நபீ பெருமானின் ﷺ 'நபித்துவ முத்திரை':
ஒரு 'புறா முட்டையும்' பொதிந்திருக்கும் வானுலக இரகசியமும்!
தொகுப்பு :- மெளலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.
ஈமானின் கண்ணே! அண்ணலாரின் அன்பே!
அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிலும் மேலான நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமேனியில் இருந்த ஒவ்வொரு அம்சமும், அவர்கள் இறுதித் தூதர் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரமாகும்.
அந்த மகத்தான அடையாளங்களில் மிக முக்கியமானது, அவர்களின் இரு தோள்களுக்கு மத்தியில் பொறிக்கப்பட்டிருந்த 'நபித்துவத்தின் முத்திரை' (خاتم النبوة)" காதமுன் நுபுவ்வஹ்"ஆகும்.
இது, சதா காலமும் அவர்கள் மீதான அல்லாஹ்வின் கிருபையையும், நேசத்தையும் பறைசாற்றும் அற்புதப் பதிவாகும்!
நபீ நேசம் எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்கும் நாம், அந்த முத்திரையின் தோற்றத்தையும், அதைச் சுற்றியுள்ள ஆன்மீக இரகசியங்களையும் அறிவது, அவர்கள் மீதான நம்முடைய பற்றை இன்னும் ஆழமாக்கும்.
1. ஹதீஸ்களின் ஒளி:
ஒரு 'புறா முட்டையின்' உருவம்.
நபித்துவத்தின் முத்திரை குறித்து, அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆழமான வர்ணனைகளை வழங்கியுள்ளனர்.
அது ஒரு வெறும் மச்சமோ, தழும்போ அன்று; மாறாக, அது உடலில் இருந்து சற்று புடைத்து இருந்த ஒரு சதைப்பகுதி (غُدّة حمراء بارزة) ஆகும்.
அளவு மற்றும் வர்ணனை:
ஜாபிர் இப்னு ஸமுரா (رضي الله عنه) றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
: «رَأَيْتُ الخَاتَمَ عِنْدَ كَتِفِهِ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ يَشْبَهُ جَسَدَهُ»
"நான் (நபித்துவ )முத்திரைத் தழும்பை, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோள்பட்டைக்கு அருகில் புறாவின் முட்டை போலவும், அவர்களுடைய உடல் நிறத்தை ஒத்ததாகவும் கண்டேன்." என ஜாபிர் இப்னு ஸமுரா (رضي الله عنه) றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
ஆதாரம்:-(ஸஹீஹ் முஸ்லிம்).
«فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زَرِّ الْحَجَلَةِ»
"நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் நின்று, அவர்களுடைய இரு தோள்களுக்கு மத்தியில் 'ஹஜ்லா' பறவையின் முட்டை போல இருந்த முத்திரையைப் பார்த்தேன்."
ஸாஇப் இப்னு யஸீத் (رضي الله عنه) றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
(இமாம் திர்மிதி (رحمه الله) அவர்களின் கூற்றுப்படி, 'ஸர்ருல் ஹஜ்லா' என்பது அதன் முட்டையைக் குறிக்கும்.)
: «عِنْدَ نَاغِضِ كَتِفِهِ الْيُسْرَى جُمْعاً. عَلَيْهِ خِيلاَنٌ كَأَمْثَالِ الثّآلِيلِ»
"அது இடது தோள்பட்டையின் மேற்புறத்தில் ஒரு திரட்சியாக (உருண்டையாக) இருந்தது.
அதன்மீது மருக்கள் போல (சிறுசிறு திட்டுக்களாக) மச்சங்கள் இருந்தன."
என அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ்
(رضي الله عنه)றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இமாம் குர்துபி (رحمه الله) அவர்கள் கூறுகையில்,
"நபித்துவத்தின் முத்திரைத் தழும்பு, இடது தோள்பட்டைக்கு அருகில் சிவந்த நிறத்தில், புடைத்த ஒன்றாக இருந்தது. சிறியதாக இருந்தால் புறாவின் முட்டை போலவும், பெரிதாக இருந்தால் கையின் திரட்சி போலவும் இருக்கும் என்பதில் நம்பகமான அனைத்து ஹதீஸ்களும் ஒத்துப்போகின்றன."
2. நபித்துவத்தின் அசைக்க முடியாத அத்தாட்சி
இந்த முத்திரை, வெறும் உடல் சார்ந்த அடையாளம் அல்ல; மாறாக, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ﷺ) அவர்கள் உலகிற்கான இறுதித் தூதர் என்பதற்கான தெய்வீக முத்திரையாகும்.
வேதக்காரர்களின் அடையாளம்:
இப்னு ரஜப் (رحمه الله) அவர்கள் கூறுவது போல, இந்த முத்திரை நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.
முந்தைய வேதக்காரர்கள் (அஹ்லுல் கிதாப்), உலகை ஆளப்போகும் இறுதி நபியை அறிந்துகொள்ள இந்த முத்திரையைப் பற்றியே விசாரித்தார்கள்.
பஹீரா பாதிரியாரின் சாட்சியம்:
சிறு வயதில் நபீ (ﷺ) அவர்களைக் கண்ட பஹீரா பாதிரியார், அபூ தாலிப் (றழி) அவர் களிடம்..
"இவரை "தோள் குருத்தெலும்பின்" (غُضْروفِ كَتِفِهِ) அடியில், ஆப்பிள் போல இருக்கும் நபித்துவத்தின் முத்திரை மூலமாக நான் அறிவேன்" என்று கூறினார்.
