السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 24 April 2024

அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி

 


காத்தான்குடி வாழும் மகான் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் 


இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு பிரதான காரணம் இந்த பதிவின் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் சில தினங்ளாக அதிகளவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதை அவதானித்துடன் அப்போது சில வளர்ந்து வரும் இன்றைய இளைய சமூகத்தினர் இந்த இடம் காத்தான்குடியில் எங்கு உள்ளது , இவ்விடத்திற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு , இவ்விடத்தின் சொந்தக்காரர் யார், காத்தான்குடி வரலாற்றில் இவ்விடத்தின் முக்கியத்துவம் என்ன? மற்றும் இவ்விடம் காத்தான்குடி முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின போன்ற பல கோள்விகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தமையுமாகும். எனவே இச்சிறு கட்டுரை அதற்கான ஓரளவு தெளிவை தரும் என என்னுகிறேன்.


இவ்விடம் காத்தான்குடியில் எங்கு அமையப்பெற்றுள்ளது


குழந்தையும்மா கபுரடி என அழைக்கப்படும் இவ்விடம் நபி (ஸல்) அவர்களுடைய பரம்பரையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்களும் அவர்களின் குடும்பதை சேர்ந்த 24 சாதாத்மார்கள் வாழ்ந்து இவ்வுலகை விட்டுப்பிரிந்து மண்ணரைவாழ்வுக்கு சென்ற இடமாகும்.


இவ்விடம் காத்தான்குடி பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) பள்ளிவாயலை சூழ உள்ள பகுதியாகும். இதன் பரப்பளவு வரலாற்று ரீதியாக அராய்கின்ற போது மிக விசாலமுடையதாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதாவது பின்பக்கமாக (கடற்கரை பகுதி) உமர் ஷரீப் பள்ளிவாயல் வரை இதன் பரப்பளவு நீண்டு செல்வதுடன் இவ்விடம் எமது முன்னோர்கள் மற்றும் மௌலானா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இப்பாரம்பரிய சொத்து பின்வந்த அவர்களது பரம்பரையால் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. துரதிருஷ்டவசமாக இன்று அவர்களுடைய மக்பரா உள்ள பகுதி மாத்திரமே இன்று எஞ்சியுள்ளது.


இவ்விடத்தின் சொந்தக்காரர் யார்?


மண்ணறைகளில் உயிர்

வாழும் காத்தான்குடி கபுறடியில்

சமாதி கொண்டிருக்கும் அஹ்லுல்

பைத்துக்களில் "அஸ்ஸெய்யித்

அப்துல் காதிர் பெரிய மௌலானா (ரழி)

அவர்களே இவ்விடத்தின் சொந்தக்காரர் ஆவார்கள் 


 இவர்களது வம்ச பரம்பரையினர் “ஹழர” மௌத்தைச்சேர்ந்த நாயகம் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலில் நின்றும்உள்ளஅஹ்துல்பைத்தைச்சேர்ந்தவர்களாவார்கள். இவர்களின் பரம்பரையைப் பற்றி "மவ்லிதுஸ் செய்யித் அப்துல் காதிர் பாரி"எனும் கிரந்தத்தில் கசாவத்தைஆலிம் புலவர் (றஹ்) அவர்கள்குறிப்பிடும்போது ''செய்யித் செய்னுல் ஹழ்ரமிய்யி (ரஹ்) " அவர்களின் மகன் செய்யித் உமர்மௌலானா பாரிய்யில் பாஅலவிய்யி(ரஹ்) ஆவார்கள். அவர்களது புதல்வர் தான் செய்யிதினாஉஸ்தாதுனா செய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா (ரழி) அவர்கள் என குறிப்பிடுகின்றார்.


மௌலானா அவர்கள் பல்காமம் என அழைக்கப்பட்ட வெலிகாமத்தில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 1271 ஸபர் மாதம் பிறை 21ல் காத்தானி என்றழைக்கப்பட்ட காத்தான்குடியில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் வபாத்தாகி 172 வருடங்களா கின்றன.


