புத்தளத்தில் மீலாத் - 2
மெளலீது வைபவம்
மீலாத் காலத்தில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது ஓதப்படும். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இதனை ஓதுவர். அத்துடன் பொது இடங்களிலும் சந்திகளிலும் இது இடம்பெறும். ஸுப்ஹான மவ்லிது, அறபுத் தமிழ் கிதாபுகள் வீடுகளில் இருந்தன. இதனை இயற்றியவர் பெயர் விபரம் தெரியவில்லை.
(ஸுப்ஹான மவ்லிது கிதாபு அட்டைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
ஆரம்பகாலங்களில் புத்தளம் நகரில் மெளலீது வைபவம் இலங்கையில் எங்குமில்லாத வகையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. சிலர் மெளலீது கந்தூரி, களரி நடத்துவதற்கு பெரிய மண்டபம் அமைத்து வீடுகட்டும் அளவிற்கு இங்கு இது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
புத்தளத்தில் இ.செ.மு. (E.S.M.) என்ற விலாசதாரரான முதலாளி வீட்டு மெளலீது புகழ்பெற்றதாகும். நகர மக்களுக்கு மட்டுமன்றி அயல் கிராமத்தவர்களுக்கும் இரவும் பகலும் கந்தூரி சாப்பாடு வழங்கப்படும்.
இதற்காக ஆடுகள் மட்டுமே அறுக்கப்படும். இந்தியாவில் இருந்து அதற்காக கப்பலில் ஆடுகள் கொண்டுவரப்பட்டன. மன்னாரில் இருந்தும் ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவரப்படுவதுமுண்டு. புத்தளம் நோர்த் வீதியில் இவ்வீடு இன்றும் உண்டு.
( வீட்டின் படம் இணைக்கப்பட்டுள்ளது)
முதலாளி வீட்டு, 'மெளலீது களரி'க்காகப் பயன்படுத்தப்பட்ட சகல விதமான பீங்கான் கோப்பைகளும் இங்கிலாந்தில் இருந்து விஷேடமாகத் தருவிக்கப்பட்டவையாகும். அதில் ஒவ்வொன்றிலும் இ.செ.மு. என்ற விலாசம் பொறிக்கப்பட்டிருந்தது.
சஹன்கள், பீங்கான்கள் (காப்பிளான்கள்) , கோப்பைகள், சிறிய பெரிய தட்டைப் பீங்கான்கள், பீரிசுகள், நீர் வைக்கும் கோப்பைகள் (போஸ் கோப்பை), நீர் அள்ளும் சிறிய கோப்பைகள் என எல்லாப் பாத்திரங்களிலும் இப்பெயர் பொறிக்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. தேவையான அளவை விட அதிகமாகவே அவை இருந்தன. உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களிலும் விலாசம் பொறிக்கப்பட்டிருந்தது.
(படம் இணைக்கப்பட்டுள்ளது)
புத்தளம் நகரில் சஹன் முறையில் சேர்ந்து சாப்பிடும் மரபு இன்றும் இல்லை. எனவே தனித்தனியே சாப்பிடுவதற்குத் தேவையான வகையில் பாத்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
முதலாளியின் உத்தரவின் பிரகாரம் ஊராரை சாப்பிட அழைப்பர். பள்ளி முஅத்தின், வீடு வீடாகச் சென்று, "இந்த வளவுக்குள் இருக்கும் அனைவரையும் முதலாளி அவர்கள் ஸலாம் சொல்லி மெளலூதுக்கு வருமாறு கூப்பிடுகிறார்" என்று கூறுவார்.
மெளலீது ஓதும் லெப்பைமார் உட்பட அனைவருக்கும் பணம் சன்மானமாக வழங்கப்படும். ஓதும் இடத்துக்கு மேலாக வெண்ணிற சீலை கட்டி சுற்றிவர வர்ண சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதில் பணமுடிப்புக்கள், சுவையான தீன் பண்டங்கள், பரிசுப்பொருட்கள் போன்றன கட்டித் தொங்கவிடப்படும்.
மெளலீது முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று, ஓதி, இறுதித் தருவாயில் குதூகலமாகக் குதித்துக் குதித்து அவற்றைப் பிய்த்துப் பிடுங்கி எடுப்பர். (தலைப் பாத்திஹா ஓதுவதிலும் இந்த நடைமுறை இருந்தது)
மெளலீது ஓதி முடிந்த பின்னர், சாப்பாடு வரும் வரை பதம் பாடுவர். இதில் போட்டியும் இடம்பெறும். புலவர்கள் கலந்துகொண்டு தாம் இயற்றிப்பாடுவதும் உண்டு. அனைவருக்கும் சாப்பாடு வைத்த பின்னர் பொறுப்பான ஒருவர் 'பிஸ்மி' (ஆரம்பம்) சொல்ல, சாப்பிட ஆரம்பிப்பர். அதே போன்று அனைவரும் சாப்பிட்டு முடிந்து இறை பிரார்த்தனையின் பின்னர், அனைவரும் ஒன்றாக எழுந்து செல்வர். அதில் ஒரு ஒழுக்க நடைமுறை பின்பற்றப்பட்டது.
(எனது தாயாரின் தந்தை, அசன் நெய்னா மரைக்கார் அவர்களின் கையெழுத்திலான பதம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது).
புத்தளம் நகரில், இ.செ.மு. முதலாளி வீட்டில் மட்டுமன்றி முஹம்மது காசிம் மரைக்கார் (ஊர் மரைக்கார்), அப்பாஸ் மரைக்கார், மஜீது மரைக்கார், ஜலாலுதீன் மரைக்கார், சி.அ. க. ஹமீது ஹுசைன் மரைக்கார், போன்றோரின் வீடுகளிலும் நடந்த மெளலீதுகள் குறிப்பிடக்கூடியவை. இத்தகைய வைபவங்கள் ஊரார்,உற்றார், உறவினர்கள் ஒன்று சேர்வதற்கும் புத்துணர்வு ஏற்படுவதற்கும் மனமுரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு அன்புபாராட்டுவதற்கும் பேருதவி புரிந்தன.
(இப்பிரமுகர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
(இன்னும் வரும்)
© Z A. Zanhir - 01. 09. 2025