السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 22 September 2025

நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்

 

நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்

நபிகள் நாயகத்தின் வெளிப்படையான முஃஜிஸாத்துக்கள்.

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹி அலைஹி

தமிழில்: கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில் ஷெய்கு, ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

=================

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அல்லாஹுத்தஆலா அறிவுகளையும், ஞானங்களையும் சேகரமாக்கி கொடுத்ததும்; இன்னும், அனைத்து மார்க்க, உலக விவகாரங்களில் விளக்கமானவையை அன்னாருக்கு எடுத்துக்காட்டி தனித்துவப்படுத்தியவையும்; அன்னாரின் வெளிப்படையான அற்புதங்களில் நின்றுமானவை யாகும்.


இன்னும் அன்னாருக்கு ஷரிஅத்தின் கருமங்கள் தொடர்பான வணக்கம், கொடுக்கல் வாங்கல் உள்ளிட்டவை பற்றியும்; மார்க்க ரீதியான உட்பிரிவு விதிகளையும்; அடியார்களின் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஞானமும் வழங்கப்பட்டுள்ளன.


இன்னும், அன்னாருக்கு முன்னுள்ள சமுதாயத்தின் நிலைகளைப் பற்றிய தகவல்களும், இன்னும்; நபிமார்கள், றஸூல்மார்கள்; அரசர்களின் சரித்திரங்கள், சம்பவங்கள்; ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு அன்னாரின் புனித காலம் வரையிலான கடந்து போன காலங்களின் அனைத்தும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன; இன்னும், அவர்களின் ஷரியத்துக்கள்; மற்றும் வேதங்கள் பற்றியும் முழுமையாக தெரியப்படுத்தப்பட்டுள்ளன.


இன்னும், அவர்களின் சரித்திரங்கள், பழக்கவழக்கங்கள்; அவர்களின் தொடர்ச்சியான செய்திகள்; (அவர்களில் நடந்த நல்ல, கெட்ட சம்பவங்கள் உள்ளிட்ட) அல்லாஹ்வின் நாட்கள்; அவர்களுள் சிறப்புக்குரியவர்களின் பண்புகள்; அவர்களின் வேறுபட்ட அபிப்பிராயங்கள்; அவர்களின் ஆயுட் காலங்கள்; அவர்களுள் புத்திஜீவிகளின் தத்துவங்கள்; ஒவ்வொரு சமுதாயத்தினர்கள் மத்தியிலும் நடந்த சண்டைகள்; வேதக்காரர்களிடமிருக்கும் வேதத்திலுள்ள ஒவ்வொரு பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகள்; அவற்றிலுள்ள இரகசியங்கள்;


இன்னும், அவற்றுள் மறைந்திருக்கும் அறிவுகள் பற்றிய தகவல்களை வழங்குவது; அவர்கள் மறைத்த விடயங்கள் பற்றி அவர்களுக்கு தகவல் வழங்குவது; அரபு மொழியில் திரிவடைந்தவையின் மாற்றங்களை தெரிவிப்பது; பல்வேறுபட்ட கூட்டத்தினரின் அரிதான வார்த்தைகள்; அவர்களின் நாகரீக அணி இலக்கியத்தின் வகைகளை சூழ்ந்தறிதல்; அவர்களின் ஆதாரங்கள், வழக்காற்றுச் சொற்கள்; உதாரணங்கள்; தத்துவங்கள்; கவிதைகள்; பொருட்கள்: பாதுகாப்பு உள்ளிட்ட இவை யாவையும் அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு திறந்து கொடுத்துள்ளான்.


இன்னும், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு செறிவான பொருளும், வார்த்தையும் கொண்ட வாக்கியங்களையும், சரியான உதாரணங்களைக் கூறும் அறிவு ஞானமும்; நுட்பமான விடயங்களைத் தெளிவாகப் புரிய வைக்கக்கூடிய; தத்துவங்கள்; கஷ்டமான வார்த்தைகள் உள்ளிட்டவையை தெளிவுபடுத்துதல் உள்ளிட்டவையை அல்லாஹுத்தஆலா வழங்கியுள்ளான்.


இன்னும், ஷரீஅத்தின் விதிகளில் குளறுபடியோ, சீர்கேடோ இல்லாமல் சரியான விதத்தில் தெளிவாக்கினார்கள்; இன்னும், அன்னாரின் ஷரிஅத்தின் அழகிய வழிமுறைகளையும்; புகழ்மிக்க ஒழுக்கங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது!


