திருமணம் ஆணின் தனி ஆதிக்கத்துக்கு வழி?
ஒரு பெண் சொன்னாள்: "நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் இஸ்லாத்தில் திருமணம் என்பது ஆணின் தனி ஆதிக்கம்."
நான் கேட்டேன்: "தனி ஆதிக்கம் என்று எதைச் சொல்கிறீர்கள்?"
அவள் சொன்னாள்: "கணவன் மனைவியின் மீது முழு ஆதிக்கம் செலுத்துகிறார். அவனது அனுமதி இல்லாமல் அவளால் வெளியே செல்லவோ அல்லது எதையும் செய்யவோ முடியாது; ஒரு கைதி போல அல்லது அவனது சிறையில் அடைக்கப்பட்டவள் போல இருக்கிறாள்."
நான் சொன்னேன்: "திருமணம் பற்றிய உன்னுடைய இந்த பார்வை தவறானது."
அவள் சொன்னாள்: "ஒருவேளை நீங்கள் சொல்வது தத்துவ ரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால் நான் உண்மையான நடைமுறையை பற்றிப் பேசுகிறேன். ஆண்கள் தங்கள் மனைவியைக் கட்டுப்படுத்துகிறார்கள்; சிறையில் அடைக்கிறார்கள்; அவளது லட்சியங்களையும் இலக்குகளையும் அடைய அவளுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுப்பதில்லை."
நான் சொன்னேன்: "ஆண்களில் பல வகையினர் உள்ளனர். உங்களுக்கு ஏற்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களது லட்சியங்களை அடைய உதவும், உங்களை கண்ணியமாக நடத்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்."
அதற்கு அவள் சொன்னாள்: "இன்றைய எல்லா ஆண்களும் பெண்களை தங்களது தனி ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே கருதுகிறார்கள்."
நான் சொன்னேன்: "உங்கள் கையின் ஐந்து விரல்களும் ஒன்றுபோல இல்லை. அதனால் இப்படி விரக்தி அடைய வேண்டாம். தனி ஆதிக்கம் என்ற வார்த்தை திருமண உறவுக்குப் பொருந்தாது. திருமணம் என்பது ஒரு வலுவான ஒப்பந்தம். அது புரிதல், ஒருங்கிணைப்பு, கருணை, பாசம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது விலங்கிடலோ, அல்லது தனி ஆதிக்கமோ அல்ல. கணவன்-மனைவி இருவரும் அமைதியாக இருப்பதற்குத்தான் இந்த உறவு. அதே சமயத்தில், குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் வெளித் தலையீட்டில் இருந்து அதனை பாதுகாக்க திருமண உறவுக்கு ஒரு தனித்துவம் தேவை. கணவன்-மனைவி இருவரும் விரும்பியபடி தங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைக்க அவ்விருவருக்கும் உரிமை உண்டு. இது தனி ஆதிக்கம் அல்ல; மாறாக குடும்பத்தைப் பாதுகாப்பது. திருமணம் என்பது தன்வயப்படுத்திக் கொள்ளல் அல்ல. அது ஒரு கூட்டுறவு; மற்றும் ஒருங்கிணைந்த உறவு."
அவள் கேட்டாள்: "மனைவி கணவனின் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது என்பது கணவனின் உரிமை இல்லையா? அவள் தனது பணத்தை விரும்பியவாறு பயன்படுத்துவதை தடுப்பது அவனது உரிமை இல்லையா? அனுமதி இல்லாமல் அவள் வேலை செய்யக் கூடாது என்பது அவனது உரிமை இல்லையா? அவனது அனுமதி இல்லாமல் அவள் தனது பெற்றோரிடம் செல்லக் கூடாது என்பது அவனது உரிமை இல்லையா? இவையெல்லாம் தனி ஆதிக்கம் இல்லையா?"
நான் சொன்னேன்: "ஏகபோக உரிமை என்றால் ஒரு விடயத்தில் மற்றவர்கள் பங்கேற்க அனுமதிக்காமல் தனக்கு மட்டும் வைத்திருப்பது. திருமண உறவில் இதற்கு இடமில்லை. கணவனுக்கு தன் மனைவி அவளது உணர்வுகளை தனது குழந்தைகளிடமும், தோழிகளிடமும், குடும்பத்தினரிடமும், மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்வதைத் தடுக்க உரிமை கிடையாது. அவள் மற்றவர்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவளைத் தடுக்கவும் அவனுக்கு உரிமை கிடையாது. அவளது ஆரோக்கியமான, சரியான உறவுகளைத் தொடர்வதைத் தடுக்க அவனுக்கு உரிமை கிடையாது.
பொதுவாக, நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தவறானவை. கணவன்-மனைவிக்கு இடையேயான உறவு புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது. விலங்கிடுதல் அல்லது தனி ஆதிக்கம் செலுத்துதல் என்றொன்று அங்கில்லை. இஸ்லாத்தில், ஒரு பெண் யாருக்கும் அடிமை இல்லை. அவள் ஒரு சுதந்திரமான, இறைவனின் அடிமை. அவள் தனது பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு. அதில் கணவன் தலையிட முடியாது. மேலும், தொழுகை போன்ற வழிபாட்டுக்காகவோ, நற்செயல்களுக்காகவோ, கல்வி கற்கவோ அவள் வீட்டை விட்டு வெளியேறலாம். வேலை பற்றிப் பேசினால், திருமணத்திற்கு முன்பு அவள் வேலை செய்து கொண்டிருந்தால், அவள் தொடர்ந்து வேலை செய்யலாம். கணவன் அவளைத் தடுக்க முடியாது, குறிப்பாக தனது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதில் அவள் அலட்சியமாக இல்லையென்றால். அதேபோலத்தான் ஓர் ஆணும் தனது குடும்பத்தின் பொறுப்புகளை அல்லது தனது குழந்தைகளை வளர்ப்பதைக் கவனிக்காமல் இருக்க, புறக்கணிக்க அவனுக்கும் உரிமை இல்லை."
அவள் சொன்னாள்: "நீங்கள் சொல்வதை நான் முதல் முறையாகக் கேட்கிறேன். ஒரு பெண் தனது கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தான் நாங்கள் கற்றிருக்கிறோம்."
நான் சொன்னேன்: "கணவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது சரியானதே. ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணான தாக அது இருக்கக்கூடாது. இஸ்லாத்தை நீங்கள் கற்றால், பெண் தன் பெற்றோரைச் சென்று பார்க்கவும், தனது வீடோ அல்லது இடமோ பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்தால் வெளியே செல்லவும், தனது குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்லவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். கணவன் அவளுக்கு அநீதி இழைத்தால், புகார் செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ அவள் வெளியே செல்லலாம். இந்த உறவில் நீங்கள் சொல்லும் தனி ஆதிக்கம் எங்கே இருக்கிறது?"
அவள் சொன்னாள்: "உங்கள் பதில் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இஸ்லாம் பெண்களை ஆண்களைப் போலவே நடத்துகிறது என்று நான் எதிர்பார்க்கவில்லை."
நான் சொன்னேன்: "ஆனால் அவதானம் தேவை. பெண்கள் தங்கள் பொறுப்புகளை விட்டுவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. இன்று நாம் காண்பதுபோல, பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள்; வீட்டு நிர்வாகத்தையும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் உதவியாளர்களிடமும் வேலையாட்களிடமும் விட்டுவிடுகிறார்கள். இந்த நிலையில், குடும்பம் அழிவை நோக்கிச் செல்லும், நிலையற்றதாக மாறும்.
எனவே, கணவன்-மனைவிக்கு இடையேயான உறவை தனி ஆதிக்கம் என்ற கோணத்தில் பார்க்காமல், ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இஸ்லாம் குடும்பத்தை ஒரு ஒருங்கிணைந்த அலகாகப் பார்க்கிறது. அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஓர் ஒழுங்குமுறை தேவை."
அவள் சொன்னாள்: "உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு திருமணத்தின் பால் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது."
நான் சொன்னேன்: "அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான். முக்கியமாக, உங்களை கண்ணியமாக நடத்தும், உங்களை மதிக்கும் ஒரு சரியான மனிதனைத் தேர்ந்தெடுங்கள்!."
(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ)