السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 3 April 2024

சூபி நாயகம் குப்பியாவத்தை

 



இலங்கை ஏட்டின் புகழாரம்:

****************************

 

    இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் நாளேடான தினகரன் 'ஆலமுல்இஸ்லாம்' பகுதியில் ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் மறைந்த நாற்பதாம் நாள் கத்முல் குர்ஆன் விழாவினையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது.அக்கட்டுரையில் ஈழத்தில் ஷெய்குனா அவர்கள் ஆற்றிய அரும் பணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சுருக்கம்இதோ:

    

  பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்'; என்ற இறை வசனம் நீங்கள் அறியாதவராக இருந்தால் இறைதியான சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வீர்களாக! என்ற பொருள் தருவதை உணர்ந்த எண்ணற்ற முஸ்லிம்களால் 'ஷெய்க்'; என்றும் 'ஸூபிஹலரத்' என்றும் அழைக்கப்பட்ட பெரியார் மௌலானா மௌலவி அல் ஆலிமுல் பாஜில் அல்ஹாஜ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரி காஹிரி நக்ஷபந்தி அவர்கள்!

   

  தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு முன்னைய காலங்களில் சன்மார்க்க விஜயம் செய்து இஸ்லாமிய சமயப் பணியாற்றி இந்த நாட்டில் இஸ்லாமிய உணர்வு தழைத்தோங்க வழிகோலிய மார்க்க உலமாக்களை நாம் மறக்க முடியாது. அத்தகைய சாலிஹான சமயப் பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இந்த ஸூபி ஹஸரத் குறிப்பிடத் தகுந்த ஒருவராவார்.


    தற்காலத்தில் நம்மவர் நடுவே இஸ்லாமிய சமயப் பணியாற்றி மெஞ்ஞான வழியின்பால் இஸ்லாமிய இதயங்களை ஈர்த்து சமய உணர்வு பேரின்பமாகப் பெருகியோட வழி சமைத்து நம்மவர் நடுவே வாழ்ந்து மறைந்தவர் இந்த ஸூபி ஹஸரத்தாகும்.

   

   நம் நாட்டு அரசியலில் பங்கேற்றுள்ள சகல கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட நம் இலங்கை சமுதாயத்தின் சகல துறைகளையும் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சாதாரணமானவர்கள் என்று பலர் இப்பெரியாரின் மார்க்க உபன்னியாச பயானில் ஈர்க்கப்பட்டு இந்த ஷெய்கிடம் முரீது பெற்று ஞான சிஷ்யர்களாகத் திகழ்வதை மறுக்க முடியாது. மேமன்பாய் சமூகத்து சகோதரர்கள் இப்பெரியாரை 'பீர்பாபா' என்று பேருவகையுடன் அழைக்குமளவிற்கு அவர்களிடம் இப்பெரியாருக்கு பெரு மதிப்பு இருந்தது.

    

   தப்லீக் என்றால் என்ன? தப்லீகின் தாத்பரியம் யாது? அதன் ஸ்தாபகர் யார்? ஸ்தாபகரின் கொள்கை யாது? நபி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தப்லீக் யாது? அதற்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கு மிகத் துணிவாகவும் ஆதாரப்பூர்வமான நிறுவுதல்களுடனும் விளக்கம் தந்த ஒரே பெரியார் இந்த ஸூபி ஹஸ்ரத்தான் என்றால் அதை விருப்பு வெறுப்பற்ற விஷயம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

    

  இவர் தன் முரீதுகளுக்கு வழங்கி வந்த ஞானப் பயிற்சி சொல்லுந்தரமன்று. வாராவாரம் ஹிஸ்புல்லாஹ் ஸபையினர் நாடெங்குமுள்ள ஸூபி மன்ஸில்களில் நடத்தி வரும் ராத்திபு – திக்று மஜ்லிஸ்கள் பல நூறு இதயங்களை ஞான வழியின்பால் ஈர்த்து முரீதீன்களாக்கி வருவது குறிப்பிடத் தக்க அம்சமேயாகும்!

ஷெய்குனா அவர்களைக் குறித்து இலங்கை ஏடு சூட்டியுள்ள புகழாரம் இது!

 

   உண்மையாம் மார்க்கத்தின் தூய கொள்கையெனும் வித்துக்களை சமுதாய மக்கள் தம் உள்ளப் பரப்பில் விதைத்து செழித்து வளர வைத்து உயரிய வாழ்வு ஈருலகிலும் பெறத்தக்க வழி சமைத்துத் தந்த – மாறுபட்ட கொள்கைகளில் வேறுபட்டவர்களின் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு சுட்டிக் காட்டி – அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையினை சிறப்பாக விளக்கித் தந்த எங்கள் ஷெய்குனா 

  

   சத்தியத்தின் பேரொளியாய் நின்றுலவி 

 சகலோர்க்கும் நல்வழி புகட்டிய 

 சத்தான சன்மார்க்க சீலர்

 ஷரகின் வழி நின்ற தீரர்.

  

    இன்று புற வாழ்வில் நம்முடன் இல்லை! ஆயினும் மகோன்னதம் மிக்க அந்த மாமேதை அவர்களால் வகுத்துத் தரப்பட்ட நெறி முறைகள் நம் முன் இருக்கின்றன!

 

பூ ரத மனதில் புகழ் இறை

பொங்கிய அருட் சுனையை

நா ரதம் ஏந்தி

நயமுடன் தந்தவரே!

சாந்தமும் சத்திய வேத நன்னூலின்

சாறும் கலந்ததனை

எமக்கீந்தவரே!

  

 எம் இனிய ஷெய்குனா! நுங்கள் வழியில் அயராது நாங்கள் உழைத்துய்ய எல்லா அருளும் பெற்றிட வல்லான் இறையிடம் உங்களை வஸீலாவாக்கி வேண்டுகிறோம்!

  

  அருளாளன் அல்லாஹ் ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நம் பிழைகள் பொறுத்து வகையான வாழ்வினை ஈருலகிலும் ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.


ஷெய்குனா அவர்களின் கலீபாக்கள்:-


1. மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் H.N.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி மலேஷியா வாப்பா அவர்கள்


2. மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள்


3.மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள்


4. மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்


5. மௌலானா மௌலவி ஹனீபா ஆலிம்(இலங்கை) அவர்கள்


ஆகியோரை தங்களது கலீபாக்களாக நியமித்துச் சென்றார்கள்.


நூல்: ஸூபி ஹழ்ரத் நினைவு மலர்