தொகுப்பு: மௌலவீ MHM. ஹன்ஸாத் ரப்பானீ
மஜ்தூப் ஷெய்ஹ் அப்துர்ரஹ்மான் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
(1506 – 1568).
இவர்களை பற்றிய குறிப்புக்கள்: رباعيّات سيدي عبد الرحمن المجدوب என்ற கிதாபில் இடம்பெற்றுள்ளது.
இவர்களினுடைய முழுப்பெயர் அபு முஹம்மது அப்துர்ரஹ்மான் இப்னு அய்யாத் இப்னு யஃகூப் இப்னு ஸலாமா இப்னு கஷ்ஷான் அஸ்-ஸன்ஹாஜி அல்-பஃரஜி அத்துக்காலி ஆகும்,
அப்துர்ரஹ்மான் மஜ்தூப் அவர்களின் ஆளுமையானது, ஆய்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எந்த அளவுக்கு என்றால், அவரை ஒரு குறிப்பிட்ட வகைக்குள் அடக்குவது மிகவும் கடினமாகிவிட்டது.
இவர்கள் மொராக்கோவைச் சேர்ந்த கவிஞரும், சூஃபி ஞானியும் ஆவார்கள். இவர்களுடைய பல கவிதைகளும், பழமொழிகளும் வட மொராக்கோ அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இவர்கள் ஒரு மஜ்தூப் ஆக இருந்தாலும் கூட ஒருபுறம், இவர்களை அல்லாஹ்வின் நேசர்களில் (அவ்லியா) ஒருவராகவும், இறைஞானம் பெற்ற மெய்ஞானியாகவும் (ஆரிஃபீன்) போற்றும் ஒரு பார்வை இருக்கிறது. அது மட்டும் அல்லாது இவர்களின் கராமத்துக்களும் அதிகம், அதில் ஒன்று
ஒருவன் அவர்களைத் தொடர்ந்து பரிகாசம் செய்து வந்தான். அவன், அவர்களை 'மஜ்தூப்' (இறையன்பில் தன்னை மறந்தவர்) என்று அழைப்பதற்குப் பதிலாக 'மஜ்தூம்' (தொழுநோயாளி) என்று கூறி, மிகக் கடுமையாகத் துன்புறுத்தினான்.
இந்நிலையில், ஒருநாள் இரவு மஜ்தூப் அவர்கள் அந்த மனிதனின் கனவில் தோன்றி, அவனது முகத்தில் ஊதினார்கள். அவன் காலையில் எழுந்தபோது, தொழுநோயாக மாறியிருந்தான். விரைவிலேயே அந்த நோய் அவன் உடல் முழுவதும் பரவியது. இறுதியில், அவனது குடும்பத்தினரே அவனை வெறுத்து, நகரின் ஒரு ஒதுக்குப்புறத்தில் கைவிட்டுவிட்டனர்.
இவர்களின் 'ருபாயியாத்' (நான்கு வரி செய்யுள்கள்) கொண்ட இறை ஞான பாடல்கள் மொரோக்கோ மற்றும் அதை சூழ உள்ள நாடுகளில் பிரபல்யமானவை.
பிரபல சூபியாக்களின் நூற்களில் இவர்களின் இறை ஞான பாடல்கள் இடம்பெறும். உதாரணமாக ஈகாளுள் ஹிமம் (إيقاظ الهمم في شرح الحكم )போன்ற கிதாபுகளில்.
அவற்றில் என்னை ஈர்த்த அன்னவர்களின் இறைஞான பாடல்களில் ஒன்று.
طلع النهار على القمر ******* وما بقى إلا ربي
பகல் பொழுது சந்திரனின் மீது உதித்தது;
என் இறைவனைத் தவிர வேறு எதுவும் எஞ்சவில்லை.
அதாவது இயற்பியல் ரீதியாக, இது ஒரு நடக்க முடியாத நிகழ்வு. சூரியனின் ஒளி (பகல்) வந்தவுடன், சந்திரனின் ஒளி மங்கி மறைந்துவிடும். சூரியன் சந்திரனின் மீது உதிக்காது. இந்த முரண்பாடான உருவகமே அதன் ஆழமான ஆன்மீகக் கருத்தைத் தாங்கி நிற்கிறது.(எவ்வாறு சந்திரனுக்கு சுய ஒளி இல்லையோ அதேபோல படைப்புகளுக்கும் சுயமான இருப்பு இல்லை. சந்திரன் சூரியனின் ஒளியை கொண்டு பிரகாசிக்கிறது அது போல படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் தாத்தை கொண்டு பிரகாசிக்கின்றது. அதாவது இவர்கள் அல்லாஹ்வில் பனாவாகி படைப்புகளை வெறும் மாயை என்று உணர்ந்து பாடி இருக்கிறார்கள்)
الناس زارت محمد ******* و انا اسكن لي قلبي
மக்கள் ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை சந்திக்கச் செல்கிறார்கள்; நானோ, என் உள்ளத்தையே எனக்கு இருப்பிடமாக்கிக் கொண்டேன்.
