السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 30 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 474

 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#ஷஹர் #சிந்தனை -17

---------------------------------------


தனித்துவம் வாய்ந்த(313) #பத்ர் ஸஹாபாக்கள்!!


இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு நபித்தோழர்களையும் அல்லாஹ் பல்வேறு வகைகளில் அவர்கள் வாழும் போதும் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் சங்கையும் சிறப்பும் படுத்தினான்.


பத்ர் போரில் பங்கேற்ற நபித்தோழர்களில் சொர்க்கத்தை கொண்டு பெருமானார் (ﷺ) அவர்களின் அமுத வாயால் நேரடியாக சோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் அடங்குவர். ஹுதைபிய்யாவுக்குப் பின்னர் நடைபெற்ற பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்று அல்லாஹ்வின் சோபனத்தைப் பெறும் பாக்கியத்தை பெற்ற பலரும் பத்ர் ஸஹாபாக்கள். பின்னர் நடைபெற்ற போர்களில் கலந்து கொண்டு ஷஹீத் அந்தஸ்தை அடைந்தவர்களும் உண்டு. 


பெருமானார் (ﷺ) அவர்களின் காலத்திற்குப் பிறகு பரந்து விரிந்த இப்பாருலகில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை கண்டு மகிழும் பாக்கியம் பெற்றவர்களும் உண்டு.


இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்களாக, கலீஃபாக்களின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்களும் உண்டு.


இன்னும் சொல்லப்போனால் பின்னோர்களின் நெகிழ்வான நினைவுகளாக, இஸ்லாமிய எழுச்சியின் வடிவமைப்பை முதலில் கட்டமைத்தவர்கள் எனும் அடையாளத்தோடு காலம் முழுவதும் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.


வரலாற்றில் பல இடங்களில் "இந்த இடத்தில், இந்த நிகழ்வில், இந்த போரில், இன்ன நேரத்தில், இது நடைபெறும் போது " இன்ன பத்ர் ஸஹாபி, இன்னின்ன பத்ர் ஸஹாபிகள் இருந்தனர். பங்கேற்றனர், கலந்து கொண்டனர் என்று வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட்டனர்.


பத்ரில் கலந்து கொண்ட 313 நபித்தோழர்கள் மற்றும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ரில் கலந்து ஒவ்வொருவருக்கும் உத்வேகம் இருந்தது..


ولما ندب النبي - صلى الله عليه وسلم - المسلمين يوم بدر فأسرعوا ، قال خيثمة لابنه سعد : آثرني بالخروج ، وأقم مع نسائك . فأبى وقال : لو كان غير الجنة ، آثرتك به . فاقترعا ، فخرج سهم سعد فخرج ، واستشهد ببدر واستشهد أبوه خيثمة يوم أحد .


நபி (ﷺ،) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா (ரலி) அவர்கள் தன்னுடைய மகனான ஸஅது இப்னு கைஃஸமா (ரலி) அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள்.


அதற்கு ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி)அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே!இது சாதாரணமான ஒன்றல்ல. சொர்க்கத்தை நிர்ணயம் செய்யும் விஷயமாகும். சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.


அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்கள் பெயரே வந்தது.


இவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான்.


அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்களின் தந்தை உஹதிலே பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்கள்.


குறிப்பாக பத்ரில் கலந்து கொண்ட இரண்டு நபித்தோழர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ர் போரின் வெற்றியில் அல்லாஹ்வின் மகத்தான உதவி, வானவர்களின் வருகை, பத்ர் இடம் தேர்வு செய்யப்படுதல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றது.


அதில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பெருமானார் (ﷺ،) அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டமும் அதில் நான்கு நபித்தோழர்களின் வீர தீரம் நிறைந்த உரையும் குறிப்பாக முஹாஜிர்களில் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களும் ஆற்றிய உரை திருப்புமுனையாகும்.


மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)எழுந்து பேசினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டியவழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,


‘‘மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)


என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ”பர்குல் ஃகிமாது”*(*மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத் துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி)கூறிமுடித்தார்.


அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ﷺ،) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.


நபி (ﷺ،) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்றுபொதுவாகக் கூறினார்கள். நபி (ﷺ،) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ﷺ،)அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ﷺ،) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:


‘‘நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவி மடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''


மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டி விடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும்.


அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்' பகுதியில் உள்ள ‘பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ﷺ،) அவர்களிடம் கூறினார்கள்.


ஸஅதின் பேச்சையும் அவரின் உற்சாகத்தையும் கண்ட நபி (ﷺ،) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போதுபார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.


1. மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்...


உலகில் வாழும் நாம் தான் சுவனத்தை நேசிப்போம். சுவனத்தில் பிரவேசிக்க விரும்புவோம். சுவனத்தின் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுவோம். சுவனத்தை தந்து விடு யாஅல்லாஹ்! என்று பிரார்த்திப்போம்! சுவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உலகில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.


ஆனால், சுவர்க்கமே நேசித்த, தன்னில் பிரவேசிக்க வேண்டும் என்று விரும்பிய, தன்னில் உள்ள இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உலகின் நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி (ﷺ،) அவர்களை நேசிப்பதை கடமையாக்க்கி இருக்கின்றான். ஆனால், அந்த நபி (ﷺ،) அவர்களை அழைத்து நீங்கள் நான்கு மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெரிவித்தான்.


அப்படி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்


இதை விட வேறென்ன சிறந்த பாக்கியம் இருக்கப் போகிறது ஒரு இறைநம்பிக்கையாளருக்கு?!!


روى الترمذي (3718)، وابن ماجه (140)، وأحمد (22968)، والحاكم (4649) من طريق شَرِيك، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ ) . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: (عَلِيٌّ مِنْهُمْ -يَقُولُ ذَلِكَ ثَلَاثًا - وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ، أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ) .


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு நபர்களை நேசிக்குமாறு எனக்கு கட்டளை பிறப்பித்தான்.மேலும், அல்லாஹ்வும் அவ்ர்களை நேப்பதாக என்னிடம் தெரிவித்தான் அவர்கள் இவர்கள் தான்”: 1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள். ( நூல்: அஹ்மத்: பாகம்: 5 பக்கம்: 351, திர்மிதீ )


قد جاء في معجم الطبراني الكبير مرفوعا أن الجنة تشتاق إلى أربعة علي بن أبي طالب، وعمار بن ياسر، وسلمان الفارسي، والمقداد بن الأسود رضي الله عنهم.


وفي مسند أبي يعلى: أن الجنة لتشتاق إلى ثلاثة وهم: علي, وأبوذر, والمقداد.


فأما حديث الطبراني فلم نجد من حكم عليه بضعف أو تصحيح, وأما حديث أبي يعلى فقد قال الشيخ حسين أسد: إسناده ضعيف


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “நான்கு நபர்களை சொர்க்கம் விரும்புகிறது. 1. அலீ (ரலி), 2. அம்மார் இப்னு யாஸிர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள்.


திர்மிதீ ஷரீஃபின் ஷரஹ் நூலான துஹ்ஃபதுல் அஹ்வதீயின் இன்னொரு அறிவிப்பில் மூவரை சுவனம் விரும்புகின்றது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஆகியோர் ஆவார்கள்.


2. ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَاقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ ‏ ‏أُهْدِيَتْ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ ‏ ‏لَمَنَادِيلُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏خَيْرٌ مِنْهَا ‏ ‏أَوْ أَلْيَنُ ‏ ‏رَوَاهُ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَالزُّهْرِيُّ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


ஒரு முறை) நபி(ﷺ) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ﷺ) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ﷺ) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்” என்று கூறினார்கள். அறி: அல்பர்ராஉ (ரலி).

( நூல்: புகாரி : 3802 )


عن جابر، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.


நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:- சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:


ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள் என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ﷺ) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.

 நூல்: ஸஹீஹுல் புகாரி 3803


விளக்கம்: இந்த நபி மொழி சஅத் (ரலி) அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர் (ரலி) அனஸ் (ரலி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அபு ஸஈது (ரலி) ஆயிஷா (ரலி) இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.


இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89


மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்; மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால் சஅத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரி (ஸல்) (நூல்: :ஃபவாயிதுத் தமாம்16 )


حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله: "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".


ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.


இன்னும் பல சிறப்பம்சங்கள் நாளை பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

தொடரும்.........