السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 4 May 2024

கதிர்காமமும்_அதன்_பிரதான_நாயகர்_தாதா_ஹிழ்ர்_ஹயாத்துன்_நபி_அப்பாவும்

y


இலங்கையின் புராதன ஆத்மீகத்தலங்களில் ஒன்றான கதிர்காமம், பெளத்தர்கள், ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் என மூன்று முக்கிய மதத்தவர்களுக்கும் சொந்தமானதொரு புண்ணியத்தலமாகத் திகழ்கிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட புராதன வேடுவகாலத்தைச் சேர்ந்ததாக கதிர்காமத்தின் தொல்லியல் அறியப்படுகிறது. பாரதநாட்டின் பண்டைய இலக்கியங்கள், சித்தர் ஏடுகள் மற்றும் பழம்பெரும் காவியங்களிலும் கதிர்காமத்தைப்பற்றிய பல குறிப்புக்களை காணக்கிடைக்கிறது.
கதிர்காமத்தின் பிரதான நாயகர்/தெய்வம் ஹிந்துக்களால் "கதிர்காமக்கந்தன்-முருகப்பெருமான்" என்றும் பெளத்தர்களால் "கதரகம தெய்யோ" எனவும் இஸ்லாமியர்களால் "தாதா ஹிழ்ர்-ஹயாத்துன் நபி அப்பா" எனவும் அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும் கதிர்காமத்தில் ஆத்மீகம் என்பது பொதுவானதாகவே இருக்கிறது. அங்கே இடம்பெறுகிற மூன்று மதத்தவர்களுக்குமான பாரம்பரியச் சடங்குகளில் சிறிதளவேனும் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதனை நன்கு அறிய முடிகிறது.
இத்தலத்தின் பிரதான நாயகராக/தெய்வமாக உள்ளவரின் மீதான நம்பிக்கைகள் ஒவ்வொரு மதத்தவர்களுக்குமிடையில் வேறுவேறானதாகக் காணப்பட்டாலும் உண்மையில் நம்பப்படுகிறவர் ஒருவராகவே இருக்கிறார். மேலும் இங்கே பிரார்த்தனை புரியும் வழிகள் பலவாறாக இருந்தாலும் உண்மையில் பிரார்த்திக்கப்படுபவர் நிச்சயமாக ஒருவராகவே உள்ளார்!
இவர்கள் பாவா ஆதம் நபியின் ஆண்மக்களில் ஒருவர் எனவும் இப்றாகிம் நபியுடைய காலத்தைச் சேர்ந்தவர் எனவும் மூஸா நபியுடைய காலத்தைச் சேர்ந்தவர் எனவும் இன்னும் துல்கர்ணைன் (Alexander the Great) அவர்களுடைய காலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பலவாறாக அறியப்படுகிறார்கள்.
பசுமையானவர் என்று பொருள்படும் ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்கின்றவாறு அழைக்கப்படுகிறார்கள். அத்துடன் 'என்றும் உயிரோடு உள்ளவர்' எனப்பொருள்படும் 'ஹயாத்துன் நபி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் இயற்பெயர் பல்யா இப்னு மல்கான் ஆகும். அபுல் அப்பாஸ் என்பது குடும்பப் பெயராகும்.
இவர்கள் 'ஆபெஹயாத்' எனப்படுகின்ற உயிர் தண்ணீர்/ஜீவ நீரூற்றில் (இதனை மாவுல் ஹயாத் என்றும் கூறுவர்) நீரை அருந்திய போது, ‘நீர் கிள்ர் (பசுமை) ஆக இருப்பீர். உம்முடைய பாதம் படும் இடமெங்கும் பசுமையாகிவிடும்’ என்று அசரீரி முழங்கியாத கூறப்படுகிறது. மேற்கத்தேயர்கள், நாடுகாண் பயணங்களின்போது தாதா ஹிழ்ர்/ஹயாத்துன் நபி அப்பாவுடன் தொடர்புடைய ஜீவ நீரூற்றைத் தேடியலைந்ததாகவும் வரலாறுகள் உண்டு.
மூஸா நபியவர்களுக்கு இறைவன், இறைஞான அகமியங்களை உணர்த்துவதற்காக வேண்டி இருகடல்கள் சந்திக்கின்ற இடத்தில் மாபெரும் இறைஞான மகான் (தாதா ஹிழ்ர்) அவர்கள் இருப்பதாகவும் அவர்களைச் சந்தித்து ஆத்மீக குருவாக ஏற்று இறைஞான போதங்களை அறிந்து தெளியுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே மூஸா நபியவர்களும் தாதா ஹிழ்ர் அவர்களைச் சந்தித்து இறைஞான அகமியங்களை அறிந்து தெளிந்ததாக புனித அல்குர்ஆன் கூறுகின்றது!
வரலாற்றில் அறியப்படுகின்ற மிகப்பெரும் வலீமார்களையெல்லாம் ஒருகட்டத்தில் தாதா ஹிழ்ர் அன்னவர்கள் சென்று சந்தித்து இறைஞான அகமியங்கள் பற்றிக் கலந்துரையாடியதாகவும் அறியக்கிடைக்கிறது.
"Where The Two Seas Meet" என்கின்ற நூலில் தாதா ஹிழ்ர் அவர்களைப்பற்றி விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
இலங்கைக்கு தாதா ஹிழ்ர் அவர்கள் வருகை தருவதற்குப் பிரதான காரணமாக அமைந்தது மாவுல் ஹயாத் எனப்படுகிற ஜீவநீரூற்றை அருந்துவதற்காகவே எனக்கூறப்படுகிறது. கதிர்காமத்தில் உள்ள மாணிக்க கங்கையில் இந்த ஜீவநீருற்றுப் பொங்கியதாகவும் அதனை தாதா ஹிழ்ர் அவர்கள் அருந்தியதாகவும் அதன் பின்னர் அந்நீரூற்று மறைந்து விட்டதாகவும் பண்டைய புராண இதிகாசங்கள் கூறுகின்றன.
தாதா ஹிழ்ர் அவர்களுடைய வரலாறுகளை பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளோடு தொடர்புபடுத்தி ஆராய்கின்றபொழுது, கதிர்காமம் தவிர இலங்கைத் தீவில் அமைந்துள்ள 'உகந்தை மலை' எனப்படுகின்ற ஆத்மீகத்தலமும் ஏழுமலை எனப்படுகின்ற இடமும் இவர்களோடு தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
தாதா ஹிழ்ர் அவர்கள், ஆள் நடமாட்டமில்லாத கடற்கரைப்பகுதிகள் மற்றும் நதிக்கரையோரங்களில் உலவுவதாகவும் மயில், சேவல், மீன், யானை போன்ற உயிரினங்கள் இவர்களுடைய வாகனங்களாக உள்ளதாகவும் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன.
கதிர்காமத்தை அண்டிய வனாந்தரங்களில் வழி தவறியோருக்கு இவர்கள் வழிகாட்டியதாகவும் சங்கடங்களில் மூழ்கியிருந்த சிலருக்கு கனவு தரிசனத்தில் தீர்வுகள் வழங்கியதாகவும் ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக மூவின மக்களும் கூறுகின்றனர். மேலும் தாதா ஹிழ்ர் அவர்களை இடர்கள் நேரிடுகிற பொழுது "யா ஹிழ்ர்" அல்லது "ஹயாத்துன் நபி அப்பாவே" என அழைக்கின்ற பொழுது இவர்கள் ஆஜராகுவதாகவும் இலங்கை வாழ் பாரம்பரிய முஸ்லிம் மக்களால் நம்பப்படுகிறது.
இலங்கையின் சில ஊர்களில் உள்ள பாரம்பரிய முஸ்லிம் மக்கள், எங்கேனும் பயணம் செல்கின்ற பொழுது யானை குறுக்கிட்டால் "ஹயாத்துன் நபி அப்பாவே" என்று விழித்து அந்த யானை எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் அந்த இடத்தை விட்டும் நகருமாரு வேண்டிக்கொள்வார்கள். இன்றும்கூட இவ்வாறான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. மேலும் ஹயாத்துன் நபி அப்பா அவர்களுடைய பெயரில் நிய்யத் பாற்சோறு சமைத்து பாத்திஹா ஓதும் மரபுகளும் மிக நெடுங்காலமாக இருந்துவருகின்றன.
கதிர்காமத்தில் மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதான நாயகராகத் திகழ்ந்து, அந்தந்த மதத்தவர்களுக்குரிய நம்பிக்கைகளின் பிரகாரம் தீர்வுகள் வழங்கி வருகிற தாதா ஹிழ்ர் அன்னவர்களைப் பற்றிய பண்டைய இதிகாசங்களும், மத நம்பிக்கைகளும் மற்றும் மரபுவழிக்கதைகளும் நம்மிடையே மேலும் மேலும் ஆச்சரியத்தைக் கூட்டுகிறதேயன்றி அவர்களைப் பற்றிய மர்மங்களுக்கான விடைகளை ஒருபோதும் தருவதில்லை!
-ஏ. எஸ். எம். முஜாஹித்