ஒரு பெண் கேட்டாள்: "நான் என் கணவரை உளவு பார்த்தது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தானே?"
நான் கூறினேன்: "உளவு பார்ப்பதில் ஒரு வகை மட்டுமே ஹலால் என்று எனக்குத் தெரியும். ஆனால் கணவன்-மனைவிக்கிடையில் உளவு பார்ப்பது ஹலால் அல்ல."
அவள் சொன்னாள்: "என் சந்தேகம் நியாயமானது என்று நான் நினைக்கிறேன்."
நான் கூறினேன்: "உன்னுடைய சந்தேகத்தை அமைதிப்படுத்த பல வழிகள் உள்ளன."
அவள் சொன்னாள்: "நான் அவருடைய தொலைபேசியை உளவு பார்த்து, நான் எதிர்பார்க்காத பல விஷயங்களைக் கண்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. அவரும் என்னிடமும், என் குழந்தைகளிடமும், என் பெற்றோரிடமும் சிறப்பாக நடந்து கொள்கிறார். ஆனால் இப்போது அவருடைய இன்னொரு பக்கத்தைக் கண்டேன்."
நான் கேட்டேன்: "நீங்கள் உளவு பார்த்ததால் உங்களுக்கு என்ன பயன் கிடைத்தது?"
அவள் சொன்னாள்: "அது என் மனதில் இருந்த சந்தேகங்களை அமைதிப்படுத்தியது."
நான் கேட்டேன்: "உங்களது கணவரின் இன்னொரு பக்கத்தைக் கண்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"
அவள் சொன்னாள்: "எனக்குத் தெரியவில்லை. நான் அவரிடம் இதைப்பற்றிப் பேசினால், நான் உளவு பார்த்ததால் என் நிலை பலவீனமாகிவிடும் என்று பயப்படுகிறேன்."
நான் கூறினேன்: "அப்படியென்றால், நீங்கள் உளவு பார்த்ததால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் நீங்கள் உளவு பார்த்த பிறகு ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டீர்கள்."
அவள் ஒப்புக்கொண்டாள்: "அது உண்மைதான். அதனால்தான் உங்களிடம் ஆலோசனை கேட்க வந்தேன்."
நான் கேட்டேன்: "நான் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
அவள் சொன்னாள்: "எனக்குத் தெரியவில்லை, ஆனால் என் மனதில் இருக்கும் இந்த எண்ணங்களிலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். இரவிலும் பகலிலும் எனக்கு அமைதி இல்லை."
நான் கேட்டேன்: "நீங்கள் உளவு பார்ப்பதற்கு முன்பு உங்கள் கணவனுடன் நிம்மதியாக இருந்தீர்களா?"
அவள் சொன்னாள்: "ஆம், எங்கள் வாழ்க்கை தேனும் பாலும் போல இருந்தது."
நான் கேட்டேன்: "அப்படியென்றால் ஏன் நீங்கள் உளவு பார்த்தீர்கள்?"
அவள் சொன்னாள்: "உண்மையிலேயே, நான் வேலை செய்யும் இடத்தில் தினமும் ஆண்கள் செய்யும் துரோகக் கதைகளைக் கேட்கிறேன்."
நான் கேட்டேன்: "அவருடைய தொலைபேசியில் நீங்கள் என்ன கண்டீர்கள்?"
அவள் சொன்னாள்: "அவர் பெண்களுடன் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்ததையும், சில பொருத்தமற்ற வார்த்தைகளையும், சில படங்களையும் கண்டேன்."
நான் கேட்டேன்: "உங்களது கணவர் அந்த உறவுகளில் மேலும் ஈடுபாடு காட்டி, உதாரணமாக, விபச்சாரத்தில் ஈடுபடுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"
அவள் சொன்னாள்: "அப்படி நான் நினைக்கவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர், அவருக்கு எது சரி, எது தவறு என்று தெரியும். ஆனால் அவர் பெண்களுடன் பேசுவதை ரசிக்கிறார் என்று நான் நினைக்கிறேன்."
