السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 14 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ﷺ} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ﷺ} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ﷺ} அவர்களுக்கு அறிவித்தான்.
நபி {ﷺ} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ﷺ} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.
உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ﷺ} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே! ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!” என்று கூறினார்கள்.
அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.
உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
விவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.
கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.
குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.
உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.
மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )
தொடரும்..........


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

Tuesday 13 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 213

meelad competition 2018
மீலாதுன் நபி ( ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது.....
அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா (ரலி) அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி {ﷺ} அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர் (ரலி) தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா (ரலி) தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் (ரலி) அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா (ரலி) அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி {ﷺ} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்கள். ( முஸ்னத் அஹ்மத் )
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபி {ﷺ} அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் “ நபி {ﷺ} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ”நபி {ﷺ} அவர்கள் ஒரு நாள் எங்களிடம் மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள். அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம் செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும் காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி {ﷺ} நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள். ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத் )
தொடரும்.......

meelad competition 2018

Monday 12 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை 
தொடர்கிறது.......
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி – அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள் வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்
இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய மேலீட்டால் ”இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்” என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
மாநபி {ﷺ} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து “உஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை” என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ). )
உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )
தொடரும்.......


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

Sunday 11 November 2018

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை

வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ﷺ} அவர்கள்.
வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ﷺ} அவர்கள்

நபி (ﷺ) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ﷺ) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி (ﷺ) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.  இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்து விட்டு விடை பெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.  நபி (ﷺ) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் வந்து சந்தித்தார். அவரை நபி (ﷺ) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்றுச் சென்ற போது “என்னிடம் ஏதாவது கேளுங்கள்!”  என்று நபி (ﷺ) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.

”அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன்” என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.

அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ﷺ) கேட்ட போது,  ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்

அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை,  தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே!  இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ﷺ) அவர்கள்:  “அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது.

அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள் “இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்” சொன்னார்கள்.

 சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்? என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்? எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் புனித உடல் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

     ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

தொடரும்.......



மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

கொசு (நுளம்பு) தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.
மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது.
அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.
அது என்ன வசனம் தெரியுமா? إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ 
இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

Saturday 10 November 2018

அன்பளிப்பு பொருட்கள்

                          அன்பளிப்பு பொருட்கள்    உத்தியோகத்தர்களுக்கு ஆகுமானதா?

அரச நிறுவனங்களில் கடமை புரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் சேவை பெறுனர்களிடம் இருந்து அன்பளிப்பு பொருட்களையோ வேறு உதவிகளையோ பெற்றுக்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு, நடைமுறைகளோடு இணைந்த நடுநிலைப் பார்வை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பொதுவாக இஸ்லாம் அன்பளிப்பு வழங்குவதை வரவேற்கின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட அன்பளிப்பை தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாவது ஒரு பொறுப்பிலே நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் சேவைபெறுனர்களின் அன்பளிப்பு பொருட்களை பெறுவது கூடாது என பின்வரும் நேரடி ஆதாரங்களை மையப்படுத்தியும் வேறு சில துணை விடயங்களை மேற்கோள் காட்டியும் குறிப்பிடுகின்றனர். அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்த போது இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்னர் நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்து திரும்பி) வந்து இது உமக்குரியது இது எனக்குரியது என்று கூறுகிறாரே அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே அவருக்கு அன்பளிப்பு வழங்கப்டுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் அது மாடாக இருந்தால் அல்லது ஆடாக இருந்தால் கத்திக்கொண்டிருக்கும் என்றார்கள். பிறகு அவர்களின் அக்குளின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தம் கைகளை உயர்த்தி நான் எடுத்து உரைத்து விட்டேனா? என்று மும்முறை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி - 7174)

ஸகாத் வசூலிப்பவர்களுக்கென பிரத்தியேகமான கூலியை இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற போது அன்பளிப்பு எனும் வகையில் உதவிகளை பெற்றுக்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இமாம் புகாரி அவர்கள் இந்த ஹதீஸிற்கு தலைப்பிடும் போது அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள் என தலைப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பிட்ட கடமைக்காக அமர்த்தப்பட்டிருப்பவருக்கு அவருடைய வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது அன்பளிப்புகளை பெற்றுக்கொள்வதை நேரடியாகவே தடைசெய்யும் விதத்தில் மேலுள்ள ஹதீஸ் காணப்படுகின்றது.

2. மேலும் இவ்வாறான அன்பளிப்பு பொருட்களையோ சேவை பெறுனர்களின் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகளையோ பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நிருவாக ரீதியான சீர்கேடுகளும் நடுநிலை தன்மையும் இஸ்லாம் கூறும் சமத்துவமும் சீர்குலைவதற்கான சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. (குறித்த நபருக்கு விஷேட சலுகைகள் வழங்கப்படலாம், முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புண்டு, ஓழுங்கு வரிசை மீறப்பட இடமுண்டு, இரகசிய தகவல்கள் குறித்த நபருடன் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பங்களுண்டு)

3. நபி (ஸல்) அவர்கள் தவறுகள் தொடர்பாக கூறும் போது எது உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதுதான் தவறு எனக்கூறினார்கள். இவ் அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் அதனை பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டமாட்டார்கள் என்பது மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளை உண்மைப்படுத்துவதாக அமைகின்றது.

4. நபி (ஸல்) அவர்கள் ஹராமா? ஹலாலா? எனும் சந்தேகமான விடயங்களையே தவிர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள் என்றால் இது போன்ற தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களில் எந்தளவு கண்டிப்பாக இருந்திருப்பார்கள் என்பதனை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

5. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு வெகுமதிகள் வழங்க வகுப்பு ரீதியாக மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகியல் சட்டங்களே இதனை தடைசெய்கிறது எனில் அல்லாஹ்வின் சட்டங்கள்?

