السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 2 October 2025

மெளலித் ஓதுவதை விட ஸலவாத் ஓதுவது சிறந்ததா?

மெளலித் ஓதுவதை விட ஸலவாத் ஓதுவது சிறந்ததா?

 *مفهوم اتباع السنة* (3)

ஹிஷாம் ஃபத்தாஹி 


09.04.1447 AH

02.10.2025 CE

-------------------------


சங்கைக்குரிய உலமாக்களே, 

"இத்திபாஉ ஸுன்னா" பற்றி பேசக் கூடியவர்கள்" என்று நாம் இங்கே குறிப்பிடுவது தப்லீக் போர்வையில் ஒளிந்து கொண்டு வஹ்ஹாபிய சிந்தனைகளை சமூகத்தில் முன்வைப்பவர்களை மட்டுமே. ஆனால் அஷ்அரிய்யா நம்பிக்கை கோட்பாட்டிலும் ஷாஃபிஈ மத்ஹபிலும் உறுதியாக நிற்பவர்களையும், சூபி தரீக்காக்களை மதிப்பவர்களையும் நாம் குறிப்பிடவில்லை என்பதை இங்கு நான் மிகத் தெளிவாக பதிவு செய்து கொள்கிறேன்.


"இத்திபாஉ ஸுன்னா" பற்றி பேசக்கூடிய இவர்கள் 

التاويل والتفويض والاستواء والتوسل ونجاة الوالدين 

ஆகிய முக்கிய விடயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவின் கோட்பாட்டுக்கு முரண்படுகின்றார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வாரங்களில் தெளிவாக பேசுவோம் இப்பதிவில் இவர்கள் பரவலாக பேசுகின்ற ஒரு சில வஹ்ஹாபிய சிந்தனைகளைப் பற்றி நாம் பார்ப்போம். 


கடந்த மாதம் உலகம் எங்கும் எமது உயிரிலும் மேலான நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த சூழ்நிலையில் கொழும்பில் இயங்கி வரும் ஒரு மத்ரசாவில் மார்க்க கல்வியைத் கற்று வரும் எனது உறவினர் ஒருவரின் பிள்ளை அவருடைய ஆசிரியரிடம் மௌலித் ஓதலாமா என்று வினவியபோது அந்த ஆசிரியர்: "மௌலித் ஓதுவதை விட ஸலவாத் ஓதுவது சிறந்தது" என்று பதில் கூறியுள்ளார் "ஸுன்னா"வை பற்றி பேசக்கூடிய இவர்களின் மனோபாவத்தை இங்கு எங்களால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு கூறுவது "ஸுன்னா"வைப் பின்பற்றுவதாக அமையுமா அல்லது "ஸுன்னா"வுக்கு முரண்படுவதாக அமையுமா? சந்தேகமே இல்லை இது "ஸுன்னா"வுக்கு மிகப்பெரிய முரண்பாடாகும். தரீக்காக்கள் மீது இவர்களுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சி இவர்களின் அகக்கண்களை குருடாக்கிவிட்டது என்பது மிகத் தெளிவாக புரிகிறது அல்லவா.


ஹதீஸ் கலையை விரிவாக கற்கும் இவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அருமை ஸஹாபாக்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் இவர்கள் இவ்வாறு கூறுவது விந்தையாக உள்ளது இது விதண்டாவாதத்தின் உச்ச நிலையாகும். 


ஸஹாபாக்களிடையே பிரபலமான கவிஞர்கள் இருந்தார்கள். ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃப் இப்னு ஸுஹைர், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையிலே கவிதைகளைப் பாடும்போது ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி ஸலவாத் ஓதும் படி கூறவில்லை? ஏன் மேற்கூறப்பட்ட ஸஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடுவதை விட ஸலவாத்து தான் சிறந்த அமல், அதனைத் தான் நாம் செய்ய வேண்டும் என்று ஏன் விளங்கவில்லை?. 


மேற்கூறப்பட்ட ஸஹாபிகள் பாடிய கவிதைகளைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களைக் கௌரவித்து, துஆ செய்த வரலாறு மிகத் தெளிவாக ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அப்துல்லாஹ் இபுனு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய கவி வரிகளை "கன்தக்" யுத்தத்துக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சங்கையான வாயால் பாடிய வரலாறு ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வரிகளை கீழே தருகிறேன். 


والله لولا الله ما اهتدينا 

ولا تصدقنا ولا صلينا 

وأنزلن سكينة علينا 

وثبت الأقدام إن لاقينا

إن الألى قد بغوا علينا 

اذا ارادوا فتنة ابينا

அறிவிப்பாளர்: இமாம் புகாரி, இமாம் முஸ்லிம்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பயணத்தின் போது தன்னுடன் ஒட்டகத்தில் சேர்ந்து பயணித்த ஸஹாபியிடம் உமய்யஹ் இப்னு அபிஸ் ஸல்த் என்ற கவிஞரின் கவிதைகளை பாட சொல்லி கேட்டார்கள். அந்த ஸஹாபியும் ஒரு வரியை பாடி நிறுத்தியபோது "இன்னும் பாடுங்கள்" என்று கூற, அவர் நூறு வரிகளைப் பாடியதாக ஸஹீஹ் முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர் ஒரு காபிராக இருந்த போதும் அவரது பெரும்பாலான கவிதைகள் அல்லாஹ்வைப் புகழ் பாடுவதாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 100 கவிதை வரிகளைப் பாடச் சொல்லி, கேட்டு ரசித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் அந்த ஸஹாபியிடம் இதை விட சிறந்தது ஸலவாத் என்று கூறவில்லை?. 


ருபய்யிஃ பின்த் முஅவ்வத் என்ற ஸஹாபி பெண்மணி தனது திருமணம் நடந்து முடிந்து அடுத்த நாள் காலையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை பின்வருமாறு கூறுகின்றார்கள்.


عن ربيع بنت معوذ"جَاءَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ علَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا، يَضْرِبْنَ بالدُّفِّ ويَنْدُبْنَ مَن قُتِلَ مِن آبَائِي يَومَ بَدْرٍ، إذْ قالَتْ إحْدَاهُنَّ: وفينَا نَبِيٌّ يَعْلَمُ ما في غَدٍ، فَقالَ: دَعِي هذِه، وقُولِي بالَّذِي كُنْتِ تَقُولِينَ."رواه البخاري


இரவு எனக்கு திருமணம் நடைபெற்று அடுத்த நாள் காலையில் எனது வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எனது விரிப்பில் அமர்ந்தார்கள். சில பெண்மணிகள் ரப்பான் தட்டி, பத்ர் போர்க்களத்தில் ஷஹீதான அவர்களுடைய தந்தைமார்களுடைய புகழைப் பாட ஆரம்பித்தார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர்: "எங்களிடம் நாளை என்ன நடைபெறும் என்று அறியக்கூடிய ஒரு நபி இருக்கிறார்" என்று கூற , அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இதனை விட்டு விடு ஏற்கனவே நீ சொல்லிக் கொண்டிருந்ததை சொல்வீராக" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இமாம் புகாரி


"நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையிலே நூறு தடவைகளுக்கு மேல் அமர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் அவர்களுடைய அருமை தோழர்கள் கவிதைகளைப் பாடிக் கொண்டிருப்பார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள் என்று ஜாபிர் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். 

அறிவிப்பாளர்: இமாம் திர்மதி


இவ்வாறு ஆதாரபூர்வமான பல விடயங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் குவிந்து கிடக்கின்றன. அப்படி இருந்தும் மீலாது நபியைக் கண்ணியப்படுத்த க்கூடிய தரீக்கா சகோதரர்களை மட்டம் தட்டும் நோக்கில் விதண்டாவாதமாக "மௌலித் ஓதுவதை விட ஸலவாத் ஓதுவது சிறந்தது" என்று பிதற்றுகிறார்கள். மௌலித் மஜ்லிஸ்கள் என்பவை ஸலவாத்துக்களால் நிரம்பி வழிகின்றன என்பது இவர்களுக்கு . தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கின்றார்களா?


ஒரு வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய அருமை தோழர்களும் கவிதைகளைப் பாடியும், கேட்டும் பொன்னான நேரங்களை வீணடித்து விட்டார்கள் என்று நினைக்கிறார்களா? நாங்கள் அவர்களை விடவும் பக்குவமானவர்கள், பயபக்தி உள்ளவர்கள். எனவே இவ்வாறான பயனற்ற விடயங்களில் எமது நேரங்களை நாம் ஒருபோதும் வீணாக்கமாட்டோம் என்று எண்ணுகிறார்களா?


இரண்டாவது சம்பவம்: 

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நானும் எனது நண்பர் கண்ணியத்திற்குரிய அல் உஸ்தாத் மஸீன் மக்தூமி அவர்களும் இருந்தபோது இந்தியா அல்லது பாகிஸ்தானில் மார்க்க கல்வியைக் கற்ற இளம் மௌலவி ஒருவர் வந்தார் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் தரீக்காவைச் சார்ந்த ஒரு பிரிவினரை சுட்டிக்காட்டி அவர்களிடம் " குப்ரிய்யத்தான பல கருத்துக்கள் இருப்பதாக கூறினார். "உதாரணத்திற்கு ஒன்றைக் கூறுங்கள்" என்று நாம் கேட்டபோது அதற்கு அவர் அக்குறிப்பிட்ட பிரிவினர் 

الصلاة والسلام عليك يا رسول الله 

என்று கூறுகிறார்கள். மரணித்தவர்களை விளித்து பேசுவது "குஃப்ர்" என்று அவர் பிழையாக விளங்கி வைத்துள்ளார். அதற்கு மஸீன் ஹஸ்ரத் அவர்கள் அவரை நோக்கி: "அப்படியானால் அத்தஹிய்யாத்தில் இடம்பெறுகின்ற 

السلام عليك ايها النبي 

என்ற வார்த்தையும் குஃப்ர் ஆகிவிடுமா?"என்று கேட்க அந்த இளம் மௌலவி வாயடைத்து போனார். 


இவர்களுடைய சிந்தனைகள் எந்தளவு படுபயங்கரமாக இருக்கின்றன என்பதை பாருங்கள், இவர்கள் எந்தளவு மூளைச்சலவை செய்யப்படுகின்றார்கள் என்பதையும் பாருங்கள். இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய காலங்களில் "தவஸ்ஸுல்" என்ற தலையங்கத்தின் கீழ் நாம் பேசும்போது இந்த விடயத்தை அலசலாம். அல்லாஹ் நம் அனைவரையும் மரணம் வரையிலும் நேரான பாதையில் நிலை நிறுத்தி வைப்பானாக.