(மற்றவர்கள் நாயகத்தை பூகோள ரீதியான ஓர் இடத்தில் தேடிச் செல்கிறார்கள். ஆனால், நான் அவர்களை என் உள்ளத்திலேயே கண்டுவிட்டேன். என் உள்ளமே அவர்களை குடியிருக்கும் இடமாகிவிட்டது. எனவே, அவர்களை தரிசிக்க நான் எங்கும் பயணம் செய்யத் தேவையில்லை; என் உள்ளத்திற்குள் நான் பயணித்தால் போதும்)
طلع النهار على قلبي ******* حتى نضرته بعنيا
பகல் பொழுது என் உள்ளத்தின் மீது உதித்தது; என் கண்களாலேயே நான் அவனைப் பார்த்தேன்.
أنت دليلي ياربي ******* أنت أولى مني بيا
என் இறைவா! நீயே என் வழிகாட்டி; என்னை விட என் மீது அதிக உரிமை கொண்டவன் நீயே.
غيبت نظري في نظره ******* وفنيت عن كل فاني
அவனது பார்வையில் என் பார்வையை நான் மறைத்துவிட்டேன்; அழியக்கூடிய அனைத்தை விட்டும் நான் அழிந்துவிட்டேன்.
حققت ما وجدت غيره ******* وامسيت في حالي هاني
அவனைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நான் மெய்ப்படுத்திக் கொண்டேன்; என் நிலையில் நான் நிம்மதியாக மாலைப் பொழுதை அடைந்தேன்.
الناس قالت بدعي ******* و أنا طريقي منجورة
மக்கள் இது புதுமையானது (பித்அத்) என்கிறார்கள்; ஆனால் என் பாதையோ (ஞானிகளால்) செதுக்கப்பட்டதாகும்.
إذا صفيت مع ربي ******* العبد ما منه ضرورة
என் இறைவனுடன் நான் தூய்மையாகிவிட்டால், (வேறு எந்த) அடியானின் தேவையும் இல்லை.
النور طالع يتلألأ ******* من قبة العربي الأمجد
அந்த ஒளி உதித்துக்கொண்டே மின்னுகிறது; மேன்மைமிகு ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கப்ரின் உச்சியிலிருந்து.
خليتنا في ذي الحالة ******* واسبيتنا يا محمد
ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களே! இந்த நிலையில் எங்களை விட்டுவிட்டீர்கள்; எங்களை நீங்கள் சிறைப்பிடித்து விட்டீர்கள்!
الواقفين على زمزم ******* خلوني نروى منه
ஜம்ஜம் கிணற்றருகே நிற்பவர்களே! அதிலிருந்து என் தாகம் தீரும் வரை என்னை விட்டுவிடுங்கள்.
أحبيبنا يا مـحـمـد ******* سلطانا يا ما حنه
எங்கள் நேசரே ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களே! சுல்தானே! உமக்காக எவ்வளவு ஏங்கினோம்.
إذا نشوفك يا الأمجد ******** نصيب راحة في نفسي
மேன்மையாளரே! உங்களைக் கண்டால், என் ஆன்மாவில் நான் அமைதியைக் காண்கிறேன்.
لولا حبيبنا محمد ******** ما كان عرش ولا كرسي
எங்கள் நேசர் ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இல்லையென்றால், அர்ஷும் இருந்திருக்காது, குர்ஸியும் இருந்திருக்காது.
الحب منك ما هو لي ******* أنت الحبيب اللي نهوى
இந்தப் பேரன்பு உங்களிடமிருந்தே, என்னிடமிருந்து அல்ல; நீங்களே நாங்கள் நேசிக்கும் அன்புக்குரியவர்.
أحبيبنا يا محمد *** ** نار حبك ما لها دوا
எங்கள் நேசரே ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களே! உமது அன்பெனும் நெருப்புக்கு மருந்தேதும் இல்லை.