எனவே, அறிஞர்களின் இத்தீர்பினையும் அதற்கான ஆதாரங்களையும் அவதானிக்கின்றபோது இது இறையச்சத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாகவே தென்படுகிறது. எனவே எம் கரங்களை முடியுமானவரை தூய்மைப்படுத்தி மறுமையில் வெற்றிபெற்ற கூட்டமாக மாறுவதற்கு முயற்சிப்போம். நற்பணிகளில் இணைந்தே செயற்படுவோம்.

ஜே.எம்.சியாப்
அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Friday 9 November 2018

தூக்கணாங்குருவி

மஹர் கொடுக்குமாம் இந்த தூக்கணாங்குருவி.....

ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது.

உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா ?

கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.

இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை, மழை நீர் உள்ளே இறங்குவதில்லை.

தூக்கனாங் குருவியின் இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான
கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.

கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும்
 (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும்.

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. பின் கூடு முழுமையடையும்,.

பெண் தூக்கனாங் குருவியானது ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து இனப் பெருக்கம் செய்யுமாம்.

சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. சாதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.

பறவைகளை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்...

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும்பறவைகளும்
உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
(அல்குர்ஆன் : 6:38)

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
(அல்குர்ஆன்-67:19)

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209
ல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஒரு சபையில் “எனக்கு சுவனம் காட்டப்பட்டது அப்போது அதில் நான் நுழைந்தேன். எனக்கு முன்னால் யாரோ ஒருவர் நடந்து செல்லும் காலடி சப்தத்தை நான் கேட்டேன். அப்போது நான் நடந்து செல்வது யார்? என்று கேட்டேன். அது ருமைஸா பிந்த் மில்ஹான் (ரலி) என்று கூறப்பட்டது” எனக் கூறினார்கள்.
உலகில் வாழும் காலத்திலேயே சுவனத்தின் சோபனத்தைப் பெறும் பேறு பெற்ற அப்பெண்மனி நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம் என்று வரலாற்றில் அறியப்படுகிற அனஸ் (ரலி) அவர்களின் தாயார் ருமைஸா பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
மிகச் சாதாரணமாக இப்பேற்றை அவர்கள் பெறவில்லை. இஸ்லாமிய வாழ்வில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு தியாகங்களை மேற்கொண்டார்கள்.
எனினும், வரலாற்று ஆசிரியர்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடும் போது “அவர்கள் பேசினால் அறிவார்ந்த முறையில் பேசுவார்கள். பேச்சின் துவக்கமும், முடிவும் உயர்ந்த இலக்கை நோக்கியதாக அமைந்திருக்கும். அல்லாஹ்வும், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற பேச்சையே அவர்கள் பேசுவார்கள்.” என்று கூறுவார்கள்.
ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாக்கியசாலி. இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத இவர்களின் கணவர் மாலிக் பின் நஜர் உம்மு ஸுலைம் அவர்களிடம் கோபித்துக் கொண்டு ஷாமிற்குச் சென்று விட்டார்.
இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவர் இறந்தும் விட்டார். இப்போது, அபூதல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்ய விரும்புவதாக தூது அனுப்பினார்.
அபூதல்ஹாவை நேரில் வரவழைத்த உம்மு ஸுலைம் அவர்கள் அவரிடம் “அபூதல்ஹாவே! உம்மை திருமணம் செய்யும் விஷயத்தில் எமக்கும் உளப்பூர்வமான ஆசை உண்டு. ஆனால், நான் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், நீங்களோ இறை நிராகரிப்பாளராக இருக்கின்றீர்கள். இந்நிலையில் என்னை நீங்கள் திருமணம் செய்வதற்கு சாத்தியமே இல்லை.
அபூதல்ஹாவே! நீங்கள் என்றாவது உங்கள் கடவுளர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா? நீங்கள் வணங்குகின்ற கற்சிலையின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்ந்ததுண்டா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எங்கோ ஒரு நிலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பாறையை இன்ன கோத்திரத்தைச் சார்ந்த ஒரு ஹபஷீ அடிமையான ஒரு சிற்பியல்லவா சிலையாக வடித்திருக்கின்றான்?
நீங்கள் அதைப் போய் தெய்வமாக, காக்கும் கடவுளாக வணங்குகின்றீர்களே? எந்தச் சக்தியும் இல்லாத, எந்த வலிமையும் கொண்டிராத இந்த கல்லுக்கு முன்னால் தலைசாய்த்து வணங்குகின்றீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அபூதல்ஹா தவறென்பது போல் ஆம் என்று தலையசைத்தார்.
மீண்டும், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ”என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் அந்த அசுத்தத்திலிருந்து மீண்டு, பரிசுத்தமான இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு முகாந்திரமே இல்லை” என்று திட்ட வட்டமாகக் கூறி அனுப்பி வைத்தார்கள்.
உம்மு ஸுலைம் அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை துளைத்தெடுத்திருக்க வேண்டும். மூன்று நாள் கழித்து உம்மு ஸுலைம் (ரலி) அவர்களைச் சந்தித்து தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
ஆம்! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அபூதல்ஹா (ரலி) அவர்கள். அடுத்து அவர்களைத் திருமணம் செய்ய வேண்டும். மஹர் கொடுக்கக் கூட வழியில்லாத வறியவராக விழி பிதுங்கி அபூதல்ஹா (ரலி) நின்ற போது உங்கள் ஷஹாதா கலிமாவையே நான் மஹராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி நெகிழச் செய்தார்கள்.
( நூல்: உஸ்துல் காபா, தபகாத் இப்னு ஸஅத் )
இஸ்லாமிய வரலாற்றில் கலிமா ஷஹாதாவையே மஹராகப் பெறும் பாக்கியம் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு மாத்திரமே கிடைத்தது.

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம்

ருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம்

  கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்....!!!

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:--

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்...!!

