ஸுப்ஹானல்லாஹ்!
பக்தாதிலிருந்து பாராளும் “பாஸுல் அஷ்ஹப்” முஹ்யித்தீன் ஆண்டகையின் பொற் பாதம் சுமக்க மறுத்தவர் பன்றியைச் சுமந்தார்.
தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
புனித றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படும் வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஹிஜ்ரீ 470ம் ஆண்டு றபீஉனில் ஆகிர் பிறை 11ல் ஜீலான் நகரில் பிறந்து ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் பிறை 10ல் பக்தாத் நகரில் “வபாத்” இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள். தந்தையின் பெயர் அபூ ஸாலிஹ், தாயார் பெயர் பாதிமா.
கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகைக்கு மொத்தம் 49 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆண் குழந்தைகள் 27 உம், பெண் குழந்தைகள் 22 உம் ஆகும். தன்னுடைய விலா எழும்பில் காணப்பட்ட 50வது குழந்தையை தனது அற்புதத்தின் மூலம் “முர்ஸிய்யா” நகரில் வாழ்ந்த நபீ வழித் தோன்றல் ஒருவருக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.
“உந்துலுஸ்” ஸ்பெய்ன் நாட்டில் உள்ள “முர்ஸிய்யா” எனும் நகரில் அஸ்ஸெய்யித் அலீ என்பவர் வாழ்ந்து வந்தார். தனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாததையிட்டு பெரும் கவலையுடன் தனது வீட்டு முற்றத்தில் சோகத்தில் இருந்து கொண்டிருக்கும் வேளை அவ்வழியால் சென்ற ஒரு “மஸ்தான்” “உனக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமானால் “பக்தாத்” நகர் சென்று அங்கு ஆன்மிக அரசாட்சி புரியும் அஸ்ஸெய்யித் அப்துல் அப்துல் காதிர் ஜீலானீ பாதம் பற்றவும்” என்றார்.
குறித்த மஸ்தானின் அறிவுரையை அல்லாஹ்வின் அறிவுரையாக - அறிவிப்பாகக் கருதி பக்தாத் நகர் வந்தார் அஸ்ஸெய்யித் அலீ அவர்கள். கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்களின் திருச் சமூகம் சென்று தனது குறையை முறையிட்டவர்களாக மண்டியிட்டார்கள்.
சிறிது நேரம் கண்ணை மூடித் தியானித்த கௌதுல் அஃளம் அன்னவர்கள் உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லையே என்றார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத அஸ்ஸெய்யித் அலீ அவர்கள் வலீமார்களின் எதார்த்தம் புரிந்திருந்த காரணத்தால் உங்களால் முடியும் நாயகமே! என்று கூறி மன்றாடினார்கள்.
தன்னை நாடி பல நூறு மைல் தொலைவிலிருந்து வந்தவரை வெற்றுக் கையுடன் திருப்பியனுப்ப விரும்பாத கௌதுல் அஃளம் ஆண்டகை அவர்கள் “உங்களின் விலாவில் குழந்தைகள் ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு - என்னுடைய விலாவிலிருந்து 49 குழந்தைகள் வெளியாகிவிட்டன. இன்னும் ஒன்று மீதமாயுள்ளது. வேண்டுமானால் அதை உங்களுக்கு மாற்றித் தரலாம்” என்றார்கள். எப்படியேனும் தனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று விரும்பிய அஸ்ஸெய்யித் அலீ அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
தனது முதுகுப் பக்கம் வந்து அலீ அவர்களின் முதுகை வைத்து - விலாவுடன் விலாவை வைத்து உரசும்படி ஏவினார்கள். கௌதுல் அஃளம் அவர்களின் விலாவிலிருந்த குழந்தை அலீ அவர்களின் விலாவுக்கு மாறிவிட்டது. மன மகிழ்வுடன் தாயகம் திரும்பிய அலீ அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையே உலகம் போற்றும் இறைஞானி மாமேதை இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாவர். இது வரலாறு.
இந்த வரலாறை ஸூன்னீகளான நாங்கள் முழு மனதுடன் நம்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் அதிகம் படித்த மகான்கள் இதைச் சொன்னால் நையாண்டி செய்து கௌதுல் அஃளம் அவர்களையும், இப்னு அறபீ அவர்களையும் கேவலப்படுத்துவார்கள்.
கௌதுல் அஃளம் அவர்களின் இவ் அற்புதத்தை இன்றை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆண்கள் குழந்தைப் பாக்கியமற்றவர்களாக இருந்தால் இன்னொருவரின் விந்தணுவைப் பெற்று அதை அவரின் மனைவியின் கருவில் உட் செலுத்தி குழந்தையைப் பெற்றெடுத்தல். அல்லது பெண் குழந்தைப் பாக்கியம் இல்லாதவளாக இருந்தால் சோதனைக் குழாய்கள் மூலம் கருக்கட்டச் செய்து குழந்தையைப் பெற்றெடுத்தல் என்று பல் வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம் முறைகள் இஸ்லாமிய “ஷரீஆ”வுக்கு முரணானவையாக இருந்தாலும் உலகில் இன்று இவ்வாறு செய்து கொள்கிறார்கள்.
ஆனால் ஒருவர் தனது அற்புதத்தின் மூலம் தனக்கென்றிருக்கும் வாரிசை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தல் “ஷரீஆ”வுக்கு முரணாக ஆகாது. காரணம் அவர் தன்னுடைய விந்தணுவை எடுத்துக் கொடுப்பதோ, சோதனைக் குழாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வதோ அல்ல. இவ்வாறு பல வலீமார்கள் செய்துள்ளார்கள். காரணக் கடல் நாஹூர் நாயகம் அன்னவர்களும் தனக்கென்றிருந்த வாரிசை தன்னுடைய அற்புதத்தின் மூலம் மாற்றிக் கொடுத்து அதில் பிறந்த குழந்தைதான் “தாதா யூஸுப் வலிய்யுல்லாஹ்” றஹிமஹுல்லாஹ் அன்னவர்களாவர்.
குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் வாழ்க்கை சரிதையை வாசித்துப் பார்த்தால் தனது வாழ்வில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி உலகை அதிர வைத்தவர்கள் என்றே கூற வேண்டும். அவர்களின் அற்புதங்களை எழுதுவதாயின் பல பாகங்கள் கொண்ட புத்தகம்தான் எழுத வேண்டும். அவற்றைத் தவிர்த்து மேலே தலைப்பில் குறிப்பிட்ட விடயத்தை இங்கு சுட்டிக் காட்டலாம் என்று விரும்புகிறேன்.
குத்பு நாயகம் அன்னவர்கள் ஒரு நாள் “ஜத்பு”டைய நிலை மிகைத்து قَدَمِيْ هَذِهِ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ “என்னுடைய இக் கால் பாதம் அனைத்து வலீமாரின் தோள்களின் மீதும்” என்றார்கள். அன்று அவர்கள் சொன்ன நேரம் அவர்களின் “ஜத்பு” மிகைத்த இவ்வார்த்தையைச் செவியேற்ற உலகில் காணப்பட்ட அனைத்து வலீமார்களும் ஏற்றுச் செவி சாய்த்தார்கள். தமது தோள்களை பணித்துக் கொடுத்தார்கள்.
ஆனால் அஷ்ஷெய்குஸ் ஸன்ஆனீ என்பவர் மட்டும் அவர் வலீயாக இருந்தும் மறுத்துவிட்டார். நானும் வலீமாரில் உள்ளவன்தான். இவருடைய சொல்லுக்கு பணிந்து நான் தோளை சாய்க்கத் தேவையில்லை என்றார்.
இவ்விடயம் கௌதுல் அஃளம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது. “என் பாதம் சுமக்க மறுத்தவர் தோளில் பன்றி” என்றார்கள் கௌதுல் அஃளம் அவர்கள்.
பின்பு குறித்த ஷெய்கு ஸன்ஆனீ என்பவர் புனித மக்கமா நகர் நோக்கிச் செல்ல விரும்பி தனது 400 சீடர்களுடன் சென்றார். இடைவழியில் ஷெய்கு ஸன்ஆனீயின் பார்வை ஒரு கிறித்துவப் பெண் மீது விழுந்தது. அவளோ மிக அழகானவள். அதே நேரம் அவள் சாராயம் விற்பனை செய்பவளாகவும் இருந்தாள். ஷெய்கு ஸன்ஆனீ அவள் மீது காதல் வயப்பட்டு அவளுக்கு கட்டுப்பட்டு நடக்கலானார். எந்த அளவென்றால் அவள் இவரை பன்றிகளை மேய்க்கச் சொன்னாள். ஒரு நாள் பன்றிக் குட்டிகளை அவற்றின் காலில் முட்கல் குத்தாமலிருப்பதற்காக தோளில் சுமக்குமாறும் சொன்னாள்.
ஷெய்கின் இவ் இழி செயல் கண்ட முரீதீன்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இருவர் மட்டும் செல்லவில்லை. (அவர்கள் அஷ் ஷெய்கு முஹம்மத் பரீதுத்தீன், அஷ் ஷெய்கு மஹ்மூத் அல் மக்ரிபீ ஆகியவர்களாவர்) அவ்விருவரும் இந்த சோதனை என்ற நெருப்பை அணைக்க வேண்டும் என்றார்கள். இந்த நிலை ஷெய்கு அவர்களுக்கு ஏற்படக் காரணம் அவர் கௌதுல் அஃளம் அன்னவர்களுக்கு தோள் சாய்க்காததினாலேயாகும் என்பதை அவ்விருவரும் அறிந்திருந்தார்கள்.
இவ்விருவரிலும் மஹ்மூத் அல்மக்ரிபீ என்பவர் தன்னுடைய கால் சறுகிய ஷெய்குடனிருக்க மற்றவர் - முஹம்மத் பரீதுத்தீன் அவர்கள் பக்தாத் நகர் நோக்கி விரைந்தார்கள். அங்கு சென்று கௌது நாயகத்துக்குப் பணிவிடை செய்தார்கள். தன்னுடைய ஷெய்கை மன்னிக்கும்படி கௌது நாயகத்திடம் வேண்டினார்கள். உனக்காக நான் மன்னிக்கிறேன் என்று அஷ்ஷெய்கு ஸன்ஆனீ அவர்களை மன்னித்துக் கொண்டார்கள்.
கௌது நாயகம் அவர்கள் இவ் வார்த்தையை சொன்ன வேளை அஷ்ஷெய்கு ஸன்ஆனீ அவர்கள் தானிருந்த “ஙப்லத்” எனும் மறதியை விட்டும் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் காதலித்த அந்த நஸ்றானிய்யத்தான பெண்ணை வெறுக்கலானார்கள். முன்பு தானிருந்த அந்தஸ்தை அடைந்து கொண்டார்கள். ஆனாலும் அந்தப் பெண் இவர்களை - அஷ்ஷெய்கு ஸன்ஆனீ - நேசிப்பதை விடவில்லை. இவர்கள் அவளை நோக்கி “நீயோ காபிரான பெண். நானோ முஸ்லிம். நமக்குள் பொருத்தம் ஏற்படாது” என்று கூறி மறுத்தார்கள். ஆனாலும் அந்தப் பெண் இவர்களுக்கு நேர்பட்டு புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவியது மட்டுமன்றி அவளுடைய ஆதரவாளர்களும் புனித இஸ்லாத்தை தழுவி ஷெய்கு அன்னவர்களுக்கு பணி செய்பவர்களானார்கள். அல்லாஹு அக்பர்.
இந்தச் சம்பவத்திலிருந்து நாம் இம்மாதத்தின் கதாநாயகர் குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை அவர்களின் அந்தஸ்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் விடயத்தில் அவர்களின் எதார்த்தம் புரியாமல் நாக்கை நுழைப்பது அறிவுடமையல்ல.
تَصْدِيْقُكُمْ نِعْمَ الْبِضَاعَةُ مُحْيِ الدِّيْنْ - تَكْذِيْبُكُمْ سُمُّ سَاعَةٍ يَا مُحْيِ الدِّيْنْ
உமை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார் முஹ்யித்தீன்!
உமைப் பொய்யென்றோர் கடும் நஞ்சை உண்பார் முஹ்யித்தீன்!
அல்லாஹு தஆலா எம் கண்மணி நாயகம் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் “உம்மத்” சமூகத்தில் தோன்றிய அவர்களின் “வாரித்” அநந்தரக் காரர்களில் கௌதுனா முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக விஷேடமானவர்கள். பெரும் பெரும் வலீமார்கள் கூட அவர்களின் தரிசனத்தைப் பெற்றுள்ளார்கள். ஸெய்யிதுனா ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ, ஷுஐப் அபூ மத்யன் அல்கவ்த், ஸுல்தானுல் ஆரீபீன் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ றழியல்லாஹு அன்ஹும் போன்றோரைக் குறிப்பிடலாம்.
மாத்திரமின்றி ஸூபிய்யாக்களிடம் குத்புகள் என்று கணிக்கப்படும் நால்வரில் ஒருவரான ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மதுல் கபீர் அர்ரிபாயீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு “வஸிய்யத்” உபதேசிப்பவர்களாக இருந்தார்கள்.
“நீங்கள் பக்தாத் நகர் சென்றால் குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் உயிருடனிருந்தால் அவர்களை தரிசிக்க முன் எந்த ஒன்றையும் முற்படுத்திவிடாதீர்கள். அவர்களின் மறைவின் பின் அவர்களின் புனித “கப்ர் ஷரீப்” ஐ தரிப்பதை விட எதையும் முற்படுத்திவிடாதீர்கள். ஆன்மிக நிலை பெற்ற எந்த மகானாயினும் பக்தாத் நகர் சென்று அவர்களைச் சந்திக்கவில்லையானால் அவருடைய ஆன்மிக நிலை உருவப்பட்டுவிடும். அவர் அதை மரணத்துக்கு முன்பேனும் இழந்து விடுவார். அவர்களைக் காணதாவன் நஷ்டவாளியே”
கௌதுல் அஃளம் ஆண்டகை அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். “என்னைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். அல்லது என்னைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனைக் கண்டவனுக்கு சுபசோபனம். என்னைக் காணாதவன் நஷ்டவாளியே”
எல்லாம் வல்ல அல்லாஹ் கௌதுனா, அல்குத்புர் றப்பானீ, வல் கவ்துஸ்ஸமதானீ, வல் ஹைகலின் நூறூனீ, அல் பாஸுல் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகையை கனவிலும், நனவிலும் காணும் பாக்கியத்தை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!