தரீக்கத், ஹகீகத் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய மௌலானா (வலி) அவர்கள் அலவியத்துல் காதிரிய்யஹ் ''தரீக்கஹ்வின் ஷெய்கு நாயகமாக இருந்து தன்னை நாடி வரும் முரீதீன்களுக்கு பைஅத் (தீட்சை) வழங்கினார்கள்."அலவிய்யதுல் காதிரிய்யஹ் தரீக்கஹ்வின்" செய்கு நாயகமாக தான் விளங்குவதற்கான காரணத்தை அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா (வலி) அவர்கள் விளக்குகையில் அஷ் ஷெய்கு அஹ்மது இப்னு அப்துல்லாஹ் பாபகீஹ்(ரஹ்) மூலமாகவும், அவர்கள் அஸ்ஸெய்யிது ஷெய்குல் ஜிப்ரி(ரலி) குத்பின் மூலமாகவும். இந்தத் தரீகத்தைப் பெற்றார்கள். என குறிப்பிடுகிறார்கள். பெரிய மௌலானா (வலி) அவர்கள் தக்- ஷீர் உடைய அறிவில் மிகவும் சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் "பைஅத்" பெற்றவர்களில் அக்குறணையில் சமாதிகொண்டிருக்கும் கசாவத்தை ஆலிம் புலவர்(ரஹ்) அவர்கள் குறிப்பிடதக்கவராவார்கள்.


செய்யித் அப்துல் காதிர் மௌலானா அவர்களுக்கு முஸ்தபா, யாஸீர், அஹ்மது. சக்காப் என நான்கு புத்திரர்கள் இருந் தார்கள். அஸ்செய்யித் முஸ்தபா மெளலானா அவர்களின் மகன் செய்யித் செய்னுதீன் என்பவராகும். இவர்களே ஸெய்ன் மௌலானா என அழைக்கப்பட்டார்கள். தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சம்மாந்துறைக்கருகில் மாவடிப்பள்ளி எனுமிடத்தில் சமாதி கொண்டிருக்கிறார்கள்.


ஸெய்ன் மௌலானா தைக்கஹ் என்ற பெயரில் காத்தான்குடியில் ஒரு பள்ளி வாயல் அமைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா (வலி ) அவர்களின் பேரப்பிள்ளையே செய்ன் மெளலானா என்பவர்களாகும்


இவர்களுடைய இஸ்லாமிய அகீதாவை பொருத்தவரை கலிமாவிற்கு தூய விளக்கம் வழங்கியவர்களாக திகழ்கின்றார்கள். அதாவது ஒரு மனிதனை 24 மணி நேரமும் இறை சிந்தனையில் வைத்திருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் மெய்ப்பொருள் ஒன்றே எனும் வஹ்ததுல் வுஜூத் இறை ஞானத்தை உலகறியச் செய்யும் பணியை அயராது மேற்கொண்டார்கள்.


இவ்விடத்திற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடன் கூடிய தொடர்புள்ள ஒரு நாடாக ஏமன் நாட்டை காண்கின்றோம். ஏமன் நாடு பெருமைக்குரிய ஒரு நாடு அது பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் அவர்களால் புகழ்ந்துறைக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் எடுத்துக் கூறுகின்றன.


இதன்படி ஏமன் நாட்டவர்கள் இலங்கை வரலாற்றுடன் முக்கியமான மூன்று விடயங்களில் தொடர்புபட்டுள்ளவர்களாக உள்ளனர்.


 இலங்கைக்கு ஆதியில் பெருமளவு வர்த்தகத்தை கொண்டு வந்ததுடன் இலங்கையின் முக்கியத்துவத்தை சகல நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தியவர்கள். (இலங்கைக்கு பாரசீகர்கள் ,ரோமர்கள், கிரேக்கர்கள்) என்று எத்தனையோ நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து போய் இருப்பினும் இலங்கையுடன் இரண்டறக் கலந்தவர்கள் அரபியர்கள் மாத்திரமே


இரண்டாவதாக இலங்கைக்கு வந்து குடியேறிய அராபியர்கள் முஸ்லிம்களுள் அதிக தொகையினர் 


மூன்றாவது இலங்கைக்கு இஸ்லாத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கை வகித்தவர்கள்.


இதில் மூன்றாவது பகுதியின் படியே பல வலீமார்கள் இலங்கைக்கு வந்ததுடன் குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்திற்கும் வருகை தந்துள்ளனர்.

