السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 2 September 2025

பிறப்பு நேரத்தில் நடந்த முஃஜிஸாத்துக்கள்.


 நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு நேரத்தில் நடந்த முஃஜிஸாத்துக்கள்.

=========✍️=========

அரபு மூலம்:- அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹி அலைஹி

தமிழில்:- கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில் ஷெய்கு, ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

=================

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த பாக்கியமிக்க நேரத்தில் இரண்டு அற்புதங்கள் வெளியாகின, இதை அன்னாரின் தாயார் அவர்களும், அதே நேரத்தில் அங்கு இருந்தவர்களும் கூறியுள்ளனர்;


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த நேரம் அன்னாரின் பார்வை வானத்தை நோக்கி உயர்ந்திருந்தது.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 1 பக்கம் 113


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறக்கும் போது அவர்களோடு சேர்த்து ஒரு பேரொளியும் வெளிப்பட்டதை அன்னாரின் தாய் பார்த்தார்கள், அந்த நேரத்திலிருந்த பெண்களும் இதைப் பார்த்தார்கள்.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 1 பக்கம் 80, 83

முஸ்னத் அஹ்மத் பாகம் 4 பக்கம் 127, 128


நட்சத்திரங்கள் நெருங்கி வந்திருந்ததையும், பிறப்பு நேரத்தில் ஓர் ஒளி வெளியாகி எல்லா இடங்களிலும் பரவி இருந்ததையும் ஹளறத் உஸ்மான் இபுனு அபில் ஆஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தாயார் கண்டார்கள்.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 1 பக்கம் 111 தலாயிலுன் நுபுவ்வத் அபீநுஐம் பாகம் 1 பக்கம் 135


ஹளறத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தாயார் ஷிபா شفا ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்.


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்து என் கையில் விழுந்த போது, அன்னாருக்கு தும்மல் வந்தது; அந்த நேரத்தில் ஒருவர் يرحمك الله அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! என்று கூறியதைக் கேட்டேன், அந்த நேரத்தில் நான் ரோமாபுரியின் மாளிகையைக்காணும் வரை கிழக்கும், மேற்கும் ஒளிர்ந்தன.


ஹளறத் ஹலீமா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும், அவ(ரின் கணவரான ஹரிது என்பவ)ரும்; றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பால்குடி பெற்றோர்களாகும். இவர்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பரகத்தைப் பற்றி புகழ்ந்து கூறுகின்றனர், அதாவது, அவர்களுக்கான பால் அதிகரித்தது; அவரின் ஒட்டகத்தின் பாலும் அதிகரித்தது; ஆடுகள் கொழுத்து விட்டன; பாலும் அதிகம் கொடுத்தன; அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.


மஜ்ம உஸ்ஸவாயித், பாகம் 8 பக்கம் 220

ஸீரத் இப்னு இஸ்ஹாக் பாகம் 1 பக்கம் 133

தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 1 பக்கம் 133


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இரவு கிஸ்ராவின் (பாரசீக மன்னன்) மாளிகை அதிர்ந்தது, (அடுக்கி வைக்கப்பட்டிருந்த) கற்கள் கீழே விழுந்தன; ஷாமிலுள்ள புகைரா, தப்பிரியா ஜீவநதிகள் வற்றிவிட்டன; ஆயிரம் ஆண்டுகள் எரிந்து கொண்டிருந்த பாரசீத்தின் நெருப்பு அணைந்தது.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி

பாகம் 1 பக்கம் 146


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெரிய தந்தை அபூதாலிபோடும், அவர் குடும்பத்தாரோடும் சேர்ந்து சாப்பிட்டால், அனைவரும் வயிறு நிறைவார்கள்; நபியவர்கள் அவர்களோடு இல்லாமல் அவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டால், வயிறு நிறையமாட்டார்கள்;


இன்னும், அபூதாலிபின் குழந்தைகள் காலையில் கண்விழிக்கும் போது, கண்ணில் பூழைகளோடும், அசிங்கத்தோடும் எழும்புவார்கள்; றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெளிந்த முகத்தோடும் முடிக்கு எண்ணை போடப்பட்டவர்களாகவும்; விழிக்கு சுர்மா இடப்பட்டவர்களாகவும் கண் மலர்வார்கள்.


தபகாத் இப்னு ஸஃது பாகம் 1 பக்கம் 119,120.

தலாயிலுன் நுபுவ்வத் அபீ நுஐம் பாகம் 6 பக்கம் 166


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பாதுகாத்து வளர்த்த உம்மு ஐமன் ரலியல்லாஹு தஆலா அன்ஹா கூறுகின்றார்கள்,


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறு வயதில் பசி, தாகம் பற்றி கூறியதை நான் கேட்டதில்லை; பெரியவரான போதும் கேட்கவில்லை.


தலாயிலுன் நுபுவ்வத் அபீ நுஐம் பாகம் 1 பக்கம் 167


எரி நட்சத்திரங்களால் வானம் பாதுகாக்கப்பட்டதும், சைத்தானின் எதிர்பார்ப்பும்; மறைந்திருந்து ஒத்துக் கேட்பது நிறுத்தப்பட்டதும் அன்னாரின் பிறப்பின் ஆச்சரியங்களில் நின்றுமுள்ளதாகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சிறு பிராயத்திலிருந்து சிலைகளைப் பற்றிய வெறுப்பு இருந்து வந்தது, இன்னும், ஜாஹிலியத்தின் கருமங்களிலிருந்தும் தவிர்ந்திருந்தார்கள்; அல்லாஹுத்தஆலா அன்னாருக்கு உன்னதமான சிறந்த கண்ணியமான நற்குணங்களைக் கொண்டு சொந்தமாக்கி வைத்துள்ளான்;


மானத்தை மறைப்பது தொடர்பாக பிரபலமான சம்பவம் இருக்கிறது; கஃபாவைக் கட்டிக் கொண்டிருக்கும்போது அன்னாரின் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவின் கட்டளைப்படி, கல்லை தூக்குவதற்காக தோளுக்கு மேல் தங்களின் கைலியை உயர்த்தினார்கள்; அந்த நேரத்தில் அன்னாரின் அவுரத் வெளியானதும் உடனே கீழே விழுந்து விட மறுவிநாடி கைலியைக் கட்டிக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உங்களுக்கு என்ன நடந்தது? என்று கேட்க, நான் நிர்வாணமாகுவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்.


ஸஹீஹுல் புகாரி (கிதாபுஸ்ஸலாத்) ஸஹி முஸ்லிம் பாகம் 1 பக்கம் 267

தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 2 பக்கம் 32


பிரயாணத்தில் அன்னாருக்கு மேகம் மூலம் அல்லாஹுத்த ஆலா நிழல் கொடுத்ததும், இந்த வகையில் உள்ளதுதான்.


சுனன் திர்மிதி பாகம் 5 பக்கம் 250 தலாயிலுன் நுபுவ்வத் பாகம் 2 பக்கம் 24,25


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரயாணத்திலிருந்து திரும்பி வரும் போது உம்முல் முஃமினீன் கதீஜா றழியல்லாஹு அன்ஹா அவர்களும்; அவர்களின் ஏனைய பெண்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு இரு மலக்குகள் நிழல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்; இதை அவர்களின் அடிமையாகிய மைஸராவிடம் கூறியபோது, அன்னார் பிரயாணத்திற்காக எப்போது புறப்பட்டார்களோ அப்போதிலிருந்து இவ்வாறு கண்டேன் என்று கூறியதாக ஓர் அறிவிப்பில் உள்ளது.


தபகாத் இப்னு ஸஃது பாகம் 1 பக்கம் 157


மேகம் அன்னாரோடு சேர்ந்து நிழல் கொடுத்ததாக செவிலித் தாயான ஹலிமா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா மூலமும்; அன்னாரின் பால் குடி சகோதரர்கள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது,


நபியாக அனுப்பப்படும் முன் ஒரு பயணத்தில் நபியவர்கள் காய்ந்து போன மரத்திற்கு கீழ் இருந்தார்கள், அது உடனே பசுமையாக தளைத்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிளைகள் வெளிப்பட்டன என்பதும் இந்த ஆச்சரியமானவைகளில் உள்ளதுதான்.


தபகாத் இப்னு ஸஃது பாகம் 1 பக்கம் 157, கஸாயிஸுல் குப்றா பாகம் 1 பக்கம் 91


ஒரு ஹதீதில் ஒரு மரம் குனிந்து வந்து நிழல் கொடுத்தது,


சுனன் திர்மிதி பாகம் 5 பக்கம் 205 தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 2 பக்கம் 24, 25


றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனிக்கு நிழல் கிடையாது ஏனெனில் அண்ணார் ஒளியாகும், கொசு அண்ணாரின் உடலில், உடையில் மொய்த்ததில்லை.


கஸாயிஸுல் குப்றா பாகம் 1 பக்கம் 68


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு வஹி வரும் வரை தனிமை (கல்வத்) விருப்பமானதாக இருந்ததும், பின்னர், தன்னுடைய வபாத்திற்கான காலம் நெருங்கி விட்டது என்பதையும்; தனது கப்றுஷரீப் மதினாவில் தனது வீட்டிலேயே இருக்கும் என்பதையும்; தனது வீட்டுக்கும், மிம்பருக்குமிடைப்பட்ட இடம் சொர்க்கத்தின் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலை என்பதும்; அல்லாஹ் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு வபாத்தில் சுதந்திரம் கொடுத்திருந்தான் என்பதும்; இந்த வகையான ஆச்சிரியங்களில் நின்றுமுள்ளது தான்.


தலாயிலுன்நுபுவ்வத் பைஹகி பாகம் 7 பக்கம் 259 269 167

முஸ்தத்றக் பாகம் 3 பக்கம் 59,60


இன்னும், வபாத் பற்றிய ஹதீதில் அன்னாரின் அநேகமான கராமத்துக்களும், சிறப்புகளும் பொதிந்துள்ளன; மலக்குகள் அன்னாரின் திருமேனி மீது (வபாத்தான பின்) தொழுதார்கள்; சில அறிஞர்களிடமிருந்து நாம் அறிவித்த இந்த ரிவாயத்தின் படி, மலக்குல் மவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன்முதலில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் அனுமதி வேண்டினார்கள்; அதற்கு முன் எவரிடமும் றூஹைக் கைப்பற்றுவதற்கு அனுமதி வேண்டியதில்லை.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 7 பக்கம் 162

முஸ்தத்றக் பாகம் 3 பக்கம் 59,60


குளிப்பாட்டும் போது கமீஸைக் கழட்ட வேண்டாம் என்று (மறைவான புறத்தால்) கூறப்பட்டது (அங்கிருந்தவர்களால்) கேட்கப்பட்டது.


சுனன் அபூதாவூத் பாகம் 3 பக்கம் 502, தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 7 பக்கம் 242 ,243


நபி ஹிழ்று அலைஹிஸ் ஸலாமவர்களும், மலக்குகளும் அலைஹிமுஸ்ஸலாம் நபியவர்களின் வபாத்திற்குப் பின், அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு தஃஸியத் ஆறுதல் கூறினார்கள்,


அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் ஜீவிய காலத்திலும், அதற்குப் பின்பும் அன்னாரின் தோழர்களுக்கும் அதிகளவில் கராமத்துக்களும்; பரக்கத்துக்களும் வெளிவந்தன;


ஹளறத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு நபிகளாரின் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வஸீலா மூலம் மழை வேண்டி துஆக் கேட்டார்கள்; இன்னும், அதிகளவானவர்கள் அன்னாரின் பிள்ளைகளிடமிருந்து பரகத்துக்களைப் பெற்றுள்ளனர்.


ஸஹீஹுல் புகாரி (கிதாபுல் இஸ்திஸ்கா) பாகம் 10 பக்கம் 24