السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 2 January 2015

இறுதி நபியின் நாட்களும் விருப்பங்களும்

இறுதி நபியின் நாட்களும் விருப்பங்களும்

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியாது. நாம் வாழும் காலம் குறுகியது. என்று தெரிந்து கொண்ட பிறகும் மரணம் பற்றிய சிந்தனையையும் அதன் பிறகுள்ள நிகழ்வுகள் பற்றியும் கவனக் குறைவாக அதனை மறந்தவர்களாக மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை மரணம் வந்து சேரும் இந்த ஆத்மாவும் அதனுடைய மரண நேரம் வந்துவிட்டால் பிற்படுத்தப்படுத்தப்பட மாட்டாது. முற்படுத்தப்படவுமாட்டாது. நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கிவாதாம் இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிக்கிறவர்கள்தாம் இவ்விறை வசனங்கள் மரணத்திலிருந்து எந்தவொரு ஆத்மாவும் தப்பித்துக்கொள்ள முடியாதென்று கூறிக்கொண்டிருக்கின்றது.
அல்குர் ஆனின் 31 ஆம் அத்தியாயத்தின் 34 ஆம் வசனத்தில் எந்தவொரு ஆத்மாவும் எந்த பூமியில் மரணிக்கும் என்றும் அறிய முடியாதென்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு பின்வரும் கருத்துக்கள் மாற்றமானதாக இருப்பதாக சந்தேகிக்கத் தேவையில்லை. இந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட விடயங்களை அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் விரும்புபவர்களுக்கு தெரிவிப்பதுண்டு. அவன் தெரிவித்த அளவுக்கு அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதற்கு மேல் அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. மேலும் இறைவனால் அறிவிக்கப்பட்ட பிறகே அவர்கள் அறிவதால் இவற்றை அவர்கள் சுயமாகத் தெரிந்துகொண்டதாக கூறவும் முடியாது.
புகாரியில் 4435, 4436, 4437, 4463, 4586, 6348, 6509 ஆகிய இலக்கங்களில் பதிவாகியுள்ள நபிமொழி பின்வருமாறு நபிமார்களுடைய மரணம் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது உலக வாழ்வு மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரம்பியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்பபு வழங்கப்படாமல் எந்த இறைத் தூதுவரும் இறப்பதில்லை என்று நான் நபியுல்லாஹி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொல்ல செவியுற்றேன் என்ற அன்னை ஆயிஷா ரழியல்டலாஹு அன்ஹா அன்னவர்களின் அறிவிப்பு நபிமார்களிடம் அவர்கள் ஆத்மாவைக் கைப்பற்றுவதற்கான உத்தரவைப் பெற்றதையடுத்தே அவர்கள் யாவரும் மரணிக்கின்றார்கள் என்ற செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறது.
இன்னும் வானவர் ஜிப்ரீல் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இரண்டு முறை ஓதச் செய்தார்கள். என் வாழ் நாள் முடியும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதைக் கருதுகின்றேன் என தன் புதல்வி பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களிடம் கூறியதாக புகாரியின் 3624 ஆம் இலக்கத்தில் பதிவாகியுள்ள நபிமொழி நபிமார்களுக்கு அவர்களின் வாழ் நாள் முடியும் நேரம் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றது என்ற தகவலைத் தந்து கொண்டிருக்கிறது.
ஸபர் மாத இறுதி வார நாட்களில் ஒருநாள் உம்முல் முஃமினீன் அன்னை மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் இரவு வேளையில் தன் அடிமை ஒருவருடன் ஜன்னதல் பகீஃ அடக்கஸ்தளத்திற்குச் சென்று அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக தூஆப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்பும்போது நபியவர்களுக்கு காய்ச்சலும் தலை வலியும் ஏற்படத் துவங்குகிறது. இதுவே நபியவர்களுக்கு ஏற்பட்ட இறுதி நோயாகும் என்பதனை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் தன் மகளார் பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கு அதனை அறிவித்துக் கொடுத்திருந்ததாக பின் வரும் நபி மொழி கூறுகிறது. அதாவது
நபியுல்லாஹ் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எந்த நோயில் இறையடி சேர்ந்தார்களோ அந்த நோயில் தம் மகள் பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களை அழைத்து எதையோ இரகசியமாக அவர்களிடம் கூறினார்கள். இது பற்றி உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வினவியதற்கு தனக்கு ஏற்பட்டிருந்த நோயின் வலியிலேயே தாம் மரணிக்க இருப்பதாக நபியவர்களின் மரணத்தின் பின்னர் கூறியிருந்தார்கள். புகார் 3626.