மௌலவி அ.முஹம்மது கான் பாகவி அவர்கள்

ருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம்



Thursday 8 November 2018

தவறு செய்தவர்களோடு தாஹா நபி

கண்ணியமிக்க முஸ்லிம்களே.!

    தவறு செய்தவர்களோடு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பழகுகிற பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

    ஒருமுறை இளைஞர் ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு அந்நியப் பெண்ணோடு தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இதை அந்த வழியாக வந்த பெருமானார் பார்த்துவிட்டார்கள். என்ன ஹவ்வாப், இங்கே என்ன பண்றீங்க? யா ரசூலல்லாஹ்! என்னுடைய ஒட்டகம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடி வந்தேன்னு "பொய்" சொல்லிவிட்டார். இவர் கூறியது பொய் என்று ரசூலுக்கு தெரியாமலா இருக்கும்?

    அதன்பிறகு, நபியவர்கள் என்னை பார்க்கும் நேரமெல்லாம் காணாமல்போன ஒட்டகம் கிடைத்துவிட்டதா? எனக் கேட்கலானார்கள். இன்னும் கிடைக்கவில்லை நாயகமே! ஒரு பொய்தான். அதற்கு பின்னாலே மறுபடியும் மறுபடியும் பொய்.

    ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, எனக்கு ஒரு பெரிய பே (கெட்ட) நஸீபாகிப் போச்சு. ரசூலின் பார்வையிலிருந்து மறைந்து வாழ ஆரம்பித்துவிட்டேன்?! நபியை பார்த்தால்தானே கேட்பார்கள். நாம நிர்பந்தமாக பொய் சொல்லனும். முனாபிக்கள் மட்டும்தான் எங்கள் காலத்திலே நபியவர்கள் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் பின்னால் ஸஃப்பில் வந்து சேர்வார்கள். நபி ஸலாம் வாங்கியவுடன் ஓடிவிடுவார்கள். இந்த வேலையை சிறிது காலம் நான் செய்துகொண்டு இருந்தேன்னு சொல்றாங்க.

    என்னால் நிம்மதியாக தொழ முடியவில்லை. நபியை பார்க்க முடியவில்லை. என் வாழ்நாட்களில் துர்பாக்கியமான நாட்கள் அந்த நாட்கள். அல்லாஹ்விடம் துஆ செய்தேன், யா அல்லாஹ்! என்னை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டுவந்துவிடு என்று.

    ஒருநாள் மஸ்ஜிதுன் நபவியின் பக்கம் வந்தேன். ஜமாஅத் தொழுகையில்லாத நேரம். இன்றைக்காவது  நிம்மதியாக தொழுவோம் என்று தக்பீர் கட்டித் தொழ ஆரம்பித்தேன். நபியவர்கள் என் பக்கத்திலே வந்து அமர்ந்துகொண்டார்கள். நான் தொழுகையை நீட்டினேன். நீ எவ்வளவு நீளமாக தொழுதாலும் நான் அந்தக் கேள்வியை கேட்டுவிட்டுத்தான் போவேன்னு சொல்லிட்டாங்க!


    தொழுகையை முடிவிற்கு கொண்டுவந்து ஸலாம் வாங்கியவுடன், அந்தக் காணாமல் போன ஒட்டகம் என்னதான் ஆச்சுப்பா?ன்னு கேட்டாங்க. யா ரசூலல்லாஹ்! அல்லாஹ்வின்மீது சத்தியமாக அப்படியொரு ஒட்டகமே இல்லை. இதோடு விட்டுவிடுங்கள் நாயகமே. நான் பொய் சொல்லிவிட்டேன்.

    அதற்கு நபி என்ன சொன்னார்கள் தெரியுமா? ஹவ்வாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்றாங்க, "நபி சிரித்தார்கள்." அவ்வளவுதான் சிரித்துவிட்டு வெளியே போய்விட்டார்கள். வேற ஒன்றுமே சொல்லவில்லை.

    "குற்றம் வெறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகளை அல்ல! ஷிர்க் வெறுக்கப்பட வேண்டும், முஷ்ரிக்களை அல்ல.! குஃப்ர் வெறுக்கப்பட வேண்டும், காபிர்களை அல்ல..!"

    இதைச் சொல்லிக்கொடுத்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். குற்றத்தை வெறுக்கலாம். ஆனால் குற்றவாளிகளை வெறுக்கக்கூடாது. எத்தனைக் குற்றவாளிகளை தங்களுடைய ஒரு சிரிப்பால் திருத்தியிருக்கிறார்கள் தெரியுமா? இஸ்லாம் வளர்ந்தது அப்படித்தான்.


முனாபிக் - நயவஞ்சகன். (நம்பவைத்து கழுத்தை அறுப்பவன்)

ஷிர்க் - அல்லாஹ்வுடைய ஸ்தானத்தில் மற்றொன்றை வைப்பது. அவற்றை வணங்குவது. வழிபடுவது. 

உம்மி நபி உதித்த தினம்

மீலாதுன் நபி (உம்மி நபி உதித்த தினம்) விழாவை இயற்கையே கொண்டாடியது.

நமது நாயகம் ﷺ அவர்களின் அருமைத் தாயாரான செய்யிதத்துனா ஆமினா றலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பிரசவ நேரம் ஏற்பட்டது. என்றாலும், இதை யாரும் அறிந்திருக்கவில்லை. காரணம் என்னவெனில் பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகின்றது போல மசக்கையோ உடல் ரீதியான மாற்றங்களோஅவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

எனவே தனது இந்த நிலையை அல்லாஹ்வின் சமூகத்தில் முறையிட்டார்கள். திடீரென அவர்களின் வீட்டின் மேற்கூரை பிளந்தது. அப்போது நமது ஆதித் தாயான அன்னை ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்து கண்ணழகிகள் என்ற ஹூருள்ஈன்களுடன் விஜயம் தந்து விட்டார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துணைவியாராகிய  ஸாரா நாயகி றலியல்லாஹு அன்ஹா அவர்களும் அது போன்றே பிர்ஒளனின் மனைவியாகிய ஆஸியா பின்த் மஸாஹிம் றலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சமூகமளித்த விட்டார்கள். மேலும் விண்ணில் பறக்கும் பறவைகள் யாவும் ஒன்று சேர்ந்து அன்னை ஆமினா றலியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்த அறையை சூழ்ந்து கொண்டன.  காட்டில் வாழும் விலங்குகளும் அணிவகுத்து நின்றன. வானவர் கோன் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் மலக்குகள் யாவரும் தக்பீர் முழக்கத்துடன் விண்ணிலிருந்து வருகை தந்து ஈருலக சர்தார் இவ்வுலகுக்கு வருகை தருவதை எதிர்பார்த்தவர்களாய் அறையைச் சுற்றியுள்ள முற்றவெளியில் சூழ்ந்திருந்தனர். பாரஸீக நாட்டின் சாவா என்ற கிராமத்தில் பல்லாண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த மிகப்பெரிய வற்றாத ஜீவநதி அன்றைய தினம் திடீரென ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத அளவுக்கு  முற்றிலுமாக வற்றி விட்டது. கூபாவுக்கும் சிரியாவுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் வரண்டு கிடந்த ஸமாவா என்ற மிகப்பெரிய ஓடை நீர் பெருக்கெடுத்து ஒலித்தோட ஆரம்பித்து விட்டது.

மேலும் சிரியா பஸரா ஆகிய நாடுகளின் கோட்டைகள் பிரகாசிக்க துவங்கி விட்டன. ரோமாபுரி மன்னனின் மாளிகையில் உள்ள 14 மணி மண்டபங்களும் அன்றைய தினம் திடீரென இடிந்து வீழ்ந்து விட்டன. பாரஸீக நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் அணையாமல் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த மிகப் பெரிய நெருப்புக் குண்டம் திடீரென அணைந்து விட்டது. பாரஸீக நாட்டு பட்டாளச் சிப்பாய்கள் திடீரென ஊமையாகி விட்டனர். சிலுவைகள் உடைத்தெறியப்பட்டன. சிலைகளும் உடைக்கப்பட்டன. அல்ஸாத் அல்உஸ்ஸா என்ற சிலைகள் தலை குப்புற வீழ்ந்தன. மிக்க கெளரவிக்கப்பட்டு வந்த (அவைகளுக்கு பூஜை நடத்துகிற)  பூசாரிகளும் அன்றைய தினம் கேவலப்படுத்தப்பட்டார்கள். சூனியக் காரர்கள் மற்றும் குறிகாரர்களின் காதுகளில் தாங்களுக்குச் சவாலாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறக்கப் போகிறார்கள்... என்ற செய்தியை அசரீரியான முறையில் கூறப்பட்டது. விண்ணிலிருந்து வரும் தீப்பந்தங்களால் ஷைத்தான்கள் எறியப்பட்டார்கள். இன்னும் இது போன்ற 400 அற்புதங்கள் அன்றைய தினம் நிகழ்ந்தது. இந்திலையில் தான் கண்மணி முகம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாகவும் தாங்களின் தஸ்பீஹ் விரலை உயர்த்தி ஏகத்துவத்தை எடுத்துக் காட்டியவர்களாகவும் சுர்மா இடப்பட்டவர்களாகவும் எண்ணை தேய்க்கப்பட்டவர்களாகவும் தொப்புள் கொடி வெட்டப்பட்டவர்களாகவும் கத்னா என்ற விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களாகவும் மணம் பூசப்பட்டவர்களாகவும் கண் இமைகளுக்கு மை இடப்பட்டவர்களாகவும் இந்த அவனியில் அவதரித்தார்கள். உடனே விண்ணிலிருந்து வருகை தந்திருந்த மலக்குமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கையிலேந்தி வானலோகம் பூமிலோகம் எல்லாம் வலம் சுற்றி வந்து திரும்பவும் பிறந்த இடத்திலேயே கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.
( மின்ஹத்துஸ் ஸரன்தீப் பக்கம் 113 - 114 )

நான் கண்மணி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் “நாயகமே தாங்களின் பிறந்த நேர நிகழ்ச்சியைப்பற்றி கூறுங்கள், என்றேன். நான் எனது தகப்பனார் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் துஆவாகவும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் சுபச் செய்தியாகவும் இருக்கிறேன். மேலும் எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களில் இருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தது என்று கூறினார்கள் என்பதாக அபூ உமாமா றலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்.
( முஸ்னத் அஹ்மத் 5/262, ஹதீஸ் அபீ உமாமா, ஹாக்கிம் 2/600 கிதாபுத் தாரீக் திக்ரு அக்பாரி ஸய்யிதில் முர்ஸலீன்,
மிஷ்காத் ஹதீஸ் எண் 5759 பாபு பழாயிலி ஸய்யிதில் முர்ஸலீன், ஷரஹுஸ்ஸுன்னா ஹதீஸ் எண் 3626.

மா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த அன்று வானவர்கள் முதற்கொண்டு பறவையினங்கள் செடிகொடிகள் கற்கரடுகள் உட்பட அனைத்துமே அண்ணல் நபி ஸல்ஙல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பை எண்ணி அகமகிழ்ந்தன என்று தெளிவாக விளங்க முடிகிறது. எனவே ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எழிலார்ந்த மீலாதை இயற்கையே கொண்டாடி மகிழ்ந்திருக்கையில் நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா!?

Wednesday 7 November 2018

முக்தி பெறுவதற்கான வழிz



உரை: ஷைகனா கௌதனா ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹழ்ரத் காதிரி காஹிரி  கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ்

மய்யித் என்றால் மௌத்தானவர் என்ற பொருளா? அல்லது மௌத்தாகிறவர் என்ற பொருளா? அல்லது   இனிமேல் மௌத்தாகக்கூடியவர் என்ற பொருளா?

