிலே எண்ணற்றோர் வெயிலின் தாக்கத்தில் சிரமப்பட்டுத் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
ஆகவே, உங்கள் அனைவராலும் இயன்ற பொருளாதார உதவியை இந்த பள்ளிவாசலுக்கு அளித்தால், அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பெரிய ஷெட் (கூரை) அமைக்கலாம். அதன் மூலம் அவர்களும் வெயிலில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்" என்றார்.
- ஓர் அழுக்குச் சட்டையும், கிழிந்த உடையும்!
இமாம் பேசி முடித்து, தொழுகையும் நிறைவுற்றது. அப்போது பள்ளிவாசலின் முஅத்தின் (பாங்கு சொல்வோர்) அருகில் ஒருவர் வந்தார்.
கிழிந்துபோன சட்டை, பல இடங்களில் ஓட்டை விழுந்த மனைவி அணிந்திருந்த துணி, காலில் செருப்பு இல்லை... அழுக்கும் கிழிசலுமாக இருந்த அந்த மனிதர், இமாமைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
முஅத்தின் தயக்கத்துடன், "ஏன்? எதற்காக? ஏதாவது உதவி கேட்டு வசூல் செய்ய வந்திருக்கிறாயா?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், நிதானமாக, "இல்லை, நான் வசூல் கொடுக்க வேண்டியிருக்கிறது" என்று பதிலளித்தார்.
முஅத்தின் அதிர்ச்சியில் உறைந்துபோய், உடனே ஓடிச் சென்று இமாமை அழைத்து வந்தார்.
- ஐந்து வருடக் கனவு, ஒரே நொடியில் தியாகம்!
இமாம், அந்த மனிதரின் நிலையைப் பார்த்ததும், "என்ன விஷயம்?" என்று பரிவுடன் விசாரித்தார்.
"இமாம் அவர்களே! நீங்கள் பள்ளிவாசலில் அறிவித்ததை நான் செவிமடுத்தேன். அந்த செட் அமைக்கும் செலவினத்திற்காகப் பணத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் அந்த ஏழை.
இமாம் வியந்துபோய், "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர் அளித்த பதில் நெஞ்சை உலுக்கியது: "நான் தெருவோரங்களில் கிடக்கும் குப்பைகளைப் பொறுக்கி, அதை விற்றுப் பிழைக்கிறேன். என் மனைவி, குழந்தைகளும் என்னுடனே இருக்கிறார்கள்.
என் மனைவி ஆசைப்பட்டபடி, குழந்தைகளுக்காக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஐந்து வருடங்களாகச் சேமித்து வைத்திருக்கிறோம்."
"ஆனால், நீங்கள் ஜும்ஆவில் அறிவித்தவுடன் என் மனைவி கூறினார்: 'வீட்டை விட பள்ளிவாசல் மிக முக்கியம். வாருங்கள்! நாம் சென்று அந்தப் பணத்தைப் பள்ளிக்குக் கொடுத்து விடலாம்' என்று.
அதன்படியே, எங்களுடைய சேமிப்பான இரண்டரை இலட்சம் ரூபாயை இந்தச் சாக்கில் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறி, அந்தச் சாக்கை இமாமிடம் நீட்டினார்.
- நிர்வாகத்தின் பாடம்!
இமாம் சட்டென்று அந்த மனிதரை உட்கார வைத்து, டீ, தண்ணீரெல்லாம் கொடுத்தார்.
உடனடியாகப் பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைத்தார்.
அவர்களைப் பார்த்து இமாம் கூறினார்:
"இதோ, இந்த மனிதர் தெருவில் வாழ்ந்து வருகிறார். குப்பை பொறுக்கி விற்றுச் சேமித்த இரண்டரை இலட்ச ரூபாயைப் பள்ளிக்குக் கொடுக்க வந்திருக்கிறார். இப்போது நீங்கள் எல்லாம் எவ்வளவு தரப் போகிறீர்கள்? பள்ளிவாசலுடைய செட் போடுவதற்கு இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார்.
உடனே, பள்ளியின் தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்று அந்த இடத்திலேயே, ஏழையின் பங்குக்குச் சமமாக, இரண்டரை இலட்ச ரூபாயை வசூல் செய்துவிட்டனர்.
- கருணை ஒரு ரூபாய், வெகுமதி பத்து ரூபாய்!
பிறகு இமாம் அவர்கள், நிர்வாகம் கொடுத்த இரண்டரை இலட்ச ரூபாயையும், இந்த மனிதர் கொடுத்த இரண்டரை இலட்ச ரூபாயையும் சேர்த்து, மொத்தமாக ஐந்து இலட்ச ரூபாயை அந்த ஏழையிடம் நீட்டினார். "நீங்கள் உங்கள் மனதிற்கு விரும்பியபடி ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்" என்று கூறி, கட்டாயப்படுத்தி அந்தப் பணத்தை வாங்க வைத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த ஏழை மனிதர் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
"நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று நிர்வாகிகள் கேட்டபோது, அவர் கண்களில் நீர் வழியக் கூறினார்:
"உங்களைப் போல் பல பள்ளிவாசல்களில் நான் பயான் (உரை) கேட்டிருக்கின்றேன். அப்போது அவர்கள் பேசுவார்கள், 'அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஒரு ரூபாய் செலவழித்தால், அல்லாஹ் அதை பத்தாக்கித் தருவான்' என்று!
நான் அந்த வசனத்தை வெறும் கேள்விதான் பட்டேன். ஆனால், இன்று அது என் கண்முன்னே உண்மையாகி விட்டது! அதை நினைத்துதான் நான் அழுதேன்."
இந்தக் கருணைமிகு காட்சியைப் பார்த்த பள்ளி நிர்வாகிகளும் கண்கலங்கினர். அல்லாஹ்வின் கருணை எவ்வளவு மிகப்பெரியது என்று அனைவரும் வியந்துபோக, அந்தத் தியாகியை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.
ஆம்! உள்ளதை உண்மையாக ஈந்து, இறைவனுக்காகத் தியாகம் செய்யும் உள்ளங்களை, அவன் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதற்கு, இந்தக் குப்பைகள் சேகரிப்பவரின் தியாகமும், ஐந்து இலட்ச ரூபாய் வெகுமதியும் ஒரு வாழும் சான்றாக அமைந்தது!
நன்மைக்குக் குறைந்தபட்சம் பத்து மடங்கு வெகுமதி வழங்கப்படும் என்பதைப் பின்வரும் வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது:
திருக்குர்ஆன், அத்தியாயம் 6 (அல்-அன்ஆம்), வசனம் 160:
"எவர் ஒரு நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதுபோன்ற பத்து மடங்கு (நற்கூலி) உண்டு. எவர் ஒரு தீமையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அத்தீமைக்குச் சமமான அளவுக்கே அன்றி கூலி கொடுக்கப்பட மாட்டார்.
அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்."
முகநூலில் வாசித்ததில் பிடித்தது.
ஒரு சில வார்த்தைகள் மாற்றங்களுடன்.