அத்துடன் தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களில் நீங்கள்தான் என்னை முதலில் வந்தடைபவர் என்று தம் மகளாரிடம் கூறியதாகவும் புகாரியின் 3624 ஆம் இலக்க நபி மொழி அறிவித்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களின் வேதனை அதிகரித்த போது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் மற்ற துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி அளித்தார்கள். புகார் 4442. இவ்வாறு அன்னை ஆயிஷா நாயகியாரின் இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு விரும்பிய காரணம் என்னவென்றால் அவர்கள் அவ்வீட்டில் இருக்கும் சமயத்தில் மரணிப்பதை விரும்பியிருந்தார்கள். அதாவது நபிமார்கள் தாம் விரும்பு இடத்தில் மரணிக்கவும் அடக்கம் செய்யப்படவும் சந்தர்ப்பம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
நபிமார்கள் எந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட விருப்பம் கொண்டார்களோ அவ்விடத்தில் அன்றி வேறொரு இடத்தில் அவர்கள் உயிரை அல்லாஹ் கைப்பற்றுவதில்லை என்று நபியவர்கள் கூற நான் செவியேற்றிருக்கின்றேன். அறிவிப்பாளர் நபித் தோழர் ஹழ்ரத் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு நூல் திர்மிதி.
மறுவுலகப் பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் விழாயக் கழமை அன்றுதான் வருத்தம் அதிகரித்தது. அன்றைய தினம் தான் யாக வெளியில் சமூகமளித்து ழுஹர் தொழுகையினைத் தொழுவித்துச் சென்றார்கள். பின்னர் வெளியே வெளியேறியவதில்லை. இறுதியாக இறையடி சேர்ந்த திங்கள்கிழமை தோழர்களெல்லாம் ஸித்தீக்குல் அக்பர் நாயகத்தின் தலைமையின் கீழ் ஜமாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கையில் தன் வீட்டின் திரையினை நீக்கி தொழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு வீட்டுக் கதவுக்கு திரையிட்டுக் கொண்டது போல் இவ்வுலக வாழ்க்கைக்கும் அன்றைய தினத்தின் அஸர் தொழுகையின் பின்னர் திரையிடடுக் கொண்டார்கள். இன்னாலிலல்லாஹி வஇன்னா ,லைஹி ராஜிஊன்.
திங்கள் கிழமை அன்றுதான் தொழுது கொண்டிருக்கையில் பெருமானாரின் அருள் நிறைந்த வதனத்தை இறுதியாக நான் காணும் பாக்கியம் பெற்றேன் என்ற கருத்தின் அடிப்படையிலான நபிமொழியினை நபித் தோழர் அனஸ் ரழியல்டலாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி 681
வியாழக் கிழமை அன்றுதான் வருத்தம் அதிகரித்த தகவலினை நபித் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள். அத்துடன் அந்நாளின் பெயரைச் சொன்னால் கூட அழுதுவிடுபவர்களாகவும் தோழர் அவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். புகாரி 3053.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிறந்தது திங்கள் கிழமை நபியவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்தது. திங்கள் கிழமை மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வறாவிற்கு ஹிஜ்ரத் சென்றதும் திங்கள் கிழமை. மதினாவுக்குள் நுழைந்ததும் திங்கள் கிழமை. அவ்வாறே மரணித்ததும் திங்கள் கிழமைதான் என நபித் தோழல் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் அறிவிப்பு முஸ்னத் அஹ்மத்தலாயிலுந் நிபுவ்வதி ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இறையடி சேர்ந்த பிறகு அவர்கள் அணந்திருந்த ஆடைகள் நீக்கப்படாது குளிப்பாட்டப்பட்டார்கள். நபித் தோழிர்களான அலி இப்னு அப்பாஸ்,உஸாமா பின் ஸைத் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர் நபியவர்களின் திருவுடலை குளிப்பாட்டி வைத்தார்கள்.
யமன் மற்றும் நஜ்ரான் பிரதேச போர்வையினால் கபனிடப்பட்டார்கள். கூட்டமாக ஒரு இமாமின் பின்னால் நபிகளாரின் ஜனாஸாத் தொழுகை இடம் பெறவில்லை. பின்னர் புதன் இரவு அண்ணலாரின் மண்ணறையில் போர்வை விரிக்கப்பட்டு அவர்கள் பரிசுத்த திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெருமானாரின் கப்ரில் போர்வை விரிக்கப்பட்ட தகவல் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளுங்கள். முஷ்ரிகீன்களை அரப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்துங்க்ள. யூத நஸாராக்கள் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித்களாக வணங்கும் தளங்களாக அமைத்து கொண்டதற்காக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகடடுமாக! தொழுகையை நிலை நாட்டுங்கள். உங்கள் கட்டுப்பாட்டின் கீபுள்ளவர்களை மதியுங்கள் ஆகிய விடயங்களை அடிக்கடி கடின வேதனையிலும் ஞாபகமூட்டுபவர்களாக அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். எனவே அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் ஏவல் விளக்கல்களுக்கு முழுமையான அடிபணிந்த வாழ்வதுடன் அவ்விரண்டிற்கும் முரண்படாத மாற்றமில்லாத விடயங்களைச் செய்திடும் சிறந்த சமுதாயத்தினை உருவாக்க உழைப்போமாக.
ஏறாவூர் அபுத் தூபா
அல் ஜாமிஅத்துல் அkஸிய்யா
விருதோடை