இம்மூன்று காலத்தையும் விட்டுவிட்டு வெறும் மௌத்தையும், ஆளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ‘இன்னக மய்யிதுன்’ நேற்றும் மய்யித்துதான். இப்பவும்   மய்யித்துதான், நாளைக்கும் மய்யித்துதான்! இதைபோன்று அவர்களும் இன்றும் என்றும் எப்பவும் மய்யித்துதான். இதை ஆரிபீன்கள் கண்காட்சியாக காணுகிறார்கள். தாங்கள் மௌத்தானவர்கள் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். ‘தான்’ என்ற எண்ணம் அற்று மௌத்தாகி அல்லாஹ்வின் பக்கம் சேர்ந்துவிட்டவர்கள் இவர்கள்!

இதோ ஒரு ஆஷிக் சொல்கின்றார். “ஆண்டவனே! நான் உன்னிடத்தில் வராமல் தூர விலகிப்போய்  கிடக்கின்றேன். நான் என்ன பாவம் செய்தேனென்று என்னை தூரத்தில் போட்டிருக்கின்றாய் ? எனக் கேட்டேன். அந்த நேசன் பதில் சொன்னான்,

‘உன்னுடைய உஜூது (உள்ளமை) தான் பாவம். நீ போனால் அவன் வருவான்’ என்று!’’

 அப்படியானால் தன்னை அறிய வேண்டும். மௌத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். மௌத்தை தெரிந்துக் கொண்டவர் – தானொரு மய்யித்து என்பதைப் புரிந்துக் கொண்டவர்தான் ‘வலி’ தான் மய்யித்து என்பதைத் தெரிந்துக் கொள்ளாமல் தான் உயிரோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவன் அல்லாஹ்விடம் போக இயலாது.

 “ நீ நம்மிடம் சேர வேண்டுமென விரும்பினால் நீ மௌத்தாகிவிடுவது ஷர்த்து (நிபந்தனை) கொஞ்சம் பாக்கியிருக்கும் உயிர்கூட இருக்க கூடாது! சாவில்லா சுக வாழ்வை நாடி செத்துபோக வேண்டுமே! சேர்த்துவைக்கும் சால சிறந்த வழி இதுவே நேசரே!’’

ஆஷிக்கீன்களுக்கு தானும், அல்லாஹ்வும்தான் இருப்பதாக தெரியும். மற்றவர்களைப்பற்றி அவர்களுக்கு தெரியாது. இவர்கள்தான் மௌத்தை அனுபவித்தவர்கள். தங்கள் நப்சை மௌத்தாக்கிக் கொண்டவர்களாகும்.

 நாயகம் ﷺ  அவர்கள் ஒருமுறை யுத்தத்திற்குச் சென்று திரும்பிய பொழுது சொன்னார்கள். “நாம் இப்போது சின்ன சண்டையில் இருந்து திரும்பியுள்ளோம். பெரிய சண்டைக்கு வந்திருக்கிறோம்” சஹாபாக்கள் கேட்டார்கள் “ எங்கள் உயிரையெல்லாம் கொடுத்து ஜிஹாது செய்திருக்கின்றோம். இதைவிடப் பெரிய சண்டை வேறென்ன இருக்கிறது? ‘ நப்சுடன் செய்கிற சண்டைதான் அது’ என பதில் சொன்னார்கள்.

நப்சுடன் செய்கிற சண்டைதான் பெரிய சண்டை! இதைப் பெரிய சண்டை என்று சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. காபிரீன்கள் கண்முன்னால் இருந்தார்கள். ஆனால் இந்த எதிரியோ நம் கண்ணுக்கு தெரியமாட்டான். இந்த எதிரிக்கு ஷைத்தான்களும் பக்கபலமாக   இருக்கிறார்கள். இந்த எதிரியினால் நாம் வெட்டுப்பட்டுப் போனால் நம் நிலைமை மோசமாகிவிடும்.  இந்த எதிரியே நாம் அடக்கினால்தான் முக்தி பெற முடியும்.  காபிர்களோடு நாம் ஜிஹாது செய்து வெட்டுப்பட்டால் ஷஹீது ஆவோம். நாம் அவர்களை வெட்டினால் ‘பீஸபீல்’ செய்த நன்மை கிடைக்கும்.

இப்படி நப்சுடன் செய்கிற சண்டைக்கு வசீலா தேவை. ஆகவே அல்லாஹ் சொல்கிறான் ‘ வப்தகூ இலைஹில் வசீலத்த’ இப்படி சண்டை செய்து வெற்றியாகிவிட்டால்- அல்லாஹ்வின் பக்கம் சேர்ந்துவிட்டாய். அப்போ உன்னையே நீ பார்த்துகொண்டாய்! மௌத்தை நீ தெரிந்துக் கொண்டாய் என அர்த்தம்! பின்பு

“அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா கவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனூன்”

நிச்சயமாக அல்லாஹ்வுடைய ஒலிமார்களுக்கு பயமுமில்லை, அவர்கள் கவலைப் படவுமாட்டார்கள். “ அல்லதீன ஆமனூ வகானூ யத்தகூன்” அவர்கள் ஈமான் கொண்டு தக்வா செய்தார்களே – தக்வா செய்தவர்களாக ஆனார்களே அப்படிப்பட்டவர்கள்.

‘லஹுமுல் புஷ்ரா பில் ஹயாத்தித்துன்யா.....

அவர்களுக்கு இவ்வுலகிலும் நல்வாழ்வு இருக்கிறது. மறுமையிலும் நல்வாழ்வு இருக்கிறது! அல்லாஹ்வின் வார்த்தைகளில் மாற்றமிருக்காது. இதுதான் மிகப்பெரிய பாக்கியம் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த உலகத்தில் அவர்களுக்கு என்ன நல்வாழ்வு- நன்மாராயம் எனக் கேட்டால் கராமத் நடக்கிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு எத்தனையோ வேலைகளை முடிக்கின்றான். இப்போது அவ்லியாக்களுக்கு- மௌத்தாய்ப் போனவர்களுக்கு ‘கராமத்’ எப்படி வருமெனக் கேட்கிறார்கள்! கராமத் நடக்க வேண்டுமானால் மௌத்தாய்ப்  போகிறது ஷர்த்தாகும். எப்படி?

விலாயத்- ஒலித்துவம் வருகின்றது என்றால் – வலீயாக ஆவது என்றால் மௌத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தானொரு ‘மய்யித்’ என்று தெரிந்திருக்க வேண்டும். தானென்ற எண்ணம் மௌத்தாகிப் போனால்தான் விலாயத் வரும்.

அப்போ விலாயத்துக்கு மௌத்து ஷர்த்தாகும்போது கராமத்துக்கு மௌத்து எப்படி இடைஞ்சலாக முடியும்?

நூல்: ஷைகுனா அல்லாமா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ் நினைவு மலர்

Tuesday 6 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 208

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207

மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள்.
மாநபி {ﷺ} அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி ”அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில் இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் அவர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களென்றால் உங்கள் உணவுகள் விசாலமடையும் என்று கூறினேன்.
இப்போது, இந்தப் பஞ்சமும் வறட்சியும் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். தாங்கள் ஏதாவது உதவி புரிந்து அம்மக்களை வறட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அது அவர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமையும்” என்று கூறி உதவி வேண்டி நின்றார்.
அப்போது, பெருமானார் {ﷺ} அவர்கள் உடனடியாக அவருக்கு உதவிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போது நபிகளாரிடம் ஒன்றும் இல்லை.
சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம் இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.
அண்ணலாருக்கு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸைத் இப்னு ஸஅனா என்கிற யூத பாதிரி ஒருவர் நபி {ﷺ} அவர்களின் அருகே வந்தார்.
வந்தவர் நபி {ﷺ} அவர்களை நோக்கி “முஹம்மதே! {ﷺ} நான் உதவி செய்கிறேன், ஆனால், அதற்குப் பகரமாக பேரீத்தம்பழ அறுவடை நேரத்தில் இன்னவரின் தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழத்தில் நான் கொடுக்கும் பணத்திற்குச் சமமாக பேரீத்தம் பழங்களை தரவேண்டும்” என்று கூறினார்.
அதற்கு நபி {ﷺ} அவர்கள் “யூத சகோதரா! குறிப்பிட்ட அந்த அறுவடை நேரத்தில், குறிப்பிட்ட இன்னாருடைய தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழங்களை நீர் கொடுக்கும் பணத்திற்கு சமமாக வழங்க நான் சம்மதிக்கிறேன், மேலும், நீர் இன்ன நாளில் (ஒரு நாளைக் குறிப்பிட்டு) வந்து எம்மிடம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
அப்போது, ஸைத் இப்னு ஸஅனா அண்ணலாரிடம் 80 தீனார்களை கடனாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட நபி {ﷺ} அவர்கள் அந்த கிராமவாசியிடம் கொடுத்து, உமது ஊரில் உள்ள எல்லோருக்கும் இதை பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர்கள் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி – அன்ஹும்) அவர்களும், இன்னும் சில நபித்தோழர்களும் அன்ஸாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாத் தொழுகைக்காக மஸ்ஜிதுன் நபவீயின் வெளிப்பகுதியிலே வீற்றிருந்தார்கள்.
ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. தூரத்திலே ஸைத் இப்னு ஸஅனாவும் வந்து கொண்டிருக்கிறார்.
நபிகளார் சொன்ன காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் பாக்கி இருக்கிறது.
ஜனாஸா தொழுது முடித்து நின்று கொண்டிருந்த அண்ணலாரை நோக்கி பாய்ந்து வந்த ஸைத் இப்னு ஸஅனா கடுகடுத்த முகத்தோடு, அண்ணலாரின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப் பிடித்து இழுத்தவாறு “முஹம்மதே! {ﷺ} ஏன் இன்னும் எனது கடனைத் திருப்பித் தரவில்லை? அப்துல் முத்தலிபின் மக்கள் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்!” என்று உரக்க கத்தினார்.
அண்ணலாரிடம் மரியாதைக் குறைவாகவும், தரம் தாழ்ந்தும் நடந்து கொண்ட அந்த யூதரின் செயல் கண்டு கொதித்தெழுந்த உமர் (ரலி) அவர்கள் முகம் சிவந்தவர்களாக “அல்லாஹ்வின் விரோதியே! அல்லாஹ்வின் தூதரிடமா நீ இவ்வாறு பேசுகிறாய்? அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் மாத்திரம் இப்போது இங்கே இல்லை என்று சொன்னால் உனது தலையை நான் கொய்திருப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார்கள்.
அதனைக் கேட்ட மாநபி {ﷺ} அவர்கள் புன்முருவல் பூத்த முகத்தோடு உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமரே! நீங்கள் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது! கடனைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என்னிடம் தான் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது கொஞ்சம் மரியாதையுடன் கேளுங்கள் என்று அவரிடம் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், உங்கள் பேச்சால் இவரை நீங்கள் பயமுறுத்தி விட்டீர்கள். இவரை அழைத்துச் சென்று நான் வாங்கிய கடனுக்குப் பகரமாக நான் சம்மதித்தது போன்று இன்ன தோடத்து பேரீத்தம் பழங்களை கொடுங்கள்.
மேலும், அவரை பயமூட்டும் வகையில் பேசியதற்கு பரிகாரமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களை அதிகமாகக் கொடுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு போய் நபி {ﷺ} அவர்கள் சொன்னது போன்றே அவரது கடனையும் திருப்பிச் செலுத்தி, இன்னும் அதிகமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களையும் கொடுத்தார்கள்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஸைத் இப்னு ஸஅனா ஏன் எனக்கு அதிகமாகத் தருகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்.
உம்மை அச்சமூட்டும் வகையில் அமைந்து விட்ட என் பேச்சுக்குப் பரிகாரமாக உமக்கு வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் காரணம் கூறினார்கள்.
அது கேட்ட ஸைத் இப்னு ஸஅனா ஆச்சர்யம் மேலிட உமரை நோக்கி “உமரே! என்னை அடையாளம் தெரிகிறதா? நான் தான் யூதப் பண்டிதர் ஸைத் இப்னு ஸஅனா” என்று அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஏற்கனவே அறிந்திருந்த உமர் (ரலி) அவர்கள் ஓ பண்டிதரே! எல்லாம் தெரிந்த நீர் ஏன் அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டீர்? என வினவினார்கள்.
قال زيد بن سعنة ما من علامات النبوة شيء إلا وقد عرفته في وجه محمد حين نظرت إليه إلا خصلتين لم أخبرهما منه يسبق حلمه جهله ولا يزيده شدة الجهل عليه إلا حلما
அதற்கு, ஸைத் இப்னு ஸஅனா “இறுதித் தூதர் வருகை மற்றும் அவரின் அடையாளங்கள் குறித்து தவ்ராத் வேதத்திலே சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் நான் முஹம்மதிடம் {ﷺ} பார்த்து விட்டேன்.
ஆனால், இரண்டு அடையாளங்களை மட்டும் இது வரை நான் பார்த்ததில்லை. அதை உறுதிபடுத்தத்தான் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். இப்போது அதையும் நான் பார்த்து விட்டேன். இப்போது நான் தெளிவாகி விட்டேன்” என்று கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அந்த இரண்டு குணாதிசயங்கள் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் இப்னு ஸஅனா “இறைத்தூதர் பொறுமையின் சிகரமாக விளங்குவார், தன்னோடு உறவாடுபவர்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் அவர்களிடம் புத்திசாலித்தனத்தோடு இறைத்தூதர் நடந்து கொள்வார்” எனவே, இப்போது எனக்கு தெளிவாகி விட்டது.
உமரே! இதோ நான் இஸ்லாத்தை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள் ஸைத் இப்னு ஸஅனா (ரலி) அவர்கள்.
( நூல்: உஸ்துல் காபா, அல் இஸாபா ஃபீ தம்யீஜிஸ் ஸஹாபா )
வார்த்தையில் கண்ணியம்.. வாழ்க்கையின் கண்ணியம்..

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207
அபூஹுரைரா (رضي الله عنه ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் { ﷺ} அவர்கள் மிஃராஜ் – விண்ணுலகப்பயணம் சென்று வந்த செய்தியை, அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை எங்களிடையே அறிவித்தார்கள்.
இதை அறிந்த குறைஷிகள் அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் வந்து “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.
அல்லாஹ் நபி {ﷺ} அவர்களின் கண்முன்னே பைத்துல் முகத்தஸை காண்பித்தான். அப்போது நபி {ﷺ} அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.
பின்னர், எங்களை நோக்கி, நான் விண்ணுலகம் சென்றிருந்த போது நபிமார்களின் ஒரு கூட்டத்தினர் எனக்கு காண்பிக்கப் பட்டனர். அங்கே நபி மூஸா (அலை) எனக்கு காட்டப்பட்டார்கள். அவர்களை தொழும் நிலையிலே நான் கண்டேன். அவரை நான் ஷனூஆவின் பகுதி மனிதரின் சாயலில் இருக்க கண்டேன்.
அது போன்று நபி ஈஸா {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். ஈஸா {அலை} அவர்கள் உர்வா இப்னு மஸ்வூத் அஸ் ஸகஃபீ (رضي الله عنه ) அவர்களில் சாயலில் ஒத்திருக்கக் கண்டேன்.
அது போன்றே நபி இப்ராஹீம் {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். இப்ராஹீம் {அலை} அவர்கள் என் சாயலிலே இருக்கக் கண்டேன்.
அதன் பின்னர் அனைத்து நபிமார்களும் தொழுகைக்காக ஒன்று சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு நான் இமாமாக நின்று தொழவைத்தேன்.
தொழுது முடித்த போது, முஹம்மதே! என்று என்னை அழைக்கும் ஓர் அழைப்பை நான் செவியுற்று திரும்பிப்பார்த்த போது, இவர்தான் நரகத்தின் பாதுகாவலர், இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று சொல்லப்பட்டது.
நான் ஸலாம் சொல்வதற்காக திரும்பிய போது, மாலிக் {அலை} அவர்கள் என்னை நோக்கி ஸலாம் கூறி முந்திக்கொண்டார்கள்.” ( நூல்: முஸ்லிம் )
வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207



வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206
அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் அவர்களின் கண் முன்னே இருந்து கொண்டிருந்தது.
ஆட்சித்தலைவராக இருந்து கொண்டு யுத்தத்திற்குச் சென்று விட்டு இப்போது தான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு அமீருல் முஃமினீனாக அங்கேயும் சிந்திப்பதற்கும் கவலைப் படுவதற்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.
ஆனாலும், மண்ணறையின் முன் நின்று அழுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்வதற்கும் அவர்களைத் தூண்டியது எது?
கொஞ்சம் பின்னோக்கிப் போய் உஹத் யுத்த களத்தை நம் மனக் கண் முன் கொண்டு வருவோம்.
உஹத் யுத்தம் முடிந்து, எதிரிகளெல்லாம் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருக்கிற தருணம் அது.
போரில் உயிர் நீத்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் நபித் தோழர்களோடு மாநபி {ஸல்} அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.
தூரத்தில் ஓர் வெண்ணிற மேனி கொண்ட ஓர் உடல் செங்குருதியால் நனைக்கப்பட்டு, அசைவற்று கிடந்ததைக் கண்ணுற்ற பெருமானார் {ஸல்} அந்த உடலை நோக்கி ஓடிப் போகிறார்கள்.
பூமியில் புதைந்திருந்த முகத்தை திருப்பிப் பார்க்கின்றார்கள். அது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் புனித உடல். எதிரிகளால் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்ததை மாநபி {ஸல்} அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
தோழர்களை அழைக்கின்றார்கள் {ஸல்} அவர்கள். அப்படியே அவரை மடியில் கிடத்தி அழுதவர்களாக “ அல்குர்ஆனின் (33:23) –ஆம் வசனத்தை ஓதியவர்களாக “முஸ்அபே! மக்காவில் வாழ்ந்த உம்முடைய ஆரம்ப கால வாழ்வை நான் நன்கறிவேன்! உம்மை விட அழகிய ஓர் வாழ்வை யாரும் வாழ்ந்ததாக நான் அறிந்திருக்க வில்லை! ஆனால், இன்றோ! தலையை மூடினால் கால் தெரிகிறது; காலை மூடினால் தலை தெரிகிறது! முழுமையான ஒரு கஃபன் துணி கூட இல்லை!
அல்லாஹ்வின் தூதர், நாளை மறுமையில் நீர் உயிர்த் தியாகி தான் என உமக்காக சாட்சி கூறுவார்!” என்று கூறினார்கள்.
பின்பு தோழர்களை நோக்கி “மக்களே! அல்லாஹ்விற்காக வாழ்ந்து உயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள்! இவர்களிடம் வாருங்கள்! இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் சொல்லும் ஸலாத்திற்கு அவர்கள் பதில் தருகின்றார்கள்!” என்று கூறினார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:31.)
உண்மையில், தம் தோழர்களில் 70 நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இழந்திருந்தார்கள். அதையெல்லாம் விட தமது பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்ட நிலையில்…
பெருமானார் {ஸல்} அவர்கள் “முஸ்அப் (ரலி) அவர்களின் புனித உடல் முன் நின்று அழுதது “எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருந்த நிலையில் அல்லாஹ்விற்காக வாழும், வாழ்ந்து மரணிக்கும் ஓர் உன்னத வாழ்வை தேர்ந்தெடுத்த ஓர் உத்தமரை நினைவு கூர்ந்திடும் நோக்கில் தான்.
இங்கிருந்து தான் அலீ (ரலி) அவர்கள் பாடத்தையும், முன் மாதிரியையும் பெற்றார்கள்.

Moulavi IM Sajith Musthafi


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206



வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும், கருத்து முரண்களின் போதும் ஸஹாபாக்கள் நபி {ஸல்} அவர்களின் சமூகத்திற்கு வந்தே நின்றனர். நபி {ஸல்} அவர்களும் அந்தப் பிரச்சனைகளை முன் நின்று தீர்த்து வைத்தார்கள்.
ஸஹாபாக்கள் அத்தீர்வையே முடிவாக ஏற்றுக் கொண்டார்கள்.
தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.
அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள் கடும் குளிர் காலத்தில் பயணமேற்கொண்டனர்.
ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.
பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழவைப்பார்கள். அது தான் அண்ணலாரின் வழக்கமாகவும் இருந்தது.
ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.
இதை அறிந்து கொண்ட உமர் {ரலி} அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும் ஆட்சேபித்தனர். ஆனாலும், தளபதியின் முடிவுக்கு கட்டுப் பட வேண்டுமென்ற மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.
அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது. குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள் நெருப்பு மூட்டினர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதியார் “தீயை அணைத்து விடுங்கள்; இனி யாரும் நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின் உத்தரவாகும்” என்று அனைவரிடத்திலும் கூறினார்கள்.
மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது.
முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க புறமுதுகு காட்டி ஓடினர்.
இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளை “எதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள். யாரும் இப்படியொரு உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் போடுவார்கள்” என சற்றும் எதிர் பார்க்கவில்லை.
எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம். இனிமேல், இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ”நாம் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்குவோம்” என்றனர்.
இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது. உடனடியாக, நாம் மதீனா திரும்பிச் செல்கின்றோம்” என்றார் தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.
உடனடியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள் மற்றும் இன்னும் சில வீரர்கள் சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், உமர் கூறிவிட்டார். அபூபக்ர் கூறிவிட்டார். இன்னும் கண்ணியத்திற்குரிய பெரும் ஸஹாபாக்களெல்லாம் கூறிவிட்டனர். உடனே அம்ர் {ரலி} அவர்களை அழைத்து அதற்காக தண்டிக்கவில்லை.
அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர் {ரலி} அவர்கள் வந்ததும் “அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “ ஆம்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து விடுவேனோ என நான் அஞ்சினேன்.
அப்போது எனக்கு “உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29) எனும் இறை வசனம் நினைவுக்கு வந்தது.
எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?” என்று கேட்டார்.
அது கேட்ட அண்ணலார் புன்முறுவல் பூத்தவராக “இல்லை, தப்பொன்றும் இல்லை” என்று கூறிவிட்டு, ”ஏன் நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் “எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறு கூறினேன். காரணம் நம் நடமாட்டத்தை அறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன்.
அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன்” என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள். பின்னர், ”ஏன் விரட்டிச் சென்று தாக்கிட வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள்” என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு “எதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள் களத்தை விட்டும் வெளியேறி பரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து சென்று தாக்கினால் அவர்கள் சுற்றி வளைத்து நம்மை தாக்கி, வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவை எடுத்தேன்” என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்} சிரித்தார்கள்.
பின்பு, “என்ன தான் இருந்தாலும் களத்தில் நிற்கிற போது படைவீரர்களிடம் நீங்கள் ஆலோசித்து முடிவெடுத்து இருக்க வேண்டும். என அறிவுரை கூறி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
(நூல்:தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 முதல் 67 வரை.)

Moulavi IM Sajith Musthafi Eravur

eravur