இன்னும், ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்புக்களோடு தெளிவாக இருப்பதுடன், எந்த ஒரு குழப்பவாதிக்கும்; தெளிந்த புத்தி உள்ளவருக்கும் எந்த கோணத்திலும் சரி விரோதத்தால் அன்றி எந்த ஒரு நெருக்கடியும் அதை விளங்குவதில் கிடையாது; அதை மறுப்பவன் எவனாயினும் சரி, அவன் காஃபிர் அல்லது அறியாத மூடன் ஆவான்; எப்பொழுதாவது அதனை செவியேற்றால், இன்னும் அதன் பால் அழைக்கப்பட்டால்; அதை சரி காண்பான்; இன்னும், அதை அழகான தீர்வாகவே ஏற்றுக்கொள்வான்; அதன் மீது ஆதாரங்களையும் சான்றுகளையும் நிறுவ வேண்டிய தேவை கிடையாது!


பின்னர், முஸ்லிம்களுக்கு சுத்தமானவை ஹலாலாக்கப்பட்டுள்ளன, அசிங்கமானவை அவர்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளன; இன்னும், அவர்களின் வாழ்வுக்கும்; கண்ணியத்திற்கும்; சொத்துக்கும்; மறுமையின் தண்டனை; விரைவாக தண்டனை நிறைவேற்றல் மூலமும் இன்னும் குறிப்பிட்ட காலம்வரை நரகவேதனை உண்டு என்ற எச்சரிப்பின் மூலம் பாதுகாத்தார்கள்.

இவை அனேகமான கலைகள், அறிவுத் துறைகளைப் பொதிந்தவையாகும்; இதை அறிந்தவர்கள் அறிந்து கொள்வார்கள்; மருத்துவம்; கனவுக்கு பலன் கூறுவது; வாரிசுச்சட்டம்; கணிதம்; பரம்பரை பற்றிய அறிவு; மற்றும் இவை தவிர்ந்த அறிவுத்துறைகளையும், பிரிவுகளையும் சில அறிஞர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான பேச்சை மூல அடிப்படை ஆதாரமாக்கி தங்களுடைய அறிவுத்துறைகளை விளக்கிக் கூறியுள்ளனர்.


உதாரணமாக, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (கனவின் பலன் பற்றிக்) கூறினார்கள்.


الرؤيا لاول عابر وهي علي رجل الطائر


கனவுக்கான பலன் பறவையின் காலை ஒத்துள்ளது (விரைவாக நடக்கக்கூடியது) என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது போன்று கனவுக்கு முதலில் கூறுபவரின் கருத்தே விரைவாக பலன் கொடுக்கும்.


கனவு மூன்று விதங்களில் இருக்கும்,


1- நிஜமான கனவுகள்,


2- ஒரு மனிதனின் மனதில், (நல்லது, கெட்டது) தோன்றுவது,


3 சைத்தானின் தூண்டுதலால் ஏற்படும் கவலைக்குரிய கனவு


காலம் சுருங்கினால் முஸ்லிம்களின் கனவு பொய்யாகாது! அனைத்து நோய்க்கும் மூல வேர் அஜீரணமாகும் என்றும் கூறினார்கள்.


ஹளறத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மருத்துவம் தொடர்பாகக்) கூறினார்கள்.


குடல் (இரப்பை) உடலின் தடாகம் ஆகும், நரம்புகள் (உணவின் சத்துக்களை உறிஞ்சி உடல்களுக்கு) அதிலிருந்து வருகின்றன; இந்த ஹதீதை நாம் ஸஹீஹாகக்கொள்ளாத போதிலும் சரியே! (இந்த ஹதீது மருத்துவத்தின் அடிப்படையைக் கூறுகின்றது) இமாம் தாரகுத்னி ரஹ்மத்துல்லாஹி இதை மௌலூஃ இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


நீங்கள் செய்யும் மருந்தில் மிகச் சிறந்தது நாசிக்கு நீர் செலுத்துவது, தொண்டைக்குள் நீர் செலுத்தி கொப்பளித்தல்; நடை; ஹஜாமத் (இரத்தம் குத்தி எடுத்தல்) ஆகும்; ஹிஜாமத் செய்வதற்குரிய சிறந்த நாள் பிறை 17 19 21 ஆகிய தினங்கள் ஆகும்.