நான் கூறினேன்: "ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். பெண்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் ஆண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, படங்களையும் உருவங்களையும் மட்டுமே பார்ப்பார்கள். இரண்டாவது வகை, பெண்களின் பேச்சுவழக்குகளையும், குரல்களையும், பேச்சுகளையும் கேட்க விரும்புவார்கள். மூன்றாவது வகை, உடல் ரீதியான தொடர்பில் இருக்க விரும்புவார்கள். உங்கள் கணவர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"
அவள் சொன்னாள்: "முதல் வகையைச் சேர்ந்தவர் என்று நான் நினைக்கிறேன்."
நான் அவளிடம் கூறினேன்: "இது மிகவும் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் வகை. இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும், பின்னர் அவருடைய தேவை பூர்த்தி செய்யப்படும்."
அவள் கேட்டாள்: "ஆனால் அதை நான் எப்படித் தடுப்பது?"
நான் கேட்டேன்: "நான் உண்மையைக் கூறட்டுமா அல்லது உங்களை ஆறுதல்படுத்தட்டுமா?"
அவள் சொன்னாள்: "உண்மையைக் கூறுங்கள்."
நான் கூறினேன்: "ஒரு மனிதனுடன் 24 மணி நேரமும் நீங்கள் வாழ முடியாத நிலையில் உங்களால் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. இது ஒரு கற்பனை, ஒரு மாயை. ஏனென்றால் உங்கள் கணவர் மீது உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உங்களது குழந்தைகள் மீதும் அவர்கள் வளர்ந்த பிறகு உங்களுக்கு அதிகாரம் இருக்காது. ஒரு மனிதன் தன்னை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்."
அவள் கேட்டாள்: "அப்படியென்றால் என்ன தீர்வு?"
நான் கூறினேன்: "முதலில், உளவு பார்ப்பது ஹராம் (தடைசெய்யப்பட்டது), தவறு, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறல் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஷைத்தான் உங்களுடைய திருமண உறவை, ஒரு சிறிய தவறு அல்லது கற்பனையால் கூட, விவாகரத்தில் முடிக்கும் வரை உங்களை விடமாட்டான்."
அவள் சொன்னாள்: "உண்மையிலேயே, என் கணவரின் தொலைபேசியைப் பார்த்த பிறகு நான் விவாகரத்து பற்றி யோசித்தேன்."
நான் கூறினேன்: "இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஷைத்தானின் குறிக்கோள் வீடுகளை அழிப்பதுதான். பல குடும்பங்களை சரிவிலிருந்து காப்பாற்றிய பல கதைகள் எனக்குத் தெரியும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் கணவரின் தவறுகளை பொறுத்துக்கொண்டு, தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றிய ஒரு மனைவியை எனக்குத் தெரியும். பின்னர் அவள் கணவர் திருந்தி, தன் தவறுகளுக்காக வருந்தினார். அதேபோல், தன் மனைவியின் தவறுகளை பொறுத்துக்கொண்டு அவளை நல்ல பாதைக்குத் திருப்பிய ஒரு கணவரையும் எனக்குத் தெரியும்."
அவள் சொன்னாள்: "ஆனால் நீங்கள் சொல்வது கடினம்."
நான் கூறினேன்: "அது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் அதுதான் ஒரே தீர்வு. ஒருவேளை தீர்வு எளிதாக இருந்திருந்தால், எல்லோரும் அதைச் செய்திருப்பார்கள். இனிமையான ஒரு மருந்தைப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தின் அமைதியை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். பயம் உங்கள் மகிழ்ச்சியை கெடுக்க அனுமதிக்காதீர்கள். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தவறுகள் செய்கிறான்; பாவங்கள் செய்கிறான். ஆனால் பாவமன்னிப்பின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. உங்களது கணவர் உங்களுக்கு விசுவாசமாக இருக்கும் வரையிலும், உங்களது குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரையிலும், உங்கள் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நன்கு நடத்தும் வரையிலும், அவருடைய நன்மைகளை அனுபவியுங்கள்! அவருடைய குறைகளை பொருட்படுத்தாதீர்கள்!"
அவள் கேட்டாள்: "அப்படியென்றால், உளவு பார்ப்பதில், ஹலாலான வகை எது?"
நான் கூறினேன்: "ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பேணிட, அதன் எதிரிகளின் திட்டங்களைத் தெரிந்துகொள்ள உளவு பார்ப்பது மட்டுமே ஹலால். மற்ற அனைத்து உளவு பார்ப்புகளும் ஹராம்."
அத்துடன் உரையாடல் முடிந்தது.
(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ)