தவ்ஹீதின் பரிபூரணம் கண்மணி நாயகத்தை புகழ்வதில் தான் உள்ளது!
***************************************
மௌலித் ஓதுவது ஷிர்க் என்று எல்லாத்தையும் ஷிர்க் என்று சொல்லிக்கொண்டு திரியும் (வஹ்ஹாபி & தப்லீக்) கூட்டத்தினருக்கு நாம் எந்த ஒரு நல்லதை சொன்னாலும் அவர்களின் மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முஹப்பத் கொஞ்சம் கூட இல்லாத உள்ளத்தை உடையவர்கள். அல்லாஹ்வின் குணம் ஒவ்வொரு படைப்பிலும் எப்படி வெளியாகின்றன, மேலும் அவனின் வல்லமையும் சக்தியும் எப்படி அனைத்து படைப்பிலும் வெளியாகின்றன, நூரே முஹம்மதிய்யாவின் தன்மை என்ன? இந்த உலகம் முஹம்மதிய்யத்தான பரக்கத்தை கொண்டு எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்பதை அறியாத, விளங்காத கல்பு குருடானவர்கள்.
தவ்ஹீத் என்ற வார்த்தைகளை மட்டுமே அவர்களால் சொல்ல முடியுமே தவிர உண்மையில் அவர்கள் தவ்ஹீதை விளங்கியவர்கள் அல்லர் . தவ்ஹீதுக்கும் அவர்களுக்கும் மலைக்கும் மடுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும். தவ்ஹீதை உணர்ந்தவர்கள் இறைநேசர்கள் தான். அவர்களாலே மட்டுமே அதை உணர முடியும். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைத்து பேசிய இவர்கள் ஒருக்காலும் தவ்ஹீத் வாதியாக முடியாது. அவர்கள் எவ்வளவுதான் குரான் ஹதீஸ் பேசினாலும் அவர்கள் முழுக்க முழுக்க ஷைத்தானின் அடிச்சுவட்டையே பின்பற்றுகின்றார்கள். நபியவர்களின் மேல் உள்ள அன்பு ஒருவனுடைய உள்ளத்தில் இருந்து போய்விட்டால் அதற்கு பிறகு அதில் எந்த குப்பையே போட்டாலும் அது ஏற்றுக்கொள்ளும்.
நமது கண்ணியத்திற்குரிய காயல் கண்மணி சதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
"மனிதனுடைய மனப்பிணி தீருவதற்க்கு மதீனா நகருக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள்". மேலும் கூறினார்கள்
"நாயகமவர்களே! எங்களுடைய இருதயப்பிணியானது உங்களுடைய மருந்தை கொண்டல்லாது சுகப்படாது. உங்களுடைய உவப்பை கொண்டல்லாது ஈமான் சரியாகாது. உங்களை ஒரு மனிதன் நேசம் வைக்கின்றானேயானால் அவன் கொடுத்துவைத்த பாக்கியசாலி!
எவ்வளவு மிக அழகாக அப்பா அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
நம்முடைய முன்னோர்களாகிய சங்கைமிகு உலமாக்கள், ஷைகுமார்கள், மற்றும் வலிமார்கள் முதலாவதாக நமக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது எப்படி முஹப்பத் வைக்க வேண்டும் என்றும் அது தான் இஸ்லாத்தின் அடிப்படையும் ஈமானின் ஆணிவேராகும் என்று நமக்கு போதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு பேச்சிலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பற்றி பேசும்போது எவ்வளவு அழகான மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்பதை அவர்களின் அந்த அழகான சங்கையான வார்த்தைகள்தான் நமது உள்ளங்களிலே நபியவர்களின் மேல் உள்ள கண்ணியத்தையும் மரியாதையேயும் உருவாக்கின்றது.
ஒருவன் அல்லாஹ்வை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு அந்த நேசம் மட்டும் போதும் நபியின் நேசம் தேவை இல்லை. அவர்கள் ஒரு சாதாரண மனிதர், அவர்களின் மீது மவ்லித் ஓத தேவை இல்லை என்று சொன்னால் அவன் செய்கின்ற அத்தனை அமலும் அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பயனில்லாமல் போய்விடும்.
நபியவர்களின் முஹப்பத் இல்லாமல் தவ்ஹீதின் வாசனையே கூட நம்மால் நுகர முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்மணி நாயகத்தின் மீது அன்பு இல்லை என்றால் இஸ்லாம் என்பது உயிரற்ற உடலை போன்றதாகும்.இஸ்லாத்தின் உயிர் என்பதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது காட்டும் அன்பும் மரியாதையும் தான் ஆகும்.
எல்லாம் வல்ல கருணையுள்ள ரஹ்மான் நம்மனைவரையும் சத்திய ஸுன்னத் வல் ஜமாஅத் என்னும் வலீமார்களின் கூட்டத்தில் இணைப்பானாக! வாழும் காலமெல்லாம் கண்மணி நாயகத்தை புகழும் பாக்கியத்தை தந்தருள்வானாக! மேலும் நாளை மஹ்ஷரில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு இருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.
- ஸூபி நாயகத்தின் நேசன்