கைசர் சக்கரவர்த்தியின் தேடல்:
ரோமப் பேரரசின் கைசர், தபூக்கில் இருந்த நபீ (ﷺ) அவர்களைக் குறித்து விசாரித்து, அவர்களின் முத்திரைத் தழும்பைப் பார்த்து வரும்படி ஒரு தூதுவரை அனுப்பிய சம்பவமும் இதற்குச் சான்று.
ஈமானின் இன்பப் பிரவேசம்:
ஸல்மானுல் ஃபார்ஸி (رضي الله عنه) றழியல்லாஹு அன்ஹு அவர்களின் இஸ்லாம் தழுவிய வரலாறு, இந்த முத்திரையின் முக்கியத்துவத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
சத்திய நபியைத் தேடி பல நாடுகளையும் கடந்து வந்த ஸல்மான்
(رضي الله عنه) றழியல்லாஹு அன்ஹு அவர்கள் , தாம் கற்றறிந்த மூன்று அடையாளங்களைச் சோதித்தபின், நபீ (ﷺ) அவர்களின் முதுகைப் பார்க்க அனுமதி கேட்டார்கள்.
«فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ ﷺ اسْتَدَرْتُهُ، عَرَفَ أَنِّي اسْتَثْبَتُ فِي شَيْءٍ وُصِفَ لِي، قَالَ: فَأَلْقَى رِدَاءَهُ عَنْ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى الْخَاتَمِ فَعَرَفْتُهُ، فَانْكَبَبْتُ عَلَيْهِ أُقَبِّلُهُ وَأَبْكِي...»
"நான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ﷺ) அவர்களை சுற்றி நின்று பார்ப்பதை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கண்டபோது, நான் வர்ணிக்கப்பட்ட ஏதோவொன்றை உறுதியாக்கப் பார்க்கிறேன் என்பதை அறிந்துகொண்டு, தம் போர்வையைத் தமது முதுகிலிருந்து அகற்றினார்கள்.
நான் அந்த முத்திரையைப் பார்த்தேன்; அதை நான் அறிந்துகொண்டேன். உடனே அதன்மீது நான் விழுந்து முத்தமிட்டேன், அழுதுகொண்டிருந்தேன்..." என ஸல்மானுல் பார்ஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது பேரின்ப அதிர்ச்சியை பகர்கிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்).
அல்லாஹ்வின் தூதர் மீது முத்தமிட்டு அழுத அந்தக் கணம், ஒரு முத்திரை ஈமானுக்கு அளித்த உத்வேகம்! சுப்ஹானல்லாஹ்!
3. ஹஸ்ஸான் இப்னு தாபித் (رضي الله عنه) அவர்கள்
இந்த முத்திரையை நபீ நேசத்துடன் இணைத்து, அழியாப் பாடலாக வடிக்கிறார்கள்
أَغَرُّ عَلَيهِ لِلنُّبُوَّةِ خَاتَمٌ
مِنَ اللَّهِ مَشهُودٌ يَلُوحُ وَيَشهَدُ
(அந்த ஒளியின் மீது நபித்துவத்தின் முத்திரை உள்ளது, அது அல்லாஹ்வால் சாட்சியமாக்கப்பட்டது, பிரகாசிக்கிறது.
இந்த வரிகள், முஹம்மத் (ﷺ) அவர்களின் நபித்துவம் ஓர் உலகியல் பதவி அல்ல; அது இறைவனால் கொடுக்கப்பட்ட நேரடிப் பத்திரம் என்பதைப் பறைசாற்றுகிறது!
4. முத்திரையின் ஞானம் (الحكمة):
ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு.
இந்த முத்திரை ஏன் இரு தோள்களுக்கு மத்தியில், குறிப்பாக இடது புறம் வைக்கப்பட்டது?
அறிஞர்கள் கூறும் அழகிய ஞானங்களில் ஒன்று:
மனித உடலில், இடது தோள்பட்டையின் குருத்தெலும்பின் முனை (نغض كتفه اليسرى) வழியாகத்தான் ஷைத்தான் மனிதனுக்குள் நுழைந்து குழப்பங்களை விதைப்பான் என்று கூறப்படுகிறது.
ஆனால், அல்லாஹ்வின் தூதருக்கு (ﷺ) அல்லாஹ் அந்த இடத்திலேயே நபித்துவ முத்திரையைப் பொறித்து, அவர்களை ஷைத்தானியத் தீங்கில் இருந்து முற்றிலுமாகப் பாதுகாத்துவிட்டான்.
இதுவே அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஈடற்ற 'இஸ்மா'
(பாவத்திலிருந்து பாதுகாப்பு) ஆகும்!
நபீ பெருமானின் (ﷺ) திருமேனியில் இருந்த இந்த 'நபித்துவ முத்திரை', நாம் அவர்களின் மீதும், அவர்களின் சத்தியத் தூதுச் செய்தி மீதும் கொள்ளும் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அந்த முத்திரை பிரகாசிப்பது போல, நம்முடைய இதயங்களும் அண்ணலாரின் அன்பால் பிரகாசிக்க வேண்டும்.
அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறி, அவர்களின் சுன்னாவைப் பேணி வாழ்ந்து, அந்த உயிரினும் மேலான எம் இறுதித் தூதர் கண்மணி நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஹப்பத்தைப் பெறுவோமாக! ஆமீன்!🤲🤲🌹
நபித்துவ முத்திரையின் பயன்கள் அடுத்து வரும்... إن شاء الله







