✨🪕🎷️️🎼உலகின் முதல் இசைமேதை தாவூத் நபியவர்கள்🎶🎵🎷🎻✨️
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவயதில் ஆட்டிடையனாக இருந்தவர்கள். ஆடுகளை மேய்ப்பதற்காக அவர்கள் வாழ்ந்துவந்த ஊரிலிருந்து சற்றுத் தொலைவிலே உள்ள மலைச்சாரலுக்கு தினமும்
ஆடுகளை ஓட்டிச் செல்வார்கள்.
மலைச்சாரலில் ஆடுகளை மேயவிட்டு அங்குள்ள பாறையொன்றில் ஏறிக்கொண்டு மலையில் மோதிச் செல்லும் தென்றல் காற்றின் ஓசையையும் அருகில் ஓடும் நதிநீரின் சலசலப்போசையையும் உன்னிப்பாய்க் கூர்ந்து கவனிப்பார்கள். அதற்கேற்றவாறு தான் கூடவே வைத்திருக்கின்ற புல்லாங்குழலை எடுத்து இராகத்துடன் ஊதுவார்கள்!
தாவூத் நபியவர்கள் வாசிக்கும் அப்புல்லாங்குழல் ஓசையானது அந்த மலைச்சாரலில் வீசும் தென்றலோடும் அங்கு ஓடும் நதிநீரின் சலசலப்போசையோடும் இணைந்து மெய்மறக்க வைக்கும் இலாகிரி இசையாக அப்பகுதியில் ஒலிக்கும்!
பின்னாட்களில் கோலியாத் எனும் மாபெரும் பலவானை, ஒரு சிறு
கவன்கல்லால் வீழ்த்தியதன்பின் தமது சமுதாயத்தவர்களின் அடிமைச் சங்கிலியை உடைத்து தாவூத் நபியவர்கள் மன்னராக முடிசூடினார்கள்!
தாவூத் நபியவர்களுக்கு இறைவனால் "ஸபூர்" வேதம் வழங்கப்பட்டது. இவ்வேதம் முழுக்க முழுக்க சங்கீத இசைக் குறிப்பு வடிவிலேயே அமைந்திருந்தது! தாவூத் நபியவர்கள் ஸபூர் வேதத்தை ஓதும் பொழுது யாழ்(Harp) எனப்படும் ஒருவகை நரம்பினால் மீட்டப்படுகின்ற இசைக்கருவியை வாசிப்பார்கள்.
யாழை மீட்டியபடியே தாவூத் நபியவர்கள், இனிய குரலோசையிலும் அற்புதமான மெட்டிலும் ஸபூர் வேதத்தை ஓதும் பொழுது ஜின்கெளல்லாம் அங்கே வந்து அணிவகுத்து நிற்கும்; பறவைகளும் விலங்கினங்களும் இறையைப் புகழ்ந்தவாறு தாவூத் நபியவர்களைச் சுற்றிலும் ஒருவித மயக்கத்தில் நின்று கொண்டிருக்கும்!!
தாவூத் நபியவர்களுக்கு இறைவன் இசை ஞானத்துடன் இரும்பை உருக்கி வடிக்கும் கலையையும் கற்றுக்கொடுத்திருந்தான். ஸபூர் வேதத்தை இசையுடன் ஓதியே தாவூத் நபியவர்கள் இரும்பை உருக்குவார்கள்!
ஒரு முறை தாவூத் நபியவர்கள் ஒரு பெரும் போரில் வென்று புனித உடன்படிக்கைப் பேழையை(Ark of the covenant) தமது தேசத்தின் பட்டணத்திற்குள் முதன் முறையாகக் கொண்டுவரும்பொழுது இசை வாத்தியக் கருவிகள் முழங்க மேள தாளத்துடன் தாவூத் நபியவர்கள் நடனமாடினார்கள்! இந்த நடனத்தைப் பற்றி முன்னைய வேதங்களில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
இறைத்தூதராகவும் மாமன்னராகவும் ஏககாலத்தில் திகழ்ந்த தாவூத் நபியவர்களுக்கு இறைவன், சங்கீத ஞானத்தையே ஸபூர் வேதமாக அளித்து மாபெரும் இசைமேதையாகவும் அவர்களை ஆக்கியருளினான்!
✍️🏼ஏ.எஸ்.எம். முஜாஹித்








