அபூ நவாஸ் அப்பாஸியர் காலத்தில் வாழ்ந்த ஒரு பிரபல கவிஞர். இயற்பெயர் ஹஸன் பின் ஹானி.
இவரது வாழ்வு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் சிறப்பாக இருக்கவில்லை. இவரது கவிதைகள் பெரும்பாலும் மது, மாது பற்றியே இருந்தன.
ஆயினும் வாழ்வின் இறுதிக் காலத்தில் தமது தவறுகளுக்காக மனம் வருந்தி மன்றாடினார்.
இவர் மரணித்தபோது ஜனாஸா தொழுகை நடத்துமாறு இமாம் ஷாஃபி அவர்களிடம் வேண்டப்பட்டது. ஆரம்பத்தில் அவர் மறுத்துவிட்டார்.
பிறகு அபூ நவாஸின் ஜனாஸா குளிப்பாட்டப்பட்ட வேளையில் சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதம் கண்டெடுக்கப்பட்டது.
அதில் அல்லாஹ்வை அழைத்துப் பாடும் சில கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்தன. அந்தக் கவிதையை வாசித்த இமாம் ஷாபிஈ கண்ணீர்விட்டு அழுதார். பிறகு தானே முன்னின்று அபூ நவாஸின் ஜனாஸா தொழுகையை நடத்தியதாகவும் சில வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
அரபு மொழியில் எதுகை, மோனையுடனும் ஓசை நயத்துடனும் உணர்ச்சி பூர்வமாகவும் பாடப்பட்ட ஒரு கவிதை இது.
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க கவிதையின் சாதாரண தமிழ் வடிவம் இதோ உங்கள் பார்வைக்கு…
"இறைவா! எனது பாவங்கள் எண்ணிக்கையில் பெரியவைதான்.
ஆனால் உனது மன்னிப்பு அவற்றைவிட மிகப் பெரியது என்பதை நான் நன்கறிவேன்!
இறைவா! நல்லவரும், நன்மை செய்தவரும் மட்டுமே உன்னை, உனதருளை ஆதரவு வைக்க முடியும் என்றிருந்தால், என்னைப் போன்ற பாவிகள் யாரிடம் செல்வது? யாருடைய துணையை நாடுவது?!
இறைவா! நீ ஏவிய படி பணிந்து, குனிந்து உன்னிடம் இறைஞ்சுகின்றேன்!
நீ எனது கரங்களைத் தட்டிவிட்டால்
யார்தான் என் மீது கருணை கொள்வார்!
இறைவா! உன்னை, உனது கருணையை நான் அடைய உன்மீது நான் கொண்டுள்ள ஆதரவையும் உனது மன்னிப்பையும் தவிர வேறு ஏதும் வழி என்னிடமில்லை!
இறைவா! என்னைவிட்டால் உனக்கு எண்ணிலடங்கா அடியார்கள் உண்டு. ஆனால் உன்னைவிட்டால் எனக்கு வேறு இறைவன் இல்லையே.
இறைவா! நான் ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன் என்பதையும் சொல்லிவைக்க விரும்புகின்றேன்!”
மனதில் அவ்வப்போது உணர்வுப்பூர்வமாக நிழலாடும் அற்புதமான வரிகள் இவை.
(100 வாழ்க்கைப் பாடங்கள் என்ற புத்தகத்தில் இருந்து..)
நூஹ் மஹ்லரி முக நூலில்