*முஹ்யித்தீனும், முஈனுத்தீனும்!*
_தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ _றப்பானீ
கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 470ல் பிறந்து ஹிஜ்ரீ 561ல் “வபாத்” இவ்வுலகை விட்டும் மறந்தார்கள். அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 536ல் பிறந்து ஹிஜ்ரீ 633ல் “வபாத்” இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள். கவ்துனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்கள் “வபாத்” ஆகின்ற போது ஸெய்யிதுனா ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ நாயகம் அன்னவர்கள் 25 வயது வாலிபனாக இருந்தார்கள். கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அன்னவர்களை அவர்களின் இறுதி காலத்தில் ஹாஜா நாயகம் சந்தித்துள்ளார்கள்.
கவ்துனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆண்டகை அவர்கள் قدمي هذه على رقبات كل ولي لله “என்னுடைய பொற் பாதம் அனைத்து வலீமாரின் தோளிலும்” என்று சொன்ன போது ஹாஜா நாயகம் இள வயதுள்ளவராக இருந்தார்கள். “குறாஸான்” இல் உள்ள ஒரு மலை மீது ஆன்மிகப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் இவ்வாறு சொன்னதை செவியுற்ற அவர்கள் அனைத்து வலீமார்களும் தங்களின் தோள்களைத்தான் சாய்த்துக் கொடுத்தார்கள். மாறாக ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்கள் தனது தலையை பூமியில் வைத்து நாயகமே உங்களின் பொற்பாதம் என் தோளில் அல்ல என் தலை மீது என்றார்கள். இவ்வாறு ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்கள் சொன்னதை கவ்துனா முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அவ்லியாஉகள் பிரசன்னமாகியிருந்த சபையிலே கவ்து நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் ஹாஜா நாயகத்தின் விடயத்தில் பின்வருமாறு சொன்னார்கள். “கியாதுத்தீன் அவர்களின் மகன் எனக்குத் தோள் சாய்க்கும் விடயத்தில் அனைத்து வலீமாரையும் முந்திவிட்டார்கள். அவர்களின் இந்தப் பணிவின் காரணமாக அவர்கள் அல்லாஹ்விடத்திலும், பெருமானார் அவர்களிடத்திலும் விருப்பத்துக்குள்ளானவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவார்கள்” என்றும் கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே ஹாஜா நாயகம் அவர்கள் ஆனார்கள்.
அஷ்ஷெய்கு முஹம்மத் ஜமாலுத்தீன் அஸ்ஸுஹ்றவர்தீ அவர்கள் “ஸியறுல் ஆரிபீன்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ஹாஜா நாயகம் அன்னவர்கள் கவ்துனா முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களுடன் இரவு பகலாக 57 நாட்கள் ஒரு மலையில் இருந்தார்கள். அவர்களிடமிருந்து ஆன்மிக இரகசியங்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புகழாரம்:
مَا كَانَ وَلِيٌّ فِى مَقَامِ الْمَعْشُوْقِيَّةِ تَحْتَ السَّمَاءِ مِثْلَ الْغَوْثِ الْأَعْظَمِ وَلَا يَكُوْنُ،
வானத்தின் கீழ் கௌதுல் அஃளம் போல் “மஃஷூகிய்யத்” இறை காதல் எனும் அந்தஸ்தில் எவரும் ஆகவுமில்லை. ஆகப் போவதுமில்லை.
கவ்துனா முஹ்யித்தீன் ஆண்டகை போல் எவரும் இருக்கவுமில்லை. அவர்களின் மறைவிற்குப் பின் அவர்கள் போல் எவரும் ஆகப் போவதுமில்லை என்று நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சான்று பகர்ந்திருக்கிறார்கள். விடயம் இவ்வாறிருக்க “குத்பு நாயகம் என்னிடம் வந்து பாடம் படித்துச் செல்கிறார்கள்” என்று சொன்ன அயோக்கியனை நம்பி ஏமாந்த கூட்டமும் இன்று உலகில் வாழத்தான் செய்கிறது. أَعَاذَنَا اللهُ அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
இவ்வாறு இந்த அயோக்கியன் சொன்னதாக ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களிடம் சொல்லப்பட்ட போது அவர்கள், “உண்மையில் இவ்வாறு இவன் சொல்லியிருந்தால் இவன் மரணித்து இவனின் பிரேதத்தை எடுத்துச் செல்லும் போது துர் நாற்றம் வீச வேண்டும். மக்கள் தங்களின் மூக்குகளை தமது கரங்களால் பொத்திக் கொள்ள வேண்டும்” என்று எண்ணினார்களாம்.
அதேபோல் அவனின் மரணமும், அடக்கமும் துர் நாற்றமுடையதாகவே காணப்பட்டது. அவனின் பிரேதத்தின் மீது மார்க்க அறிவில்லாத மூடர்கள் சிறு நீர் கூடக் கழித்தார்கள். அவ்லியாஉகளை குறிப்பாக குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை எள்ளி நகையாடியவர்களின் நிலையை அறிய இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
وقال الشّيخ أبو مدين المغربي رضي الله تعالى عنه: لقيت الخضر عليه السّلام، فسألتُه عن مشائخ المشرق والمغرب فى عصرنا، وسألتُه عن الفرد الأفخم والغوث الأعظم فقال هو إمام الصدّيقين وحجّة العارفين وروح المعرفة، وشأنُه عظيم بين الأولياء رضي الله تعالى عنهم،
அஷ்ஷெய்கு அபூ மத்யன் அல் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள். நான் நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் இக்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கிலுள்ள வலீமார் பற்றிக் கேட்டேன். இன்னும் கவ்துல் அஃளம் அவர்கள் பற்றியும் கேட்டேன். அதற்கவர்கள் “அவர்கள் ஸித்தீகீன்களின் தலைவரும், “ஆரிபீன்” இறைஞானிகளின் “ஹுஜ்ஜத்” ஆதாரமும், இறைஞானத்தின் “றூஹ்” உயிரும் ஆவார்கள். அவ்லியாஉகள் மத்தியில் அவர்களின் விடயம் மிக வலுப்பமானது” என்றும் சொன்னார்கள் என்று கூறியுள்ளார்கள்.
வலீமார்களுக்கு அறிவின் வாயலைத் திறந்து கொடுக்கும் நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களே கவ்துனா முஹ்யித்தீன் ஆண்டகை தொடர்பில் எவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். ஒருவனுக்கு இறைஞானம் கிடைக்க வேண்டுமாயின் அதன் உயிர் என்று வர்ணிக்கப்படுகின்ற முஹ்யித்தீன் ஆண்டகை இல்லாமல் எவ்வாறு பெற முடியும்? இறைஞானிகளுக்கே அவர்கள்தான் ஆதாரமாக உள்ளார்கள் என்றால் அவர்கள் தன்னிடம் வந்து பாடம் கற்றுச் செல்வதாக ஒருவன் கூறியிருந்தால் அவனை என்னென்று சொல்வது? அவனை நம்பி பரிதவிக்கும் குறைகுடங்களை என்னென்று சொல்வது?
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் கவ்துனா முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஈருலகிலும் ஜெயம் பெற்றவர்களாக ஆக்குவானாக!
المدد يا شيخ محي الدين أغثنا