السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 31 March 2024

ரலியல்லாஹு அன்ஹு மரணித்த நாள்

 


ரமழான் மாதம் 21 ஆம் நாளன்று தான் இறைத்தூதரின் மருமகனும், முதல் தலைமுறை முஸ்லிம்களில் முதுகெலும்புகளில் ஒருவருமான அலி இப்னு அபூதாலிப் (ரழி) ஷஹாதத்தை எய்தினார். அரசியல் ரீதியான மாற்றுத் தரப்பாக உருவான கவாரிஜ்கள் பின்னர் மார்க்க ரீதியான பிளவாக அதனை மாற்றிக் கொண்டு அலி (ரழி) போன்ற சிரேஷ்ட நபித் தோழர்களையே காஃபிர்கள் என்று கூற ஆரம்பித்தார்கள். மட்டுமன்றி இஸ்லாமிய அரசுடன் முடிவற்ற போர்களிலும் இறங்கினர். அலி இப்னு அபூதாலிபிடம் கவாரிஜ்களைப் பற்றி பொது மக்கள் கேட்ட பொழுது 'நேற்று எம்முடன் இருந்த, இன்று எமக்கு எதிராக நிற்கும் எமது சகோதரர்கள்' என்றே குறிப்பிடப்பட்டார். இத்தனைக்கும் கவாரிஜ்கள் கொலை செய்யப்பட வேண்டிய காஃபிராக அலி (ரழி)யை பிரகடனப்படுத்தி இருந்தனர். ஆனால் போற்றத் தக்க ஆன்மீக பரிபக்குவம் கொண்டவரும், சிறந்த விவேகியுமான அலி (ரழி) அதனை உணர்ச்சிப் பெருக்கினால் அன்றி அறிவுபூர்வமாக கையாண்டார். அவருடைய ஆத்மீக மாட்சிமை உள்ள அளவில் நின்று ஞானத்தின் பரிபூரண மகுடத்தை அணியும் அளவுக்கு உயர்ந்து நின்றது. ஆனால் அலி (ரழி) ஆன்மீகத்தையும், அரசியல் போன்ற சமூக விவகாரங்களையும் பிரித்தே நோக்கினார். கவாரிஜ்களுடன் ஒரு உரையாடலையே நாடினார் அலி (ரழி). ஆனால் போர் வெறியர்களான கவாரிஜ்கள் அதற்கு இணங்கவில்லை. மூளையால் பின் தொடர வேண்டியவற்றை மூளையாலும், உணர்வால் அணுக வேண்டியவற்றை இதயத்தாலும் அணுகுவது தான் ஓரு பக்குவப்பட்ட ஆளுமைக்கு அழகு. அலி இப்னு அபூதாலிப் (ரழி) அனைத்து கோணங்களிலும் பரிபூரண ஆளுமையாக திகழ்ந்தார்.


பிறர் எம்மைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் நாம் பிறரை எடை போட முடியாது / கூடாது. ஏனெனில் அது பிறர் எம்மில் இலகுவாக தாக்கம் செலுத்தும் பலவீனமான மனவமைப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் ஒரு வலிய ஆன்மா புறச் சூழல் தாக்கத்தை சமன் செய்து தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ளும். அலி (ரழி) தன்னை காஃபிர் என்று கூறிய கவாரிஜ்களை திருப்பி காஃபிர் என்று அழைக்கவில்லை. சுயகட்டுப்பாடு என்பது அறிஞனுக்கும், வீரனுக்கும் அவசியம். நாம் அலி (ரழி) அவர்களிடத்திலே கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களில் இது பிரதானமானது.


அலி (ரழி) யை கொலை செய்த காரிஜியின் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் (எவ்வளவு அழகான பெயர்! ஆனால் செய்த வேலை தான் வரலாற்றில் நிரந்தரக் கறையாக நின்று துர்வாசம் வீசக் கூடிய படுபாதகச் செயல்). வாளால் வெட்டும் பொழுது அந்த வெட்டு நபிகளாரின் கண்ணியமிக்க மருமகனின் முகத்தில் விழுந்தது. இதனால் அலியின் பெயரை சொல்லும் பொழுது எல்லாம் பின்னெட்டாக 'கர்ரமல்லாஹு வஜஅஹு' என்று சொல்லும் பழக்கம் இஸ்லாமிய மரபில் உருவானது. இதன் அர்த்தம் 'அல்லாஹ் அவருடைய முகத்தை கண்ணியப்படுத்தி வைக்கட்டும்' என்பது. இதொரு பிரார்த்தனை வடிவம். அல்லாஹ் அலி இப்னு அபூதாலிப் (ரழி) யை கண்ணியப்படுத்தி வைத்து இருக்கிறான் என்பதற்கு வரலாறு சாட்சி.


அலி (ரழி) யை கொன்ற இப்னு முல்ஜிம் சிறையிடப்பட்ட பொழுது 'நாவை மட்டும் அறுக்க வேண்டாம். ஏனென்றால் நான் இறைவனை தஸ்பீஹ் (துதி செய்தல்) செய்ய வேண்டும்' என்றானாம். அந்தளவுக்கு வணக்க வழிபாடுகளில் கவனம் கொண்டவர்கள் கவாரிஜ்கள். ஆனால் அலி (ரழி) யின் அந்தஸ்து பற்றிய அறிவின்மை அவனை உத்தம நபித் தோழரையே கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்தது. இதற்கு மாறாக அறிவில் உயர்ந்து நின்ற இப்லீஸ் தன்னுடைய கர்வம் காரணமாக ஆதம் நபிக்கு வழிபட மறுத்து இறை சாபத்தை பெற்று விண்ணகத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.


இப்லீஸின் அறிவு, இப்னு முல்ஜிமின் அமல் (பக்திபூர்வமான வணக்க வழிபாடு) இரண்டுமே அவர்களுக்கு மீட்சியை அளிக்கவில்லை. ஆக நேர்வழி என்பது இறைவனின் கையில், சித்தத்தில் உள்ள விடயம். பயமும் எதிர்பார்க்ககையுமாக இறைவனை கடைசி வரை பிரக்ஞையுடன் வணங்கி வர வேண்டியதன் அவசியத்தை அலியின் போற்றத் தக்க வீர மரணம் எமக்கு உணர்த்துகிறது.


முதல் நிலை முஸ்லிம் ; மாபெரும் அறிஞர் ; கூர்மதி கொண்ட அரசியல் நிபுணர் ; ஆத்மீக ஞானி ; வீரரான அலி முர்தழா (ரழி) அவர்களை நினைவு கூர்கிறோம்!


நன்றியுடன் பதிவு Lafees Shaheed