قلبي مولع مزلع ****** مجذوب لاش تلوموني
என் உள்ளம் காதலால் பற்றியெரிகிறது, துண்டாடப்பட்டுள்ளது; நான் ஒரு மஜ்தூப் (இறைக்காதல் பரவசத்தில் உள்ளவன்), ஏன் என்னைப் பழிக்கிறீர்கள்?
الله يا ربي مولاي ******** أهل المحبة فاتوني
அல்லாஹ்வே! என் இறைவா! என் தலைவா! அன்பின் மக்கள் என்னை முந்திச் சென்றுவிட்டனர்.
لا محبة إلا بوصول ******** ولا وصول إلا غالي
ஐக்கியத்தை அடையாமல் உண்மையான அன்பு இல்லை; அந்த ஐக்கியத்தின் விலையோ மிக உயர்ந்தது.
و لا شراب إلا مختوم ********* ولا مقام إلا عالي
முத்திரையிடப்பட்ட மதுவைத் தவிர (உண்மையான) பானம் இல்லை; உன்னதமான நிலையைத் தவிர (உண்மையான) நிலை இல்லை.
أهل المحبة قالولي******* إذا بلاك الله بها
அன்பின் மக்கள் என்னிடம் கூறினார்கள்: "அல்லாஹ் இதன் மூலம் உன்னைச் சோதித்தால்,
راه مقامها عالي غالي ******* أهل الكتب حارو فيها
நிச்சயமாக இதன் நிலை மிக உயர்ந்தது, விலைமதிப்பற்றது; வேதங்களின் அறிஞர்களே இதில் திகைத்துவிட்டனர்.
من لامني في نار الحب ******* نبيع له يشري مني
காதல் நெருப்பில் மூழ்கியதற்காக யார் என்னைப் பழிக்கிறானோ, அவனுக்கு நான் இதை விற்கிறேன், அவன் என்னிடமிருந்து வாங்கட்டும்.
نبيع له بيع المحتاج ********* و إذا جرب يعذرني
ஒரு தேவையுடையவன் விற்பதைப் போல் நான் விற்கிறேன்; அவன் இதை அனுபவித்துப் பார்த்தால், (என் நிலையை உணர்ந்து) என்னை மன்னித்துவிடுவான்.
مجذوب ما ناشي مجنون ******** غير الأحوال اللي بيا
நான் மஜ்தூப் (பரவச நிலையில் உள்ளவன்), பைத்தியக்காரன் அல்ல; என்னில் இருக்கும் நிலைகள் தான் காரணம்.
انظرت في اللوح المحفوظ ******* والسابقة سبقت ليا
லவ்ஹுல் மஹ்ஃபூலில் நான் பார்த்தேன்; எனக்கான விதி முந்தியே எழுதப்பட்டு விட்டது.
إذا قريت علم الأوراق ********* حد حلاوته في لساني
நான் ஏடுகளின் கல்வியைக் (வெளிப்படையான அறிவு) கற்றால், அதன் இனிமையின் எல்லை என் நாவில் மட்டுமே இருக்கும்.
وإذا قريت علم الأذواق******** يسكن لي في كناني
நான் அனுபவ ஞானத்தின் கல்வியைக் கற்றால், அது என் உள்ளத்தின் ஆழத்தில் குடிகொள்ளும்.
القاريين علم الأوراق ********* في قلبكم مايتمرشي
ஏடுகளின் கல்வியை ஓதுபவர்களே! உங்கள் உள்ளத்தில் அது பதியாது.
قوموا اذكروا يا حماق ******* وتشلهدو النبي القرشي
அறிவிலிகளே! எழுந்து திக்ர் செய்யுங்கள்; குறைஷி குல நபியின் மீது சாட்சி கூறுங்கள்.
أنا راقد في منامي******** واهل الله وقفوا عليا
நான் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன்; அல்லாஹ்வின் மக்கள் என் மீது வந்து நின்றார்கள்.
قالوا لي قم يا النايم******* تذكر الله الدايم
அவர்கள் என்னிடம் சொன்னார்கள்: "உறங்குபவனே! எழுந்திரு! நிலையானவனான அல்லாஹ்வை திக்ர் செய்வாயாக!"
இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற சூபியாக்களின் இறை ஞானப்பாடல்கள் அடுத்த பதிவுகளில் இடம்பெறும்.
முற்றும்.