அகில் கட்டை விடயத்தில் கூறினார்கள்,


இதில் ஏழு நோய்களுக்கு சுகம் கிடைக்கும் விலாப்புறத்து நோய், நீர்க்கடுப்பு; உணவிலும், உடலுறவிலும் விருப்பமின்மை; விஷம்; மாதவிடாய் பெருக்கு; ஈரல் தொடர்பான நோய்கள்;


ஆதத்தின் மகனின் வயிற்றை விட அதிக தீங்குள்ளது எதுவுமில்லை என்றும் கூறினார்கள் அவசியம் உண்ண வேண்டியிருந்தால், மூன்றில் ஒருபகுதி உணவுக்கும். மூன்றில் ஒருபகுதி குடிப்புக்கும்; மூன்றில் ஒருபகுதி சுவாசத்திற்கும் இருக்க வேண்டும்.


பரம்பரை பற்றிக்கூறினார்கள்


وقد سئل عن سبأ أرجل هو أم امرأة أم ارض فقال رجل ....


ஸப இன் سبأ என்பது ஆணா? அல்லது பெண்ணா? அல்லது நிலமா? என்று கேட்கப்பட்டதற்கு, அவர் உண்மையான மனிதர்; அவருக்கு பத்து ஆண் பிள்ளைகள் உண்டு! ஆறு பேர் எமனிலும்; நான்கு பேர் ஷாமிலும் சென்று குடியேறியுள்ளனர் என்று கூறினார்கள்.


திர்மிதி (பாபுத்தப்ஸீர்) பாகம் 5 பக்கம் 39


இந்த ஹதீது நீளமானதாகும் இதுபோன்று பரம்பரை விடயத்திலும் பதில் கூறினார்கள்.


மஜ்ம உஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 194,195


பரம்பரை பற்றிய விடயத்தில் அரபுகள் அதிக அக்கறை காட்டியிருந்தும்கூட, சிக்கலான விடயங்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் கேட்டார்கள்; அதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள்.


ஹிம்மீர் حمير என்பவர் அரபுகளின் தலைவராவார், நல்லவர் (ஹிம்மீரி எமனில் பிரபலமான கோத்திரமாகும்) மத்ஹஜ் (கோத்திரம்) தலையும்; இன்னும் கழுத்துமாகும்; அஸ்த் (கோத்திரம்) அதன் முதுகும், கழுத்தும் போன்றாகும்; ஹமதான் (கோத்திரம்) அதன் பிறடியைப் போன்றதாகும்.


கஷ்புல் அஸ்தார் பாகம் 3 பக்கம் 305 மஜ்ம உஸ்ஸவாயித் பாகம் 10 பக்கம் 41


கணிதம் حساب (கணிப்பு) தொடர்பாக கூறும் போது,


நிச்சயமாக, வானமும்; பூமியும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்து அதன் சுழற்சி ஒழுங்கிலேயே இருக்கிறது‌.


ஸஹீஹுல் புகாரி பாகம் 6 பக்கம் 55 ஸஹி முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1305


ஹவ்ழுல் கௌதரைப்பற்றிக் குறிப்பிடும் போது,

அதன் உள்ளிடை சமமான அளவு கொண்ட நாற் சதுரமாகும் என்று கூறினார்கள்.


ஸஹிமுஸ்லிம் பாகம் 1793


(தொழுகைக்குப் பின் செய்யும் தஸ்பீஹ் பத்து, தஹ்மீத் பத்து; தக்பீர் பத்து; மொத்தம் முப்பது இந்த) திக்றின் எண்ணிக்கையின் மொத்த கணக்கைக் கூறும் போது, ஒரு நன்மை அதன் பத்து மடங்கில் இருக்கும், (இதன்படி தொழுகையில் அதன் மொத்தம்) நாவில் 150, மீஸானில் 1500 ஆகும்.


(ஹவ்ழுக்குரிய அளவைக் குறிப்பிட்டபின்) ஓர் இடத்தைக்காட்டி இந்த இடம் கழிப்பிடத்திற்கு حمام பொருத்தமான நல்ல இடம் என்று (வாஸ்த்து முறையைக்) கூறினார்கள்.


தப்றானி, மஜ்ம உஸ்ஸவாயித் .


மதீனா வாசிகளுக்கு கிழக்கிற்கும், மேற்குக்குமிடையில் கிப்லா உண்டு என்று கூறினார்கள்.


சுனன் திர்மிதி ( கிதாபுஸ்ஸலாத் ) பாகம் 1 பக்கம் 214.