உ-ம்

நொச்சி முனையில் உள்ள கபுறுஸ்தானமும் மட்டக்களப்பு கோட்டை முனையில் உள்ள கபுறுஸ்தானமும் குறிப்பிடப்படல் வேண்டும் . இப்பெரியார்கள் இலங்கையின் கிழக்கு கரைக்கு வருகின்ற போது இவர்கள் வந்த கப்பல் உடைந்து மூழ்கியதில் இவர்களும் இறந்து விட்டார்கள் என்றும் ,அன்றிரவு காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு பெரியாரின் கனவில் தோன்றி இந்தச் செய்தி சொல்லப்பட்டதாகவும் இவரும் மற்றவர்களும் கனவில் சொல்லப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்த போது குறித்த நொச்சிமுனை கோட்ட முனை ஆகிய இடங்களில் இரண்டு ஜனாஸாக்களும் கரை ஒதுங்கி இருக்கக் கண்டு அவர்களுக்குச் சொல்லப்பட்ட படி அதே இடங்களில் அந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுவதுடன் இவர்கள் இருவரும் ஏமன் தேசத்தை சேர்ந்தவர்களாகும்.


அதேபோல் காத்தான்குடியில் அடங்கப்பட்டுள்ளஅஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்களும் ஏமன் நாட்டின் ஹழரமௌத் எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே


எனவே காத்தான்குடியில் அமையப்பெற்றுள்ள இவ்விடம் ஏமன் தேசத்திற்கும் இலங்கைக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டுவதாக அமைவதுடன்‌ குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்களின் இருப்பு வரலாற்று ரீதியாக தொன்மையானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.


காத்தான்குடி வரலாற்றில் இவ்விடத்தின் முக்கியத்துவம் என்ன?


வரலாற்று ரீதியாக நாம் இவ்விடத்தை நோக்குகின்ற போது காத்தான்குடி சமூக, அரசியல் ,பொருளாதார மற்றும் சமய ரீதியான விடயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.


சமூக ரீதியாக நோக்குகின்ற போது முந்தைய காலத்தில் கடற்கரை பிரபல்யமடையாமல் இருந்ததால் மௌலானா கபுரடி மைதானம் சாதாரண பொதுமக்கள் மற்றும் கல்விமான்கள் என பலரும் மாலை வேளையில் அணி அணியாக அல்லது சிறு குழுக்களாக ஒன்று கூடி ஊர் சமூக சார் பிரச்சனைகளை கலந்துரையாடி மாற்றுத்தீர்வகளை பெரும் பிரதான இடமாக திகழ்ந்தது.


அரசியல் ரீதியாக நோக்குகின்ற போது

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடாத்தும் இடங்களில் மிகப் பிரதானமான மௌலானா கபுரடி மைதானம் அமைந்ததுடன் பிரபலமான அரசியல் வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்த இடமாகவும் திகழ்ந்தது.

உ-ம். பதியுதீன் மஹ்மூத் , பாரூக் சின்னலெப்பை


பொருளாதார ரீதியாக நோக்குகின்ற போது

மௌலானா கபுரடியை சூழ‌உள்ள பகுதியில் ‌அதிகளவான கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை காத்தான்குடி பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்ததன.


குறிப்பாக இக்கடைதத் தொகுதிகள் ஒன்று பொழுதுபோக்கிற்காக ஒன்று கூடும் மக்களின் தேவையை‌ கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டன.


அடுத்து கந்துரி மற்றும் மீலாத் விழாக்களை மையப்படுத்தியும் பல தெருவொர அங்காடி உருவாக்கப்படன. இக்கடைகளின் மூலம் காத்தான்குடி மக்கள் மாத்திரமன்றி அதை சூழ உள்ள பிரதேசங்களான படுவாங்கரை ,காங்கனோடை , பாலமுனை, கொக்கட்டிச்சோலை போன்ற பிரதேச மக்களும் பொருளாதார ரீதியாக பயனடைந்தனர்.


காத்தான்குடியிருப்பு

கனதூரம் என்றிருந்தேன்

கப்பலுக்குச் சுக்கான்

கயிறிழித்தாற் போலிருக்கு


அப்பம் சுடும் காத்தான்குடி

அவலிடிக்கும் காரைதீவு

முட்டி தூக்கும் சம்மாந்துறை

முகப்பழக்கம் நிந்தவூரு


குழந்தை உம்மா கபுறடிக்கு

கூட்டு வண்டி எறிவந்து

கந்தூரி குடுப்பேன் அல்லவா

எங்கட கஷ்டம் எல்லாம் தீருமெண்டா


காத்தான்குடி வாழும் 

கருணை உள்ள குழந்தை உம்மா

பிள்ளையொண்டு கிடச்சிதெண்டால்

புருசனுடன் நான் வருவேன்.


தொடரும்....


M.L Lathfan Rosin

University of Peradeniya