இறைதூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த தினமே 'மீலாத் நபி' என அழைக்கப்படுகின்றது. 'மீலாத்' என்ற அறபுச் சொல்லுக்கு, 'பிறப்பு' எனப் பொருள்படும்.
இஸ்லாமிய மாதங்களின் தொடரில் "ரபீவுல் அவ்வல்" மாதம், மூன்றாவது மாதமாகும். இம்மாதத்தில் பிறை பன்னிரண்டு அன்று நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்து மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள். முஸ்லிம்கள் தமது சமய நடவடிக்கைகளுக்காக சந்திர ஆண்டைப் பின்பற்றுவர். புத்தளம் மக்கள் தமது பேச்சுவழக்கில் ரபீவுல் அவ்வல் மாதத்தினை 'மெளலூத்து மாதம்' (மெளலீது - மீலாத்) என்றழைத்தனர்.
'மெளலீது மாதம்' என்றாலே புத்தளம் களைகட்டும். இம்மாதம் நெருங்கி வரும்போதே வீடுகளைத் துப்புரவுசெய்யத் தொடங்குவர். சிலர் வீடுகளுக்கு வெள்ளையடிப்பர். பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் வெண்பிறை அடையாளம் கொண்ட பச்சை நிறக் கொடியேற்றுவர். வீதி எங்கும் சாம்பிராணி, சந்தனக்குச்சி (ஊதுபத்தி) வாசம் வீசும். மஹ்ரிப் தொழுகையின் பின்னர், சிறுவர்களும் பெரியவர்களும் வீடுகளுக்குள் இருந்து ஓதும் அல் குர்ஆன் ஒலியானது, மங்கலான விளக்கொளியில், வீதிகளில் நடந்து செல்வோருக்குப் பக்திப்பிரவாகத்தை ஏற்படுத்தும்.
பிரதான பாதைகள் சோடனைத் தாள்களால் (பட்டத்தாள் - பொலித்தீன் அல்ல) பந்தல் போட்டு அலங்கரிக்கப்படும். இடைக்கிடையே 'பூந்தாங்குடை' எனப்படும் அலங்காரக் கம்பங்கள் நாட்டப்பட்டிருக்கும். அதில் பிரகாசமான விளக்குகளும் (மின் விளக்குகள் அல்ல) பொருத்தப்பட்டிருக்கும். இப்பாதை வழியாக நடந்து செல்லும்போது காற்றுக்கு அசைந்தாடும் சோதனைத் தாள்கள் எழுப்பும் ஒலி இரம்மிய உணர்வை ஏற்படுத்தும்.
வீடுகளில் வெசாக் கூடுகள் போன்றவை தொங்கவிடப்படும். அதில் 'திரு நபி ஜனன விழா' போன்ற வாசகங்கள் அட்டையில் வெட்டி மேலே பட்டுக்கடதாசியால் ஒட்டி விடுவார்கள். இரவில் மெழுகுவர்த்தி ஒளியில் அது ஒளிர்ந்துகொண்டிருக்கும். இந்நாட்களில் மக்கள் பைத்துக்கள் ஓதி ஊர்வலமாகவருவர். ஆங்காங்கே பானங்களும் தீன்பண்டங்களும் அவர்களுக்கு வழங்கப்படும். ஊர் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இதனை மேற்கொள்வர்.
மீன் மார்க்கெட், ஹமீத் ஹுசைன் கம்பெனி சுற்று வட்டம் (தற்போதைய மினாரா) உட்பட்ட மஸ்ஜித் வீதி, நோர்த் ரோட் முதலாளி வீடு சூழவுள்ள பகுதிகள்,போன்றன பிரதானமாக சோடிக்கப்படும் இடங்களாகும். பிற்காலங்களில் போல்ஸ் வீதி போன்றனவும் சோடிக்கப்பட்டன. மெளலீது சோறு பங்கிடப்படும் இடங்கள் விஷேடமாக அலங்கரிக்கப்படும். சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெரியாருக்கும் இது மனமகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
ஆரம்பகாலங்களில் புத்தளம் நகரில் மெளலீது வைபவம் இலங்கையில் எங்குமில்லாத வகையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. சிலர் மெளலீது கந்தூரி, களரி நடத்துவதற்கு பெரிய மண்டபம் அமைத்து வீடுகட்டும் அளவிற்கு இங்கு இது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
புத்தளம் நகரில், முதலாளி வீட்டிலும் மரைக்கார்மார்களின் வீடுகளிலும் இடம்பெற்ற கந்தூரி வைபவங்கள் பிரசித்தமானவையாகும். பொதுவாக இம்மாதத்தில் எல்லா வீடுகளிலும் மெளலீது ஓதுவர். சிலர் வீடுகளிலும் பொது இடங்களிலும் மெளலீது ஓதி, தேங்காய் சோறு (மெளலீது சோறு, நெய்ச்சோறு) பங்கிடுவர். கிராமங்களிலும் இந்த வழக்கம் இருந்துவந்துள்ளது. மெளலீது சோறு என்றாலே அதற்கெனத் தனி மணமும் சுவையும் உண்டு என்ற ஒரு கருத்து, பரவலாக உண்டு.
(இன்னும் வரும்)
© Z A. Zanhir - 30. 08. 2025