(குதிரையை அறிந்து கொள்ளவதைப் பற்றியும், குதிரையை ஓட்டுவதைப் பற்றியும் கூறுகையில்,


உயைனா عيينة அல்லது, அக்றஃ الاقرع என்பவரிடத்தில் நான் உம்மை விட குதிரையை வேகமாக ஓட்டத் தெரிந்தவர் என்று கூறினார்கள்.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதக் கூடியவராக இல்லாவிட்டாலும், உன்னுடைய பேனாவை உம்முடைய காதில் வைத்துக் கொள்! அவ்வாறு வைத்துக் கொள்வது எழுத்தாளனுக்கு நினைவைக் கொடுக்கும் என்று கூறினார்கள்.


சுனன் திர்மிதி ( கிதாபுத்தஹாறத்) பாகம் 1 பக்கம் 29


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுத வாசிக்கத் தெரியாத உம்மியாக இருந்தும் கூட, அல்லாஹுத்தஆலா அனைத்து பொருட்களின் அறிவையும் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளான், எழுத்தின் உறுப்மைவையும் அதன் அழகையும் பற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருந்தார்கள் என்று ஹதீதுகளில் சந்தேகமின்றி வந்துள்ளது; பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதை நீட்டி எழுத வேண்டாம் என்று கூறினார்கள்.

இப்னு ஷஃபான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹளறத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா மூலம் அறிவித்துள்ளார்கள்.


முஸ்னத் பிர்தௌஸ் பாகம் 1 பக்கம் 296


மற்றுமொரு ஹதீதில், ஹளரத் முஆவியா ரலியல்லாஹு தஆலா அன்ஹு மூலம் அறிவிக்கப்படுகிறது,


ஹளறத் முஆவியா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு முன்னால் எழுதிக் கொண்டிருந்தார்கள், அவர்களைப் பார்த்து மைக்கூட்டை சரியாக வைக்கவும்; பேனாவின் முனையை வலது பக்கமாக சாய்த்து வைத்து பே என்ற எழுத்தை சற்று நீட்டவும்; ஸீனின் பற்களை வேறுபடுத்தவும்; மீமின் வட்டத்தை அழிக்க வேண்டாம்! அல்லாஹ் என்பதை அழகாக எழுதவும்; றஹ்மான் என்பதை நீட்டவும்; ரஹீம் என்பதை சிறப்பாக எழுதவும்; இந்த விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும் என்று கூறினார்கள்.


முஸ்னத் பிர்தௌஸ் தைலமி

மனாஹிலுஸ்ஸபா பக்கம் 168.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையாவது எழுதி இருக்கின்றார்களா? என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட, இது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தூரமான விடயம் அல்ல! ஏனெனில், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஒவ்வொரு பொருளின் அறிவும் வழங்கப்பட்டும் எழுத்தையும், வாசிப்பையும் ஏதோ ஒரு காரணத்திற்காக தடுக்கப்பட்டிருக்கலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அரபு மொழி பற்றிய அறிவும், கவிதைகளின் பொருள்களை நினைவில் கொண்டிருப்பதும் மிகப் பிரசித்தி பெற்ற விடயமாகும்; இந்த ஷிபா என்ற நூலின் முதல் பிரிவில் இது பற்றி அறிவித்துள்ளோம்; இது போன்று கடந்த கால சமுதாயங்களின் ஏராளமான மொழிகளையும் நினைவில் கொண்டிருப்பதும் நிரூபணமானதாகும்; இது சன்னா சன்னா என்ற சொல் பற்றி ஹதீதில் வந்திருப்பது போன்று ஹபஷி மொழியில் இதன் பொருள் அழகு என்பதாகும்.


ஸஹீஹுல் புகாரி (கிதாபுல்லிபாஸ்) பாகம் 7 பக்கம் 13


இதுபோன்று ஹறஜ் هرج கொலை அதிகமாகும் என்றார்கள். (ஹறஜ் என்பது ஹபஷி மொழி இதன் பொருள் கொலை)


ஸஹீஹுல் புகாரி (கிதாபுல் பிதன்) பாகம் 9 பக்கம்41

ஸஹி முஸ்லிம் (கிதாபுல் இல்மு) பாகம் 4 பக்கம் 2056.


ஹளறத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் அறிவிப்பில்,


அஷ்கன்பு துர்து اشكنب درد என்று பாரசீகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹதீதில் வந்துள்ளது, இதன் பொருள் வயிற்று வலி! இதுவல்லாத அதிகளவான அறிவுகளை முழுமையாகவோ, அல்லது சிலதையோ வாழ்நாள் முழுக்க நூல்களோடும்; கற்றலோடும் வாழ்க்கையைக் கழித்த ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும்.


சுனன் இப்னு மாஜா (கிதாபுத்திப்பு)

பாகம் 2 பக்கம் 1154.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுத வாசிக்கத் தெரியாத ஒரு உம்மி நபி! கற்றல், வாசிப்பு உள்ளிட்ட துறைகளைக் கொண்ட புத்திஜீவிகளின் சபையில் ஒருபோதும் உட்கார்ந்து கல்வி கற்றவர்களுமல்ல; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு முன் இத்துறைகள் தொடர்பான எந்த ஓர் அறிவையும் பெற்றதாக பிரபல்யமாக இருக்கவுமில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.


وما كنت تتلوا من قبله من كتاب ولا تخطه بيمينك. العنكبوت 48


இதற்கு முன் நீர் எந்த ஒரு வேதத்தையும் ஓதியவர் அல்ல! இன்னும், உமது வலது கரத்தால் எதையும் எழுதியவருமல்ல! அப்படியிருப்பின், வீணர்கள் கண்டிப்பாக சந்தேகித்திருப்பார்கள். 29-48


அறிவுத்துறையில் அரபிகளின் அதி உச்ச இடமாக இருந்தவை,


1- ஒவ்வொரு கோத்திரத்தின் குடும்ப பாரம்பரியங்கள் பற்றிய ஞானம்,

2-முன்னோர்களின் (நல்லது, கெட்டது) பற்றிய வரலாறு,


3- கவிதையின் யாப்பிலக்கணம், அணி இலக்கணம்;


4-உரை நிகழ்த்துதல்,

உள்ளிட்டவையாகும்.


இத்துறைகளை மிக கஷ்டப்பட்டும், முயற்சித்தும்; கஷ்டப்பட்டுத் தேடிப் படித்தும்; அறிஞர்களுடன் கலந்துரையாடியும் பெற்றுக் கொண்டார்கள், இவர்கள் பெற்றுக் கொண்ட மேற்கண்ட துறைகள் யாவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அறிவுச் சமுத்திரத்தில் ஒரு துளியின் அளவு தான்! ஒரு பெரும் எழுத்தில் ஒரு புள்ளி தான்! நாம் இப்போது கூறியவையில் முரண்டு பிடிக்கும் வீணர்களுக்கு இதை மறுப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது! நாம் கூறியவையை முன்னோர்களின் புராணங்கள் என்றும்; மனிதனால் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றும் கூறுவதை தவிர்த்து காபிர்களுக்கு இதை மறுக்க எது வித தந்திரமும் கிடையாது!


(இந்த திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று) எவரைத் தொடர்பு படுத்தி இதை அவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள் அஜமியாகும்; ஆனால், இது (அல்குர்ஆன்) தூய நாகரிக மிக்க அரபு மொழியாகும் என்று அவர்களின் கூற்றை அல்லாஹுத்தஆலா நிராகரித்துள்ளான்; இவர்கள் கூறுவது அப்பட்டமான பகற் கொள்ளையாகும்; ஏனெனில்;


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றதாக எவர்பக்கம் தொடர்பு படுத்தி

இவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள் ஒன்றில், சல்மானுல் பாரிஸி, அல்லது பல்ஆம் றூமி றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாகும்; உண்மையில் ஸல்மானுல் பாரிஸி றழியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரத்துக்கு பின்பு தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் வந்து சேர்ந்தார்கள்; அதற்குள் திருக்குர்ஆனின் அதிகமான பகுதிகள் இறங்கிவிட்டன; கணக்கற்ற அத்தாட்சிகளும் முஃஜிஸாத் (அற்புதங்) களும் வெளியாகிவிட்டன;


இவர் போன்று தான் றூமி பல்ஆம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்; திருக்குர்ஆனை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே கற்றார்கள். இவரின் பெயரில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன; ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மர்வா மலையடியில் மக்களோடு இருப்பார்கள்; அப்போது இவர்கள் நபியவர்களிடத்தில் வருவார்கள்; அப்படியிருக்க, எவ்வாறு இவரிடம் கற்றிருக்க முடியும்? இவர்கள் இருவரும் அரபிகள் அல்லாத அந்நிய மொழி பேசும் அஜமிகள்;


குறும்புத்தனம் காட்டும் இந்த காபிர்கள் நாகரீக மொழி வளமிக்கவர்கள்; விரைவாகவும், தீர்க்கமாகவும் உரையாற்றும் வல்லமை பெற்றவர்கள்; திருக்குர்ஆனோடு போட்டி போட்டு அதுபோன்ற ஒன்றைக் கொண்டு வருவதில் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்; திருக்குர்ஆனின் வர்ணிப்பையும்; அதன் வசனங்களையும்; அதன் போங்கையும் புரிந்து கொள்வதில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள்; இந்த நிலையில், இந்த அஜமிகள் அவர்களுக்கு முன்னால் எங்கே நிற்க முடியும்?


ஹளறத் சல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் அல்லது பல்ஆம் அல்லது யஙீஷ் يعيش அல்லது ஜப்ரு جبر அல்லது யஸார் يسار என்று இவர்களின் பெயரில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; இவர்கள் இருவரும் வாழ்நாள் முழுக்க ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடமிருந்து இந்த குர்ஆனை பெற்றுக் கொண்டார்களா? என்று ஒருவர் கூட அவர்களைச் சந்தித்து கேட்கவில்லையே!

திருக்குர்ஆனைப் போன்று தான் அவர்களும் பேசினார்கள் என்று அவர்களில் ஒருவராவது கூறியதாக பிரஸ்தாபமும் கிடையாது! அந்த நேரத்தில் அதிக அளவில் விரோதிகள் இருந்தார்கள்; கடுமையாக (குறைகளைத்) தேடிக்கொண்டிருந்தார்கள்; உச்ச பொறாமை கொண்ட முரண்பட்டவர்கள் இருந்தார்கள்; இத்தனைக்கும் மத்தியில் ஒருவராவது அவரைத் தடுக்கவில்லையா? அவர்களும் கூட அவர்களிடம் ஒரு வருடம் உட்கார்ந்து அவரிடமிருந்து அறிவைப் பெற்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்ததை புறக்கணித்திருக்கலாம் தானே! அன்னாரின் கொந்தளிப்பை அடக்க அவரிடம் இருந்து கற்று ஆதாரத்தை அவசியம் முன் வைத்திருக்கலாம் அல்லவா.?


நழ்றிப்னு ஹாரிது தனக்கோ, மற்றவர்களுக்கோ பயன்படாத அவரின் புத்தகங்களில் பொய்யான சரித்திரங்களை இரட்டடிப்புச் செய்தது போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனது சமூகத்தை விட்டும் ஒருபோதும் மறையவே இல்லை, அதிகளவில் வேதக்காரர்களிடமிருந்து அதிகளவு உதவியை பெற்றார்கள் என்று கூறுவதற்கு அவர்களின் நகரங்களுக்கு போக்குவரத்து செய்யவுமில்லை; எனினும்; ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாலிப பருவம் வரை நபிமார்களின் வழக்கத்தையொட்டி ஆடு மேய்த்தார்கள்; ஊரை விட்டு ஒன்று அல்லது இரு விடுத்தம் வெளியிலுள்ள நகரங்களுக்கு பிரயாணம் செய்தார்கள்; அதுவும் இதற்கு சாத்தியப்படுமளவு காலம் அங்கு இருக்க வில்லை; சொற்பளவானதைக்கூட கற்பதற்கு வாய்ப்பில்லாதிருக்கும் போது அதிகளவு கற்பது எங்கனம் சாத்தியமாகும்?


அவ்வாறு சென்ற வெளியூர் பயணங்களில் அவர்களின் கூட்டத்தார்களோடு தான் இருந்தார்கள்; தங்களின் நெருங்கிய உறவினர்களின் உறவிலிருந்து எந்த நிலையிலும் காணாமல் போகவில்லை; இன்னும், மக்கத்துல் முக்கர்ரமாவில் இருந்த காலத்தில் கூட அன்னாரின் கற்றலில் எது வித மாற்றமும் நிகழவில்லை; இன்னும் எந்த ஒரு யூத அல்லது நஸாரா பாதிரி அல்லது நட்சத்திர அறிவுள்ளவர் அல்லது ஜோதிடர் உள்ளிட்ட எவரிடமும் போய் வந்ததாகவும் கிடையாது! இவ்வளவுமிருந்தும் இந்த விடயம் அண்ணலாருக்கு வந்ததென்றால், அது திருக்குர்ஆனின் முஃஜிஸாவாகும்.


நிச்சயமாக திருக்குர்ஆன் அவர்களின் ஒவ்வொரு காரணங்களையும் துண்டாக்கி, ஒவ்வொரு ஆதாரங்களையும் சுக்கு நூறாக்கி; ஒவ்வொரு கருமங்களையும் தெளிவுபடுத்தக் கூடியதாகும்.